பண்டைத் தமிழர் வழங்கிய கொடை

பண்டைத் தமிழர் வழங்கிய கொடை

 
உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் இல்லாத் தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு. அந்தச் சிறப்பை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்ல துணையாக இருப்பவற்றுள் முதன்மையானது தொல்காப்பியம் ஆகும். உலகில் உள்ள மனித இனங்களின் படையெடுப்பால் எம் பண்டைய பெருமைகளைக் கூறும் கலைச்செல்வங்கள், கட்டிடங்கள், நூல்கள், நூலகங்கள் களவு எடுக்கப்பட்டு அழித்து எரிக்கப்பட்ட போதும் தமிழரின் பெருமையை எடுத்துக் காட்டுவன சங்க இலக்கிய நூல்களே.
காலம் என்றால் என்ன? நேரத்தின் அளவைக் காலம் என்ற சொல்லால் குறிக்கிறோம். ஒரு செயல் எப்போது நடந்தது? என்பதைக் காட்டுவது வினைச்சொல்லாகும். அந்தச் செயல் நடந்ததா? நடக்கிறதா? நடக்கப்போகிறதா? என்னும் காலத்தைச் சரியாகக் காட்டுவது வினைச் சொல்லே. அதனால் தொல்காப்பியர் வினைச்சொல்லை ‘காலக்கிளவி’ என்றும் அழைக்கிறார். கிளவி என்றால் சொல். ஒரு செயல் நடைபெற்ற காலத்தை [இறந்தகாலமா? நிகழ்காலமா? எதிர்காலமா? என்னும் மூன்று காலத்தையும்] சொல்லைக் கொண்டு [படித்தான், படிக்கிறான், படிப்பான்] அறிகிறோம் அல்லவா? அச்சொல் செயல் நடந்த காலத்தைக் காட்டுவதால் காலக்கிளவி என்றார். 
“வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலை காலமொடு தோன்றும்”                
                                                     – (தொல்: சொல்: 198)
“காலம்தாமே மூன்று என மொழிப”                       
                                                      – (தொல்: சொல்: 198)
“காலக் கிளவி அஃறிணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே”                
                                                     -(தொல்: சொல்: 198)
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே அதாவது இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பே ‘காலம்’ என்னும் சொல் தமிழில் இருந்ததை
“காலம்தாமே மூன்று என மொழிப” 
இந்த தொல்காப்பிய நூற்பாவில் சொன்னார்கள்[மொழிப] என்று தொல்காப்பியர் குறித்துள்ளதால் அறியலாம்.
காலத்தை தொல்காப்பியர் ‘பொழுது’ என்ற சொல்லாலும் குறிப்பிடுகின்றார். இன்று வாழும் தமிழர்களாகிய நாமும் ‘எப்பொழுது வந்தீர்கள்? எப்பொழுது கொண்டுவர வேண்டும்? எனக் கேட்கும் போதும், பொழுதோடு வந்துவிட்டேன் எனச் சொல்லும் போதும் காலத்தை பொழுது என்ற சொல்லால் தானே குறிப்பிடுகிறோம்!
நாம் செய்யும் செயல் எதுவித தடையும் இன்றி நடைபெற இடமும் காலமும் மிகமிகத் தேவை என்பதை நம் பண்டைத் தமிழ் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள். அதனை
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே” 
என தொல்காப்பியம் சொல்கின்றது.
ஒன்றைச் செய்வதற்கு தேவையான முதல் பணமோ பொருளோ அல்ல.  எதனைச் செய்யத் தொடங்கும் போதும் அதனைச் செய்வதற்கு ஏற்ற இடம், ஏற்ற காலம் ஆகிய இரண்டும் தேவை ஆதலால் அவற்றை முதல் என்றார். இத்தொல்காப்பிய நூற்பா நிலம் என இடத்தையும் பொழுதெனக் காலத்தையும் சுட்டுகிறது. சோதிடர்களும், குருக்கள்மாரும் குறித்துத்தரும் காலத்தை [நல்ல நேரத்தை] இதில் சொல்லவில்லை. இரவு, பகல், பருவகாலங்கள் இங்கு காலம் என்று அழைக்கப்படுகின்றன. அவை எவை எனப்பார்ப்போம்.
பண்டைத்தமிழர் வகுத்த காலப்பிரிவுகள்
காலத்தை – பொழுதை நம்முன்னோர் பெரும்பொழுது, சிறுபொழுது எனப் பிரித்தும் வைத்துள்ளனர். ஒரு வருடத்தை ஆறு பொழுதுகளாக [காலங்களாக] பிரித்து அவற்றை ‘பெரும்பொழுது’ என்றனர். அதை நம்பியகப்பொருள்,
 
“காரே கூதிர் முன்பனி பின்பனி
சீரிளவேனில் வேனிலென்றாங்கு
இருமூன்று திறத்தது தெரிபெரும் பொழுது”                 
                                                  – (நம்பியகப்பொருள்: 11)
என்கின்றது. அதாவது கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், வேனிற்காலம் என்ற ஆறும் பெரும்பொழுதாகும்.
பெரும் பொழுது
[இரண்டு மாதம் ஒரு பெரும் பொழுதாகும்]
கார்காலம் – மழை மேகங்களால் சூழ்ந்த காலம்[கார் – மேகம்] ஆவணி, புரட்டாதி மாதங்கள்
கூதிர்காலம் – குளிர் காற்று வீசும் காலம் [கூதிர் -குளிர் காற்று] ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்
முன்பனிக்காலம் – விடியலில் பனி பெய்யும் காலம் மார்கழி, தை மாதங்கள்
பின்பனிக்காலம் – காலையில் பனி பெய்யும்காலம் மாசி, பங்குனி மாதங்கள்
இளவேனிற்காலம் – வசந்த காலம் சித்திரை, வைகாசி மாதங்கள்
வேனிற்காலம்/முதுவேனிற்காலம் – கோடைகாலம் ஆனி, ஆடி மாதங்கள்
இதே போல் ஒரு நாளை ஆறு பொழுதுகளாகப் பிரித்து சிறுபொழுது என்றனர். அதனை
“மாலை யாமம் வைகுறு என்றா
காலை நண்பகல் ஏற்பாடு என்றா
அறுவகத்து என்ப சிறுபொழுது அவைதாம்
படுசுடர் அமையம் தொடங்கி ஐஇரு
கடிகை அளவைய காணுங் காலே”                  
                                          – (இலக்கணவிளக்கம்: பொருள்: 385)
என்று இலக்கணவிளக்கம் சொல்கின்றது. அதாவது ‘மாலை, யாமம், வைகறை [வைகுறு], காலை, நண்பகல், பிற்பகல் [ஏற்பாடு] என்ற ஆறும் சிறுபொழுதாகும். ஆராய்ந்து பார்த்தால் [காணுங்காலே] அவை சூரியன் மறையும் காலந்தொடக்கம் [படுசுடர் அமையம்] பத்து[ஐயிரு] நாழிகை [கடிகை] அளவு உடையன ஆகும்’ என்கின்றது இலக்கண விளக்கம்.
 
சிறு பொழுது
(பத்து நாழிகை ஒரு சிறு பொழுதாகும்)
மாலை – சூரியஒளி மயங்கும் காலம்[முன்னிரவு] 18:00 மணி தொடக்கம் 22:00 மணி வரை
யாமம் – நள்ளிரவு 22:00 மணி தொடக்கம் 02:00 மணி வரை
வைகுறு – விடியற் காலம் 02:00 மணி தொடக்கம் 06:00 மணி வரை
காலை – காலை வேளை 06:00 மணி தொடக்கம் 10:00 மணி வரை
நண்பகல் – உச்சிக்காலம் [நடுப்பகல்] 10:00 மணி தொடக்கம் 14:00  மணிவரை
ஏற்பாடு – சூரியன் மறையும் காலம் 14:00 மணி தொடக்கம் 18:00 மணி வரை
ஒரு சிறுபொழுது பத்து நாழிகை அளவுவுடையது. எனவே அறுபது நாழிகை ஒரு நாள் ஆகும். இரண்டரை நாழிகையை ஒரு ஓரை என அழைதனர். எமது பண்டைத்தமிழர் கணக்கின்படி 24 ஓரைகள் கொண்டது ஒரு நாளாகும். ஆதலால் பண்டைத் தமிழரின் கணக்குப்படி ஒரு ஓரை என்பது இன்று நாம் சொல்லும் ஒரு மணித்தியாலமேயாகும். அதனாலேயே ஒரு நாளை 24 மணித்தியாலங்கள் கொண்டது என்கின்றோம். நம்தமிழ் முன்னோரின் ‘ஓரை’ என்ற சொல்லையே கிரேக்கமொழியில் ‘ஹோரா [hora]’ என்றனர். அதுவே ஆங்கிலத்தில் ‘ஹவர் [hour]’ என்று மாறிற்று. ஆனால் நாமோ மேற்கு நாட்டினரே ஒரு நாளில் 24 மணி நேரம் இருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று ஏமாளிகளாக சொல்லியும் எழுதியும் வருகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.
10 நாழிகை      – 1 சிறு பொழுது
6 சிறு பொழுது – 1 நாள்
60 நாழிகை      – 1 நாள்
2½ நாழிகை    – 1 ஓரை
4 ஓரை             – 1 சிறு பொழுது
24 ஓரை           – 1 நாள் [24 hour – 1 day]
1 ஓரை              – 1மணி நேரம்
ஓரை என்னும் பண்டைத் தமிழரின் கருத்தை இன்றைய சோதிடம் சிறிது மாறுபட்ட கருத்தில் பயன்படுத்துகிறது. ஒவ்வொருநாளும் அந்ததந்த நாளுக்கு உரிய ஓரையுடன் தொடங்கும். [புதன் கிழமை புதன் ஓரை என்றவாறு…]. ராகு கேது தவிர்ந்த ஏழு கிரகத்திற்கும் ஓரைகள் உண்டு. ஒருமணி நேரத்தை [ஓரையை] சுழற்சி முறையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் கொடுத்து அதனை ஓரை என்கின்றனர். அது நாளுக்கு நாள் மாறுபடும். அதைக் கொண்டே சுப ஓரை – சுப நேரம் கணிப்பர். எனினும் ஒரு ஓரை என்பது ஒரு மணி நேரம் என்பதை மாற்றவில்லை.
மனித இனத்துக்கு காலத்தை வகுத்துக் கொடுத்தவன் தமிழன் என்பதை ‘ஓரை’ எனும் சொல் எடுத்துச் சொல்கிறது. ஆதலால் காலக் கணிதமும் பண்டைத் தமிழர் வழங்கிய கொடை எனலாம். 
இனிதே,
தமிழரசி
About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply