தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம்!

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம்!

March 31st, 2017

(இன்று தந்தை செல்வநாயகம் அவர்களது  119 ஆண்டு பிறந்த நாள்)

தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு.  இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) சாத்வீகப் போராட்டம். மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம். இப்போது கடந்த 8 ஆண்டுகளாக சாத்வீகப் போராட்டம். மீண்டும்   தொடக்கப் புள்ளியில்  வந்து நிற்கிறோம்.

சாத்வீகப் போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் தந்தை செல்வநாயகம். 1948 இல் டிஎஸ் சேனநாயக்காவால் கொண்டு வந்த  18 ஆம் இலக்கக் குடியுரிமைச்  சட்டம் இலங்கை சுதந்திரம் பெற்று 285 நாட்களுக்குள் (ஓகஸ்ட் 20, 1948)  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதனைத்  தீவிரமாக எதிர்த்துப் பேசியவர் தந்தை செல்வநாயகம். எதிர்த்துப் பேசியதோடு நில்லாமல் எதிர்த்து வாக்களித்தவர்.

இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தினால் எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள். 1946 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின் படி  மலையகத் தமிழர்களது எண்ணிக்கை 780,600  (11.73 விழுக்காடு),  இலங்கைத் தமிழர்களது  எண்ணிக்கை 733,700 (11.02)  ஆக மொத்தம்  1,524,300 (22.75 விழுக்காடு).  2012 இல்  மலையகத் தமிழரின் எண்ணிக்கை (2012)  842,323 (4.16 விழுக்காடு) இலங்கைத் தமிழர் 2,270,924 (11.21). இது கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதை.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இலங்கைக் குடியுரிமைச் சட்டம்  புதிதாக விடுதலை பெற்ற நாடொன்றிற்குத் தேவையான ஒரு நடவடிக்கையாகவே தோன்றினாலும் சிங்களத் தேசிய வாதிகள் இந்தச் சட்டத்தின் மூலம் இன்னொரு நோக்கத்தையும் நிறைவேற்றினார்கள். அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து  பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கி நட்டாற்றில் விட்டதில்  அவர்கள் வெற்றிபெற்றார்கள்.

சோல்பரி யாப்பு இயற்றப்பட்ட போது இலங்கையின் குடியுரிமை பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை. பெரிய சேனநாயக்கா தந்திரமாக குடியுரிமை பற்றி நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என சோல்பரி பிரபுவிடம் சொல்லிவிட்டார். தமிழர் தரப்பும் அதனை வலியுறுத்தவில்லை.

1948 இல்  தந்தை செல்வநாயகம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்தார்.  அதன் தலைவர் ஜிஜி  பொன்னம்பலம் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் பேசவில்லை. ஆனால் எதிர்த்து வாக்களித்திருந்தார்.  மேலே குறிப்பிட்டவாறு  குடியுரமைச் சட்டம்  நொவெம்பர்  15 இல் சட்டமாகியது.   ஆனால் அதற்கு முன்னரே செப்தெம்பர் 03 ஆம் நாள் பொன்னம்பலம் பெரிய  சேனநாயக்காவின் அமைச்சரவையில் கைத்தொழில், மீன்பிடி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இது குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு  பெரிய சேனநாயக்கா அவர்களோடு பேரம் பேசத் தொடங்கிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.

பொன்னம்பலம் 1947 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) வேட்பாளர் அருணாசலம் மகாதேவாவை 9,100 அதிகப்படி வாக்குகளால் தோற்கடித்து வெற்றிபெற்றார்.  “கந்தசாமியைக் கொன்ற துரோகி மகாதேவா ஒழிக” என்பது அவரது தேர்தல் முழக்கமாக இருந்தது. காரணம் டி.எஸ். சேனநாயக்காவின் அமைச்சரவையில் மகாதேவா உள்நாட்டு அமைச்சராக இருந்தார். பொலீஸ் திணைக்களம் அவரது அமைச்சின் கீழ்  இருந்தது. ஊர்வலமாக வந்த வேலை நிறுத்தக்காரர்கள் மீது பொலீஸ் சுட்டதில் கந்தசாமி உயிர் துறந்தார்.

மலையகத் தமிழர்களின் குடியுரிமைக்குத்  துணைநிற்பேன் என்று எழுத்தில் மலைய மக்களது தலைவர்களுக்குக் கொடுத்த உடன்படிக்கையை பொன்னம்பலம் மீறினார்.  குடியுரிமை பறிக்கப்படுவதால் தமிழர்களின் நாடாளுமன்றப்  பிரதிநித்துவம் பாதியாகக் குறையும் என்பது பற்றி அவர் கிஞ்சித்தும் கவலைப் படவில்லை.   தமிழர்களது வாக்குப் பலத்தை சரிபாதியாகக் குறைத்த குடியுரிமை சட்டத்தின் விளைவையோ அல்லது அதனைக் கொண்டு வந்து நிறைவேற்றிய டிஎஸ் சேனநாயக்காவின் கபட நோக்கத்தையோ பொன்னம்பலம் அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது.  அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட பொன்னம்பலம் அந்தச் சட்டத்தின் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வில்லை.

‘தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று முழங்கிய திரு. பொன்னம்பலம் அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டதன் காரணமாக “தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா” என்ற நிலைக்குத் தமிழர்களைத்  தாழ்த்தினார்.

அடுத்த ஆண்டு 1949 இல் நாடாளுமன்ற  தேர்தல் (திருத்தம்)   சட்டத்தில் (Parliamentary Elections (Amendment) Act of 1949)  ஒற்றைவரித் திருத்தத்தைக் கொண்டு வந்து மலையகத் தமிழர்களது வாக்குரிமையையும் டி.எஸ். சேனநாயக்கா பறித்தார். ஏற்கனவே (1948) அமைச்சரவையில்  அமைச்சராகச் சேர்ந்துவிட்ட பொன்னம்பலம் இந்தச் சட்ட திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவாக வாக்களித்தார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் “இன்று மலைநாட்டுத் தமிழர்கது  கழுத்துக்கு கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சிமொழிபற்றி முடிவு செய்யும் நேரம் வரும்போது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” எனத் தீர்க்கதரிசனத்தோடு பேசினார்.  1956 ஆம் ஆண்டில் திரு. பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் தீர்க்கதரிசனம் உண்மையாகியது.  பதவி ஆசை காரணமாக   பொன்னம்பலத்துக்கு இந்தத்  தீர்க்கதரிசனம்  அடியோடு இருக்கவில்லை.

மலையகத் தமிழரை சிங்கள ஆளும் வர்க்கத்திற்குக் காட்டிக் கொடுத்த  பொன்னம்பலத்தின் சந்தர்ப்பவாத சுயநல அரசியலை எதிர்க்கு முகமாகத்  தந்தை செல்வநாயகம் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறினார்.வெளியேறி 1949 ஆம் ஆண்டு டிசெம்பர் 18 ஆம் நாள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். தமிழ்மக்கள் ஒரு தேசிய இனம், வட – கிழக்கு (மாகாணங்கள்) அவர்களது பாரம்பரிய தாயகபூமி, இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஒழித்து விட்டு இணைப்பாட்சி அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு தன்னாட்சி அரசை நிறுவுவது தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் இலட்சியம் எனப் பிரகடனப் படுத்தப்பட்டது. வட- கிழக்கில் சிங்கள அரசின் ஆதரவுடன் இடம்பெறும் பாரிய சிங்களக் குடியேற்றங்களை எதிர்ப்பதென்பது அந்தக் கட்சியின் அடுத்த முக்கிய குறிக்கோளாக இருந்தது.

தமிழ் அரசுக் கட்சியின் கொடியாக யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி மன்னர்களது இடபக் கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசுக் கட்சியின் முதல் கூட்டம் முத்திரைச்சந்தை மைதானத்தில் நடந்தது. அதில் இடபக் கொடியோடு ஊர்வலமாகச் சென்று கலந்து கொண்டது  இப்போதும் நினைவு  இருக்கிறது. பின்னர் இடபக் கொடி மூவர்ணக் கொடியாக மாற்றப்பட்டது.

இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தந்தை செல்வநாயகம் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள்.   யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் முதல் முதல் அவரை மேடையில் பார்த்த போது மெல்லிய ஆனால் நெடுத்த உருவம்,  நேர்க்கோடு வகுத்து வாரிய தலை, சற்றுப் பெரிய காது,  கவர்ச்சிகரமான முகம், சந்தண நிறம்,  பட்டு வேட்டி, பட்டுச் சால்வை, பட்டுச் சட்டை. ஆகிவற்றோடு காட்சி அளித்தார். வயது ஐம்பதைத் தாண்டிவிட்டாலும் இளமை குன்றாத தோற்றம்.

ஐம்பதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் தமிழரசுக் கட்சி மேடைகளில் தோன்றிய தந்தை செல்வநாயகம் அவர்களின்  இந்தக் கம்பீரமான தோற்றத்தை ம் த்தைப் இளைய தலைமுறைகள் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

அடுத்த தலைமுறை இளமை குன்றி, முதுமை எய்தி, நடை மெலிந்து, மேடைகளிலும் சரி, நேரிலும் சரி, ஒவ்வொரு சொல்லாகத் தட்டுத் தடுமாறி மெல்லிய குரலில் பேசும் தந்தை செல்வநாயகம் அவர்களைத்தான் பலர் பார்த்திருப்பார்கள்.   அவரைப் பீடித்த பார்க்கின்சன் நோய்  (Parkinson’s disease) தந்தை செல்வநாயகம் அவர்களின் உடல் நிலையையும் நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் வெகுவாகப் பாதித்தது.

இதனால் போலும் தந்தை செல்வநாயகம், தந்தை பெரியாரைத் தமிழ்நாட்டில் சந்தித்துக் கொண்டபோது தன்னைவிட வயது குறைவாக இருந்தும் தன்னைவிட மூப்பாகத் தெரிகிறார் என்று பெரியார் சொல்லிக் கவலைப் பட்டார்.

தந்தை செல்வநாயகம் மட்டும் அரசியலுக்கு வந்திராவிட்டால், அல்லது 1948 ஆம் ஆண்டு அன்றைய சிங்கள ஆட்சியாளரால் எட்டு இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஆதரிக்க முடிவு செய்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர்  பொன்னம்பலத்தோடு சமரசம் செய்து கொண்டு போயிருந்தால், அல்லது முரண்பட்டுக் கொண்டு அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டிருந்தால் தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் தடம் புரண்டு திசை மாறியிருக்கும் என்பதில் இருவித கருத்து இருக்க முடியாது.

தந்தை செல்வநாயகம் பிறந்தது மலேசியாவில். படித்தது யாழ்ப்பாணத்தில். தொழில் பார்த்தது கொழும்பில். மறைந்தது சொந்த ஊரான தெல்லிப்பளையில்.

கொழும்பில் உள்ள பிரபல்யமான  St.Thomas கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய புதிதில் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது தாயார் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள்  கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டது. உடனே அந்த இடத்திலேயே விலகல் கடிதத்தை கல்லூரி அதிபரிடம் எழுதிக் கொடுத்து விட்டு யாழ்ப்பாணம் பயணமானார். பின்னர் கொழும்பு திரும்பிய அவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞர் (Advocate)  பட்டம் பெற்று வெளியேறினார்.

தந்தை செல்வநாயகம் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த சிவில் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். நீதி மன்றங்களில் வழக்கறிஞர்களுக்கே உரித்தான பந்தாவோ மேல்தட்டுக்குரிய படோபடமோ இன்றித் தனது கட்சிக்காரர் பக்கம் உள்ள நியாயங்களை சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் முன் எடுத்துக் காட்டுக்களோடு வழக்குரைத்து வழக்குகளை எளிதில் வென்றுவிடுவார். இந்த ஆற்றல் அவரிடம் அபரிமிதமாகக் காணப்பட்டது. இதனால் சக வழக்கறிஞர்கள் மட்டும் அல்லாது நீதிபதிகளும் அவரிடம் மிக்க மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர் நீதிமன்றத்தில் வழக்காடுவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.

தந்தை செல்வநாயகம் தான் தோன்றி வாதாடிய வழக்குகள் பற்றி அவ்வப்போது சொல்வார். ஒரு வழக்கில் அவரது கட்சிக்காரர் அறம்புறமாக வாக்குமூலம் அளித்துவிட்டார். தந்தை செல்வநாயகத்தின் உதவி சட்டத்தரணி  பி. நவரத்தினராசா  கியூ. சி  தனது தலையை மேசைக்குக் கீழே புதைத்துக் கொண்டார். சாட்சிக் கூண்டில் இருந்து இறங்கி வந்த அவர் தந்தை செல்வநாயகம் அவர்களைப் பார்த்து “எப்படி ஐயா எனது வாக்குமூலம்” என்று கொஞ்சம் பெருமித்தோடு கேட்டார். அவரது முதுகில் தட்டிய தந்தை செல்வநாயகம் “மெத்த நல்லது. நீர் ஒரு கெட்டிக்காரன்” என்று சொன்னார்.   எந்த நெருக்கடியிலும் தன்னம்பிக்கையை கை விட்டுவிடக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தந்தை செல்வநாயகம் இதனை அவரது வீட்டில் வைத்து  எமக்குக் கூறினார்.

முப்பதுகளில் நடைமுறைக்கு வந்த டொனமூர் அரசியல் திட்டம் அதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த வகுப்புவாரிப் பிரதிநித்துவ முறையை ஒழித்து அனைவருக்கும் வாக்குரிமை (Universal suffrage) என்ற அடிப்படையில் சட்டசபைக்குத் தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையை நடைமுறைப் படுத்தியது. அதனை சேர் பொன்னம்பலம் இராமநாதன் கடுமையாக எதிர்த்தார்.  “டொனமூர் என்றால் இனித் தமிழர் இல்லை என்று பொருள்” (Donoughmore means Tamils No More) என்று குரல் எழுப்பினார். புதிய தேர்தல் முறையில் தமிழரின் பிரதிநித்துவப் பலம் பெருமளவு குறைந்தது. அமைச்சரவையிலும் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டு நூற்றுக்கு நூறு சிங்களவர்களைக் கொண்ட அமைச்சரவை உருவாகியது.  டொனமூர் அரசியல் யாப்பின் பின்னரே பெரும்பான்மை சிங்களவர்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அரசியல் அதிகாரம் தங்களது கையில் இருக்க வேண்டும் என எண்ணத் தொடங்கினார்கள். இந்த வரலாற்றையும் எம்மிடம் சொன்னவர் தந்தை செல்வநாயகம் அவர்கள்தான்.

தமிழ் அரசுக் கட்சியின் தொடக்க காலத்தில் தந்தை செல்வாநாயகத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்களில் மூன்று  பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஒருவர் இரும்பு மனிதர் என்று  எல்லோராலும் அழைக்கப்பட்ட டாக்டர் இ.எம்,வி.நாகநாதன். இரண்டாமவர் கோப்பாய்க் கோமான் திரு.கு. வன்னியசிங்கம். மூன்றாமவர் இளம் சட்டத்தரணி வி.நவரத்தினம் இந்த மூவரும் தந்தை செல்வநாயகத்தின் வலது இடது கைகளாகச் செயல்பட்டார்கள்.

ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்காக வழக்கறிஞர் தொழிலில் கைநிறையச் சம்பாதித்த பணத்தை தந்தை செல்வநாயகம் தண்ணீராகச் செலவழித்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் சம்பாதிக்கலாம் என்ற நியதி இருந்த கால கட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டுத் தன் செல்வத்தை இழந்தார். தனது உடல் நலத்தை இழந்தார்.

கொழும்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக  வாழ்ந்த அவர் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார் என்ற செய்தி பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவர் நினைத்திருந்தால் கொழும்பில் ஒன்றல்ல ஒன்பது வீடுகள் அவரால் வாங்கியிருக்க முடியும்.

கொழும்பு, தமிழர்களுக்கு அந்நியமான இடம்.  வடக்கும் கிழக்குமே தமிழர்களுக்கு உரித்தான வாழ்விடம்.  இது தந்தை செல்வநாயகம் அவர்களது  அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவர் கடைசிவரை கொழும்பில் வாடகை வீட்டில் இருந்ததற்கு அதுவே காரணமாகும். தனது பிள்ளைகள் தாங்கள் பிறந்த மண்ணின் வாசனையையும் மண்ணுக்குரிய பண்பாடுகளையும் மறக்கக் கூடாது என்பதற்காக பள்ளி விடுமுறை நாட்களில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தெல்லிப்பளைக்கு அவர்களை அனுப்பி வைத்து விடுவார்.

தந்தை செல்வநாயகத்திடம் தான் பெரிய தலைவர் என்ற எண்ணமோ, புகழ் பெற்ற கியூ சி என்ற பெருமையோ எள்ளத்தனையும் இருந்ததில்லை. காட்சிக்கு எளியவர் என்று சொல்வோமே? அதற்குத் தந்தை செல்வநாயகம் இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அதில் மெய்ப் பொருள் காண்பது, சொல்பவர் உருவுகண்டு எள்ளாமை, சொல்பவரை இடை மறித்தல் செய்யாது எல்லாவற்றையும் பொறுமையோடு செவி மடுக்கும் பண்பு அவரிடம் இயற்கையாகவே குடிகொண்டிருந்தன. வேறு யாராவது குறுக்கிட்டுச் “சொன்னது போதும் அய்யாவுக்கு எல்லாம் விளங்கும்” என்று  சொன்னாலும் “இல்லை. அவரைப் பேசவிடுங்கள்” என்று சொல்லிவிடுவார்.

சிலர் சரமாரியாக கட்சியில் உள்ள குறைகளை அடுக்கிக் கொண்டு போவார்கள்.  அவர்களைப் பார்த்து தந்தை செல்வநாயகம் கேட்கும் கேள்வி  “சரி நோயை சொல்லி விட்டீர்கள். அதற்குரிய மருந்தையும் சொல்லுங்கள்” என்பதுதான்.

நாடாளுமன்றத்துக்கு ஒழுங்காகப் போகாமலோ அல்லது தொகுதிகளுக்குப் போகாமல் தங்கள்  சட்டத் தொழிலைப் பார்ப்பதில் காலத்தைப் போக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி முறையிட்டால் அதற்கு தந்தை செல்வநாயகம்  இறுக்கும் பதில் “ஆட்களை இணக்கமுடியாது. உள்ளதை வைத்துத்தான் சமாளிக்க வேண்டும்.”

தந்தை செல்வநாயகம் அரசியல் மேடைகளிலும் சரி, நீதிமன்றங்களிலும் சரி அதிகம் பேசுவதில்லை. குறிப்பாக நீதிமன்றங்களில் தேவைக்கு அதிகமாக ஒருவார்த்தைதானும் பேசமாட்டார். “எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறேம் மனிதர் இவ்வளவு சுருக்கமாகப் பேசிவிட்டு உட்கார்ந்து விட்டாரே வழக்கு வென்றமாதிரித்தான்” என்று ஏங்கிய கட்சிக்காரர்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.

தந்தை செல்வநாயகம் அவருக்கு வாலாயமான சில தமிழ் சொற்றொடர்களை  தனது உரையாடலில் அடிக்கடி பயன்படுத்துவார். “அவர்கள் எங்களை அழிக்க நினைப்பது துலாம்பரமாகத் தெரிகிறது” “எங்கள் போராட்டத்தில் வெற்றிபெறுவது என்பது ஒரு வில்லங்கமான காரியம்” “சிங்கள மேலாண்மையை நாங்கள் எதிர்த்துப் போராட வேண்டும் இல்லாவிட்டால் அழிந்து போவோம்.” “வாழ் எடுத்தவன் வாளால் அழிவான்” என்பன சில   சொற்றொடர்கள்.

தந்தை செல்வநாயகம் மதத்தால் கிறித்தவராக இருந்தாலும் தமிழ் பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். கர்நாடக இசை சரி, நாதசுர இசை சரி இரண்டிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. வெள்ளவத்தைப் பிள்ளையார் கோவில் திருவிழாக் காலங்களில் இடம்பெறும் நாதசுரக் கச்சேரியை மண்டபத்தின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து  கொண்டு ஆடாமல் அசையாமல் மணித்தியாலக் கணக்கில் கேட்டு மகிழ்வார்.

தமிழ்ப் பண்பாடு காப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு திருமணம் ஆகி நாலாம் நாள் சடங்கில் மேற்கத்தைய பாணியில் மேசையில் பீங்கான் கோப்பை முள்ளுக் கரண்டி சகிதம் தனது மாமனார் விருந்து ஏற்பாடு செய்திருந்ததை விரும்பாது தனது புது மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார்.  வாழை இலையில் தரையில் உட்கார்ந்து விருந்து சாப்பிட  வேண்டும் என்பது மாமனாருக்கு  தந்தை செல்வநாயகம் போட்ட நிபந்தனை. அதை மாமனார்  செய்யவில்லை என்பதுதான்  கோபம்.

தந்தை செல்வநாயகத்தின் இந்தக் கொள்கைப் பிடிப்பு அரசியலிலும் இருந்தது. சந்தர்ப்பவாதம், சமரசம் அவரது அரசியல் அகராதியில் இல்லாத  சொற்கள். முடிவு மட்டுமல்ல அதனை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவரது கோட்பாடாகும்.

1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஸ்ரீலங்காவின் புதிய ஒற்றையாட்சி யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கு முகமாக தந்தை செல்வநாயகம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறித்தள்ளி தமிழ்மக்கள் ஆதரவு யார் பக்கம் என்பதை எண்பிக்க இடைத் தேர்தல் நடாத்துமாறு ஆட்சியாளருக்கு அறை கூவல் விடுத்தார். மூன்று ஆண்டுகள் காலத்தைக் கடத்திய பின்னர் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் தன்னோடு எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கட்சி வேட்பாளரை 15,000 க்கும் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிவாகை சூடினார். இப்படி இடைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் வி. பொன்னம்பலம் சில ஆண்டுகள் கழித்து தமிழீழக் கோரிக்கையை ஏற்று அதனை முற்றாக ஆதரித்தார் என்பது தந்தை செல்வாநாயகத்தின் அரசியல் ஆளுமைக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியாகும்.

பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த அவரது அரசியல்வாதிகளும் தந்தை செல்வநாயகத்தின் கொள்கை கோட்பாட்டை விரும்பாவிட்டாலும் அவரது நேர்மையில் ஒருபோதும் அய்யப்பட்டது  கிடையாது. தமிழ் மக்கள் அவரை “ஈழத்துக் காந்தி”என்று அன்போடு அழைத்தார்கள்.

தந்தை செல்வநாயகம் அரசியலுக்கு வந்திராது தான் உண்டு தனது தொழில் உண்டு குடும்பம் உண்டு என்று இருந்து பின்னர் தன்னைத் தேடிவந்த உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியை ஏற்று ஓய்வு பெற்றிருந்தால் தமிழினத்தின் அரசியல் வரலாறு நிச்சயமாக மாலுமி இல்லாத படகுபோலத் திசை மாறிப் போயிருக்கும். சுயநலத் தமிழ்த் தலைவர்களுக்கு பணம், பதவி, பட்டங்கள் கொடுத்து முழுத் தமிழினத்தையுமே சிங்கள ஆட்சியாளர்கள் விலைக்கு வாங்கியிருப்பார்கள். அதன்பின் தமிழர்களை தாலாட்டுப்பாடித் தூங்க வைத்து கழுத்தை அறுத்திருந்திருப்பார்கள். தமிழினம் மீளா அடிமைத் தளையில் கட்டுண்டு அழிந்து போயிருக்கும்.

இதைத் தடுத்தி நிறுத்தி குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்து, சிறை சென்று, உடல் நலம் கெட்ட போதும் தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம். அவர் நினைவு என்றும் தமிழ்மக்களது நெஞ்சங்களில்  பசுமையாக இருக்கும்.

(நக்கீரன்)

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு தமிழ் மக்களை விடுதலைப் பாதையில் அழைத்துச் சென்றவர்  தந்தை செல்வநாயகம்!

About editor 3121 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply