ஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவியலா?

ஜோதிடமும், பஞ்சாங்கக் கிரகணக் குறிப்புகளும் அறிவியலா?

சேது வெளியிட்ட செய்தி

2012 மே 20 நாளிட்ட தினமலர் இதழின் வாரமலரில், கேள்விகளும் ஆச்சரியங்களும் என்கிற பகுதியில் “நவக்கிரக சன்னதி உணர்த்தும் அறிவியல் உண்மைகள்” என்னும் தலைப்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. செய்தியை எழுதியிருப்பவர் சேது என்பவர். அந்தச் செய்தி பின்வருமாறு:

“சூரியனை மய்யமாகக் கொண்டு பூமி உட்பட எல்லாக் கிரகங்களும் சுற்றி வருகின்றன என்ற வானியல் உண்மையை நமது முன்னோர் திறம்பட அறிந்து இருந்தார்கள் என்பதற்கு நமது ஆலயங்களில் காணப்படும் நவக்கிரக பிரதிஷ்டையில் சூரியன் நடுநாயகமாக அமைக்கப் பட்டுள்ளதே நிரூபணமாகும்.

அதுமட்டுமன்றி, திருக்கணித பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படும் நேரத்தில்தான் அறிவியல் நீதியாக வரும் சூரியகிரகணம், சந்திரகிரகணம் ஆகியவை நிகழ்கின்றன.

எனவே, ஜோதிடம் என்பது முழுவதும் அறிவியலடிப்படையானதே!’ என்கிறார் வேதஜோதிடத்தில் நீண்ட அனுபவம் கொண்ட கோவை ஸ்ரீஜெகநாத சுவாமி”.

கோவை ஜெகநாதசவாமியின் கோமேதகக் கருத்துகளை ஆய்வு செய்வோமே?

புவி எங்கே போயிற்று?

ஜோதிடத்தில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது என ஒன்பது கோள்கள் (நவக்கிரகங்கள்) இடம்பெற்றுள்ளன.

ஆனால், அந்தக் கோள்பட்டியலில், இந்தக் கோவை ஜோதிடர் ஜெகநாத சுவாமி உட்பட நாம் வாழும் புவி (Earth) இடம்பெறவில்லையே? ஏன் இந்த நிலை? அறிவி(வானி)யலில் புவி ஒரு கோள் ஆயிற்றே? ஜோதிடத்தில் புவி இல்லையே! புவி எங்கே போயிற்று? புவி என்பதாக ஒரு கோள்பற்றிய அடிப்படை அறிவே இந்த வேத ஜோதிட மேதைகளுக்கு இல்லையே? பின் எப்படி ஜோதிடம் அறிவியல் ஆகும்?

விண்மீனுக்கும் கோளுக்கும் வேறுபாடு தெரியவில்லையே?

ஜோதிடத்தில் சூரியன் ஒரு கோள் ஆகும். ஆனால், அறிவியலில் சூரியன் கோள் (Planet) அன்று; விண்மீன் ஆகும். (Star). வேதஜோதிடம் சூரியனை ஒரு கோள் ஆகக் கருதுகிறதே? ‘க்ரஹாணாம் ஆதிராதித்யோ’ -_ அதாவது, கிரகங்களுள் முதன்மையானவன சூரியன் என்று ஸ்ரீசூர்யஸ்தோத்திரம் என்னும் நூலுள் கூறப்பட்டுள்ளது.

“ஓம் க்ரஹாணாம் பதயே நமஹ!” அதாவது, கோள்களின் தலைவனே! வணக்கம்! என்று, 108 பெயர் வரிசையுள் 89வது சூரியனின் பெயர் வரிசையாக ஸ்ரீசூர்யா அஷ்டோத்ர சத நாமாவளி என்னும் நுல் கூறுகிறது. (தகவல்: பாலஜோதிடம்; டிசம்பர் 1987. இதழ்)

சூரியன் அய்யத்திற்கிடமின்றி கோள் (கிரகம்)என்றே ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக் கொண்ட ஜோதிடம் எப்படி அறிவியலாகும்? ஜெகநாத சுவாமி செப்புவாரா விடை?

கோளா? துணைக்கோளா?

ஜோதிடத்தில் சந்திரன் ஒரு கோளாகவே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், புவி என்னும் கோளைச்சுற்றிவரும் ஒரு துணைக்கோள் (Satelite) ஆகவே அறிவியல் கூறுகிறது.

சந்திரனை _ ஒரு துணைக்கோளை, கோள் என்று வைத்துச் சதிராட்டம் போடும் ஜோதிடம் எப்படி அறிவியல் ஆகும்?

விண்ணிலே எத்தனை வெண்ணிலவுகள்?

ஜோதிடத்தில் இருப்பது ஒரே ஒரு சந்திரன் (நிலவு)தான்! இதை வைத்துக்கொண்டுதான் திரையிசைப் பாடலாசிரியர்கள், அன்று வந்ததும் இதே நிலா! இன்று வந்ததும் அதே நிலா!! என்றும் உள்ளதும் ஒரே நிலா! இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா!! என்று கொட்டி முழக்குகிறார்கள். ஆனால், வானியலில், 112 பெரியவை; 16 சிறியவை. ஆக, 128 சந்திரன்கள் உள்ளன என்று கண்டுபிடித்தும் கூறப்பட்டுள்ளது.

புவிக்கு அமைந்த துணைக்கோள் ஆன ஒரே ஒரு சந்திரனுக்குத்தான் ஜோதிடப் பலன்கள் கூறப்பட்டுள்ளன.

ஏனைய 127 சந்திரன்கள் என்ன குற்றம் செய்தன? அவர்கள் மொழியில் சொல்வதானால் அவை என்ன பாவம் செய்தன? இந்த வேத ஜோதிட அனுபவசாலி ஜெகநாதசுவாமி பதிலளிப்பாரா?

இல்லாத கோள்கள் இரண்டு

ஜோதிடத்தில் விண்மீனான சூரியன், துணைக்கோளான சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி சனி, இவற்றோடு இராகு, கேது எனப்படும் இரண்டு கோள்களும் இடம் பெற்றுள்ளன. இவை, உண்மையில் இல்லவே இல்லை. கற்பனைப் புள்ளிகள். வானியலில் இவை இடம்பெறவில்லை. இப்படியிருக்க, இராகு, கேது உள்ளிட்ட கோள்கள் எனக் குறிக்கும் ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

இருக்கும் கோள்கள் இடம் பெறவில்லையே?

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியன சூரிய குடும்பத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டவை. இவை ஜோதிடத்தில் இன்றும் சேர்க்கப்படவில்லையே? எப்படி ஜோதிடம் அறிவியலாகும்?

அண்மைய அறிவியல் ஆய்வின்படி, புளூட்டோ, ஒரு கோளுக்குரிய தகுதிப்பாடு இல்லை என்று விலக்கிவிட்டனர் அதனை அறிவியலார்.

பேச்சு _ மூச்சு இல்லை

அதே சமயம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மய்யத்தின் (நாசா) நிதியுதவியுடன், அறிவியலாளர்கள் புதியகோள் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் நாள் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு செட்னா (Cetna) எனப் பெயரும் இட்டுள்ளனர். இவ்வாறான கோள்பற்றி மூச்சு விடாத ஜோதிடம் அறிவியல் ஆவது எப்படி?

நவக்கிரகங்களின் நடுநாயகமாம்

கோளே இல்லாத, கோள்களின் உருவாக்கத்துக்கு அடிப்படையான விண்மீன் ஆன சூரியன் ஆலயங்களில் நவக்கிரங்களின் நடுநாயகமாக ஏனைய கோள்களோடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஜோதிடம் அறிவியல் என்பதை மெய்ப்பிக்கும் என்று பிதற்றுவது சரிதானா?

இப்படிக் கூறுவது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கிறது? ஜெகநாதசுவாமி ஏன் இப்படி ஜோதிடத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்புகிறார்? எதற்காக இவர் இவ்வண்ணம் குழப்பத்தின் குட்டையாக மாறவேண்டும்?

வர்ணதர்ம வல்லாண்மை:

வர்ண தர்மப் பிடியில் மக்களை அழுத்தி வைத்ததுபோல கோள்களையும் வர்ண வல்லாண்மையின் பிடியில் வைத்துள்ள ஜோதிடத்தின் போக்கைக் கீழே பாருங்கள்:

குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி) இரண்டும் பிராமண ஜாதி (வர்ணம்)யாம்! சூரியன், செவ்வாய் சத்திரிய ஜாதியாம், சந்திரன், புதன் வைசிய ஜாதியாம், சனி சூத்திர ஜாதியாம்! இராகு, கேது _ சாங்கிரம (கலப்பு) ஜாதியாம்! இவ்வாறு எழுதிவைத்துள்ளனர் ஜோதிடகர்த்தாக்கள்.

இழிவுக்கும் அவமரியாதைக்கும் உரிய கோள் ஆக, சனியை வைத்திருக்கிறார் பாருங்கள்! சனி சூத்திர ஜாதியாம்! வர்ணதர்ம ஒடுக்குமுறையும் உயர்ஜாதி வெறியும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள போக்கு இது! அறிவியலில் இல்லாத அது சொல்லாத வர்ண தர்மத்தைச் சுமத்தும் இந்த ஜோதிடம் எப்படி அறிவியலாகும்?

ஆணாம்! பெண்ணாம்! அலியாம்!!

கோள்கள்பற்றிய ஜோதிடத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை! உயிரற்ற அறிவற்ற, மனமற்ற வெறும் அஃறினைப் பொருள்களாகிய கோள்கள், துணைக்கோள், விண்மீன் இவை ஆணாக, பெண்ணாக, அலியாக இருக்கின்றனவாம்!

சூரியன், செவ்வாய், குரு(வியாழன்) இவை ஆண்களாம்! சந்திரன், சுக்ரன்(வெள்ளி), ராகு இவை பெண்களாம்! புதன், சனி, கேது இவை அலிகளாம்!! கேலிக்கூத்தாக இல்லை? இப்படி எந்த அறிவியல் கூறுகிறது? பின், எப்படி இந்த ஜோதிடம் அறிவியலாகும்? ஆகும் என்கிறாரே கோவை சுவாமிகள்!

கிரகணம் பற்றிய கிறுக்குத்தனம்

திருக்கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டபடி சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்பட்டுகின்றனவாம்! ஆகவே, ஜோதிடம் அறிவியலாம்! சொல்கிறார் கோவை சுவாமிகள்! கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் உண்யில் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த முன்னோர் கண்டுபிடிப்பா?

வரலாறு கூறும் வானியல் செய்திகள்Image result for Total Solar Eclipse

கி.மு.747இல், அதாவது கி.மு.8ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் கிரகணங்கள் பற்றிய குறிப்புகள் இருந்துள்ளதாக, கிரேக்க வானியலறிஞர் டாலமி குறிப்பிடுகிறார்.

இந்தக் குறிப்புகள் எகிப்து, இந்தியா, சீனாவுக்குப் பரவியதாக வரலாற கூறுகிறது. கி.மு.7-_6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தேலீஸ் என்னும் கிரேக்க அறிஞர், கதிரவனுக்கும் புவிக்கும் இடையே நிலவு புகுவதால் சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏறப்டுவதாக, கணித்துச் சொல்லியிருக்கிறார்.

கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனக்காரஸ் என்னும் கிரேக்க அறிஞர், சூரியனுக்கம் சந்திரனுக்கும் இடையே புவி வருவதால் நிகழ்வதே சந்திரகிரகணம் (Lunar Eclipse) என்றார்.Image result for Total lunar Eclipse

இவர்களுக்கு உரிமை இல்லை!

ஓர் இடத்தில், ஒருமுறை முழுச்சூரிய கிரகணம் (Total Solar Eclipse) தோன்றினால், பின்னர் 360 ஆண்டுகட்கு பிறகுதான் மறுபடியும் முழுச்சூரிய கிரகணம் தோன்றும்.

இதுபோல, பிறவகைக் கிரகணங்களுக்கும், சந்திர சூரிய கிரகணங்களுக்கும் அவற்றிற்கென சுழற்சிக்கால முறை உண்டு. மேலைநாட்டிலிருந்து _ நாடுகளிலிருந்து பெற்ற இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் பஞ்சாங்கத்தில் கிரகணக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனரே தவிர, இவர்களாகவே கண்டுபிடித்துச் சொல்லவில்லை! இப்படிச் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு எவ்வகை உரிமையும் கிடையாது.

இந்தியாவில் தோன்றவில்லை!Image result for Total Solar Eclipse

இதுமட்டுமல்ல, ஆண்டுகள், மாதங்கள் ஆகவும், மாதங்கள் வாரங்கள் ஆகவும், வாரங்கள் நாள்கள் ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் 7 நாள்களுக்கும் தனித்தனிப் பெயர்கள் உள்ளன. இந்தப் பெயர்கள் 7 கோள் (கிரகங்)கள் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்த முறைமை, 2000 ஆண்டுக்காலமாகவே இந்திய நிலப்பரப்பில் நடைமுறையில் இருந்துவந்தாலும் இந்தியாவில் தோன்றியது அன்று. இந்த முறை, முதன்முதலில் எகிப்தில் தோன்றியது.

பின்னர், அலெக்சாண்டர், எகிப்தை வெற்றி கண்டபோது இது கிரேக்கநாட்டிலும் பரவியது. கிரேக்க நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிலும் பரவியது. 12 இராசிகளின் பெயரும் இதுபோல் வந்தவைதாம். இப்படி இருக்க, இந்தியப் பஞ்சாங்கத்தின் கிரகணக் குறிப்புகளை வைத்துக் கொண்டு என்னமாய்க் குதியாட்டம் போடுகிறார் இந்தக் கோவை சுவாமிகள்!

மூடநம்பிக்கைகளின் முகாம்

இனியும், ஜோதிடம் அறிவியல் என்று கிறுக்குத்தனமாக_ அசட்டுத்தனமாகக் கூறுவதை, வேதஜோதிடத்தில் நீ…….ண்ட அனுபவம் வாய்ந்த ஜெகநாத சுவாமிகள் போன்ற ஜோதிட பற்றாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜோதிடம் அறிவியல் என்று கூறுவது அபத்தம் ஆகும். அது, அறிவியல் அல்ல; அல்ல; அல்லவே அல்ல! ஆனால், அது மூடநம்பிக்கைகளின் முகாம்.

பேரா.ந.வெற்றியழகன் அவர்கள் ஜுன் 1 15 20112 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.ca/2012/06/blog-post_22.html


 

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply