தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படுகின்ற முதலமைச்சர் வேட்பாளர் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்தவராகத் தான் இருப்பார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார்.
‘வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு இன்னும் முடிவு எடுக்கவில்லை. கட்சியிலுள்ள பெரும்பாலானவர்கள், கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசாவைக் களமிறக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். கடந்த தேர்தலிலும் அவருக்குத்தான் அந்தச் சந்தர்ப்பம் இருந்தது.மாற்றத்தை கொண்டு வருவதற்காக கடந்த தடவை நீதியரசர் விக்னேஸ்வரனைக் களமிறக்கியிருந்தோம்.
அப்போதைய அரசியல் சூழ்நிலைகளினால் அவரைத் தெரிவு செய்திருந்தோம். கடந்த தேர்தலில் தன்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவும் போட்டியிடட்டும். இரண்டு ஆண்டுகளின் பின்னர் அவர் ஆட்சிப் பொறுப்பேற்கட்டும் என்று விக்னேஸ்வரன் அப்போது கூறியிருந்தார். ஆனால் மாவை அதனை நிராகரித்திருந்தார்.
மாவை சேனாதிராசா, தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 50ஆண்டுகள் அரசியல் பணியாற்றியிருக்கிறார். மக்களோடு இருந்திருக்கின்றார். அவருடைய பயணத்துக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரண்டு பங்காளிக் கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளினது விருப்பங்களும் ஆராயப்படும். எல்லோருடைய விருப்பங்களின் அடிப்படையில் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுகின்றவர் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் – என்றார்.
வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் அவரது அமைச்சுப் பொறுப்பில் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியிருப்பது குறித்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், ‘‘டெனீஸ்வரனைப் பொறுத்தவரையில் வெற்றியாக இருக்கலாம். ஆனால் மாகாண சபையின் நடைமுறைகள் தொடர்பிலே அது ஒரு தோல்வியை ஏற்படுத்தியிருக்கின்றது’’ என்றார்.
இடைவெளிகள் இன்னும் அதிகரிப்பதற்கு காரணமாக இந்த விடயம் அமைகிறது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழர்களின் உண்மையான போராட்டங்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதாக இவை அமைந்திருக்கின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழரசுக்கட்சியைச் சேர்ந்தவரே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர்-சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
https://nakkeran.com/wp-admin/post-new.php
Leave a Reply
You must be logged in to post a comment.