புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்” என்பதை உறுதிப்படுத்தினார் புலிகளின் மூத்தபோராளி பசீர் காக்கா..! (முழுமையான விபரம்)
*தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமானவரும், விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவரான “பஷீர் காக்கா” என்பவர் “பற்றிநாதம்” எனும் இணையத்தில் எழுதியுள்ள தகவலை “அதிரடி” வாசகர்களாகிய உங்களுடன் பகிர்கிறோம்..**
காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரால் ஆயிரத்துக்கு மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகம் “அரிச்சந்திர மயான காண்டம்”. நடிகமணி வி.வி. வைரமுத்து அரிச்சந்திரனாக நடித்தார். ‘சோகசோபிதசொர்ணக்குயில்’ இரத்தினம், செல்வரத்தினம், தைரியநாதன் முதலானோர் பல்வேறு காலகட்டங்களில் சந்திரமதியாக நடித்தனர்.
இந்த இசை நாடகத்தைப் பின்னர் பிரபல எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மேடையேற்றினார். ‘மயானத்தில் மன்னன்’ என்ற பேரிலும் அரியாலையைச் சேர்ந்த பொன்னையா சண்முகலிங்கம் என்பவரால் நடிக்கப்பட்டது. இந்த அரிச்சந்திரன் கதாபாத்திரம் மகாத்மா காந்தியின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசுரிமை, மனைவி, மகனை இழந்த போதும் சத்தியத்துக்காக நிலைகுலையாத மன்னன் அரிச்சந்திரனின் வரலாறு அது. மகாத்மா காந்தி தனது சுயசரிதையை சத்தியசோதனை என்ற பெயரிலேயே எழுதினார்.
தமிழர் தம் வரலாற்றிலும் இதேபோன்ற நிலை எழுந்தது. உணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் “அவர் உயிருடன் வாழவேண்டும், எங்காவது தப்பித்து இருக்க வேண்டும்” என மனதார விரும்புகின்றனர். ஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சாத்திரிமாரை அணுகும்போது அவர் ஓரிடத்தில் உள்ளார், மறைபொருளாகக் காட்டுகிறது என்றே சொல்லுவர். உண்மையில் அவர்களுக்குத் தெரியும் “ஆள் இல்லையென்று”.. அதைச் சொன்னால் அன்று கிடைக்கும் வருமானத்துக்குப் பின் எதுவும் கிடைக்காது. ஆகவே இருக்கிறார் – இருக்கிறார் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
இதையொத்த நிலைதான் 2009 மே 18 இற்குப் பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகி விட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்க புலம்பெயர் வாசிகளை வழிநடத்துவோர் தயாரில்லை. அவரின் அண்ணன் மனோகரன் ‘சிலர் மண்ணில் தேடுகிறார்கள், சிலர் விண்ணில் தேடுகிறார்கள்’ என ஒரு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளித்தார். வேறு எப்படித்தான் பதிலளிப்பது? அவர் தமிழரின் மனங்களில் வாழ்கிறார் என்பதே உண்மை.
சுவிஸ் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் குலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார். அதற்குத் தடை விதிக்கப்பட்டது. அவர் உயிரோடு உள்ளார் என்று மற்றவர்களுக்குச் சொல்லலாம், குலம் அண்ணருக்கே சொல்ல முடியுமா? தலைவருக்கு விளக்கேற்ற அனுமதிக்காத இடத்தில் எனக்கென்ன வேலை என நினைத்தார்.
ஒரு மாபெரும் பொய்யை வழிமொழிய அவர் தயாராக இருக்கவில்லை. இதற்காக அல்பிரட் துரையப்பா, கருணா போன்றோருக்கு கொடுத்த பட்டத்தை வாய்மொழியாகவும், சமூகவலைத் தளங்களிலும் பரப்பினர். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு 2009 க்கு பின்னர் மாவீரர் நாளில் ஒரு சாதாரண தமிழ் மகனாக ஒரு மூலையில் நின்று சுடரேற்றி விட்டுத் திரும்புகிறார்.
‘ஒரு விளக்கேற்ற வேண்டுமென்று துடிக்கிறார்கள்’ என்றும் ஒரு பிரகிருதி இவரது நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்தினார். 2009 இல் ‘எமது ஆயுதப்போராட்டம் மௌனித்து விட்டது’ என்று அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் உத்தியோகபூர்வமாக அறிவித்தாயிற்று. 2011 ஜனவரி 11 இல் சுவிஸ் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் 7 பேரை சுவிஸ் அரசு கைது செய்தது. இவர்கள் உட்பட 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சத்திய சோதனை!
சுவிஸிலுள்ள தமிழர்களிடம் பலாத்காரமாக நிதி சேகரிக்கப்பட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்பணம் குற்றவியல் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டது என்றுமொரு குற்றச்சாட்டு,. வங்கியை ஏமாற்றினர் என்றும் ஒரு குற்றச்சாட்டு,. இறுதி யுத்தத்தின் தேவைகளுக்கென தனி மனிதர்களின் பெயர்களில் கடன் பெற்று இயக்கத்துக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அங்குள்ள அப்போதைய மற்றும் தற்போதைய தலைமை மௌனம் காத்தது. அவர்கள் வேண்டிய காசு அவர்களே கட்டட்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு. இந்தக் காசு எங்கே போனது என்பதும் சந்தேகமறத் தெரியும். அந்தப் பொய்யை தொடர்ந்து சொல்ல விடாமல் குலம் அண்ணா போன்றோர் தடுக்கிறார்கள் என்பதே அவர்களின் கோபம்.
சுவிஸில் உள்ள தமிழர்களிடம் ‘நாம் மனம் விரும்பியே நிதி வழங்கினோம்’ என்றொரு ஆவணத்தைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் வழங்கினால் வழக்கை முடிக்கலாம் என்றொரு நிலை இருந்தது. மாவீரர் நாள் நிகழ்வு மற்றும் ஆலயங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்க முயன்றனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த 14 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் குலம் அண்ணர் இந்த விடயத்தை உலகுக்கு வெளிப்படுத்தினார். உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள் உணர்வாளர்கள் சம்பந்தப்பட்டோரின் செயல் குறித்து கடும் சீற்றமடைந்தனர். எனினும் பூப்புனித நீராட்டு விழா, திருமணம் போன்ற வைபவங்களில் இந்த விடயத்தை தெரியப்படுத்திய எஸ்.ரி.ஏ. எனும் அமைப்பினர் மக்களிடம் படிவத்தை வழங்கிக் கையொப்பம் பெற்றனர்.
இச் செய்தியை குலம் அண்ணரின் வாயால் கேட்டதும் மிகவும் ஆறுதல். இவ்வாறு கையெழுத்திட்ட 5069 உணர்வுத் தமிழர்களே! உங்கள் அனைவரையும் ஒவ்வொரு போராளியாக நான் மதிக்கிறேன், என் நண்பர்களாக ஏற்கிறேன். எனது நட்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மன்னிக்கவும்! எனது தலைவன் யார் காலிலும் விழக்கூடாது என்றுதான் எங்களுக்குக் கற்பித்திருக்கிறார்.
சத்திய சோதனை!
இன்றோ போராடிய இனம் யார் யாரோ காலிலெல்லாம் விழுகிறது. அவர் இருக்கிறார், திரும்பி வருவார் என்று சொல்வதன் மூலம் தமக்கான கடமையை நாசூக்காக நிராகரிக்கின்றனர். யுத்தம் முடிந்தபின் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கும், வெளிநாட்டில் முதலீடுகளை வைத்திருப்போருக்கும், ஏனைய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் உள்ளது.
மூன்றாம் தரப்பினர் ஏதோ தம்மாலான உதவிகளைச் செய்கின்றனர். மலைபோல் உள்ள தேவைக்கு இது மிகவும் அற்பமே. இருக்கும் பணத்தை நாட்டில் தேவை உள்ளோருக்கு அனுப்பாமலிருக்க தீர்மானித்த இரண்டாம் தரப்பினர் இந்த முதலீடுகளை எப்படி மேலும் பெருக்கலாம் என எண்ணுகின்றனர்.
அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு எப்போதுமே அடுத்த தேர்தல் பற்றிய சிந்தனைதான். ஆளுமையுள்ளவர்கள் எவரும் அருகில் வந்துவிடக் கூடாது. அவர்களுக்கு தேவை எடுபிடிகளே.
இந்த நிலையில் தமக்கு சமூக அங்கீகாரமும் வாழ்வாதாரமும் வழங்கும் சக்திகளின் பின்னால் பாதிக்கப்பட்டோர் இழுபட்டுப் போவது தவிர்க்க முடியாதது.
ஒரு மனிதனை ‘நூறாண்டு காலம் வாழ்க!’ என்றே வாழ்த்துகிறோம். இப்போதிருந்தால் அவருக்கு 64 வயது. இன்னும் 36 வருடங்களுக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களா? இன்று இவர்கள் சொல்லும் சொல்லை பலர் நம்புகின்றனர். இவர்களின் பிள்ளைகள் 36 வருடங்களுக்குப் பின்னும் இதே பொய்யைச் சொல்லப் போகிறார்களா? அப்போது எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இந்தக் கதையைக் கேட்க வேண்டி வருமா? ஒவ்வொருவரும் யாருக்காகச் சுடரேற்றப் போகிறீர்களோ, அத்தோடு மனதில் அவரையும் நினைத்துச் சுடரேற்றுங்கள்.
இன்று முன்னாள் போராளிகள், போராட்டத்துடன் நீண்ட காலம் ஒத்துழைத்தோர் யாசகம் கேட்கின்றனர். மனதை உலுக்கும் செய்தி இது. இன்னொரு விடயம் – ஒரு ஆண் எந்த வயதிலும் தந்தையாகலாம். ஆனால் பெண்ணின் நிலை அப்படி அல்ல. பெரும்பாலும் 35 வயதுக்குப்பின் தாயாக முடியாது. (விதிவிலக்காக சிலர் 40வயதிலும் குழந்தை பெறுகின்றனர்) அவர் வளர்த்த செஞ்சோலைப் பிள்ளைகள் பலருக்குத் திருமணமாகவில்லை. ஒரு பகுதியினர் வவுனியா டொன்பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ளனர். இன்னொரு பகுதியினர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் உள்ளனர். இவர்கள் பற்றிச் சீரியஸாகச் சிந்திக்க வேண்டும்.
வயது வந்த ஆண் பிள்ளைகள் உள்ள தமிழர்கள் இந்தப் பிள்ளைகளை மருமக்களாக ஏற்கத் துணிய வேண்டும். அது அவருக்கு செய்யும் நன்றிக் கடனாகும். நாங்கள் உறவுகள் இருக்கிறோம் என நம்பிக்கையூட்ட வேண்டும். இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும். டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தை நிர்வகிக்கும் அருட்சகோதரி “குடிகாரனாக இல்லாமல் இருந்தால், அதுவே போதும்” என்கிறார்.
வெளிநாட்டில் சண்டித்தனம் புரிவோருக்கு இவ்வாறான விடயங்களில் அக்கறை இல்லை. முள்ளிவாய்க்காலில் எல்லாத்தரப்பையும் ஒற்றுமையாக்கி விட்டாலும் இவர்கள் விடுவதாய் இல்லை. தனியே சுடரேற்ற ஏற்பாடு செய்தார்கள். பிரதேச வேறுபாடு காட்டுகிறார்கள் என்ற மாயையை ஏற்படுத்தத் துணை நின்றார்கள்.
பிரான்ஸில் மாவை கலந்து கொண்ட மாநாட்டில் கண்ணீர்ப் புகையடிக்க ஏற்பாடு செய்தார்கள். எமது மொழியின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மாநாடு நடந்தாலும், பிரான்ஸில் நடந்தாலும் கண்ணீர் புகைக்குண்டு தானா? அன்று யாழ்ப்பாணத்தில் நடந்த கண்ணீர்ப் புகைக்குண்டு தாக்குதலைத் தொடர்ந்து ஒன்பது பேர் உயிரிழக்க நேர்ந்தது. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆயுத வழியை இளைஞர் நாடினர். ஏற்கனவே தமிழ் இளைஞர் பேரவையில் அங்கம் வகித்த குலம் அண்ணரும் அதில் ஒருவர்.
இந்தப் போராட்ட வரலாற்றில் எம்மைப் பாதுகாத்தவர் நீங்கள். உணவு தந்தவர் நீங்கள். நோயுற்றவேளையில் பராமரித்தவர்கள் நீங்கள். தேவை என்றால் இரத்தம் தந்தீர். மீட்பு நிதி என்றதும் நகையைத் தந்தீர். இறுதிப் போர் என்றதும் பிள்ளைகளைத் தந்தீர். இன்று தலைவன் இல்லாத நிலையில் உங்களுக்கு மட்டுமே நாம் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆயிரம் தடவை சொல்கிறோம் அவர் எங்கள் மனதில் மட்டுமே வாழ்கிறார்.
தமிழகத்தில் வைகோவிடம், அவரைத் தமிழினம் இழந்துவிட்டது என்று சொன்னதும் விம்மி விம்மி அழுததாக எனது நெருங்கிய நண்பர் எனக்குச் சொன்னார். அவரையும், நெடுமாறன் ஐயாவையும், காசி அண்ணாவையும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் அனைவருக்கும்தான் இந்த வருத்தமான செய்தியை உறுதிப்படுத்துகிறேன்.
என் மீது மேற்கொள்ளப்படும் எந்தச் சேறடிப்பையும் செருப்படியையும் ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. உண்மையையா எமக்கு விருப்பமானதையா என்ற கேள்வி வரும்போது உண்மையின் பக்கம் நிற்போர் எங்களுடன் கைகோத்துக் கொள்ளுங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.