மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கம்

மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கம்

perisundaram
மு.சி.கந்தையா தலைமை தாங்கிய அமர்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் சட்டத்தரணி இரா.சடகோபனின் மலையகத் தமிழரின் குடியேற்ற வரலாறு எனும் ஆய்வுக்கட்டுரை திட்டமிடப்பட்டிருந்தாலும் அவர் வருகை தந்திருக்கவில்லை. எனினும் அவரது கட்டுரை மாநாட்டு மலரில் இடம்பெற்றுள்ளது.
டொனவன் மோல்ரிச்சின் Bitter Berry Bondage எனும் ஆய்வு நூலை மொழிபெயர்த்து தனது அனுபவங்களையும் கடந்து  தமிழாக்க நூலாக ‘கண்டி சீமையிலே’ என தொகுத்து வெளியிட்டவர் சட்டத்தரணியும் ஆய்வாளருமான இரா.சடகோபன். அந்த அனுபவத்தின் ஊடே தான் வழங்கியிருக்கும் ஆய்வு கட்டுரையில் மலையக குடியேற்ற வரலாற்றை இந்தியாவில் இருந்தான வருகை, கோப்பிக்காலம், தேயிலைக்காலம், தொழிற்சங்களின் தோற்றம், மலையக மக்களின் முதல் அரசியல் பிரதிநிதித்துவம், வாக்குரிமை பறிப்பு, நாடற்றவர் நிலை, நாடு கடத்தப்பட்டமை, பிரஜாவுரிமை மீண்டும் கிடைக்கப்பெற்றமை முதலான விடயங்களை விபரித்துள்ளார்.
1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட ஒக்டோபர் புரட்சி உலகாளாவிய ரீதியல் தொழிலாளர் ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. கொழும்பை தளமாகக் கொண்டு தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டி எழுப்பி ஏ.ஈ.குணசிங்க என்ற தொழிற்சங்க தலைவர் இலங்கைத் துறைமுகம், ரயில்வே திணைக்களம், தபால் திணைக்களம் போன்ற தொழில்துறைகளில் தொழிற்சங்க கட்டமைப்பினை நிறுவியிருந்தார்.

இந்தியாவில் இருந்து பத்திரிகையாளராக இலங்கை வந்திருந்த கோ.நடேசய்யர் ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைந்து தொழிற்சங்க பணிகளில் ஈடுபட்டார். அவரது துணைவியார் மீணாட்சியம்மையும் அவருடன் இணைந்து தொழிற்சங்க பணிபுரிந்தார். எனினும் துறைமுகத் தொழிங்சங்கத்தில் பணியாற்றிய தமிழ், மலையாள தொழிலாளர்களை இனவாதக் கண்ணோட்டத்துடன் ஏ.ஈ.குணசிங்க அணுகினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருடன் இணைந்து பணியாற்றுவதில் இருந்து வெளியேறிய கோ.நடேசய்யர் தம்பதியர் மலையகம் நோக்கிச் சென்று ஹட்டனை மையமாகக் கொண்டு தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்தனர்.

அதுவே இலங்கை – இந்திய தொழிலாளர் சம்மேளனம். இதுவே மலையகத்தின் முதலாவது தொழிற்சங்கம் ஆகும்.  (மல்லியப்பு வீதியில் அமைந்துள்ள இன்றைய இந்திரா ஹோட்டல்தான் அந்நாளில் கோ.நடேசய்யரின் தொழிற்சங்க அலுவலகமாக இருந்துள்ளது). எனவே மலையகத் தொழிற்சங்க முன்னோடிகளான கோ.நடேசய்யர் – மீனாட்சியம்மை தம்பதியரது தொழிற்சங்க செயற்பாடுகளின் பயனாகவே தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் இருந்த துண்டு முறை, பற்றுச்சீட்டு முறை நீக்கப்பட்டு புதிய தொழிலாளர் சட்டங்களின் அறிமுகம் பரவலானது.

மலையகத்தின் முதலாவது அமைச்சர் பெரி.சுந்தரம்
1924 ஆம் ஆண்டு இலங்கையில் குடியேறியிருந்த இந்திய தமிழர்களின் தொகை 786,000 இதில் 610,000பேர் வரை மலையகத்தில் வாழ்ந்தனர்  இவர்களில் 12,901 பேருக்கு வாக்களிக்க தகுதியிருந்தது. 1925 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 27 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.எக்ஸ்.பெரோராவும், மொகமட் சுல்தானும் வெற்றி பெற்றனர். எனினும் அதற்கடுத்த வருடம் இடம்பெற்ற இடைத் தேர்தலில் ஐ.எக்ஸ்.பெரேராவுடன் கோ.நடேசய்யர் வெற்றிபெற்று சட்டசபைக்கு தெரிவானார்.

1931 ஆம் ஆண்டு இந்தியத் தமிழர் 100,000பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். அப்போது  மலையக மக்கள் சார்பாக ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு மூன்று உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். ஹட்டன் தொகுதியில் போட்டியின்றி தெரிவான பெரி.சுந்தரம் 1935ஆம் ஆண்டு வரை கைத்தொழில் அமைச்சராகவும் செயற்பட்டார். எனவே மலையகத்தில் இருந்து முதலாவது அமைச்சுப்பதவி பெற்றவராக பெரி.சுந்தரத்தின் பெயர் வரலாற்றில் பதிவாகிறது. 1936 ஆம் ஆண்டு சட்ட நிருபண சபைக்கு மீண்டும் கோ.நடேசய்யர் தெரிவாகியிருந்தார்.

1940  ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஜவகர்லால் நேரு இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது கொழும்பில் இயங்கிய சிறுசிறு சங்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து அரசியல் ரீதியாக செயற்படுவதற்கு இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பை தோற்றுவிக்கச் செய்யதார். இதுவே பின்னர் அரசியல் கட்சியாகவும் தொழிற்சங்கமாகவும் செயற்படத் தொடங்கியது. 1947ஆம் ஆண்டு இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனமும், இலங்கை இந்திய காங்கிரஸும் தேர்தலில் போட்டியிட்டு இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் 7 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.
இதில் கே.ராஜலிங்கம் (நாவலப்பிட்டி), சௌமியமூர்த்தி தொண்டமான் (நுவரெலியா), சி.வி.வேலுப்பிள்ளை (தலவாக்கலை) பி.ராமானுஜம் (உடநுவர), எஸ்.எம.சுப்பையா (பதுளை), எம்.ஆர்.மோத்தா (மஸ்கெலியா), கே.குமாரவேல் (கொட்டகலை ). அன்று மலையகத் தமிழர் அடைந்திருந்த எழுச்சியை அவதானித்த இலங்கை அரசாங்கம் அடுத்த வருடமே பிரஜாவுரிமை சட்டத்தைக் கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமைய பறித்தது.

1964ஆம் ஆண்டு நாடற்றவர்களாகியிருந்த மக்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கையில் தங்கியிருப்பதற்கான விருப்பத்தையே மலையக மக்கள் வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்திய பிரஜையாகவும் இலங்கை பிரஜையாகவும் இல்லாமல் நாடற்றவர்களாகவே 1980களின் பிற்கூறுகளில் அப்போதைய ஜனாதிபதி ஆர்.பிரேமதாச ஏற்பாடுகளைச் செய்யும் வரை தவித்துக்கொண்டிருந்தனர் என இரா.சடகோபன் தனது ஆய்வு கட்டுரையிலே குறிப்பிடுகின்றார்.

E யை எடுத்தெறிய வேண்டிய மலையகம்மு .சி.கந்தையாவின் தலைமையிலான முதலாம் அமர்வில் மலையகத் தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் எனும் தலைப்பில் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உப தலைவர் மு.சிவலிங்கம்  உரையாற்றினார்.

தனது படைப்புக்களில் ஆய்வுத் தகவல்களையும் நேரடி சம்பவங்களையும் புனைவுகளாக்கி அதனூடாக தனது அரசியல் கருத்துக்களை முன்வைப்பவர். தான் ஒரு எழுத்தாளராக மட்டுமல்லாது தொழிற்சங்க அரசியல் செயற்பாட்டாளராகவும் இருந்தவர் என்றவகையில் யதார்த்த அரசியலையும் அதன் மீதான விமர்சனங்களையும் தனது படைப்புக்களின் ஊடாக வெளிப்படுத்தி வருபவர்.

மலையக மக்கள் அரசியல் ரீதியாக எதிர்கொண்ட விபரீதங்களை தனது படைப்புக்களின் ஊடாக வெளிப்படுத்தி வருபவர். மலையகத் தமிழரின் குடியேற்ற வரலாறு எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் புனைவு எழுத்தாக அல்லாது மலையக மக்கள் இலங்கையில் எதிர்கொண்ட எதிர்கொள்ளும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றியதான பார்வையாக அவரது கட்டுரை அமைந்திருந்தது.

1948 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சட்டங்களால் மிதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். அதேபோல மலையகப்பகுதிகளில் முன்வைக்கப்படுகின்ற திட்டங்களும் கூட சட்டங்களாக வந்து பயமுறுத்துகின்றன. பிரஜாவுரிமைச் சட்டம், தேர்தல்கள் சட்டம், காணி சீர்திருத்தச் சட்டம், காணி சுவீகரிப்புச் சட்டம், காணி உச்சவரம்புச்சட்டம், தோட்ட கிராம ஒருங்கிணைப்புச் சட்டம் என்று உருவாகின. 1964 ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974 ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம்  போன்ற ஒப்பந்தங்கள் மூலம் நாடு கடத்தும் திட்டம் சட்டமாகவே அமுலானது.
இதுபோன்ற மலையகத்தில் அமுல்படுத்தப்பட்ட குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டங்களும் தோட்ட நிர்வாகங்களின் ஊடாக முறைமைப்படுத்தப்பட்டதாக செயற்படுத்தப்பட்டன. மலையகத் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சிக்கு இத்தகைய செயற்கைத் தடைகளும் இயற்கைத் தடைகளும் காரணமாகின. இத்தகைய சட்டங்கள் எல்லாம் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருவதாகவும் என்றாவது ஒரு நாள் எரியலாம் என்றும் எனவே அவை அரச பிரகடனம் மூலம் நீக்கப்படல் வேண்டும் என மலையகத் தமிழர் மீது ஏவிடப்பட்ட சட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றி மு.சிவலிங்கம் எடுத்துரைத்தார்.

200 வருடகால வரலாற்றை மலையகத்தில் கொண்டிருந்தாலும் பதிவுப் பிரஜையாகவே இருந்துள்ளோம். ஆள்பதிவு திணைக்களத்தில் இந்திய வம்சாவளி பிரஜைகளை பதிவு செய்யும் திணைக்களம் எனும் ஒரு தனியான பிரிவே  (Department of Registration of People of Indian Origin) செயற்பட்டுள்ளது. இன்னும் கூட தேசிய அடையாளம் இன்றி இந்திய வம்சாவளி தமிழரா? மலையகத் தமிழரா? இலங்கைத் தமிழரா என பட்டிமன்றம் நடாத்திக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கையின் State மக்களாக இருக்க வேண்டிய நாங்கள் Estate மக்களாக வைக்கப்பட்டிருக்கின்றோம்.  Estate People, Estate Community , Estate Worker, Estate Sector,  போன்ற சொற்கள் எங்களை state  மக்களாக இருப்பதில் இருந்து அந்நியப்படுத்திக்கொண்டிருக்கின்றன. இது ஒரு விதமான அவமானப்படுத்தலும் கூட. State க்கு முன்பாக வரக்கூடிய E எனும் எழுத்து இந்த மக்களை தேசிய அடையாளமின்றி தடுத்து வைத்திருக்கிறது. State (அரச) சேவைகளைப் பெற வேண்டிய மலையக சமூகம் இன்னும் Estate (தோட்டம்) ஊடாகவே சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய சட்டக்  கடப்பாடுகளையும் திட்டக்கடப்பாடுகளையும் கொண்டுள்ளது. எனவே இந்த E எனும் எழுத்தை வெறுக்கும் நிலைக்கு மலையகம் தள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒரே ஒரு எழுத்தின் காரணமாக உள்ளூராட்சி மன்றமான பிரதேச சபையில் இருந்து தோட்டப்பகுதிகளுக்கு நிதியினைச் செலவிட முடியாதவாறு 1987 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் தடைசெய்கின்றது என E என்ற எழுத்து மலையக மக்கள் மீது சுமத்தி வைத்திருக்கும் சுமையை எடுத்துரைத்தார் மு.சிவலிங்கம்.

இன்றைய உலகில் E என்ற எழுத்து உலகளாவிய ரீதியில் வெகுவாக புகழ்பெற்றுள்ளது. காரணம் இது Electronic யுகம். அதனை சுருக்கமாக E என்ற எழுத்து கொண்டே அழைக்கின்றனர். E-mail, E –Commerce போன்றன இதனையே குறித்து நிற்கின்றன. எனவே உலகம் முழுவதும் இலக்ரோனிக் மயமாகி டிஜிட்டல் (எண்ணிம) தொழில்நுட்பத்தின் ஊடாக E என்ற எழுத்து வேறு ஒரு பரிமாணத்தைப் பெற்றிருக்கும் போது மலையக மக்கள் விடயத்தில் இந்த E என்ற எழுத்து அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு எழுத்தாக அவர்களது தேசிய நீரோட்டத்தைத் தடுக்கும் எழுத்தாக அமைவதை   தனது வாதமாக முன்வைக்கும் மு.சிவலிங்கம் மலையகத்தில் Estate எனும் சொல்லின் முதல் எழுத்தான E என்ற எழுத்தை எடுத்தெறிந்து மலையக மக்கள் State (அரச) மக்கள் எனும் அந்தஸ்தைப் பெறுவதையே தமது அரசியல் இலக்காகக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்துகின்றார்.
About editor 3082 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply