பிரிக்கப்பட்ட இறையாண்மையைக் கோரவில்லை: பகிரப்படும் இறையாண்மையையே கோருகிறோம்! ம.ஆ.சுமந்திரன், நா.உ
தமிழ்த் தேசத்தின் இறைமை மீதான கேள்வி நடப்பது என்னவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான்.
ஆனால், தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகியிருப்பது தேசிய மட்டப் பிரச்சினையான, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய விவகாரம் என்பதுதான் நிலைமை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – குறிப்பாக சம் பந்தன், சுமந்திரன் போன்றோர் – இடைக்கால அறிக்கையில் தங்கி, விடயங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பற்றிப் பேசுகின்றனர்.
ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனிலிருந்து, அவரது இணைத் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ் பிறேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற தரப்புகள் வரை இடைக் கால அறிக்கையை நிராகரித்துக் கருத்து வெளியிட்டு வருகின்றன.
ஆக, இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் தரப்பில் பிரதான பேசு பொருளாக இடைக்கால அறிக்கையே மாறியிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால், தமிழர் தரப்பில் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தல் மாறியிருக்கின்றமையும் கூடக் கண்கூடு. இத்தகைய இடைக்கால அறிக்கை மீதான தரப்புகளின் வாதம் – அல்லது விவாதம் – இன்னும் தர்க்க ரீதியானதாக, நிபுணத்துவ ரீதியானதாக, அறிவு சார்ந்ததாக மாறாமல், வெறும் உணர்ச்சி யூட்டுவனவாகவே இருப்பது மிகவும் கவலைக்குரியது. “ஏகிய ராஜ்ய’ என்ற சிங்களச் சொல் வழமை யாக ஒற்றையாட்சியைக் குறிப்பது என்பதுதான் உண்மை. ஆனால் இடைக்கால அறிக்கையில் அந்தச் சொல் பயன்படுத்தப்படும் இடத்திலேயே அடைப்புக் குறிக்குள் அதன் விளக்கம் (“பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு’ எனும் பொருளாகும்) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச ஏற்பாடுகளின் படி, புதிய அரசமைப்பில் முதலாம், இரண்டாம் உறுப்புரைகளில் இந்த “ஏகிய ராஜ்ய’ என்ற சொல் வரும் இடத்தில் அதன் பொருள் இன்னதுதான் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. அத்தகைய சூழலில் அந்த சொல் ஒற்றையாட்சி யையே அங்கு குறிக்கும் என்று வாதிடுவது – இடைக்கால அறிக்கையில் அதே உறுப்புரைக்குரிய விளக்கத்தில் ஆங்கிலப் பதமான Unitary State (சமஷ்டி அரசு?) இலங்கைக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அப்படி வாதிடுவது – பொருத்தமற்றதாகவே நமக்குப்படுகின்றது.
ஆனால் இந்த இடைக்கால அறிக்கையில் இவற்றுக்கு அப்பாலும், சில சர்ச்சைகள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி சுமந்திரனிடம் விளக்கம் கோருவது பொருத்தமானதுதான் எனக் கருதுகிறோம். தற்போதைய அரசமைப்பில் 3 ஆம் உறுப்புரிமை யின்படி “நாட்டின் இறைமை மக்களுக்குரியது. பாரதீனப்படுத்த முடியாதது’ என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இடைக்கால அறிக்கையின் முதல் உறுப்புரையே “இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாக இருப்பதோடு பாரதீனப்படுத்த முடியாததாகவும், பிரிக்கப்பட முடியாததாகவும் இருக்க வேண்டும்’- என்று கூறுகின்றது.
ஆக, இப்போதுதான் முதல் தடவையாக இந்த இடைக்கால அறிக்கை மூலம், இலங்கையில் “பிரிக்கப்பட முடியாத இறைமை’ இருப்பது குறித்து வலியுறுத்தப்படுகின்றது. இது, இலங்கைத் தீவில் தமிழருக்குத் தனித்துவமான இறைமை – இறையாண்மை – உள்ளது என இவ்வளவு காலமும் நாம் வலியுறுத்திப் போராடும் விடயத்தை அடியோடு மறுத்துரைக்கும் ஏற்பாடல்லவா?
இதனை ஏற்றால், இலங்கைத் தீவில் தமிழர் தேசம், தமிழர் தாயகம், அந்தத் தாயகத்துக்குத் தனியான இறையாண்மை என்பவை ஏதும் இல்லை என்றாகி விடாதா?
சமஷ்டியோ, சுயாட்சியோ, உள்ளக சுயநிர்ணய உரிமையோ – எதுவென்றாலும் – இந்தத் தீவின் பூர்வீகமான தமிழர்களுக்குத் தனித்துவமான இறையாண்மை இங்கு உள்ளது என்ற அடிப்படை யிலிருந்துதானே உருவாகின்றது? அந்தத் தனித்துவ மான இறையாண்மை தமிழருக்கு இல்லை என்றால், சமஷ்டிக் கோரிக்கைக்கும், சுயநிர்ணய வலியுறுத்தலுக்கும், சுயாட்சி வற்புறுத்தலுக்கும் அடிப்படை ஏது? நியாயம்தான் ஏது?
அடுத்தது – அதிகாரப் பரவலாக்கல் அலகுக்குப் பகிர்ந்தளிக் கப்பட்ட அதிகாரங்களை, மத்திய அரசு மீளப் பெற முடியாமலும், அந்த அதிகாரங்களை மத்திய அரசு தான் பிரயோகிக்க இயலாமலும் இருப்பதை உறுதிப்படுத்தினால் அது சமஷ்டி அடிப்படைதான் என்பதே சம்பந்தன் – சுமந்திரனின் வாதமாகும்.
அது தமிழ்த் தேசத்தின் இறைமையின் அடிப்படையிலான சமஷ்டியா?
சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்படிப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளவும் பறிக்காமல் இருக்கின்றமையை உறுதி செய்யும் ஏற்பாடுகள் இடைக்கால அறிக்கையில் தெளிவாகவும் திட்டமாகவும் இல்லையே…! இத்தகைய பின்புலத்தில் இந்த இடைக்கால அறிக்கையை நம்பி இதற்குப் பின்னால் தமிழர்கள் செல்வது எங்ஙனம்? சுமந்திரனின் பதிலை தமிழினம் எதிர்பார்க்கின்றது.
“காலைக்கதிர்’ ஆசிரிய தலையங்கத்துக்கு சுமந்திரன் பதில்
“பிரிக்கப்பட்ட இறையாண்மையை நாம் கோரினால் அது நாட்டைப் பிரிக்கின்றோம் என அர்த்தப்படுத்தப் படலாம். அதனால் தான் நாம் பகிரப்படும் இறையாண் மையைக் கோருகின்றோம்.” – இவ்வாறு விளக்கமளித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியு மான எம்.ஏ.சுமந்திரன். “காலைக்கதிர்’ நாளிதழின் நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்குத் தாம் வழங்கிய பதிலிலேயே அவர் இந்த விளக்கத்தைத் தந்திருக்கின்றார்.
மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் சுமந்திரன் எம்.பியிடம் இரண்டு வினாக்கள் தொடுக்கப்பட்டிருந்தன. (வாசகர்களின் தெளிவுக்காக நேற்றைய ஆசிரிய தலையங்கம் அருகில் தனியாக மீளவும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)
ஒன்று – முதல் தடவையாகத் தற்போதைய இடைக்கால அறிக்கையில்தான் “இலங்கை மக்களின் பிரிககப்பட முடியாத இறையாண்மை’ பற்றி பிரஷ்தாபிக்கப் பட்டி ருக்கின்றது. அதனை ஏற்பது தமிழர் தேசத்துக்குத் தனியான இறையாண்மை இல்லை என்பதை அங்கீகரிப்பதாக அமைந்து விடாதா? – என்ற சாரப்பட அமைந்தது.
அடுத்தது – அதிகாரப் பகிர்வு அலகுக்கு பகிரப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளப் பறித்துக் கொள்வதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் இடைக்கால அறிக்கையில் தெளிவாகவும் உறுதியாகவும் இல்லையே என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த இரண்டு விடயங்களுக்கும் சுமந்திரன் எம்.பி. விளக்கமளித்தார்.
அவரது விளக்கம் வருமாறு:-
பகிரப்பட்ட இறையாண்மை இறையாண்மை என்றால் என்ன? பலருக்கும் அது விளங்குவதில்லை. பிரிட்டனில் நாடாளுமன்றத்தில் இராணி (Queen in Parliament) இருப்பதுதான் இறைமை என்கின்றார்கள். அப்படியானால், அங்கு மக்களிடம் இறைமை இல்லையா என்று கேள்வி எழுகின்றது.
அப்படிக் கூறமுடியாது.
இந்த “இறைமை’ என்ற விடயம் முடியரசு காலத்தலிருந்து உருவானது. அப்போது இறைமை மன்னனிடம் இருந்தது. அது – அதாவது, மக்களை ஆட்சி செய்கின்ற அதிகாரம் – எப்படி அவனுக்கு வந்தது?
இறைவனால் அது அவனுக்கு வழங்கப்பட்டது என்று அதனை அர்த்தப்படுத்தினர். இறைவனால் வழங்கப் பட்டது இறையாண்மை ஆயிற்று. பின்னாளில் குடியாட்சி வந்ததும் அது மக்களிடம் என்றாயிற்று. இறைமை என்பது கையால் தொட்டுணரக்கூடிய ஒன்றல்ல. அது ஓர் எண்ணக்கரு.
பிரிட்டனில் முடிக்குரிய இறைமை- அரசியை – நாடாளுமன்றத்தால் கட்டுப்படுத்துகின்றது. அதனாலேயே அங்கு இறைமை என்பது “நாடாளுமன்றத்தில்
இராணி’ என அர்த்தப்படுகின்றது.
இறைமை என்பதை பரந்த – வியாபித்த – அடிப்படையில் நாம் நோக்க வேண்டும். இறைமை பிரிக்கப்படுவதாக (Divisible sovereignty) நாம் பேசினால், நாங்கள் நாட்டைப் பிரிக்க முயற்சிக்கின்றோம் என அர்த்தப்படுத்த முயலுவார்கள். பகிரப்படும் இறைமை (Shared Sovereignty) பற்றியே நாம் பேசி வந்திருக்கின்றோம்.
2015 எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி, அதற்கு முந்திய எமது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் சரி, பகிரப்பட்ட இறையாண்மையின் அடிப்படையில் எமக்குள்ள உரித்துரிமை பற்றியே நாம் குறிப்பிட்டுள்ளோம். இதனை, இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், 2017 ஓகஸ்ட் நான்காம் திகதி தான் வழங்கிய தீர்ப்பிலும் இலங்கை உயர் நீதிமன்றம் ஏற்று அங்கீகரித்திருக்கின்றது.
“பகிரப்பட்ட இறைமையின் அடிப் படையில், உள்ளக சுயநிர்ணயக் கோட் பாட்டின் பிரகாரம், ஒரு நாட்டுக்குள் நியாயமான தீர்வு கோரும் உரிமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உண்டு” – என உயர் நீதிமன்றம் நீண்ட சட்ட விவாதங்களின் பின்னர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றது. எனவே, நாடு பிரிக்கப்படவில்லை என்பதைக் காட்டவே “இறையாண்மை பிரிக்கப்பட முடியாதது’ என்ற வாசகம் அங்கு இடம்பெறுகின்றது. ஆனால் அதன் அர்த்தம், இறைமை பகிரப்பட முடியாதது என்பதல்ல. அதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகாரத்தை மீளப்பறிப்பதை தடுத்தல் “பகிரப்பட்ட அதிகாரங்கள் மாகாணங் களில் இருந்து ஒரு தலைப்பட்சமாக பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி
செய்வதற்காக அரசமைப்பு ரீதியான போதிய காப்புக்களைச் செய்தல்’ குறித்து, இடைக்கால அறிக்கையின் (தமிழ் பிரதியின்) 30 ஆம் பக்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
புதிய அரசமைப்பு மூலம், மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெற முடியாதவையாக இருக்கவேண்டும் என்பதை, அரசமைப்பு வழிகாட்டல் குழுவின் சகல தரப்பினரும் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால், அதற்கான திட்டவட்டமான – தெளிவான – பொறிமுறையாது என்பது இன்னும் இறுதி செய்யப் படவில்லை. அது இடைக்கால அறிக்கையில் இல்லை என்று மேற்படி ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டிய அம்சம் சரிதான். அது கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டு, பொறிமுறை இறுதி செய்யப் படாமல் உள்ள விவகாரம்.அரசமைப்பு உருவாக்க முயற்சிகளின் ஒரு பகுதி தான் இப்போது நடந்திருக்கின்றது. அது, தொடர் நடவடிக்கையாக இன்னும் தொடர வேண்டியுள்ளது. இன்னும் பேசப் படவேண்டிய விவகாரமாக உள்ளது.
ஆனால், வழங்கப்படும் அதிகாரங்களை சம்பந்தப்பட்ட மாகாணத்தின் இணக்கமின்றி, மத்திய அரசு பறிக்கக் கூடாது,அதற்கான ஏற்பாடு புதிய அரசமைப்பில் இருக்கவேண்டும் என்பதைக் கொள்கை அளவில் வழிகாட்டல் குழுவில் சகல தரப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதற்கான பொறிமுறையைத் தீர்மானிப்பதே எஞ்சியுள்ளது என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
“அதிகாரப் பகிர்வு மற்றும் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கலாக அரசமைப்பு சம்பந்தமான அடிப்படை அம்சங்களைத் திருத்தியமைப்பது தொடர்பில் மேலதிக அரசமைப்புப் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம்’ என்று இடைக்கால அறிக்கையின் 34 ஆம் பக்கத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பது இதனைத்தான். இந்தப் பொறிமுறை குறித்தும் கூட, ஓரளவுக்கு விவாதிக்கப்பட்டிருக்கின்றது. உறுதியான பொறிமுறை ஒன்று வரும் என நாம் நம்புகின்றோம்.
விவாதங்கள் அவசியம். இந்த ஆசிரிய தலையங்கத்துக்குப் பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இத்தகைய ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள், கேள்வி – பதில்கள்தாம் அவசியமானவை. மக்களைத் தெளிவுபடுத்த இத்தகைய கேள்விகளைப் பத்திரிகைகள், ஊடகங்கள் உட்படப் பொதுத்தரப்புகள் எழுப்புவதும், பகிரங்கப் பதில்கள் மூலம் சம்பந்தப்பட்டோர் விளக்கமளிப்பதும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன். அந்த வகையில் இந்த ஆசிரிய தலையங்கம் ஆரோக்கியமானது ஒன்றே. – என்றார்
சுமந்திரன் எம்.பி.
ஆசிரியர் குறிப்பு
தமது நெருக்கடிகளுக்கு மத்தியிலும் எமது ஆசிரிய தலையங்கத்தைக் கருத்தில் எடுத்து, அது வெளியாகிச் சில மணி நேரத்துக்குள்ளேயே பதிலைத் தந்த சுமந்திரனின் அரசியல் நாகரிகப் பண்பியல்புக்கு எமது பாராட்டுக்கள்; நன்றிகள்.
நேற்றைய ஆசிரிய தலையங்கம்
தமிழ்த் தேசத்தின் இறைமை மீதான கேள்வி நடப்பது என்னவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான்.
ஆனால், தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகியிருப்பது தேசிய மட்டப் பிரச்சினையான, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய விவகாரம் என்பதுதான் நிலைமை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை – குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் – இடைக்கால அறிக்கையில் தங்கி, விடயங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பற்றிப் பேசுகின்றனர். ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக் னேஸ்வரனிலிருந்து, அவரது இணைத் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ் பிறேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற தரப்புகள் வரை இடைக்
கால அறிக்கையை நிராகரித்துக் கருத்து வெளியிட்டு வருகின்றன.
ஆக, இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் தரப்பில் பிரதான பேசு பொருளாக இடைக்கால அறிக்கையே மாறியிருக்கின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால், தமிழர் தரப்பில் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தல் மாறியிருக்கின்றமையும் கூடக் கண்கூடு.
இத்தகைய இடைக்கால அறிக்கை மீதான தரப்புகளின் வாதம் – அல்லது விவாதம் – இன்னும் தர்க்க ரீதியானதாக, நிபுணத்துவ ரீதியானதாக, அறிவு சார்ந்ததாக மாறாமல், வெறும் உணர்ச்சி யூட்டுவனவாகவே இருப்பது மிகவும் கவலைக்குரியது. “ஏகிய ராஜ்ய’ என்ற சிங்களச் சொல் வழமை யாக ஒற்றையாட்சியைக் குறிப்பது என்பதுதான் உண்மை. ஆனால் இடைக்கால அறிக்கையில் அந்தச் சொல் பயன்படுத்தப்படும் இடத்திலேயே அடைப்புக் குறிக்குள் அதன் விளக்கம் (“பிரிக்கப்படாத
மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு’ எனும் பொருளாகும் என்று) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தேச ஏற்பாடுகளின் படி, புதிய அரசமைப்பில் முதலாம், இரண்டாம் உறுப்புரைகளில் இந்த “ஏகிய ராஜ்ய’ என்ற சொல் வரும் இடத்தில் அதன் பொருள் இன்னதுதான் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.
அத்தகைய சூழலில் அந்த சொல் ஒற்றையாட்சி யையே அங்கு குறிக்கும் என்று வாதிடுவது – இடைக்கால அறிக்கையில் அதே உறுப்புரைக் குரிய விளக்கத்தில் ஆங்கிலப் பதமான Unitary State (சமஷ்டி அரசு) இலங்கைக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அப்படி வாதிடுவது – பொருத்தமற்றதாகவே நமக்குப்படுகின்றது. ஆனால் இந்த இடைக்கால அறிக்கையில் இவற்றுக்கு அப்பாலும், சில சர்ச்சை கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி சுமந்திரனிடம் விளக்கம் கோருவது பொருத்தமானதுதான் எனக் கருதுகிறோம். தற்போதைய அரசமைப்பில் 3 ஆம் உறுப்புரிமை யின்படி “நாட்டின் இறைமை மக்களுக்குரியது. பாரதீனப்படுத்த முடியாதது’ என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இடைக்கால அறிக்கையின் முதல் உறுப்புரையே “இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாக இருப்பதோடு பாரதீனப்படுத்த முடியாததாகவும், பிரிக்கப்பட முடியாததாகவும் இருக்க வேண்டும்’- என்று கூறுகின்றது.
ஆக, இப்போதுதான் முதல் தடவையாக இந்த இடைக்கால அறிக்கை மூலம், இலங்கையில் “பிரிக்கப்பட முடியாத இறைமை’ இருப்பது குறித்து வலியுறுத்தப்படுகின்றது. இது, இலங்கைத் தீவில் தமிழருக்குத் தனித்துவமான இறைமை – இறையாண்மை – உள்ளது என இவ்வளவு காலமும் நாம் வலியுறுத்திப் போராடும் விடயத்தை அடியோடு மறுத்துரைக்கும் ஏற்பாடல்லவா? இதனை ஏற்றால், இலங்கைத் தீவில் தமிழர் தேசம், தமிழர் தாயகம், அந்தத் தாயகத்துக்குத் தனியான இறையாண்மை என்பவை ஏதும் இல்லை என்றாகி விடாதா?
சமஷ்டியோ, சுயாட்சியோ, உள்ளக சுயநிர்ணய உரிமையோ – எதுவென்றாலும் – இந்தத் தீவின் பூர்வீகமான தமிழர்களுக்குத் தனித்துவமான இறையாண்மை இங்கு உள்ளது என்ற அடிப்படை யிலிருந்துதானே உருவாகின்றது? அந்தத் தனித்துவமான இறையாண்மை தமிழருக்கு இல்லை என்றால், சமஷ்டிக் கோரிக்கைக்கும், சுயநிர்ணய வலியுறுத்தலுக்கும், சுயாட்சி வற்புறுத்தலுக்கும் அடிப்படை ஏது? நியாயம்தான் ஏது?
அடுத்தது – அதிகாரப் பரவலாக்கல் அலகுக்குப் பகிர்ந்தளிக் கப்பட்ட அதிகாரங்களை, மத்திய அரசு மீளப் பெறமுடியாமலும், அந்த அதிகாரங்களை மத்திய அரசு தான் பிரயோகிக்க இயலாமலும் இருப்பதை உறுதிப்படுத்தினால் அது சமஷ்டி அடிப்படைதான் என்பதே சம்பந்தன் – சுமந்திரனின் வாதமாகும்.
அது தமிழ்த் தேசத்தின் இறைமையின் அடிப்படையிலான சமஷ்டியா? சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்படிப் பகிர்ந் தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளவும் பறிக்காமல் இருக்கின்றமையை உறுதி செய்யும் ஏற்பாடுகள் இடைக்கால அறிக்கையில் தெளிவாகவும் திட்டமாகவும் இல்லையே…!
இத்தகைய பின்புலத்தில் இந்த இடைக்கால அறிக்கையை நம்பி இதற்குப் பின்னால் தமிழர்கள் செல்வது எங்ஙனம்? சுமந்திரனின் பதிலை தமிழினம் எதிர்பார்க்கின்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.