காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி
ஜனவரி 03, 2018
காஞ்சீபுரத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சுமார் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமஸ்கந்தர் சிலை உள்ளது. இந்த சிலை சிதில மடைந்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த சிலையை புதிதாக தங்கத்தில் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான தங்கத்தை பெறுவதற்கு தமிழக இந்து சமய அறநிலையதுறை ஆணையரிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது.
இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு உரிய அனுமதி கிடைத்ததும் ஏகாம்பரேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிலை செய்வதற்கு தங்கத்தை பெறுவதற்கான பொது அறிவிப்பை வெளியிட்டார்.
சோமாஸ்கந்தர் சிலையை செய்வதற்கு 5.75 கிலோ தங்கம் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டது. இந்த தங்கத்தை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற திட்டமிடப்பட்டது.
இதற்கான அறிவிப்பு வெளியானதும் பொதுமக்களும் சாமி சிலை செய்ய தங்களால் இயன்ற அளவு தங்கத்தை வழங்கினர். வசதி படைத்த பக்தர்கள் பலர் தங்கத்தை வாரி வழங்கினர்.
இதுபோன்று பெறப்பட்ட தங்கத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாகவும் புகார் கூறப்பட்டது.
இதற்கிடையே சோமாஸ் கந்தர் சிலை புதிதாக தங்கத்தால் செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. 5.75 கிலோ தங்கத்தில் சிலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
புதிய சாமி சிலை கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலையில் தலைமை ஸ்தபதி முத்தையா தலைமையில் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
சோமாஸ்கந்தர் சிலையை செய்ததில் பெரிய அளவில் மோசடி நடந்திருப்பதாக காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனை தொடர்ந்துஅவர் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி மீனாட்சி வழக்குப்பதிவு செய்யும்படி சிவகாஞ்சி போலீசுக்கு உத்தரவிட்டார்.
இதன் பிறகும் 19 நாட்கள் வரையில் சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 10-ந்தேதி தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார்தாரர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தினார். வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன்படி நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் வைத்து சிலை செய்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கோயில் ஸ்தானிகர் ராஜப்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதியதாக செய்யப்பட்ட சோமஸ்கந்தர் சிலை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.எம்.ஐ. என்ற அமெரிக்க எந்திரம் மூலம் சோதனை செய்யப்பட்டது.
அந்த சிலையில் எள்ளளவு கூட தங்கம் இல்லை. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் தகவல்படி இந்த சிலையில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். இந்த சிலையை தயாரித்த குஸ்தபதி முத்தையா இதில் 5.75 கிலோ தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதில் உண்மை இல்லை.
இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கொண்ட குழு புலன்விசாரணை நடத்தி வருகிறது. புலன் விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டபோது எடுத்த படம்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன் மற்றும் ராஜப்பா செந்தில், கிருஷ்ணமூர்த்தி, சங்கர்பரத், மாசிலாமணி, வினோத்குமார் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் இவர்களை கைது செய்யவும் சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாஞ்சி போலீசார் சிலை மோசடி விவகாரத்தில் அமைதி காத்து வந்த நிலையில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியின் பின்னணியில் இருக்கும் யாரும் தப்ப முடியாது. அனைவரும் சிக்குவார்கள் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சோமாஸ்கந்தர் சிலையை தங்கத்தில் செய்யப் போவதாக கூறி 5.75 கிலோ தங்கத்தை சுருட்டி இருப்பதன் மூலம் ரூ.1½ கோடி அளவுக்கு இதில் மோசடி நடந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சிலையை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து தாராளமாக தங்கம் பெறப்பட்டுள்ளது. இதுபோன்று பெறப்பட்ட தங்கம் 100 கிலோ வரையில் இருக்கும் என்றும் பக்தர்கள் புகார் கூறி உள்ளனர். இதுபற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏகாம் பரநாதர் கோவில் நகைகள் முழுவதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோசடி விவகாரம் பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏற்கனவே 2 சிலைகளும் மாயமாகியுள்ளன. கோவில் பள்ளியறையில் உள்ள சிவன் – பார்வதி சிலை கடந்த 1992-ம் ஆண்டு திருட்டு போனது. இதன் தொடர்ச்சியாக 1993-ம் ஆண்டு பாலமுருகர் சிலையும் காணாமல் போனது. இதிலும் எந்த துப்பும் துலங்காமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்கே பார்த்தாலும் இந்துக் கோயில்களில் ஊழல். பெரிய கோயில்களுக்கு எக்கச்சக்கமான வருவாய் வருகிறது. கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது. கிணற்றுக்குள் இருக்கும் தவளையைப் பார்த்து தண்ணீர் குடிக்காதே என்று யாராவது சொல்ல முடியுமா? திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாள் ஒன்றுக்கு சராசரி 3 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இது தங்கம், வெள்ளி, பணத்தாள்கள், வெளிநாட்டு டொலர்கள் இப்படி ஏராளமான பணம் வருகிறது. இதனால் ஒவ்வொரு மணித்தியாலமும் பணத்தை வங்கியில் செலுத்துகிறார்கள். லட்டு விற்பனையில் மட்டும் அதன் நிறையைக் குறைத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்து விடுகிறார்கள். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் காஞ்சி ஏகம்பரநாதர் கோயில் சிலை ஒன்று ரூபா 1.5 கோடி செலவில் செய்ய ஏற்பாடாகியது. சிலை செய்தபின்னர் அதனை சோதனை இட்டபோது அதில் தங்கள் ஒரு குண்டுமணி கூட இருக்கவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் சொத்தைத் திருடினால் குலநாசம் எனப் பயமுறுத்தினாலும் களவு எடுப்பவர்கள் களவு ஏடுத்துக் கொண்டே இக்கிறார்கள். பக்தர்கள்தான் பாவம்.