தமிழ்த் தலைமைகள் ஒதுங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது பகற் கனவு!

தமிழ்த் தலைமைகள் ஒதுங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது பகற் கனவு!

நக்கீரன்

“எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கினோம். அவை கிடைக்க மாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதே  உசிதம்” என்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

காலைகதிர் நாளேடு நிருபர் “மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அனுபவசாலிகள் என்றும் வயதில் மூத்தவர்கள் என்றும் பெருமித்துக் கொள்கின்ற ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்கினால் இன்று ஒற்றுமையாக இருந்த கட்சிகள் சிதறுண்டு போயுள்ளன. அதனால் அரசியல் வாதிகளுக்கு ஏதேனும் நன்மை கள் கிட்டலாம். ஆனால், பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களே. இந்நிலையில் இருந்து மீண்டெழுந்து தமிழர்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வார்களா? அதற்காக அவர்கள் செய்யவேண்டியதுஎன்ன?” என்ற கேள்விக்குத்தான் மேலே கூறிய பதிலை முதலமைச்சர் இறுத்திருக்கிறார்.

தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதே  உசிதம்  இயலாவிட்டால் ஒதுங்குங்கள்! இப்படிச் சொல்ல இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? இவர் தொடக்கிய தமிழ் மக்கள் பேரவை தமிழ்மக்களை ஒன்றுபடுத்தத்  தொடங்கப்பட்டதா? இல்லை தமிழர்களது ஒற்றுமையை  வேறுபடுத்த அல்லது சிதைக்கத் தொடங்கப் பட்டதா? அல்லது தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு தொடங்கப்பட்டதா?  சரி. தொடங்கினீர்கள் அது இன்று  துண்டு துண்டாக சிதறிப் போய்விட்டதே?  என்ன காரணம்? கஜேந்திரகுமார், பிறேமச்சந்திரன் போன்றோர் இன்று எங்கே? இணைத் தலைவர் வசந்தராசா (கிழக்கு மாகாணம்)  இன்று எங்கே?

முதலமைச்சரின் பேச்சு கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள் வைகுண்டத்து வழிகாட்டுகிறேன் என்று சொன்ன கணக்காக இருக்கிறது. ஒரு கதைக்கு இன்று தமிழ்மக்களுக்கு தலைமை வகிக்கும் திரு சம்பந்தன், திரு மாவை சேனாதிராசா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர்களது இடத்தை நிரப்புவது  யார்? விக்னேஸ்வரனா?

விக்னேஸ்வரன் கடந்த நான்கு ஆண்டுகளாக சாதித்தது என்ன? எந்தெந்த பொருளாதார திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்? இப்போது கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்ற கதையாக வடக்கில் உள்ள சுமார் அறுநூறு கிலோமீற்றர் நீளமான உள்வீதிகளை செப்பனிட்டு ஒழுங்குபடுத்துவதற்காக இரண்டாயிரம் கோடி ரூபா பெறுமதியான  திட்டம். தற்போது வழங்கப்பட்டுள்ள 50,000 வீட்டுத் திட்டத்துக்கு மேலதிகமாக வடக்கு மக்களுக்கான இன்னொரு 50,000  வீடுகளை அமைத்துக் கொடுத்தல்.வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் கரையோரப் பாதையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொக்கிளாயில் பாரிய பாலம் அமைத்தல். மன்னார் – தனுஷ்கோடி படகுச் சேவையை மீள ஆரம்பிக்கும் திட்டத்தை முன்னெடுத்தல்.  பலாலி விமான நிலையத்தை சர்வதேச சேவைக்கான விமான நிலையமாகத் தரமுயர்த்தல்.  யுத்தத்தில் அழிந்து போன யாழ். நகர மண்டபத்தை ( யாழ். மாநகர சபைக்கு உரியது ) மீளக் கட்டிக் கொடுத்தல்,  இது போன்ற பல்வேறு உதவித் திட்டங்களை இந்தியாவிடம் நேரடியாக முதலமைச்சர் கோரியிருக்கின்றார்.

இவற்றை ஏன் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பதவிக்குவந்த  கையோடு  கேட்கவில்லை? இப்போது வட மாகாண சபையின் ஆயுள் முடிய இன்னும் எண்ணி 9 மாதங்களே எஞ்சியிருக்கின்றது. அதன் பின் ஆளுநர் ஆட்சி ஒரு ஆண்டுக்கு நீடிக்கப் போகிறது.  விக்னேஸ்வரன் மூட்டை முடிச்சுகளோடு கொழும்புக்குப் போகப் போகிறார்.

இந்திய அரசு ஏற்கனவே யாழ்ப்பாணக்  கலாசார மண்டபத்தை அமைத்தல், வடக்கு, கிழக்கில் ஐம்பதாயிரம் வீடுகளை அமைத்துக் கொடுத்தல் போன்ற பாரிய நன்கொடைத் திட் டங்களை முன்னெடுத்து வருகின்றது. வீடுகள் கிட்டத்தட்ட கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

காங்கேசன்துறைத் துறைமுகத்தை  வணிக  துறைமுகமாக மேம்படுத்தும் திட்டத்துக்காக 4.77 கோடி  டொலர் (சுமார ரூபா 690 கோடி) உதவித் திட்டத்தை முன்னெடுக்கும் உடன்பாட்டில் இந்தியா கடந்த புதனன்று புதுடில்லியில் கையெழுத் திட்டுள்ளது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சணப் பித்தம் சணம் வாதம் என்பது போல  நேரம் ஒரு பேச்சுப் பேசுகிறார்.  ஒரு நாளைக்கு சம்பந்தர் இருக்கு மட்டும் வேறு தலைமை தேவையில்லை என்பதும் பின்னர் காலைக்கதிர் நிருபர் ஒரு கொழுக்குக் கேள்வியைக் கேட்டால் “எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கினோம். அவை கிடைக்க மாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதே  உசிதம்” என்று பதில் அளிக்கிறார்.

2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வீட்டை விடு வெளிவந்து மாற்றத்துக்கு வாக்களியுங்கள் என்று அறிக்கை மேல் அறிக்கை விட்டும் கஜேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கேட்ட 5 தேர்தல் மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் கட்டுக் காசைப் பறிகொடுத்தது. யாழ்ப்பாணத்தில் 5 வாக்குகளால் கட்டுக் காசைக் காப்பாற்றியது!

வலிய வந்த சீதேவியை விளக்குமாற்றால் அடித்து விரட்டியவன் கதையாக யூஎன்டிபி வட மாகாண விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அ.டொலர் 150 மில்லியன் (ரூபா 22,500 மில்லியன்) நிதியை கொடுக்க முன்வந்தது. ஆனால் முதலமைச்சர் வட மாகாண விவசாயிகளின் நல்வாழ்வைப் பாராது தனது மருமகன்  நிமலனுக்கு மாதம் அ.டொலர் 5,000 சம்பளத்தில் (ரூபா 7.5 இலட்சம்) சிறப்பு அலுவலர் என்ற பதவியைத் தரவேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டார்.  ஆனால்  யூஎன்டிபி வதிவிடப் பிரதிநிதி நிதி  அந்தப் பதவியைத் தரமுடியாது என்று சொல்லிவிட்டார். முதலமைச்சர் அந்த நிதியை உதறித்தள்ளியதை மாகாண சபை உறுப்பினர்கள் கண்டு கொள்ளவே இல்லை!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவிக் காலத்தில் யூஎன்டிபி வதிவிடப் பிரதிநிதியோடு மல்லுக்கட்டு, நாட்டின் பிரதமரோடு சண்டை, சக அமைச்சர் நான்கு பேரில் மூன்று பேரோடு  மோதல். மோதலோடு நிற்காமல் பழிவாங்கு முகமாக அவர்களது பதவிகளையும் பறித்துத்  தனக்குக் குடைபிடிப்பவர்களுக்குக் கொடுத்தார். நல்வாழ்வு அமைச்சர் ப. சத்தியலிங்கத்தை எப்படியாவது “மாட்ட” முடியுமா என்று தான் நியமித்த  விசாரணைக் குழு உறுப்பினர்களிடமே  கேட்டார்.  இப்படி அவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த இலட்சணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னை ஒரு அரசியல் சாணக்கியன்,  அறிவில் பிரகஸ்பதி, நிருவாகத்தில் விண்ணாதி விண்ணன்  என நினைத்துக் கொண்டு கண்டபடி பேசக் கூடாது. பேசி மக்களை குழப்பக் கூடாது.   “தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதே  உசிதம்” என்பது  அவர் காணும் பகற் கனவு.  ஒரு கதைக்குத் தமிழ்த் தலைமைகள்  ஒதுங்குவதாக  வைத்துக் கொண்டாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது  பகற் கனவு.  அது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதையாக இருக்கும்!


 

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply