ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை!  

ஈழநாடு 21 ஆவது ஆண்டுவிழாவில் உன்னி கிருஷ்ணனின் இசை மழை! Top News 

[Tuesday 2014-04-29 20:00]
சென்ற சனிக்கிழமை அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த ஈழநாடு வார ஏட்டின் 21 ஆவது ஆண்டுவிழாவுக்குப் போயிருந்தேன். நானும் எனது துணைவியாரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தோம். நுழைவுச் சீட்டு இருந்தும் அரங்கு நிறைந்த கூட்டம். காரணம் பிரபல கர்நாடக இசைப் பாடகர் உன்னி கிருஷ்ணன் அவர்களின் இசை நிகழ்ச்சி. வழக்கம் போல கனடிய தேசியப் பண், தமிழ்மொழி வாழ்த்துப் பாடப்பட்டன. முற்றிலும் வித்தியாசமாக அய்ம்பதுகளில் தமிழரசுக் கட்சி மேடைகளில் பாடப்பெற்ற ஈழத்தின் தேசியப் பண் பாடப்பெற்றது. பாடலை இயற்றியவர். மட்டக்களப்பைச் சேர்ந்த பரமகம்சதாசன். பாடியவர் சோம சச்சிதானந்தன். கணீரென்ற குரலில் பாடினார்.
வாழ்க ஈழத் தமிழகம்,
வாழ்க இனிது வாழ்கவே
மலை நிகர்த்திவ்வுலகில் என்றும்
தலை நிமிர்ந்து வாழ்கவே

அமிழ்தை வென்ற மொழியினள்
அருள் கனிந்த விழியினள்
அரிய பண்பு நிதியினள்
அவனி மெச்சும் மதியினள்
மமதை கொண்ட பகைவரும்
வணங்கும் அன்பு விதியினள்
மக்கள் கொண்ட பதியினள்

இவர் முறையாக தமிழிசை கற்றிருந்தால் இவர் ஒரு பாடகராக வந்திருப்பார். இந்தப் பாடலை தமிழ்த் தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பாட வேண்டும்.

ஆசிரியர் ரி.கே. பரமேஸ்வரன் தனது ஏற்புரையில் ஈழநாடு வார ஏட்டை கடந்த 21 ஆண்டுகளாக வெளியிட்டு வந்ததில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொன்னார். அதற்கு முன்னர் தான் தமிழோசையை 2 ஆண்டுகள் நடத்தியதாகவும் அப்படி நடத்திக் கொண்டிருந்த போது அமரர் எஸ்கே. மகேந்திரன் அப்போது பரிசில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஈழநாடு வார ஏட்டின் கனடியப் பதிப்பை ஏற்று நடத்துமாறு கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதோடு நிற்காமல் தன்னை அச்சகத்துக்கு அழைத்துச் சென்று ஈழநாடு வார ஏட்டினை 4 வாரங்களுக்கு அச்சிடும் செலவைத் தனது கடன் அட்டையில் இருந்து செலுத்தியதை நினைவு கூர்ந்தார். ஈழநாட்டை நடத்திய காலப் பகுதியில் தனது மனைவி, பிள்ளைகளோடு மகிழ்ச்சியோடு செலவிட்ட நேரத்தை விட அவர்கள் மீது சினந்த நேரமே அதிகம் என்றார்.சிறப்பு விருந்தினர் நக்கீரன் பேசும் போது ஈழநாடு போன்ற ஏட்டை வெளியிடுவதில் உள்ள வில்லங்கள் தனக்குத் தெரியும் என்றும் தானே ஒரு ஏட்டைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கூட நடத்த முடியாமல் மூடுவிழா செய்து விட்டதாகக் கூறினார். மூடியதற்கு முக்கிய காரணம் விளம்பரதாரர்களிடம் விளம்பரக் கூலியை வாங்கியெடுப்பதில் இருந்த சிரமம். குறித்த நாளில் கொடுக்க வேண்டிய கொடுப்பனவை கொடுக்க வேண்டும் என்ற கரிசனை பல விளம்பரதாரர்களிடம் இருப்பதில்லை.

“இப்போது செய்தித்தாள்களை வெளியிடுவது சற்றுச் சுலபம். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கணினி, இணைய தளம், அச்சுரு வசதிகள் தொடக்க நிலையில் இருந்தன. செய்திகளையும் கட்டுரைகளையும் கையால் எழுதி தட்டச்சுச் செய்து, பின்னர் அச்சுச் செய்து எடுத்த படிகளை மட்டையில் விடிய விடிய கண்முழிந்து ஒட்டி அடுத்த நாள் காலை அச்சகத்துக்குக் கொடுக்க வேண்டும். அன்றைய கால கட்டத்தில் ஈழநாடு அஞ்சல் மூலம் பரிசில் இருந்து பியர்சன் விமானநிலையத்துக்கு விமானத்தில் வந்து சேரும். அதனை எடுத்துச் சென்று சில பக்கங்களை எடுத்து விட்டு உள்ளுர் செய்திகள் கட்டுரைகள சேர்க்க வேண்டும். இப்போது வீட்டில் ஒரு கணினி இருந்தால் போதும். மின்னஞ்சலில் வரும் செய்தித்தாளை திருத்தி வடிவமைத்த பின்னர் அப்படியே அதனை அச்சகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி விட்டு அடுத்த நாள் காலை அச்சாகிய படிகளைச் சென்று எடுத்துக் கொள்ளலாம்.

வரவேற்பு நடனம் உட்பட பல நடன நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறின. நடனங்கள் பார்த்து இரசிக்கும் படியாக தரமாக இருந்தன. திரையிசை நடனத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று எல்லோரது புருவத்தையும் உயர்த்தியது. “உப்புப் போட்ட கருவாடு ஊறப்போட்ட சோறு…. ….” என்ற பாடல் விரசமாகப் பட்டது. தலைக்கு மேலேயிருந்த அய்யப்பனையும் பக்கத்தில் இருந்த சிவாச்சாரியாரையும் நினைத்துக் கொண்டேன். இப்படி எழுதுவதால் திரையிசைப் பாடல் வேண்டாம் என்பதல்ல. இலக்கிய நயம் படைத்த எத்தனையோ திரையிசைப் பாடல்கள் இருக்கின்றன.

ஈழநாடு ஆசிரியர் மீது எனக்குள்ள பெருமதிப்பு வைத்திருக்கிறேன். காரணம் அவர் ஆற்றும் அறப்பணியாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்பு இல்லத்தில் வாழும் பிள்ளைகளது பசிப் பிணியை போக்கி வருகிறார். அதற்கான நிதியை வாரா வாரம் வாசகர்களிடம் இருந்தும் தொண்டுள்ளம் படைத்தவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். படமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடும் கோயில் பகவர்க்கு ஆது ஆமே! இது திருமந்திரம் போதிக்கும் உண்மை. இறைவனுக்குக் கொடுப்பது நடமாடும் கோயிலாய் இருக்கும் குடிமக்களுக்கு செய்தது ஆகாது. ஆனால் குடிமக்களுக்கு ஒன்று கொடுத்தால் அது இறைவனுக்கே கொடுத்தது ஆகும்! தன்னலம் பேணாது பிறர் நலம் பேணுகின்ற சிந்தனையே உண்மையான இறை வழிபாடு. ஈழநாடு ஆசிரியரின் முன்மாதிரியை ஏனைய ஊடகங்களும் பின்பற்ற வேண்டும்.

2012 இல் இசை மாமணி உன்னி கிருஷ்ணன் தமிழர்களின் பண்பாட்டுத் தலை நகரான யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அங்கு நல்லூர் முருகன் கோயில் திருவிழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். அப்போது உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி டக்லஸ் தேவானந்தா சால்வை அணிவித்தார். இது ஒரு எதிர்பாராத சம்பவம். இந்த சம்பவத்திற்காக உலகத்தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக உன்னி கிருஷ்ணன் பெருந்தன்மையோடு கூறியிருந்தார்.

இசைமாமணி உன்னி கிருஷ்ணன் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுதும் நடத்தியிருக்கிறார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 1500 கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். முதல் முதல் இரகுமான் இசை அமைப்பில் 1994 இல் வெளிவந்த காதலன் படத்தில் ‘என்னவளே என்னவளே’ என்ற பாடலைப் பாடினார். பின்னர் “உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே ” என்ற பாடலைப் பாடினார். இந்த இரண்டு பாடல்களும் தேசிய விருதையும் சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான விருதையும் பெற்றுத் தந்தன.

எனக்குப் பிடித்த பாடகர் ஜேசுதாஸ். அவரது குரலில் தனித்துவமான இனிமை இருக்கும். அவருக்கு அடுத்த இடத்தில் உன்னி கிருஷ்ணன் புகழோடு விளங்குகிறார். அவரது பெயரை வைத்து அவர் ஒரு மலையாளி எனக் கண்டு பிடித்து விடலாம். ஜேசுதாசும் மலையாளிதான். ஆனால் ஜேசுதாஸ் போல் அல்லாது இவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். சென்னையில் படித்தவர். சென்னையில் வளர்ந்தவர்.

இவரது இசையை இரண்டு மணித்தியாலயத்துக்கு மேலாக தங்களை மறந்து அவையோர் கேட்டு மகிழ்ந்தார்கள். பெரும்பாலும் பழைய கர்நாடக பாடல்களைப் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார். மறைந்த இசைமேதை பாரதரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கோவிந்தா, கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா என்ற பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியது காதுக்கு விருந்தாக இருந்தது. இந்தப் பாடலை மறைந்த சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதியிருந்தார். அவர் எழுதிய ஒரே ஒரு பாடல் இதுவாகும். மகாகவி பாரதியார் பாடிய சின்னஞ் சிறு கிளியே, கண்ணதாசன் இயற்றி சீர்காழி கோவிந்தராசன் பாடிய உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா போன்ற பாடல்களை பாடி எல்லோரையும் பரவசப்படுத்தினார்.

விழா நிகழ்ச்சியை ஒலிபரப்பாளர் திரு ஞானபண்டிதன் சரளமான தமிழில் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். உன்னி கிருஷ்ணனின் பற்றி அழகாக எடுத்துச் சொன்னார். அவரது மகள் உத்ரா, சைவம் படத்தில் அழகே அழகே எதுவும் அழகே என்ற பாடல் பாடியிருப்பதையும் நினைவு கூர்ந்தார்.

பொதுவாக நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் எந்த ஆயத்தமும் இல்லாமல் வந்து மேடையில் பேசுவார்கள். திரு ஞான பண்டிதன் அதற்கு விதிவிலக்கு.

நிகழ்ச்சி நிறைவு அடைந்த போது ஒரு இதமான பொன் மாலையில் மனதைத் தொடும் இசை மழையில் நனைந்த திருப்தி எல்லோர் மனதிலும் நிறைந்திருந்தது.

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply