வெற்றி விழாக் கொண்டாட்டத்திலும் பங்கு கொள்வதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை! ஹற்றன் வங்கி முகாமை!

வெற்றி விழாக் கொண்டாட்டத்திலும் பங்கு கொள்வதில்லை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை! ஹற்றன் வங்கி முகாமை!

நக்கீரன்

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நசனல் வங்கியின் கிளிநொச்சிக் கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் தென்னிலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பையடுத்து அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவர் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை வைத்து தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.  “மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அதனை அனுட்டித்தது குற்றமா? அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன்? அந்த வங்கியில்  கணக்கு வைத்திருப்பவர்கள் உடனே அதனை மூட வேண்டும். அப்படிச் செய்வதே சரியான வழி. அந்த வங்கிக்கு ஒரு பாடம் படிப்பித்ததாக இருக்கும்” என முகநூல் போராளிகள் அம்பு வில்லோடு சண்டைக்குப் புறப்பட்டார்கள்.

சாம்பிராணி இல்லாமலே பேயாடும் சிறிதரன், நாடாளுமன்றத்திலேயே இந்தச் சிக்கலைக் கிளப்பினார்.  எதையும் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடும் வித்தியாதரனுக்கு இது ஓசியில் கிடைத்த அவலாகிவிட்டதில்  வியப்பில்லை.  “வங்கிப் பணியாளர் பதவி நீக்கம்; சிறிதரன் எம்.பி. சபையில் சீற்றம்” என்ற தலைப்புப் போட்டு  முன்பக்கதில் காலைக்கதிரில் செய்தி வெளியிட்டார்.

“முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தனது பெற்றோரையும், உறவுகளையும் நினைவு கூர்ந்தமைக்காக உதவி முகாமையாளரையும், ஊழியரொருவரையும் கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியயான்று பணிநீக்கம் செய்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பெளத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் இந்தத் தனியார் வங்கியை வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் –

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த தமது தமிழ் உறவுகளுக்காகக் கடந்த 18 ஆம் திகதி முள்ளியாய்க்காலில் வடக்கு முதல்வரும் யாழ். பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் கிளிநொச்சி தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும், ஊழியர் களும் உயிரிழந்த தமது உறவினர்களுக்காக தீப்பந்தங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்தக் காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி வங்கி சிங்கள வங்கியா?  தமிழர்கள் ஏற்க மறுத்தால் வடக்கில் அப்படியொரு வங்கியே தேவையில்லை.

உயிரிழந்த உறவினர்களுக்காக கண்ணீர் விடுகின்ற உரிமை இல்லையெனில் சனாதிபதி மற்றும் மனோ கணேசன் வசம் இருக்கும் நல்லிணக்க அமைச்சுக்களை மூடிவிடுங்கள்”  என எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இந்தச் சிக்கலை எழுப்புமுன் சிறிதரன் என்ன செய்திருக்க வேண்டும்? ஹட்டன் நசனல் வங்கியின் உயர் அதிகாரிகளோடு தொடர்பு  கொண்டு பேசியிருக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

இது தொடர்பில் ஹற்றன் நசனல் வங்கியின் முகாமைத்துவம்  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது:

“முழுமையான தகவல்களின் பின்புலத்தில் நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும்.  தெற்கில் போர் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் ஹற்றன் நசனல் வங்கி பங்கு கொள்வதில்லை.

எமது வங்கி சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. எந்தவொரு நிகழ்வு தொடர்பிலும் முகாமைத்துவத்தின் அனுமதியைப் பெறவேண்டும். அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும்சரி, அஞ்சலி நிகழ்வாகவிருந்தாலும் சரி முகாமைத்துவத்தின் அனுமதி பெறப்படுவது கட்டாயமானது.

வங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. தற்போது கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வும் அதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது.

எமது உத்தியோகத்தர்கள்  இருவரும் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.  அனுமதி பெறப்படாத நிகழ்வு ஒன்றை நடத்தியமை வங்கியின் சமூக ஊடகக் கொள்கையை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையை நடத்திய வங்கியின் மனித வள அதிகாரி தமிழர். எனவே இன ரீதியான எந்தவொரு பழிவாங்கலும் இந்த விடயத்தில் பின்பற்றப்பட வில்லை.

இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழிமுறையுடன்தான்ஆரம்பிக்க வேண்டும். சமூக ஊடகக் கொள்கைகளை மீறியதுதான் குற்றச்சாட்டு.விசாரணைகள் நிறைவடைந்ததும் உரியமுடிவு வெளிப்படுத்தப்படும்.”

ஹற்றன் நசனல் வங்கி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு சில சட்ட திட்டங்கள் உண்டு. அதனை அந்த நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டும். தெற்கில் போர் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் ஹற்றன் நசனல் வங்கி பங்கு கொள்வதில்லை. அதே போல் போர் தொடர்பான அஞ்சலிக் கூட்டங்களிலும் பங்கு கொள்வதில்லை. இந்த விதியை மீற வேண்டும் என்றால் கிளிநொச்சி ஹற்றன் வங்கிக் கிளையின் முகாமையாளர் தலைமைச் செயலகத்தோடு தொடர்பு கொண்டு அனுமதி கேட்டிருக்க வேண்டும். இதனை அவர் செய்யவில்லை.

இப்போது அவர்கள் மீது விசாரணை நடக்கிறது. அதனை ஒரு தமிழரே செய்கிறார். எனவே அவர் ஒப்புரவோடு நடந்து கொள்வார் என்பதில் ஐயமில்லை.

யாழ். பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள் எனபது வேறு  ஹற்றன் நசனல் வங்கி முகாமையாளர்  தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள் எனபது வேறு. பல்கலைக் கழக மாணவர்களுக்கு தடையேதும் இல்லை. ஆனால் வங்கி முகாமையாளருக்கு தடையிருக்கிறது.

“சிங்கள, பெளத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் இந்தத் தனியார் வங்கியை வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும்” என்கிறார் சிறிதரன். யார் தடை செய்ய வேண்டும்? யாரால் தடை செய்ய முடியும்?

ஒரு வாதத்துக்கு ஹற்றன் நசனல் வங்கி சிங்கள, பெளத்த மேலாதிக்கத்துடன் செயற்படும்  தனியார் வங்கி என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் வடக்கில் இயங்கும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, ஏனைய தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களும் தடை செய்யப்பட வேண்டும். இவையும் சிங்கள, பெளத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் நிறுவனங்கள்தான்.

மேலும் சிறிதரனின் வாதத்தை ஏற்றுக் கொண்டால்  சிறிலங்கா நாடாளுமன்றமும் சிங்கள, பெளத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் ஒரு நிறுவனம்தான். மொத்தம் உள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில்  இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 20 (8.88%),  முஸ்லிம்களின் எண்ணிக்கை 20 (8.88%)  மலையகத் தமிழர் 9 (4.00%), சிங்களவர் 176 (78.22%) ஆக மொத்தம் 225 உறுப்பினர்கள்.  சிங்கள – பவுத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தை சிறிதரன் புறக்கணிக்கத் தயாரா?

ஒரு செய்தியை வாசிக்கும் போது அதன் இரண்டு பக்கத்தையும் அறிவுபூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  ஹற்றன் நசனல் வங்கி  தெற்கில் போர் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் வங்கி பங்கு கொள்வதில்லை. அதேபோல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளிலும் பங்கு கொள்வதில்லை. இந்த நிலைப்பாட்டில் எங்கே சிங்கள, பெளத்த மேலாதிக்க  நடத்தை இருக்கிறது?

அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் போது ஒரு தனியார் வங்கி என்ற முறையில் இப்படியான சிக்கல்களில் சிக்கக் கூடாது என்ற அந்த வங்கி முகாமையின்  நிலைப்பாடு சரியே!



About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply