பொங்கல் திருநாளில்  எல்லோர் வாழ்விலும்  அல்லவை தேய்ந்து நல்லவை மலரட்டும்!

பொங்கல் திருநாளில்  எல்லோர் வாழ்விலும்  அல்லவை தேய்ந்து நல்லவை மலரட்டும்!

நக்கீரன்

தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் 

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள்,  கிழமை, மாத சஞ்சிகைள் தீபாவளி மலர் வெளியிடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தன. பொங்கல் மலர் வெளியிடுவதில்லை.  ஆனால் திராவிட தேசியத்தின் வளர்ச்சி காரணமாக இன்று பொங்கல் விழா தமிழர்களின் தனிப் பெரும் விழாவாக பரிணமித்துள்ளது.

இன்று உலகளாவிய அளவில் பொங்கல் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள்ள பற்றும் தமிழின உணர்வும் தமிழ்மக்களிடம் மேலோங்கிக் காணப்படுவதே. தமிழர் திருநாளான பொங்கல்  நாளை 2014 தொடக்கம் விடுமுறை நாளாக  அமெரிக்கா அரசு  அறிவித்தது.   அங்குள்ள 2,500-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பொங்கல் விழாவை  அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வெர்ஜீனியா சட்ட சபையில்  ஒருமனதாக  அங்கீகரித்துள்ளது. அன்றைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நியூ யேர்சி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

கனடாவில் தை மாதம் தமிழர்களின் மரபுத் திங்களாக மத்திய மற்றும்   ஒன்ராறியோ மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. பல பொது அமைப்புக்கள் பொங்கல் விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றன.

தை முதல் நாள் அன்று பொங்கல் கொண்டாடுவது போல அந்த நாளை திருவள்ளுவர் பிறந்த நாளாகவும் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளாகவும் தமிழர்கள் கொண்டாட வேண்டும். திருவள்ளுவரை மேன்மைப் படுத்துவது போல அவர் பெயரால் அழைக்கப்படும் திருவள்ளுவர்  தொடர் ஆண்டையும் நாம் கடைப்பிடிக்க  வேண்டும்.

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளார் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அப்போது எடுத்தார்கள்.

1.திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கிமு 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 அய்க் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு வரும்)

1971 இல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும்  972 முதல் அரசிதழிலும் 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்ப்படுத்தப்பட்டு வருகின்றது. 1969 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று தமிழ்நாடு அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதால் தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவிக்கும்  சட்டத்தை தமிழக அரசு கடந்த 1.2.2008 அன்று சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றியது. அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு சொல்லப்பட்டிருந்தது.

முன்னைய அரசின் சட்டத்தை திருத்தி சித்திரை முதல் நாளை புத்தாண்டு என அறிவித்துவிட்டார். சித்திரை முதல் நாளைப் புத்தாண்டாக தொடர்ந்து கொண்டாடி வரலாம். ஆனால் அது தமிழ்ப் புத்தாண்டு ஆக கொண்டாடக் கூடாது.  இந்துப் புத்தாண்டு (Hindu New Year)  என அதனைக் கொண்டாடலாம்.   அப்படித்தான் அது கொண்டாடப்படுகிறது.

சித்திரை முதல் நாள் (April 14) வேனில் காலத்தின் தொடக்க நாள். அதுவே புத்தாண்டின் தொடக்க நாள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேனில் காலம் புவியின் அச்சு  பின்னோக்கி நகர்வதால் (Precession of Equinoxes) மார்ச்சு 20  அல்லது 21 இல் தொடங்கி விடுகிறது.  இது பஞ்சாங்கம் கணிப்போருக்குத் தெரிவதில்லை. அல்லது தெரிந்தும் கணக்கில் எடுப்பதில்லை.  பருவ காலங்கள் புவிக்கும் ஞாயிறுக்கும் இடையில் உள்ள தொடர்பை வைத்தே நிருணயிக்கப்படுகிறது. பருவ காலங்களுக்கும் கோள்கள் அல்லது நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இல்லை.

சித்திரை முதல்நாள் ஞாயிறு மீன இராசியில் இருந்து விலகி மேட இராசி, அசுவனி நட்சத்திரத்துக்குள் நுழைகிறது. எனவே வானியல் அடிப்படையில் அதுவே புத்தாண்டு பிறக்கும் நாள் என்று சொல்லப்படுவது  சரியே.

சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தைப் புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது.  தை முதல்நாள் ஞாயிறு தனது தென்திசைப் பயணத்தை (தட்சணாயம்) முடித்துக்கொண்டு வடதிசைப் பயணத்தை (உத்தரயாணம்) மேற்கொள்கிறது.  அதாவது ஞாயிறு தனு இராசியை விட்டு விலகி மகர இராசியில் நுழைகிறது.  எனவே தை முதல் நாளுக்கும் வானியல் அடிப்படை உண்டு என்பது தெளிவாகும்.

பொங்கல் தமிழர்க்கே உரித்தான தனித்துவமான விழாவாகும். தமிழ் மக்கள் சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடினாலும் பொங்கல் விழாவே சமயம் சாராத பகுத்தறிவுக்கு ஒத்த இனிய விழாவாக விளங்குகிறது.  கழனி திருத்தி, எருவிட்டு, வரம்பு கட்டி, உழுது, விதைவிதைத்து நெல்மணிக் கதிர்களை அறுவடைசெய்ய உதவியாக இருந்த ஞாயிறுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அந்த விழாவும் உழவர்களுக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் கொண்டாடப்படும்.

Image result for தைப்பொங்கல்

பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள் இனி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன்  வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி வண்ண வண்ணக் கோலங்கள் இட்டு, வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட மழலையர், மாணவர், மங்கையர், மகிழ்ச்சியில் தோய்ந்து, புத்தாடை புனைந்து, தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும் ஆடியும் சமத்துவ உணர்வு பரப்பியும் தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர் என எதிர்பார்த்தனர்.   ஆனால் மே 2011 இல் ஆட்சிக்கு வந்த  ஜெயலலிதா   மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற பொருளும் உண்டு. Image result for தைப்பொங்கல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வேறுபட்ட சூழலில் வாழ்ந்தாலும் அவர்களது  பன்முக  பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தும் பொங்கல் போன்ற இனிய விழாக்களைத் தவறாது கொண்டாட வேண்டும். அதன் மூலம் தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை தமிழர்கள் புலத்திலும் பேணிக் காப்பாற்ற முடியும். இப்படியான விழாக்களை தமிழர்கள்  கொண்டாட மறந்தால், அவற்றை அவர்கள் கைவிட்டால் எங்கள் மொழி, கலை, பண்பாடு காலப் போக்கில் அழிந்து போகும் ஆபத்து இருக்கிறது. முன்னைய காலத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மொழி, கலை, பண்பாட்டை இழந்து தமிழர் என்ற அடையாளத்தையே தொலைத்து இருக்கிறார்கள். அது எங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். உலகின் தொன்மையான ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. ஏனையவை இலத்தீன், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ மற்றும் சமற்கிருதம் ஆகும். தமிழின் சிறப்பினை, அதன் இலக்கிய வளத்தை, உலக அறிஞர்கள் போற்றிப் பேசுகின்றனர்.   ஆனால் தமிழர்களுக்குத் தமிழ்மொழியின் அருமை பெருமை,  சீர் சிறப்புத் தெரியாது இருக்கிறது. 

தமிழுக்குத் தொடர்பே இல்லாத உருசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான உருசியத்திலும் இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும் மூன்றாவதாக உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும்  நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப் படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு உருசியர்கள்  கூறும் காரணத்தை  தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் இரண்டு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான,  தகுதியான மொழியாக “தமிழ் மொழி”  தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே “கிரெம்ளின் மாளிகை” என தமிழில் எழுதினோம்” என்று உருசியர்கள் கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குத் தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது.  தமிழர்களுக்குத்தான் தெரியவில்லை. தமிழில் எழுதுங்கள், தமிழில் பேசுங்கள், தமிழில் வழிபாடு செய்யுங்கள், பிள்ளைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர் வையுங்கள் என்பதற்கு ஒரு போரட்டமே நடத்த வேண்டியுள்ளது!

தமிழ் வளர வேண்டும் என்றால் தமிழ்மொழி எமது வீட்டு மொழியாக இருக்க வேண்டும். வீட்டில் தமிழைத் தவிர வேறுமொழியில் பேசுவதில்லை என நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இந்தியாவின் புகழ்பெற்ற நேரு குடும்பம் வீட்டில் இந்தியில் மட்டும் உரையாடியது.  எமது அடையாளத்தை உறுதி செய்ய பிறக்கும் குழந்தைகளுக்கு பைந்தமிழில் பெயரிட வேண்டும். திருமணங்கள் திருக்குறள் ஓதி செந்தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் வழிபாடு வண்டமிழில் இருக்க வேண்டும்.

உங்கள் உறவுகளை தமிழில் அழையுங்கள். அப்பா, அம்மா என்ற அழகு தமிழ் இருக்க டடி, மமி எங்களுக்குத் தேவையில்லை. அங்கிள், ஆன்ரி வேண்டாம். மாமா, மாமி என வண்ணத் தமிழில் கூப்பிடுங்கள். திருநாவுக்கரசர் இறைவனை ‘அப்பன்நீ, அம்மைநீ, அய்யனும்நீ, அன்புடைய மாமனும் மாமியும்நீ’ என்று பாடியிருப்பதை  நோக்குங்கள்  கவனியுங்கள்.

தமிழ்மக்கள் தங்கள் திருக்கோயில் வழிப்பாட்டைச் சொற்றமிழில் செய்ய வேண்டும்.  கடவுளுக்கு மொழிச் சிக்கல் இல்லை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும். முக்கியமாகத் தமிழ்மொழி தெரியும். சிவனார் ‘அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் நம்மை மண்மேல் சொற்றமிழ் பாடுக’ என்று சுந்தரரைப்  பணித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறார்.  சுந்தரர் ‘இறைவன் தமிழை ஒத்தவன்’ என்றும் நாவுக்கரசர் ‘பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்’ என்றும் ‘தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றும் சேக்கிழார் ‘ஞாலமளந்த மேன்மை தெய்வத் தமிழ்’ என்றும்  இறைவனை தமிழாகவே போற்றியிருக்கிறார்கள். தேவார காலத்தில்  கோயில்களில் தமிழுக்கு இருந்த மேன்மை இன்று இல்லை. கோயில் விழாக்கள் தொடர்பான அறிவித்தல்கள் பெரும்பாலும் வடமொழி கலந்த தமிழ்க்கிருதத்திலேயே வருகின்றன.

Image result for தைப்பொங்கல்

வள்ளலார் ‘எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!’ என்றுபாடி “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.வள்ளலார் ‘எந்தையுனைப் பாடி மகிழ்ந்து இன்புறவே வைத்தருளிச் செந்தமிழை வளர்க்கின்றாய்!’ என்றுபாடி “அருச்சனை பாட்டேயாகும்” என்ற சேக்கிழார் முழக்கத்தை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முத்தமிழில் அழகும் இனிமையும்  சொற்சுவையும் பொருட்சுவையும் ஓசைநயமும் நிறைந்த தனித் தமிழ்ப் பெயர்களை சூட்ட வேண்டும். இப்படிச் செய்வது தமிழ்மக்கள் அன்னைத் தமிழுக்குச் செய்யக்கூடிய குறைந்தளவு தொண்டாகும். தமிழ்க் குழந்தைகளின் பெயர் பெரும்பாலும் வடமொழியாய் இருப்பதற்கு சோதிடம், சாதகம், நாள், நட்சத்திரம், எண் கணியம் போன்ற மூடநம்பிக்கைகளை நம்புவது காரணமாகும்.

பெற்றோர்களுக்குத் தமிழ் எது வடமொழி எது என்ற குழப்பம் இருக்கிறது. இதனைத் தீர்ப்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது. பெயர்களில் ஜ,ஸ,ஷ,ஹ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்கள் இருந்தால் அவை வடமொழிப் பெயர்களாகவே இருக்கும். மேலும் தமிழில் சொற்களுக்கு முன்வராத ட, ர, ல, ங, ண, ழ, ள, ற, ன எழுத்தில் தொடங்கும் பெயர்கள் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது.

தமிழ்மொழி வெறும் மொழி மட்டுமல்ல. அஃது ஓர் பழம் பெரும் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுப் பட்டறிவுப் பெட்டகம். கருவூலம். மூவாத் தமிழில் அழகும் இனிமையும்  பொருளும் நிறைந்த பெயர்கள் ஏராளமாகவும் தாராளமாகவும் இருக்கின்றன. அரசி, அருளரசி, அன்பரசி, தமிழரசி, கலையரசி, கலைமகள், திருமகள், நிலமகள், நாமகள், பூமகள், வள்ளி, கோதை, நிலா, அரசன், மாறன், அழகன், முருகன், கண்ணன் எனச் சின்னக் குழந்தைகளுக்கு நல்ல நல்ல வண்ணப் பெயர்கள் இருக்கின்றன.

எங்கள் மொழியையும் பண்பாட்டையும் கட்டிக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் உண்டு. தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் சோறு போடுமா?  என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். சோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார்? அவன் அடையாளம் என்ன? அவன் பண்பாடு எது? மரபு யாது?

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக நடக்கட்டும், பிறக்கும் புத்தாண்டில்  அல்லவை தேய்ந்து  நல்லவை நடக்க வேண்டும்.  அனைவரது வாழ்விலும் அன்பும் மகிழ்ச்சியும் குறைவில்லா செல்வமும் பெருக வேண்டும். எல்லோரது வாழ்விலும்  விடியல் பிறக்க வேண்டும்.  இன்பம் பொங்க வேண்டும் என்ற  நம்பிக்கையோடு பொங்கல் திருநாளில்  திருவள்ளுவராண்டு 2049 இல்  காலடி எடுத்து வைப்போம்.

About editor 3000 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply