சசிகலா ஆசி… ஜெயலலிதா ஆதரவு…
பஞ்சாமிர்தத்துக்குப் பெயர் போன பழனி முருகன் கோயில் பஞ்சமில்லாமல் செய்திகளில் அடிபட்டு வருகிறது. உற்சவர் சிலை செய்வதில் நடந்த முறைகேடு, கிளை கிளையாக விரிந்து கொண்டிருக்கிறது. இப்பிரச்னையில், ஸ்தபதி முத்தையா சிக்கியிருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் தனபாலுக்கும் தற்போது குறி வைக்கப்பட்டிருக்கிறது.
‘கோயில்’ தனபால் என அழைக்கப்பட்ட தனபால், ஜூ.வி வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்தான். இவரின் தில்லாலங்கடி வேலைகளை 2015-ம் ஆண்டே தோலுரித்தது ஜூ.வி. ‘துரத்தப்பட்ட கோயில் தனபால்’ என்ற தலைப்பில், 2015 மார்ச் 15-ம் தேதியிட்ட ஜூ.வி-யில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.
“சசிகலா குடும்பத்தில் முதலில் திவாகரனை நெருங்கினார் தனபால். அவர்வழியே சசிகலாவிடம் அறிமுகம் பெற்றார். ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டபோது, கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வது போன்ற ஏற்பாடுகளைச் செய்துதந்தார். ஜெ. வெற்றி பெற்ற பிறகு, போயஸ் கார்டனுக்கு நெருக்கமானார். ஜெயலலிதா உடல்நலம் குன்றி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சிறப்பு பூஜைகள் செய்து, போயஸ் கார்டனுக்குச் சென்று சசிகலாவிடம் கொடுத்தவர். ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல கோயில்களில் இந்து சமய அறநிலையத் துறையில் பொறுப்புகளை வகித்தவர். இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். முதல்முறையாக ஐ.ஏ.எஸ் அல்லாத ஒருவர் இப்படி நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 2013-ம் ஆண்டு தனபால் ஓய்வுபெற்ற நிலையில், மூன்று ஆண்டுகள் பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு அன்றைய அ.தி.மு.க அரசில் செல்லப்பிள்ளையாக வலம் வந்தார்’’ என தனபால் வளர்ந்த கதையைச் சொன்னார்கள் அறநிலையத் துறை வட்டாரத்தினர்.
2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலேயே இவர்மீது சில அத்துமீறல் புகார்கள் எழுந்தன. அப்போது நடந்த திருவிளையாடல்களில் ஒன்றுதான் பழனி கோயில் உற்சவர் சிலை விவகாரம். “பழனி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் 2004-ம் ஆண்டு தொடங்கின. அதற்கான சிறப்பு அதிகாரியாகவும், சிலை கண்காணிப்புக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் தனபால். அப்போது புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. 2006-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போதே சிலை செய்யப்பட்டதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகப் புகார்கள் எழுந்து அடங்கின. அன்றைக்கு அமுங்கிய விவகாரம்தான் இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
பழனி முருகன் கோயிலுக்கு 2004-ம் ஆண்டு, புதிய ஐம்பொன் உற்சவர் சிலை செய்யப்பட்டது. இதற்காகப் பணமாகவும் தங்கமாகவும் பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் வசூலிக்கப்பட்டன. இதில் மொத்தம் 200 கிலோ தங்கம் கிடைத்ததாகச் சொல்லப்படும் நிலையில், சிலை செய்வதற்கு 22 கிலோ தங்கம் மட்டும் பயன்படுத்தியதாகப் புகார்கள் எழுந்தன. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை முடுக்க… சிலையைச் செய்த ஸ்தபதி முத்தையா, கோயிலின் அப்போதைய இணை ஆணையர் கே.கே.ராஜா, உதவி ஆணையர் புகழேந்தி, நகை மதிப்பீட்டாளர் தேவேந்திரன் ஆகிய நான்கு பேர் வளைக்கப்பட்டனர். இதில் அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலுக்கும் தொடர்பிருப்பதைக் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் அவர், தன்னைக் கைது செய்வதற்குத் தடை உத்தரவும் பெற்றிருக்கிறார்.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இதுகுறித்து விசாரித்தோம். “ஐம்பொன் சிலையில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் எந்த அளவில் சேர்க்கவேண்டும், சிலையின் வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரியாக தனபால் இருந்துள்ளார். பழனி கோயில் பஞ்சலோக விக்ரகம் செய்ய சிறப்பு அதிகாரியாக கிட்டத்தட்ட 11 மாதங்கள் இருந்திருக்கிறார் தனபால். அவரை மூன்றாவது குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறோம். சிலை விவகாரம் தனபாலோடு நின்றுவிடாது. இதில் முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. தனபாலிடம் விசாரித்தபிறகே அது தெரிய வரும். அவர்மீது எந்தத் தப்பும் இல்லாதபோது ஏன் ஓடி ஒளிய வேண்டும்?’’ என்றார்கள்.
தனபாலின் சொந்த ஊரான மூத்தாக்குறிச்சியில் விசாரித்தோம். “சென்னை சாந்தோம் வீட்டில்தான் வசிக்கிறார். பத்து நாள்களுக்கு முன்புதான் அவரின் அம்மா இறந்துபோனார். இறுதிச் சடங்குக்காக வந்தவர், இங்கேயேதான் இருந்தார். சென்னை செல்ல முடிவு செய்திருந்த நிலையில், சிலை விவகாரம் வெளியே வந்துவிட்டது. ‘சிலை மோசடிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என சொல்லிக் கொண்டிருந்தார். உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். ஆனால், எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை’’ என்றனர்.
– இ.லோகேஷ்வரி, கே.குணசீலன்
தூக்கியடித்த தாது மணல் விவகாரம்!
பதவி நீட்டிப்பில் இருந்த தனபால், அவரின் அத்துமீறல் நடவடிக்கைகளால் 2015-ம் ஆண்டு அதிரடியாக நீக்கப்பட்டார். அதற்கு அப்போது நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. “திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அபகரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. தனபால் ஆணையராக இருந்தபோது தாது மணல் விவகாரம் ஒன்றும் புகைந்தது. திருச்செந்தூர், திருநெல்வேலி பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில், சம்பந்தப்பட்ட தொழிலதிபருடன் கூட்டுச் சேர்ந்து தாது மணல் எடுக்க அனுமதித்தார். இதில் கைமாறிய பணத்தில் சிங்கப்பூரில் சொத்துகள் வாங்கிக் குவித்தாக தனபால் குறித்து ரிப்போர்ட் போனது. அதன்பிறகுதான் தனபாலை ஜெயலலிதா நீக்கினார்’’ என்கிறார்கள் அறநிலையத்துறை வட்டாரத்தில்.
கோயில் பெருச்சாளிகள் இப்போதல்ல காலம் காலமாக இருந்து வருகிறார்கள். பக்தியின் பெயரால் பக்தர்கள் காணிக்கை கொடுக்கும் பொருள்களை இந்தப் பெருச்சாளீகள் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுகிறார்கள். பக்தர்களுக்கு கோயிலில் இருக்கும் சிலைகள் கடவுளாகத் தெரிகிறது. கோயில் அர்ச்சகர், சிற்பி, மேலாளர்களுக்கு அது கல்லாகத் தெரிகிறது. அதுதான் எந்தப் பயமும் இல்லாது அவற்றைத் திருடி கள்ளச் சந்தையில் விற்கு விடுகிறார்கள்.