பேச்சுப் பல்லக்கு தம்பி வித்தியாதரன் கால்நடை!
நக்கீரன்
பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை என்பது பழமொழி. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டின் ஆசிரியர் ந.வித்தியாதாரன். அந்த நாளேட்டின் இலட்சிய முழக்கம் என்ன தெரியுமா?
உண்மை,
நேர்மை,
பக்கம் சாராமை
இந்த மூன்றுமே அந்த நாளேட்டின் இலட்சியங்களாகும். ஆனால் நடைமுறையில் வித்தியாதரன் என்ன செய்கிறார்? அவர் “இனி இது ஒன்றும் இரகசியம் அல்ல” என்ற ஒரு கிசு சிசு பந்தியை ஒவ்வொரு நாளும் எழுதிவருகிறார். அது அவரது எழுத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரம். ஆனால் அவர் எழுதுவதில் உண்மை, நேர்மை, பக்கம் சாராமை துளியும் இல்லை. பொய் பொய்யாக எழுதுகிறார். கற்பனை செய்து எழுதுகிறார். அதில் உண்மை இல்லை. நேர்மை இல்லை. பக்கச்சார்பின்மையும் இல்லை.
கடந்த சில கிழமைகளாக தமிழ் அரசுக் கட்சிக்கு சேறு பூசுவது போல எழுதி வருகிறார். ந.வித்தியாதாரன் ஒரு மூத்த ஊடகவியலாளர். உதயன், சுடரொளி போன்ற ஏடுகளுக்கு நீண்டகாலமாக ஆசிரியராக இருந்தவர். அப்போது கொலை மிரட்டல்களுக்கும் உள்ளானவர். போர்க் காலத்தில் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபச்சாவின் நண்பராக இருந்தார். வித்தியாதரன் பெப்ரவரி 26, 2009 அன்று கொழும்பில் ஒரு மரண வீட்டில் வைத்து வி.புலிகளுக்கு உளவு சொன்னார் என்ற ஐயத்தில் மூன்று வெள்ளைவான்களில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டார். ஆனால் வித்தியாதரன் கடத்தப்படவில்லை என்றும் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் என்றும் காவல்துறை பேச்சாளர் சொன்னார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அதற்கு அன்றைய சனாதிபதியின் தலையீடு காரணம் எனச் சொல்லப்பட்டது. வித்தியாதரன் வி.புலிகளோடும் உறவு வைத்திருந்தார்.
வித்தியாதரன் ஊடகவியலாராக இருந்த போதும் அவருக்கு ஒரு அரசியல் பின்புலமும் உண்டு. 2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சனநாயக போராளிகள் குழு என்ற ஒரு கட்சியைத் தொடக்கினார். அதன் முதன்மை வேட்பாளராக அவரே இருந்தார். அந்தக் குழு சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேச்சு வார்த்தை நடத்திய வித்தியாதரன் தொகுதிக்க இரண்டு என்ற விழுக்காட்டில் ஒன்பது போராளிகளுக்கு நியமனம் கேட்டார். அவரது கோரிக்கை மறுக்கப்பட்ட போது தேர்தலில் சனநாயக போராளிகள் குழு தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார்.
வடக்கில் முன்னாள் போராளிகள் களம் இறங்கினால் அது தெற்கில் மகிந்த இராசபக்சாவின் வெற்றியை உறுதிப்படுத்தும் என பாதுகாப்பு அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய இராணுவப் புலனாய்வுப் பிரிவு நம்பியது. அந்தச் செய்தியைப் புலனாய்வுப் பிரிவு மகிந்த இராசபக்சாவுக்குத் தெரிவித்தது.
வடக்கில் சனநாயகப் போராளிகள் குழு வி.புலிகளின் அரசியல் பிரிவு செய்த அதே பரப்புரைப் பாணியில் தனது பரப்புரையை செய்தது. துண்டுப் பிரசுரங்களில் தங்களது சொந்தப் பெயர்களோடு இயக்கப் பெயர்களையும் சேர்த்து வெளியிட்டார்கள். யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு நா.உறுப்பினரைத் தெரிவு செய்ய 30,000 – 35,000 வரையிலான வாக்குகள் தேவைப்படும் என்பதால் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (இதில் கிளிநொச்சி நிருவாக மாவட்டமும் அடக்கம்) முன்னாள் போராளிகளின் குடும்பங்களை இலக்கு வைத்து சனாநாயகப் போராளிகள் குழு பரப்புரை செய்தது.
அப்போது வித்தியாதரனுடைய கையில் நாளேடு எதுவும் இருக்கவில்லை. மலரும் என்ற இணையதளம்தான் இருந்தது. பொதுவெளியில் காணப்பட்ட செய்தி ஏடுகள் அந்தக் குழுவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. பலாலி இராணுவ தளம் நடத்தும் நியூயவ்னா என்ற இணைய தளம் மட்டும் அந்தக் குழு தொடர்பான பரப்புரைக்கு பெருமளவு உதவி செய்தது. அதே போல் இராணுவம் நடத்தி வந்த தொலைக்காட்சியும் உதவி செய்தது.
தேர்தல் முடிவுகள் வந்த போது சுயேட்சையாகப் போட்டியிட்ட சனநாயகப் போராளிக் குழுவுக்கு 1,979 வாக்குகளை மட்டும் பெற்று படு தோல்வி அடைந்தது. ஒரு நாடாளுமன்றக் கதிரையை ஆவது பிடிக்கலாம் என்ற வித்தியாதரனின் கனவும் காற்றில் கலைந்து போனது.
ஆனால் சனவரி 08, 2015 இல் நடந்த சனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். தமிழ்மக்களின் வாக்குகளும் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அவரது ஆட்சியில் சனநாயகத்துக்கான இடைவெளி உருவாக்கப்பட்டது. இதனால் முன்னாள் வி.புலிப் போராளிகளும் பலன் அடைந்தார்கள். அவர்கள் மீதான கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. இதனை இராணுவ புலனாய்வுப் பிரிவு விரும்பவில்லை. இந்தச் சுதந்திரம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தைத் தோற்றம் பெறச் செய்யும் தெற்கில் குண்டுகள் மீண்டும் வெடிக்கும் என சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்யப்பட்டது.
இதே போல் 2013 இல் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடந்த போது தன்னை வட மாகாண சபையின் முதன்மை வேட்பாளராக (முதலமைச்சர்) நியமிக்குமாறு தமிழ் அரசுக் கட்சியிடம் கேட்டார். அது மறுக்கப்பட்ட போது முதலமைச்சர் கனவும் வித்தியாதரனுக்கு கிட்டாமல் போய்விட்டது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளாராக தன்னை நிறுத்துமாறு வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சியிடம் கேட்டார். அவரது வேண்டுகோள் மீண்டும் மறுக்கப்பட்டது.
இப்படி ஐந்து இராச்சியம் கேட்டு, ஐந்து ஊர் கேட்டு அதுவும் மறுக்கப்பட்ட நிலையில் ஐந்து வீடு கேட்ட பாண்டவர் போல முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, யாழ்ப்பாண மாநகர சபை பதவி கேட்டு ஒன்றுமே கிடைக்காது போகவே வித்தியாதரன் தமிழ் அரசுக் கட்சியை அவர் புதிதாகத் தொடங்கியுள்ள காலைக்கதிர் நாளேட்டின் ஊடாக பழிவாங்கப் புறப்பட்டிருக்கிறார்.
அதனால் தமிழ் அரசுக் கட்சி பற்றியும் அதன் தலைமை பற்றியும் காலைக்கதிர் நாளேட்டில் கன்னா பின்னா என எழுதிவருகிறார். இலவச ஆலோசனைகளை எடுத்து விடுகிறார். மேலே குறிப்பிட்டது போல இனி இது இரகசியம் அல்ல என்ற ஒரு கிசு கிசு பகுதியையும் எழுதி வருகிறார். அதில் கனடாவில் இருந்து வந்து நிற்கும் பிரமுகர் பற்றி எழுதுகிறார். அவர் குதிரை பேரத்தில் இறங்கி இருப்பதாகவும் அதில் பல லகரங்கள் கைமாறுவதாகவும் எழுதுகிறார். இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக்கட்டி எழுதுகிறார். எடுத்துக் காட்டுக்கு இதனைப் படியுங்கள்,
கொழும்பில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல்குழுவில் நடந்தவற்றை யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு தொலை நோக்கி மூலம் பார்த்து “‘அந்தக் கூட்டத்தின் போது யாழ் மாநகர முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்னோல்ட் அவர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார்’ என்று வித்தியாதரன் எழுதினார்.
ஆனால் உண்மை அதற்கு முற்றிலும் எதிர்மாறானது! அதனை அடுத்தநாள் அவரே ஒப்புக் கொண்டார். “தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் அந்த விடயத்தை அடியோடு மறுத்துரைத்தார். ஆர்னோல்டின் அன்றைய கூட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஆர்னோல்ட் உரையாற்றினார். சம்பந்தன் ஐயாவின் மனதைத் தொடும் விதத்தில் அது அமைந்தது” என்று ஆரம்பித்த அவர் ஆர்னோல்டின் உரையின் கருத்துக்களையும் வெளியிட்டார். அதைப் பிறகு இப்பத்தியில் விரிவாகப் பார்ப்போமா?” என்று எழுதினார். ஆனால் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்றவன் கதையாக விரிவாக அவர் எழுதவே இல்லை!
இன்னொரு பஞ்சமா பாதகத்தையும் அந்தக் கனடாக்காரர் செய்து விட்டார் என வித்தியாதரன் சொல்கிறார். கனடாக்காரர் தமிழ் அரசுக் கட்சிக்கு என புதிய சுதந்திரன் என்ற ஒரு செய்தித் தாளை வெளியிடுகிறாராம். அதற்கு வேண்டிய பல இலட்சங்களை அவரது முயற்சியால் கனடா கொடுத்து உதவியதாம். மேற்கொண்டு அந்த செய்தி ஏட்டை நடத்த தமிழ் அரசுக் கட்சி தனது மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மாதா மாதம் பணத்தைக் ‘கறக்க’ இருக்கிறதாம். இந்த அறவீடு நடைமுறைக்கு வந்தால் எத்தனை “ஒரிஜினல்’ தமிழரசுக் கட்சியினர், கூட்டமைப் பின் மற்றைய பங்காளிக் கட்சிகளின் பக்கம் பாய்வார்கள் என்பதும் சுவாரசியமாகக் கவனிக்கத்தக்க விடயமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்ற தனது நப்பாசையை வித்தியாதரன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசுக் கட்சி தனது தேசியப் பட்டியலில் பேராசிரியர் சிற்றம்பலத்தின் பெயரை சேர்த்திருந்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக அவருக்கு அந்தப் பதவியை கட்சித் தலைமையால் கொடுக்க முடியவில்லை. உடனே அவர் கோபித்துக் கொண்டு சனநாயக தமிழ் அரசுக் கட்சி என்ற லெட்டர் பாட் கட்சி ஒன்றை உருவாக்கி கடந்த தேர்தலில் தமிழர் தேசிய விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. மார்ச் மாதம் 14, 2018 ஆம் நாள் தமிழ் அரசுக் கட்சியின் செயல்குழுக் கூட்டம் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் நாடாளுமன்றக் கூடத்தில் நடைபெற்றது. அதற்கு பேராசிரியர் சிற்றம்பலம் அழைக்கப்படவில்லையாம். அவருக்காக ஒரு பாட்டம் வித்தியாதரன் அழுது வடிந்திருக்கிறார்.
பேராசிரியர் சிற்றம்பலம் ஒருவர் மட்டுமல்ல கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அனந்தி சசிகரன், தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் இளைஞர் அணித் தலைவர் சிவகரன் சார்பாகவும் வித்தியாதரன் ஒப்பாரி வைத்துள்ளார். கட்சியில் உள்ள ஒருவர் கட்சி எடுக்கும் முடிவுக்கு மாறாக பகிரங்கமாக விமர்ச்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயத்தான் செய்யும். அப்போதுதான் அது மற்றவர்களுக்குப் பாடமாகவும் அமையும். இது கொழும்பு தமிழ் அரசுக் கட்சிக் கிளையில் 2 ஆண்டுகள் செயலாளராக இருந்த வித்தியாதரனுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
தமிழ் அரசுக் கட்சியோ அதன் தலைவர்களோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. தந்தை செல்வநாயகம் அவர்களே மிகவும் கீழ்த்தரமான விமர்சனத்துக்கு உள்ளானவர். ஆனால் தமிழ் அரசுக் கட்சி மீது வைக்கப்படும் விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். அறம்சார்ந்ததாக இருக்க வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.