அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிளக்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மகிந்தா இராசபக்சே செய்துவரும் பரப்புரை கீழ்த்தரமானது!
நக்கீரன்
கடந்த பெப்ரவரி 01, 2018 இல் முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்சா யாழ்ப்பாணம் சென்றிருந்தார். 2015 இல் நடந்த சனாபதி தேர்தல்
பரப்புரைக்கு சென்றிருந்த அவர் சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து யாழ்ப்பாணம் சென்றிருக்கிறார். இம்முறை அவர் புதிதாகத் தொடங்கியுள்ள சிறிலங்கா பொதுசன பெரமுன சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யச் சென்றிருந்தார். அவர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பல பொய்களைப் பேசியிருந்தார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது,
(1) கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்பதாலும் இங்குள்ள மக்களுடன் பேசும் ச ந்தர்ப்பம் கிடைத்ததாலும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் அன்
றைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எங்களது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் காணப்பட்டது.
ஆனால் அன்று நாங்கள் இருந்தபோது இருந்த நிலை இன்று இருக்கின்றதா என நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
(2) புதிய ஆட்சி உருவாகிக் குறிப்பிட்ட சில கால இடைவெளிக்குள் என்ன அபிவிருத்தி இடம்பெற்றது என்பதையும் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றார்கள் என்பதையும் தமிழ் மக்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் ஆட்சியில் இருந்தபோது மின்சாரம், நீர், போக்குவரத்துக்கான வீதிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் ஆய்வுகூட வசதிகள், வைத்திய சாலைகள் எனப் பலதுறைகளிலும் அபிவிருத்தியைச் செய்திருந்தோம். இவ்வாறு நான் அபிவிருத்திகளைச் செய்ததற்கு காரணம் தெற்கு மக்கள் போன்று வடக்கு மக்களும் வாழவேண்டும் என்பதற்காகவே. ஆனால் இன்று எமது மண்ணில் விளைந்த விவசாயப் பொருள்களான அரிசி, உழுந்து போன்றவற்றின் உற்பத்தி செய்ய முடியாது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது. அதனால் அரிசியைத் தாய்லாந்திலும் உழுந்தை இந்தியாவிலும் விவசாயப் பசளைகளை பாகிஸ்தானிலும் இருந்து பெற்றுக் கொள்வதற்குக் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த அரசு எந்தவொரு அபிவிருத்தியையும் செய்யவில்லை என்பது மட்டுமல்லாமல் செய்ய முடியாத நிலையிலும் இருக்கின்றது.
(3) தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகள் இணைந்தே ஆட்சி செய்கின்றன. ஆயினும் நாங்கள் 54 பேர் இருக்கின்ற போதும் 16 பேரைக் கொண்ட கூட்டமைப்பினரே எதிர்க்கட்சியாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சியாகச் செயற்படவில்லை. ஏனெனில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் “பொக்கற்’ கைப்பைக்குள் சம்பந்தன் இருப்பதால் கூட்டமைப்பு ஆளும் கட்சியாகச் செயற்படுகின்றது. எங்களுடன் இருக்கின்ற அருண் தம்பிமுத்துவின் மாமனார் தான் சம்பந்தன். மற்றையவர்களைக் குறைசொல்லி ஏமாற்றும் செயற்பாடுகளைத்தான் கூட்டமைப்பினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். நான் ஆட்சியில் இருந்தபோது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தேன். அதற்கு வருவதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றிருந்தனர். ஆனால் ஏனோ தெரியாது அவர்கள் திரும்பி வரவேயில்லை.
(4) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2 கோடி ரூபாவை இந்த அரசு வழங்கியதாக அந்தக் கட்சியின் சக உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செய்வதற்காகப் பயன்படுத்தாது தங்கள் திட்டத்துக்காகவே பயன் படுத்தியிருக்கிறார்கள்.
எனவே இனிமேலும் வடக்கு மக்கள் இவர்களிடம் ஏமாற்றமடைய வேண்டாம். இந்த அரசு பொய்களைக் கூறிக் கொண்டிருந்ததைத் தவிர வேறெதனைச் செய்திருக்கிறது? எனவே, இவர்களுக்காக உங்களது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் தற்போது புதிய வித்தியாசமான கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம். எமது தாமரை மொட்டுச் சின்னத்தை மக்கள் வெற்றி பெறச் செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.
(5) நாங்கள் இனவாதிகள் அல்ல. எங்கள் உறவினர்கள் தமிழர்களைத் திருமணம் செய்து இருக்கின்றனர். ஆகவே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும்
நாம் எமது காலத்தில் வழங்கியிருந்தோம். இருந்தபோதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியைத் தழுவவேண்டியிருந்தது. ஆகவே இனியும் மக்கள் ஏமாறாது சிந்
தித்துச் செயற்படவேண்டும்.
சும்மா சொல்லக் கூடாது. இராசபக்சாபின் துணிச்சலைப் பாராட்ட வேண்டும். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்களைக் குண்டு போட்டுக் கொன்றுவிட்டு, சரணடைந்த நூற்றுக்கணக்கான வி.புலித் தளபதிகளை சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டு தெற்கில் போர் வெற்றிவிழா கொண்டாடிய ஒருவர் சாத்தான் வேதம் ஓதிய கதையாக மனிதர் யாழ்ப்பாணத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசியிருக்கிறார். போருக்குப் பின்னர் இராசபக்சா வி.புலிகளைத் தோற்கடித்துவிட்டோம், நாட்டைப் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டுவிட்டோம், வட கிழக்கு மக்களை வி.புலிகளின் கோரப் பிடியில் இருந்து விடுவித்து விட்டோம் எனச் சொல்லி இராசபக்சா பெருமெடுப்பில் கொழும்பில் இராணுவ அணிவகுப்போடு வெற்றி விழா கொண்டாடியவர். வடக்கிலும் கிழக்கிலும் வெற்றித் தூண்களையும் போர் நினைவாலயங்களையும் புத்த கோயில்களையும் புத்தர் சிலைகளையும் பவுத்தர்கள் வாழாத இடங்களில் இராணுவத்தைக் கொண்டு நிறுவியர். அவரது பேச்சைச் செவிமடுப்பவர்கள் இந்தப் பூனையும் பால் குடிக்குமா? எனக் கேட்பார்கள்.
இனி மகிந்த இராசபக்சாபேசிய பொய்களை ஒவ்வொன்றாகச் சற்று விரிவாக ஆராய்ந்து பார்ப்போம்.
(1) எனது ஆட்சிக் காலத்தில் தமிழ்மக்களுக்கு முழுச் சுதந்திரமும் கிடைத்தது…..
இராசபக்சா ஆட்சியில்தான் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களில் 31 பேர் தமிழர்கள். ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கா, பிரதீப் ஏக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசிம் தாயுடீன் போன்றவர்களைக் கொன்றது யார்? குற்றவாளிகளை ஏன் பிடிக்கவில்லை? இவரது ஆட்சியில்தான் வெள்ளைவானில் ஆட்கடத்தல், வலிந்து காணாமல் போதல், கொலைகள், வெருட்டி கப்பம் வாங்குதல் போன்ற அட்டூழியங்கள் நிறைவேறின. இவரது ஆட்சியில்தான் கிறீஸ் பூதங்கள் யாழ்ப்பாண மக்களைக் கலக்கத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தின. இவற்றை இராசபக்சா மறந்தாலும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
(2) நாம் ஆட்சியில் இருந்தபோது மின்சாரம், நீர், போக்குவரத்துக்கான வீதிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் ஆய்வுகூட வசதிகள், வைத்திய சாலைகள் அபிவிருத்தியைச் செய்திருந்தோம்……..
சில வீதிகள் செப்பனிடப்பட்டது சரி. ஆனால் பள்ளிக்கூடங்கள், பாடசாலை ஆய்வு கூடங்கள், வைத்திய சாலைகள் எப்போது இராசபக்சா அபிவிருத்தி செய்தார்? போரில் இடிந்து போன பல்லாயிரக் கணக்கான வீடுகளில் ஒன்றைத்தானும் இராசபக்சா திருத்திக் கொடுக்கவில்லை. ஒரு புதிய வீட்டைக் கூடக் கட்டிக் கொடுக்கவில்லை. அன்றைய பொருளாதர அமைச்சர் பசில் இராசபக்சா வீடுகள் திருதுவதற்கோ புதிதாகக் கட்டிக் கொடுப்பதற்கோ அரசிடம் பணம் இல்லை என்று கைவிரித்தார் என்பதுதான் வரலாறு. மொத்தம் 45,000இந்தியாதான் கட்டிக் கொடுத்தது, சிறிசேனா – ரணில் அரசு நடப்பாண்டில் வட கிழக்கில் 50,000 வீடுகளைக் கட்ட ரூபா 750 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
(3) நான் ஆட்சியில் இருந்தபோது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தேன். அதற்கு வருவதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றிருந்தனர். ஆனால் ஏனோ தெரியாது அவர்கள் திரும்பி வரவேயில்லை.
இராசபக்சா ஒரு பவுத்தர். பொய் சொல்வது பஞ்மா பாவங்களில் ஒன்று. இராசபக்சாவின் பொய்க்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (ததேகூ) தலைவர் இரா.சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இராசபக்சாதான் ததேகூ க்கு தண்ணீர்காட்டினார். இரண்டொரு முறை சம்மந்தரை அலரிமாளிகைக்கு அழைத்த இராசபச்சா தனது அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை மிரட்டியதாக அண்மையில் சம்பந்தன் கூறியிருந்தார்.
ததேகூ திரு சம்பந்தன் தலைமையில் சனவரி 10, 2011 தொடங்கி சனவரி 18, 2012 வரை மொத்தம் பதினெட்டுச் சுற்றுப் பேச்சுக்களை சனாதிபதி மகிந்த இராசபக்சாவின் அமைச்சர்களோடு நடத்தியது. இந்தப் பேச்சுக்களின் முதல் மூன்று சுற்றுகளின்போது இனப் பிரச்சினைத் தீர்வுக்கான தமது பக்க யோசனைத் திட்டத்தைப் பகுதி பகுதியாக ததேகூ வழங்கியிருந்தனர். அது தொடர்பில் அரசின் பதிலையும் – முடிவையும் கூட்டமைப்பினர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அதன் பின்னர் ஐந்து மாதங்களாக ஏழு சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன. ஆனால் கூட்டமைப்புக் கொடுத்த தீர்வுத் திட்ட யோசனைக்கு மகிந்த அரசு பதிலும் தரவில்லை, பிரதிபலிப்பும் காட்டவில்லை. அதனால் வெறுத்துப் போன கூட்டமைப்பினர் வேறு வழியின்றி அந்தப் பேச்சு முயற்சியில் இருந்து வெளியேறினர். மீண்டும் 2011 ஒக்தோபரில் சனாதிபதி மகிந்த இராசபக்சா – கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் சந்திப்பு இடம்பெற்றது. கூட்டமைப்பின் தீர்வுத் திட்ட யோசனைக்கு அரசு தரப்பு பதில் தரா விட்டாலும் முன்னைய சமாதான முயற்சிகள் தொடர்பான ஐந்து ஆவணங்களின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக் களைத் தொடர அந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.
ஒக்தோபர் 16, 2011 முதல் மீண்டும் அமைதி பேச்சுக்களை மகிந்த அரசுடன் கூட்டமைப்பு தொடங்கியது. மங்கள முனசிங்க தலைமையிலான குழுவின் முன்னைய அறிக்கை, சனாதிபதி சந்திரிகா காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அமைதி முயற்சிக்கான ஆவணங்கள், சனாதிபதி மகிந்த இராசபக்சா நியமித்த நிபுணர் குழு அறிக்கை, அந்த நிபுணர் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் மகிந்த இராசபக்சா ஆற்றிய உரையின் தொகுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களைத் தொடரத் தீர்மானிக்கப்பட்டது. பேச்சுக்கான பன்னிரண்டு தலைப்புகளும் முடிவுசெய்யப்பட்டன. இப்போது நல்லாட்சி அரசுடன் புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் தொடர்பில் இறுதி செய்யப்பட்ட பன்னிரண்டு தலைப்புகளே அப்போதும் கொடுக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் தொடர்ந்த பேச்சுக்களில் காணி தொடர்பான அதிகாரப்பகிர்வு விடயத்தில் சில தீர்மானங்கள், முடிவுகள் கூட எட்டப்பட்டன. இந்தப் பேச்சுக்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தப் பேச்சுக்களின் ஒவ்வொரு சுற்றின் போதும் கூட்டத்தின் அறிக்கை தயார் செய்யப்பட்டு, அடுத்த கூட்டத்தின் ஆரம்பத்தில் முன்னைய கூட்ட அறிக்கை வாசித்துப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவுகள் இந்தக் கூட்டங்களுக்கான ஆதாரங்களாக இன்னும் உள்ளன.
கடைசியாக 18 ஆவது கூட்டத்தை 16,17,18 சனவரி 2012 நாட்களில் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்துவது என அதற்கு முந்திய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அந்த மூன்று நாட்களும் உரிய நேரத்தில் கூட்டத்துக்குச் சென்று ததேகூ னர் காத்திருந்தனர். ஆனால், அரசு தரப்புப் பிரதிநிதிகள் வரவேயில்லை. இதுதான் நடந்தது. ததேகூ னர் வருவதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள் பின்னர் ஏனோ தெரியவில்லை அவர்கள் திரும்பி வரவேயில்லை என இராசபக்சா சொல்வது கந்தபுராணத்தின் கடைசி ஒற்றையிலும் காணப்படாத பச்சைப் பொய்.
(4) கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2 கோடி ரூபாவை இந்த அரசு வழங்கியதாக அந்தக் கட்சியின் சக உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறுகின்றார். இவ்வாறு வாங்கிய பணத்தை அவர்கள் மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செய்வதற்காகப் பயன்படுத்தாது தங்கள் திட்டத்துக்காகவே பயன் படுத்தியிருக்கிறார்கள்.
ஒரு முன்னாள் அரச தலைவர் பேசுகிற பேச்சா இது? இந்த ருபா 2 கோடி கிராம அபிவிருத்திக்கு நல்லாட்சி அரசால் கொடுக்கப்பட்ட நிதி. அதற்கான திட்டங்கள் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதமே பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் திட்டங்களுக்கு மாவட்ட செயலகத்தால் கொடுக்கப்படும். இந்த 2 கோடி இலஞ்சம் என்று கொக்கரிக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றவர்களுக்கு ரூபா 2 கோடி பணம் கொடுக்கப்பட்டது, எனக்கேன் தரப்படவில்லை என்று பிரதமரிடம் அதே இலஞ்சப் பணத்தைக் கேட்டிருக்கிறார். அதற்கு பிரதமர் “நீங்கள் நாங்கள் கேட்ட முன்மொழிவுகளைத் தரவில்லை. எனவே நிதி தரப்படவில்லை” எனப் பதில் இறுத்திருக்கிறார். மகிந்த இராசபக்சாவின் ஆட்சியில் இப்படியான அபிவிருத்தி நிதி கோடிக்கணக்கில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ததேகூ உட்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித நிதியுதவியும் தரப்படவில்லை.
(5) நாங்கள் இனவாதிகள் அல்ல. எனது உறவினர்களும் தமிழர்களைத் திருமணம் செய்து இருக்கின்றனர். ஆகவே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் நாம் எமது காலத்தில் வழங்கியிருந்தோம். இருந்தபோதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியைத் தழுவவேண்டியிருந்தது. தனக்கும் வட கிழக்குத் தமிழ்மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டார்கள் என்றார்.
“நாங்கள் இனவாதிகள் அல்ல” என்று மகிந்தா இராசபக்சா சொன்னால் போதுமா? அதனை தமிழ்மக்கள் நம்ப வேண்டாமா? அவரது உறவினர்கள் தமிழர்களைத் திருமணம் செய்து இருக்கலாம். அவரது மருமகள் முறையான நிருபாமா தீபிக்கா இராசபக்சா யாழ்ப்பாணத்தில் பிறந்து வனர்ந்த திருக்குமரன் நடேசன் என்ற கோடீசுவரரைத் திருமணம் செய்துள்ளார். நிருபாமா தீபிக்கா, இராசபக்சாவின் தந்தையார் டி.எம். இராசபக்சாவும் மகிந்த இராசபக்சாவின் தந்தையார் டி.ஏ. இராசபக்சாவும் கூடப்பிறந்த சகோதரர்கள். அந்த உறவு முறையை வைத்துக் கொண்டு ஒருவர் இனவாதி அல்ல என்று சொல்ல முடியுமா? இரண்டு மாமரங்கள் இருந்தால் அதனை மாந்தோப்பு என்று சொல்ல முடியுமா?
2015 இல் நடந்த சனாதிபதி தேர்தல் பரப்புரைக்கு கிளிநொச்சிக்கு வந்த மகிந்த இராசபக்சா மணல் ஆறு (வெலி ஓயா) பிரதேசத்தில் குடியேற்றப்பட்ட 3,000 சிங்களக் குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரங்களை வழங்கினார். பின்னர் நடந்த கூட்டத்தில் பேசும் போது “நான் சிங்களவன், இந்த நாடு சிங்கள நாடு. பெரும்பான்மை சிங்களவர்களாகிய நாங்கள் சொல்வதை சிறுபான்மை தமிழர்கள் கேட்டு நடக்க வேண்டும்” என்று திமிரோடு பேசினார்.
2013 இல் மகிந்த இராசபக்சா 13ஏ திருத்த சட்ட விதியை முற்றாக நீக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். அது தொடர்பாக ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அவர் நியமித்தார்.
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை நீக்க வேண்டும் என மகிந்த இராசபக்சாவின் அரசியல் ஆலோசகரும், பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சருமான பசில் இராசபக்சா நாடாளுமன்றத்தில் பேசியினார் (http://www.eprlfnet.com/?cat=39&paged=3). இந்த அரசியல் திருத்தம் பற்றிப் புது தில்லியோடு பேச அவர் யூலை 04, 2013 இல் இந்தியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டார்.
இது தொடர்பாக பசில் ராஜபக்சே செய்தித்தாள்களுக்கு அளித்த நேர்காணலில், 13 ஏ அரசியல் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோருடன் பேசுவேன் என்றார்.
கோத்தபாய இராசபக்சாவைப் பொறுத்தளவில் 13 ஏ சட்ட திருத்தம் முற்றாக இரத்து செய்யப்பட வேண்டும் என்று பகிரங்கமாகவே பேசினார். அதற்குக் காரணம் இருந்தது. சர்வதேச சமூகத்தின் நெருக்குதல் காரணமாக தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாண சபைக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் ததேகூ வெற்றிபெறுவது உறுதி என்பதால் வடக்கு மாகாண ஆட்சி அதிகாரம் தமிழர்கள் கைக்குப் போய்விடும் என்பதால் அதனைத் தடுப்பதற்கு ஒரே வழி 13 ஏ திருத்தத்தை முற்றாக இரத்து செய்வதே என மகிந்தாவின் அரசும் சிங்கள – பவுத்த தீவிரவாத அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் திரைமறை சதிகளில் ஈடுபட்டன.
வடக்கில் வயிற்றுப் பிள்ளை வழுக்கி விழுமாறு இனிப்பாகப் பேசும் இராசபக்சா தென்னிலங்கை தேர்தல் மேடையில் என்ன பேசுகிறார் என்பது தெரியுமா? சிறிலங்கா பொதுசன பெரமுனக் கட்சியின் மக்கள் சந்திப்பு கோமாகம பிரதேசத்தில் கடந்த கிழமை இடம்பெற்றது.
அங்கு உரையாற்றிய இராசபக்சா புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைத் துண்டாடும் சதித்திட்டமம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் என்று அனைத்தையும் வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். பல பொய்களையும் குற்றச்சாட்டுக்களையும் எனக்கு எதிராக முன் வைக்கிறார்கள். இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும். இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.
மகிந்த இராசபக்சா சொல்வது பச்சைப் பொய் என்பதை வரலாறு தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். அவரது பேச்சு, இன்று கூட மகிந்த இராசபக்சா தனது சிங்கள – பவுத்த மேலாண்மைச் சிந்தனையில் இருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதைக் காட்டுகின்றது. நாட்டில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்பட்டு நாடு வளர்சிப் பாதையில் நடை போட்டு முன்னேற மகிந்தா இராசபக்சே பாரிய முட்டுக்கட்டையாக இருக்கிறார். நல்லாட்சி அரசு வடக்கையும் கிழக்கையும் இணைத்து மாகாணங்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் என்று அனைத்தையும் வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் எனக் சொஞ்சமும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களை வீசுகிறார்.
இடைக்கால அறிக்கை பிரிக்கப்படாத பிரிக்க முடியாத நாட்டுக்குள்ளே அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக மாகாணங்கள் இருக்கும் என்றே கூறுகிறது. மேலும் எந்தவொரு மாகாண சபை அல்லது ஏனைய அதிகார சபை, இலங்கையின் ஆள்புலத்தின் எந்தவொரு பகுதியையும் தனி நாடென்றாகப் பிரகடனப்படுத்தவோ அல்லது எந்தவொரு மாகாணத்தையோ அல்லது அதன் பகுதியையோ இலங்கையிலிருந்து விலகி தனியாவதற்காக ஆதரித்து வாதாடவோ அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ கூடாது என இடைக்கால அறிக்கையில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு பச்சை இனவாதம் பேசும் மகிந்த இராசபக்சாவின் சிறிலங்கா பொதுசன பெரமுன கட்சியில் சில தமிழ் வீடணர்கள் தேர்தலில் போட்டியிடுவது தன்மானத்துக்கு இழிவானது!
மேலும் உண்மைகளை மறைத்து அரசியல் இலாபத்துக்காக, ஆட்சியைப் பிடிப்பதற்காக மகிந்த இராசபக்சா இடைக்கால அறிக்கை மூலம் மாகாணங்களுக்கு அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை நல்லாட்சி அரசு முன்னெடுத்து வருகின்றது எனச் செய்துவரும் பரப்புரை அதைவிட மிகவும் இழிவானது, கீழ்த்தரமானது, கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.