‘நாங்கள் விரக்தியடைய முடியாது’ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ‘த ஹிந்து’வுக்கு வழங்கிய செவ்வி
Administrator 2018-01-04
ஆர்.சம்பந்தன் அவர்கள், இலங்கைப் பாராளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராகவும், நாட்டின் மிகவும் மூத்த அரசியல்வாதியாகவும், ஆறு தசாப்த காலமாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கிறார். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தலைமை வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இணையணியை ஆதரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தோல்வியடையச் செய்தது. மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில், தற்பொழுது 84 வயதை அடைந்துள்ள அவர் தனது கொழும்பு வதிவிடத்தில் வைத்து சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தபொழுது அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றிக் குறிப்பாக, மோசமான சிவில் யுத்தமொன்றின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றிய கணிப்பீடொன்றைச் செய்கிறார். அவர் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். அதன் பகுதிகள்:
தமிழர்கள் உட்பட்ட இன, மத சிறுபான்மை மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. அதன் செயற்பாடுகள் பற்றியும் ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கான தங்கள் தீர்மானம் பற்றியும் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
திரு. சிறிசேன அவர்களை ஆதரிப்பதற்காக நாம் எடுத்த தீர்மானம் சரியானது என்பதையிட்டு அற்பளவான சந்தேகமும் எனக்கு இல்லை. குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு அநியாயமாகவும் அசாதாரணமான வகையிலும் செயற்பட்ட ராஜபக்ஷ அரசு தொடர்பாக நாம் வெறுப்படைந்திருந்தோம்.
ஜனாதிபதி சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு முன்பிருந்தே தமிழ் அரசியலுடன் தொடர்புபட்டவராக இருந்தார். தமிழர் பிரச்சினைக்கு நீதியானதும் நியாயபூர்வமானதுமான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் வலுவான ஆதரவாளர்களுள் ஒருவராக அவர் காணப்பட்டார். 1994 – 2000 ஆண்டு காலப் பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவர்களால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு முன்மொழிவுகளுக்கு அவர் ஆதரவு வழங்கினார். எமது தீர்மானத்திற்கு அது செல்வாக்குச் செலுத்தியதென்பதில் ஐயமில்லை. திரு.சிறிசேன அவர்களும் பிரதம மந்திரி விக்கிரமசிங்க அவர்களும் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்திருந்தமையும் எமது தீர்மானத்தில் மேலும் செல்வாக்குச் செலுத்தின. முதற் தடவையாக தமிழர் பிரச்சினை தொடர்பாக பல கட்சி இணக்கம் உருவாக்கப்பட்டமை, குறிப்பாக பிரதானமான இரண்டு அரசியற் கட்சிகளும் இணங்கியமை ஒரு வாய்ப்பை உருவாக்கியது.
நாங்கள் மேற்கொண்ட அத் தீர்மானம் தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆயினும், தமிழ் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்களும் அரசாங்கத்திடமிருந்து இதைவிட அதிக அளவான செயற்பாட்டையே எதிர்பார்த்திருந்தோம்.
அரசாங்கத்தின் செயற்பாட்டை மதிப்பிடும்போது, குறிப்பாக தமிழ்மக்களின் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, தமிழ்மக்கள் எத்தகைய கணிசமான நன்மைகளைப் பெற்றுள்ளனர்?
தேசியப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கான அரசியலமைப்பு செயற்பாடுகள் 2016இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, கணிசமான செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வழிகாட்டல் குழு (பிரதம மந்திரியின் தலைமையில் 21 உறுப்பினர்களைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டது) ஒழுங்காகக் கூடிக் கலந்துரையாடியதோடு, ஓர் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. அது பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் (பெப்ரவரியில்) மேலும் விரைவாக அரசியலமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். சில அரசியற் கட்சிகளினால் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளின் காரணமாக இச் செயற்பாடுகள் ஓரளவு தாமதமடைந்தன.
தமிழ்க் குடிமக்களின் மிகவும் கரிசனைக்குரிய விடயங்களில் ஆயுதப்படைகள் தமது பாவனையில் வைத்திருக்கும் (குடிமக்களது) காணிகளை விடுவிப்பது, அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது மற்றும் காணாமல் போனவர்களது பிரச்சினை என்பவையே உள்ளன. எதுவுமே செய்யப்படவில்லை என நான் கூறமாட்டேன். ஆனால், நிச்சயமாக இதனைவிட மேலும் செய்திருக்க முடியும் என்பதை நான் கூறுவேன்.
வடக்குக் கிழக்கில் எமது தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக (முன்னர் படையினரின் பாவனையில் இருந்த) சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவிப்பது ஒரு தொடர் செயற்பாடாகும். அது இலகுவானதல்ல. ஆயினும், அது நடைபெறுகின்றது. சில தினங்களுக்கு முன்புகூட கேப்பாபிலவுப் பகுதியில் 133 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலில் நான் மிகவும் காத்திரமாகச் செயற்பட்டேன்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக, 40 – 50 வீதமானவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர். காணாமல் போனோர் தொடர்பாக கிட்டத்தட்ட 20000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை வெளிப்படையாகத் தெரிய வருகின்றது. இது மிக அதிக தொகையாகும். அவர்களுடைய குடும்பங்கள் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள விரும்புவதாவது, அவர்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களே.
அதாவது, அந்த நபர் உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பதே. அவர்களுக்கு ஏதாவது ஆறுதல், இழப்பீடு அல்லது வேறு விதமான ஏதாவது உதவிகள் அளிப்பதன் மூலம் அவர்கள் உண்மை நிலைமையினைப் புரிந்து கொண்டு இணக்கத்துக்கு வந்து தமது வாழ்வை மீளமைத்துத் தொடர்வதற்கு ஏதுவான செயற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
2015 இல் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின்படி பொறுப்புக்கூறுதல் தொடர்பான அதன் உறுதிப்பாடு தொடர்பாக இதுவரை அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை. இது தொடர்பான தாமதம் காரணமாக தமிழ்க் குடிமக்கள் பாரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மாற்றத்துக்கு, போர்க் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக் கூறுதல் பொறிமுறை ஏற்படுத்துவதனையும் விட முக்கியத்துவம் தரப்பட்டுள்ளபோதும், அரசாங்கம் விதித்த பல காலக்கெடுக்கள் கடந்துவிட்டுள்ள நிலையில் மேலும் தாமதமடைந்து செல்கிறது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், பௌத்த மதத்திற்கான முதன்மை இடம், தேர்தல்கள் மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் குறைந்த அளவில் அதிகாரப் பகிர்வு தொடர்பான விவாதங்களில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இணைந்த அரசாங்கம் தமிழ்மக்களைக் கைவிட்டுள்ளதாக நீங்கள் உணர்கின்றீர்களா?
+இறுதியில் எத்தகைய நிகழ்வுகள் ஏற்படும் என்பது பற்றிய எந்த முடிவுகளுக்கும் வர எமக்கு இயலாதுள்ளது. ஆனால், சில விடயங்கள் தொடர்பாக காத்திரமான விவாதங்கள் இடம்பெறாதிருந்தால், அவை சம்பந்தமான பாரிய கருத்து முரண்பாடுகள் இல்லாமை காரணமாக இருக்கலாம். அத்தகைய கருத்து வேற்றுமைகளுக்குள் இப்போதைக்குச் செல்ல நான் விரும்பவில்லை. ஏனென்றால், இந்த நாட்டின் எல்லா மாகாணங்களையும் சேர்ந்த முதலமைச்சர்கள், குறிப்பாக வடக்குக் கிழக்குக்கு வெளியில் உள்ளவர்கள் மத்திக்கும் மாகாணங்களுக்கிடையிலும் பரந்த அளவான அதிகாரப் பங்கீடு இருக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டினை உறுதியாக ஆதரிப்பவர்களாக உள்ளனர். எவ்வாறாயினும், இறுதியான கட்டமைப்பைக் காணும் வரையிலும் நான் காத்திருக்கிறேன்.
நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
நான் எதிர்மறை நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. சகல மக்களும் சமத்துவம் என்ற அடிப்படையில் உண்மையான அபிவிருத்திக்கும், முன்னேற்றத்திற்குமான பயணத்தில் ஈடுபடுவதற்கு ஓர் அரசியல் தீர்வு நாட்டிற்கு அவசியமாகவுள்ளது. இந்தச் சூழ்நிலைகளின்படி விரைவான, வெற்றிகரமான முடிவைப் பெறுவதற்கான இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான உறுதியுடன் நாம் தொடர வேண்டியதே இப்பொழுது நாம் செய்யக்கூடியது. நாங்கள் விரக்தியடைய முடியாது; நாங்கள் விடயங்களைக் கைவிட முடியாது.
பொறுப்புக்களைக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் இத்தகைய செயற்பாடுகளில் குறைந்தது நம்பிக்கையையாவது வைத்துத் தொடர்ந்து செயற்பட வேண்டியது எமது கடமையாகும். எல்லா விடயங்களிலும் உரத்துப் பேசிக்கொண்டு தடைகள் மற்றும் தொந்தரவைச் செய்து கொண்டிருக்காமல், தமிழ் மக்களுக்கு முக்கியமானவற்றை அடைவதில் பொறுப்புணர்வுடனும், கரிசனையுடனும் சரியான நோக்கோடும் பங்களிப்புச் செய்ய வேண்டியதையே நாம் செய்ய வேண்டும்.
இதற்கு மாற்றீடு என்ன?
+மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மீண்டும் வரவேண்டுமென்று மக்கள் விரும்புகின்றார்களா? எதுவும் நடைபெறவில்லை என்பதற்கு அதுதான் உண்மையான காரணம் என நான் நினைக்கவில்லை. ஆயினும், இந்த அரசாங்கத்தில் சட்டத்தின் ஆட்சி பேணப்படுவதையும் முன்னர் காணப்பட்ட தண்டனை விலக்குக் கலாசாரம் இப்போது இல்லாமற் போனமையும், குடிசார் நிறுவனங்களினதும் நீதித்துறையினதும் சுதந்திரம் மீள உறுதி செய்யப்பட்டுள்ளமையையும் யாவரும் அறிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சகல விடயங்களையும் ஒட்டு மொத்தமாக நீங்கள் பார்த்தால் இந்தச் சூழ்நிலை தமிழ்மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய சாதக நிலைமையாக உள்ளதைக் காணமுடியும்.
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற மற்றைய இனத்தவர்களுடன் தொடர்பான விடயங்களையும் எந்த வகையில் உங்களால் கையாள முடியும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?
அந்த விடயத்தை நான் முற்றாக ஒதுக்கிவிடவில்லை. ஆனாலும், இந்த விடயத்தில் நான் மேலும் காத்திரமான பங்களிப்புச் செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருக்கலாம். அந்தக் கருத்தினை நான் மறுக்கவில்லை. ஆனால், நாடு எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான விடயமாக இருப்பது எமது தேசியப் பிரச்சினையென நான் நினைக்கின்றேன். இந்த நாடு இருக்க வேண்டிய இடத்தை அது அடைய முடியாமலிருப்பதாகக் கருதினால் இத்தோல்வியிலேயே அது பெரும்பாலும் தங்கியுள்ளது. அந்த விடயத்தில் எனது பங்களிப்பு, வேறுவிதமாகச் சிந்திப்பவர்களால் போதியளவுக்கு விளங்கிக்கொள்ளப்படவில்லை என்றே நான் நினைக்கின்றேன்.
தர்க்க ரீதியில் சமமற்றதாக இருந்தாலும், சிங்களவர்களதும் தமிழர்களதும் தேசியவாதப் போட்டியே நாட்டின் இன முறுகலைத் தூண்டியதோடு, விரிவடையவும் செய்துள்ளது. இன்றும்கூட தமிழ் அரசியலினது பரப்புரைகள் எல்லாம் தேசிய வாதத்தையும் இன வேறுபடுத்தலையும் தொடர்வதாகவே உள்ளது.
தமிழ்த் தேசியவாத அரசியல், போருக்குப் பிந்திய நிலைமையையும் அடிக்கடி எல்.ரீ.ரீ.ஈ. உடன் தொடர்புபடுத்தி முன்னெடுத்துச் செல்வதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இது தமிழ்ச் சமூகத்தின் உள்ளே உள்ள துலாம்பரமான சாதிப் பாகுபாட்டையும், மதரீதியான பொறுமையின்மையையும் பேசுகின்றதா?
தமிழ்ச் சமூககத்தினுள்ளே சில பிளவுகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமேதுமில்லை. இவை ஒவ்வொரு சமூகத்திலும் இருக்கின்றன. இந்த நாட்டில் தாங்கள் இரண்டாந்தர வகுப்பினர் எனவும், சமமான உரிமைகள் அற்றவர்கள் எனவும் தமிழர்கள் கொண்டுள்ள மனநிலையில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். பெரும்பான்மைச் சமூகத்தின் ஏனையவர்களுக்குள்ள உரிமைகள் போன்று அவர்களுக்கு உரிமைகள் இல்லை.
இதற்காகவே போர் ஒன்று நடைபெற்றது. போர் முடிவுக்கு வந்துள்ளதென்றாலும், அதனால் முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டுள்ளனவென்று அர்த்தப்படாது. வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக அவதானமாகவும், சமநிலையானதுமான அணுகுமுறை இருக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் மேலும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கின்ற அதேவேளை, அங்கேயுள்ள மூலகாரணத்தையிட்டும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ்மக்களுக்கு எதிர்காலத்தில் சில நம்பிக்கைகள் ஏற்படுத்த முடியுமாக இருந்தால், இந்தப் பிரச்சினைகள் தற்போதுள்ளதைவிட அந்தத் தருணத்தில் மேலும் கவனத்திற் கொள்ளப்படக்கூடிய ஏதுநிலை ஏற்படக்கூடும்.
2013இல் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தல், பிராந்திய அரசாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதலாவது சந்தர்ப்பத்தை வழங்கியது.
குறைவான அதிகாரப் பங்கீட்டில் காணப்படும் மட்டுப்படுத்தல்கள் தெளிவாகத் தெரிகின்ற போதிலும், வடக்கு மாகாண சபை, வடக்கு மக்களுக்கான சேவைகளை எந்த வழிகளில் வழங்கியுள்ளது? தேவையான நியதிச் சட்டங்களை நிறைவேற்றாமையினால் மாகாண நிர்வாகம் ஒதுக்கப்பட்ட நிதியினைக் குறைவாகவே பயன்படுத்தியுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறதே?
எனக்குக் கிடைத்த அறிக்கைகளை நான் வாசித்துப் பார்த்ததன்படி, வடக்கு மாகாண சபை மேலும் கூடுதலாகச் செய்திருக்க முடியும். 13வது திருத்தம் குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ஆயினும், அதே கட்டமைப்புக்குள் மேலும் கூடுதலாகச் செய்திருக்கலாம். ஆரம்பத்தில் ஆளுநர் ஒரு படை அதிகாரியாக இருந்தவர்; கடினமானவராக இருந்தார். ஆனால், 2015 இலிருந்து சுதந்திரமான, முன்னேற்றச் சிந்தனை கொண்ட புதிய ஆளுநர்கள் இருந்தனர். தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகள், அவர்களின் அன்றாடத் தேவைகள் பற்றி வடக்கு மாகாண சபை கவனம் செலுத்தி தற்போதுள்ளதைவிட அதிக அளவில் கணிசமான பணிகளைச் செய்திருக்கலாம்.
தங்களது இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட்டமைப்புக்குள் கூடுதல் ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டமைப்பின் அமைப்புக்கள் சில குற்றஞ் சுமத்துவதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அடிக்கடி பதற்ற நிலை மேலெழுவதாகத் தெரிகின்றது.
நடைபெறவுள்ள உள்ளூர் தேர்தல்கள் எந்த அளவுக்குத் தமிழ் அரசியலிலும் தேசிய அரசியலிலும் தாக்கங்களைச் செலுத்தும் என்பது பற்றிய தங்களது கருத்துக்களைக் கூறமுடியுமா?
+உள்ளூராட்சித் தேர்தல்கள் சமூகத்தின் அடிமட்ட நிலையில் நடைபெறுவன. புதிய அரசியலமைப்பில் தேசிய கடமைப் பட்டியல் மற்றும் மாகாணங்களுக்கான விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதைப் போல உள்ளூராட்சி மன்றங்களுக்கான கடமைப் பட்டியலும் உள்ளடக்கப்படக் கூடும். புதிய அரசியலமைப்பில் சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அத்தகைய ஏற்பாடுகள் நிறைவேற்றப்படுமாக இருந்தால் உள்ளூராட்சி நிறுவனங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமையும்.
தற்போது மக்கள் தமது தேர்தல் தொகுதிகளில் தேசிய அளவிலான பிரச்சினைகள் பற்றியே பேசுகின்றனர். தற்பொழுது இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் தமிழீழ விடுதலை அமைப்பு (ரெலோ) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகளுக்கே பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் நினைக்கின்றேன்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எவ்.) மட்டும் வெளியேறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்கின்ற கொள்கைகளை தமிழ்மக்கள் தமது மதிநுட்பமான தெரிவின்படி அங்கீகரிப்பார்கள் என்பதையிட்டு நான் போதியளவான நம்பிக்கையைக் கொண்டுள்ளேன்.
அத்துடன், தேசிய ரீதியில்?
+என்ன நிகழப்போகின்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது. தெற்கில் முக்கியமாக மூன்று போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். ஜனாதிபதியினுடைய கட்சியாகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ளுடுகுP), பிரதம மந்திரியினுடைய ஐக்கிய தேசிய முன்னணி (UNF), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் செயற்படுகின்ற ஸ்ரீ லங்கா பொதுசன முன்னணி என்பனவே அவை. எத்தகைய அளவில் போக்கு உள்ளதென்பனை ஒருவராலும் உய்த்துணர முடியாதுள்ளது. அது எவ்வாறு அமையப் போகின்றதென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான அடுத்தடுத்த தலைமை பற்றிய ஏதாவது சிந்தனைகள் உங்களிடம் உண்டா?
உண்மையில் அது பற்றி எதனையும் நான் திட்டமிடவில்லை. எத்தகைய ஒரு செயல்முறையிலோ அல்லது எவர் ஒருவரிலோ உறுதியான கண்ணோட்டத்தை நான் கொண்டிருக்கவில்லை. கால ஓட்டத்தில் அது முடிந்தளவு விரைவாக இடம்பெறக் கூடும் என்றே நான் எண்ணுகின்றேன். நாங்கள் தொடர்ந்து எமது பயணத்தில் செல்லும்போது என்ன நிகழும் என்று பார்ப்போம். அங்கே நான் எப்பொழுதுமே இருக்க முடியாது.
யாராவது ஒருவர் பொறுப்பேற்க வேண்டிய தேவை உள்ளது. அது இலகுவானதாக இல்லை. நாங்கள் அவதானமாக இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். நாங்கள் ஒவ்வொருவருக்கும் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது; அது இயலக் கூடியதுமல்ல.
நன்றி: த ஹிந்து
http://tnaseiithy.com/news/we-can-not-be-frustrated-and-the-opposition-leader-gave-the-hindu
Leave a Reply
You must be logged in to post a comment.