சுமந்திரன்  தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம்!  சாடுகிறார் ரெலோ யதீந்திரா!

சுமந்திரன்  தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியனாம்!  சாடுகிறார் ரெலோ யதீந்திரா!

நக்கீரன்

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் வட கிழக்கு அரசியல் ஞாயிறை புவி சுற்றி வருவது போல மா.ஏ. சுமந்திரன் அவர்களைச் சுற்றியே வருகிறது.   அவரைப் போற்றுபவர்களும் உண்டு, அதைவிட அவரைத் தூற்றுபவர்கள்தான் அதிகம். சுமந்திரன் என்ற அரசியல்வாதியை  அரசி்யல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் தமிழ் அரசுக் கட்சியின்  எஞ்சிய தலைவர்களை சமாளிப்பது சுலபம் என போலித் தேசியவாதிகள்  நினைக்கிறார்கள். குறிப்பாக சில பந்தி எழுத்தாளர்கள் அப்படி நினைக்கிறார்கள். அதில் ஆரியபாலா யதீந்திரா என்பவர் முக்கியமானவர்.

இவர் 2015 இல் நடந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் புளட் மற்றும்  ரெலோ ஆகிய இயக்கங்களின் தெரிவாக  திருகோணமலையில்  போட்டியிட்டுத் தோற்றுப் போனவர். அதே சமயம் தமிழ் அரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட திரு இராசவரோதயன்   சம்பந்தன்    33,834  வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் யதீந்திரா நாடாளுமன்றத் தேர்தலுக்கு (2015) முன்னரும்  பின்னரும் தமிழ் அரசுக் கட்சியை கடுமையாக விமர்ச்சித்து வருபவர்.  அது இந்தக் கணம் வரை  தொடர்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால்  புளட் மற்றும் ரெலோ கட்சிகள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட யதீந்திரா தமிழ் அரசுக் கட்சியின் தலைமையைத் தாக்குவதில் குறியாக இருக்கிறார். குறிப்பாக சுமந்திரனைக் குறிவைத்துத் தரக்குறைவாகத்  தாக்குகிறார். இவர்  மட்டுமல்ல இவரைப் போன்ற “தூய்மையான” “22 கரட்” தேசியவாதிகளுக்கும் சுமந்திரன்தான் சிக்கலாக இருக்கிறார்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சொந்தமானது. தாயகம்,  தேசியம், தன்னாட்சியுரிமை யதீந்திரா போன்றவர்கள் பிறக்கும் முன்னராக முன்னெடுக்கப்பட்ட கோட்பாடு. அதன் தந்தை எஸ்ஜேவி செல்வநாயகம் அவர்களே. அவர்தான் அந்தத் தேசியப் பயிருக்கு நீரும், உரமும் இட்டு வளர்த்தவர். ஆனால் இன்று சிலர் தாங்கள்தான் தேசியவாதிகள்  தமிழ்த்  தேசியம் தங்களுக்கே சொந்தமானது மற்றவர்கள் முப்போதும் சொந்தம் கொண்டாடக் கூடாது கொண்டாட முடியாது என விதண்டா வாதம் செய்கிறார்கள்.

யதீந்திராவின் கணிப்பில் சுமந்திரன் ஒரு அன்னியன். இது அடிப்படையில்லாத அதே நேரம் பாரதூரமான குற்றச்சாட்டு

“கொழும்பின் நிகழ்ச்சி நிரலுக்கு மிகவும்   பொருத்தமானவர் சுமந்திரன்தான். மாவை சேனாதிராசா முதல்வராக ஆக்கப்பட்டாலும் அப்போதும் கூட உண்மையான முதல்வராகச் சுமந்திரன்தான் இருப்பார். தற்போது தமிழரசுக் கட்சி இருப்பது போல. ஆனால் மாவை சேனாதிக்கும் ஒரு அரசியல் பின்புலம் ஆகக் குறைந்தது மாவையால் மேடையிலாவது தேசியம் பேச முடியும்.

ஆனால் சுமந்திரனோ தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் ஒரு அன்னியன்.  ஒரு அன்னியனை  வடக்கு மாகாண முதலமைச்சர் ஆக்குவதன் மூலம்தான் சிங்களம் எதிர்பார்க்கும் தமிழ்த் தேசியத்தை இல்லாமலாக்கும் அல்லது அதனை உதட்டளவு தேசியமாக முடக்கும் இலங்கை வெற்றி கொள்ள முடியும். இந்த அடிப்படையில்தான் சுமந்திரன் வடக்கு மாகாண சபையை இலக்கு வைக்கிறார்.” (ஈழமுரசு – 26-04-2018)

இந்த விமர்சனம் எங்கே தப்பித் தவறி வடமாகாண சபையின் முதலமைச்சராக சுமந்திரன் வந்துவிடுவாரோ என்ற பயம் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது. யதீந்திராவுக்கு ு. இப்போதே  பயம்  பிடித்துக்   கொண்டுவிட்டது. மாகாண சபைத் தேர்தல் நெருங்க நெருங்க யதீந்திராவுக்கு குலைப்பன் காய்ச்சல் பிடித்தாலும் பிடிக்கும்.

இப்படித்தான் சுமந்திரன் 2010 இல் தேசியப் பட்டியல் மூலம் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போது யதீந்திராவும் அவர் போன்றவர்களும் வாயிலும் வயிற்றிலும் அடித்து ஒப்பாரி வைத்தார்கள். சுமந்திரன் பின்கதவால் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துவிட்டார் என்று வசை பாடினார்கள்.  சுமந்திரன்  கொழும்புத் தமிழன் என்றார்கள். இதனை முறியடிக்க 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று  சுமந்திரன் அறிவித்தார்.  இந்த அறிவித்தலைக் கேட்ட போலித் தேசியவாதிகளுக்கு ஐந்தும் கெட்டு அறிவும்  கெட்டுப் போயிற்று.

சுரேஸ் பிறேமச்சந்திரன் “இல்லை இல்லை, சுமந்திரன்  தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. அவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து இருக்கலாம்” என நல்லபிள்ளை மாதிரி நடித்தார். யாழ்ப்பாண தேர்தல் தொகுதிக்கு 2010 இல் ஒன்பது இருக்கைகளள் ஒதுக்கப்பட்டன. குடித்தொகை குறைந்தது காரணமாக ஒன்பது இருக்கைகள் ஏழாகக் குறைக்கப்பட்டது. இதனால் போட்டி கடுமையாக இருந்தது. சுமந்திரனின்  தேர்தல் பிரவேசம்  அந்தக் கடுமையை மேலும் கடுமையாக்கியது. எனவே ததேகூ க்குள் இருந்து கொண்டே சுமந்திரனுக்கு இபிஆர்எல்எவ் கட்சித் தலைவர் குழிபறித்தார். இருந்தும் சுமந்திரன் 58,043 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இப்படி நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆமோக ஆதரவோடு  வெற்றிவாகை சூடிய சுமந்திரன்  மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சராக வெற்றிவாகை சூடிவிடுவாரோ என்ற அச்சம்  யதீந்திராவைப் பிடித்துள்ளது. அதன் காரணமாகவே சுமந்திரனை அன்னியன் என்கிறார். அவரது சொற்பயன்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கது.

தெரியாமல்தான் கேட்கிறேன். யாழ்ப்பாணத்தில் பிறந்து அங்கேயே படித்து பின்னர் கொழும்பில் படித்து, பட்டப்படிப்பைத் தமிழ்நாட்டில் முடித்துவிட்டு கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்து சட்டத்தரணியாக வெளியேறி அங்கே தொழில் செய்யும்  சுமந்திரன் அன்னியன் என்றால் கொழும்பிலே பிறந்து, கொழும்பிலே வளர்ந்து, கொழும்பில் வாழும் விக்னேஸ்வரன் அன்னியன் இல்லையா? அவருக்கு ஆலவட்டம் வீசும் யதீந்திராவின் பதில் என்ன? சுமந்திரன் அன்னியன் என்றால் அவரைவிட விக்னேஸ்வரன் அன்னியன் ஆயிற்றே!

தமிழர்கள் எங்கு பிறந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்களாக இருந்தால் அவர்கள் தமிழர்களே. தமிழைச் சரிவரப் பேசமுடியாவிட்டாலும் அவர்களுக்குத் தமிழ் உணர்வு இருந்தால் அவர்கள் தமிழர்களே. பெற்றோரில் ஒருவரேனும்  தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவர்களது எச்சங்கள் தமிழரே.  தமிழ் மொழி,  தமிழ் இனம், நாட்டு நலனில் பற்றுள்ள அனைவரும் தமிழரே! அவற்றுக்காக உழைப்பது தமிழ்த் தேசியம் ஆகும்.  

பாகிஸ்தான் உருவாகக்  காரணமாக இருந்தவரும் அதன் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்தவரும்  பாகிஸ்தானின் தந்தை (பாபா-ஏ-கௌம்) எனவும் அழைக்கப்பட்ட   மொகமது அலி ஜின்னா பம்பாயில் சொந்த வீட்டில் வாழ்ந்தவர். அங்குதான் சட்டத்தொழில் நடத்தியவர். பாகிஸ்தான் என்ற நாடு பிரகடனப்படுத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கராச்சி போய்ச் சேர்ந்தார்.

யதீந்திராவின் கூற்றுப்படி  “விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன்  தமிழ்த்  தேசியத்தை   அழித்தல் அல்லது தமிழ்  தேசிய அரசியலை முற்றிலும் ஒரு வாய்ப்பேச்சு நிலையில் வைத்துக் கொள்வது என்னும் முதல்பாகம் நிறைவுற்றது. அதன் இரண்டாம் பாகம்  தற்போது  ஆரம்பமாகி இருக்கிறதாம்.  அதென்ன அந்த இரண்டாம் பாகம்?

தமிழ்த் தேசிய அரசியலை சனநாயகத் தளத்தில் முன்னெடுப்பதை கொழும்பால் தடுக்க முடியவில்லை. இந்த இடத்தில்தான் கொழும்பு பிறிதொரு  திட்டத்துடன் களமிறங்கியது. இந்தத் திட்டத்தை தமிழ்த்  தேசிய அரசியலுக்கு எவர் தலைமை தாங்குகின்றார்களோ அவர்களைக் கொண்டே சிதைக்கும் தந்திரோபாயத்தை சிங்களம்  வகுத்ததாம். இதுதான்  அந்த இரண்டாம் பாகமாம்.  அது உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய சட்ட மூலத்துடன்  தொடங்கியதாம்.  இன்று வடக்கு கிழக்கில்  உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் திக்கு முக்காடுகிறதாம்.

புதிய தேர்தல் சட்டத்தினால் பெரிய கட்சிகள் வடக்கில் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் இதே சிக்கல்தான். புதிய சட்டத்தின் பலவீனத்தை, அதனால் எழுந்துள்ள சிக்கல்களை இப்போது பெரிய கட்சிகள் உணர்ந்துள்ளன. எதிர் வரும் மாகாண சபைக்கான தேர்தல் பழைய சட்டப்படியே நடக்கும் எனச் சொல்லப்படுகிறது. சபைகளில் ஏற்பட்ட சிக்கல்களை வைத்துக் கொண்டு கொழும்பு தமிழ்த் தேசியத்தை சிதைக்கிறது என்பது விதண்டாவாதம்.

உண்மையில் வட கிழக்கில் ததேகூ க்கு விழுகிற வாக்கு வங்கி அப்படியே இருந்திருக்குமேயானால் சிக்கல் வந்திருக்காது. வடக்கில் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ க்கு 69 விழுக்காடு வாக்குகள் விழுந்தன. இம்முறை 34 விழுக்காடு வாக்குகள் மட்டும் கிடைத்தன.  ததேகூ 69 விழுக்காடு வாக்கல்ல 50 விழுக்காடு வாக்குகள் விழுந்திருந்தாலே எல்லா சபைகளிலும்  அது ஆட்சி அமைத்திருக்க முடியும்.

எடுத்துக்காட்டாக பூனகரி பிததேச சபையை எடுத்துக் கொண்டால் 48.14 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. ஆனால் மொத்தம் 20 இடங்களில்  11 இடங்களில் ததேகூ வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஏனைய கட்சிகளது ஆதரவின்றி ததேகூ  பூனகரி பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது.

எனவே தேர்தல் சட்டத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் ததேகூ மட்டுமல்ல வேறு ஏதாவது ஒரு கட்சி 50 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தால் ஆட்சி அமைப்பதில் எந்தச் சிக்கலும் இருந்திருக்காது.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள்  அதிகமாக  தேசியக் கட்சிகளை நோக்கிச் சென்றிருப்பதற்கும்  புதிய தேர்தல் சட்டத்திற்கும் தொடர்பில்லை. அப்படித் தொடர்பு படுத்திப் பார்ப்பது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போன்றது.

திருகோணமலை நகரசபைக்கு தாம் விரும்பிய இருவரை நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான தலைவராக நியமிக்க வேண்டும் என்பதற்காக  மக்களால் தெரிவு செய்யப்பட்ட இருவரை பதவி நீக்கம் செய்திருக்கிறார் யதீந்திரா.

முதலில் புதிய தேர்தல் சட்டத்தின் கீ்ழ் வாக்காளர்கள் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள். வாக்குச் சீட்டில் கட்சிகளின் பெயர்தான் இருக்கும். வேட்பாளர்களின் பெயர் இருக்காது. எனவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட இருவரை (சம்பந்தன்)  பதவி நீக்கம் செய்திருக்கிறார் என்ற குற்றச் சாட்டு பொருளற்றது.

திருகோணமலை நகர சபையைப் பொறுத்தளவில் ததேகூ க்கு விகிதாசாரப் பட்டியலில் இருந்து ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. காரணம்  ததேகூ க்கு விகிதாசார அடிப்படையில் கிடைக்க வேண்டிய 9 இருக்கைகளும்  வட்டார முறையில் கிடைத்துவிட்டன. எனவே தலைவர் பதவிக்கு முன்னரே தீர்மானித்த ஒருவரை வேறு வழியாகக் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இது யதீந்திராவுக்கு புரியாது என்று நான் கூறவில்லை. ததேகூ  தாக்குவதற்கு அவருக்கு ஒரு துரும்பு கிடைத்தால் போதும். அதைத் தூணகக் காட்டும் இரசவாதவித்தை அவருக்குத் தெரியும் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

நாய்க்குத்   தெரியுமா போர்த்தேங்காயின் அருமை என்பது பழமொழி. இந்தப் பழமொழி யதீந்திராவுக்குப் பொருந்தும்! சுமந்திரன்  ஒரு  அரசியல் சாணக்கியனாகவும், அரசியல் இராசதந்திரியாகவும் சட்ட  நிபுணராகவும் இருப்பது தமிழினத்துக்குக் காலம் தந்த கொடை..


 

 

 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply