முல்லைத்தீவில் நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம்
2018 உள்ளூராட்சிசபைத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு உட்பட பல்வேறு விடயங்களை ஆராயும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் இன்றையதினம் முல்லைத்தீவில் நடைபெறுகிறது.
முல்லைத்தீவு கோயில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள விடுதியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக்கூட்டம் ஆரம்பமானது.
2018 உள்ளூராட்சிசபைத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறியும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கு அமைய அமைக்கப்பட்ட குழுவானதுயாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கும்கடந்த மூன்று மாதங்களாகச் சென்று, அங்குள்ள உள்ளூர் பொது அமைப்புகள்,பொதுமக்கள்,இலங்கை தமிழரசு கட்சியின் மூலக் கிளைகள், பிரதேசக் கிளைகள், தொகுதிக்கிளைகள், மற்றும் மாவட்ட கிளை உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்து
அவர்கள் தெரிவித்த கருத்துகளைத் திரட்டி தயாரிக்கப்பட்ட 50 பக்க இறுதி அறிக்கை இன்றையதினம் ஆராயப்படவுள்ளது.
இவ்வறிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு கி .துரைராஜசிங்கம், எதிர்க்கட்சித் தலைவரின் இணைப்புச் செயலாளர் திரு சண்முகம் குகதாசன் ஆகியோர் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் கடந்த 10/02/2018, இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்ட உறுப்பினர்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் தீர்மானம். இளைஞர் அணி,மாதர் அணி தொடர்பாகவும்,தொழிற்சங்கங்களை அமைப்பது தொடர்பாகவும், இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாடு தொடர்பாகவும், சமகால அரசியல் தொடர்பாகவும்,நீண்ட கால இடைவெளிக்குப்பின் தற்போது மாதாந்த பத்திரிகையாக வெளிவரும் புதியசுதந்திரன் பத்திரிகை தொடர்பாகவும் மத்தியசெயற்குழு உறுப்பினர்கள் ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் முதல் தடவையாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் இலங்கை தமிழரசுகட்சியின் முன்னாள் தலைவருமான இரா.சம்மந்தன் ஐயா உட்பட இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை தமிழரசுகட்சியின் மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளதுடன் இலங்கை தமிழரசு கட்சியின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக தீர்க்கமான முடிவுகளையும் எடுக்கவுள்ளதாக இலங்கை தமிழரசுகட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply
You must be logged in to post a comment.