அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் உள்ளூராட்சித் தேர்தலும் 

அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையும் உள்ளூராட்சித் தேர்தலும் 

வின் மகாலிங்கம்

இலங்கைப் பிரச்சனையைத் தீர்க்க இருதரப்புப் பேச்சுவார்த்தை மட்டுமே இன்று எமக்கு  எஞ்சியுள்ள  ஒரேவழி. இந்த வழியில் ஏதாவது ஒரு தரப்பு வெல்லுமானால் பேச்சுவார்த்தை தோல்வி என்று பொருள். பேச்சுவார்த்தை வெல்ல வேண்டுமானால் அதில் இருதரப்பாரும் வெல்ல வேண்டும்.

அதனால் இருதரப்பாரும் தத்தமது தேவைகளையும் பிரச்சனைகளையும் மட்டும் பார்க்காமல் எதிர்த் தரப்பாரது தேவைகளையும்  பிரச்சனை களையும் சேர்த்துப் பார்க்க வேண்டியது அவசியம். புதிய அரசியலமைப்பு சிங்களத் தரப்பிடமும் தமிழர் தரப்பிடமும் சந்தைப் படுத்தக் கூடிய; அவர்களிடம் விற்கக்கூடிய ஒரு தயாரிப்பாக இருக்க வேண்டும். அதைத் தயாரிப்போர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அதுதான்.  இரு துருவங்களாக இருக்கும் இருதரப்பும் மையப் புள்ளியை நோக்கிப் பயணிக்காவிட்டால்  இரு தரப்பும் ஒருபுள்ளியில் சந்திக்க வாய்ப்பே இல்லை.30 வருடம் ஆயுதப் போரில் ஈடுபட்ட இரு தரப்பாருக்கும் நிறையவே சந்தேகங்களும் மனப்பயங்களும்    இருக்கின்றன. “தமிழர் மீண்டும் ஆயுதப்போராட்டம் தொடங்கு வார்களோ, நாட்டைப் பிரித்து விடுவார்களோ” என்ற பயம் சிங்களவர் மத்தியிலும் “எமக்கான அரசியற் சுதந்திரத்தைத் தராமல் மீண்டும் ஏமாற்றுவார்களோ அல்லது தந்துவிட்டு பின்னர் திருப்பி எடுத்து விடுவார்களோ” என்ற பயம் தமிழர்களிடத்திலும் இருக்கிறது. இருதரப்பினரதும் அந்த மனப்பயத்தைப் போக்கக் கூடியதாகத்தான் இந்த அரசமைப்பு ஆலோசனை வரையப்பட்டுள்ளது. அதற்கேற்ப சேர்க்கவேண்டிய பலவற்றைச் சேர்த்தாலும் ஏற்கெனவே அமுலில் இருக்கும் விடயங்களைப்  பறிப்பது மிகச் சிரமம்தான்.

இந்தப் புதிய அரசமைப்பானது , அரசியலமைப்புச் சபையில் 2/3 பங்கு வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சர்வசன வாக்கெடுப்பில் 50 வீதத்திற்கு மேலான வாக்குகளால் வெற்றி பெற வேண்டும்.  அதனால் இதில்  அவசியமான விடயங்களை தவறாமல் உள்ளடக்கியுள்ள அதேவேளை இருதரப்பு மக்களிடமும் அதை விற்கவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால் சில விட்டுக்கொடுப்புகள் செய்யப்பட்டு பிரச்சனைக்குரிய சில சொற்களைத் தவிர்த்தும் சில சொற்களை சேர்த்தும் இருக்கிறார்கள். அவ்வளவு நுட்பமாக அதைச் செய்ய வேண்டியதால்த் தான் இவ்வளவு இழுபறியும் காலதாமதமும் ஏற்படுகிறது. இவற்றை மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டு, இந்த அரசமைப்பு ஆலோசனையில் உள்ள விடயங்களைப் பார்ப்போம்.

புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை 

அறிக்கையின் முகவுரையில் “இலங்கை மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள சுதந்திரமும் இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஏக்கிய ராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்னும் குடியரசாகும்.”  என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த வரியிலேயே ” இங்கு ஏக்கிய ராஜ்ஜிய / ஒருமித்த நாடு என்பது பிரிக்கப்படாத, பிரிக்கப் பட முடியாத நாடு என்பதே பொருளாகும்.” என்று அதனது கருத்தையும் கொடுத்துள்ளார்கள். அறிக்கையிலேயே கொடுத்துள்ள கருத்தை விட வேறு கருத்தை நாமாகக் கற்பிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது?.

ஒருநாட்டின் அரசியல் நிர்வாகத்தை நடத்துவதற்கு சட்டங்கள் ஆக்கப்பட்டு அவற்றை அமுல்படுத்தி  நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். சட்டத்தை ஆக்கவும் அதை அமுல்ப்படுத்தவும் ஆன அதிகாரம் நாட்டின் ஒரு மையத்தில் இருந்தால் அது ஒற்றை ஆட்சி. அது ஒன்றிற்கு மேற்பட்ட மையங்களுக்கு  பகிரப்பட்டால் அது சமஷ்ட்டி அல்லது கூட்டாட்சி முகவுரையில் “மத்திய மற்றும் மாகாணங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள” என்று கூறும்போதே அங்கே ஒற்றை ஆட்சித் தன்மை போய் சமஷ்டித் தத்துவம் வந்துவிட்டது. அறிக்கையின் தொடக்கத்திலேயே மாகாணங்களுக்கு அதிகூடிய அதிகார பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அறிக்கையின் 2ம் பக்கத்தில் ” Unitary State, ஒற்றை ஆட்சி இலங்கைக்குப் பொருந்தாது” என்று சொல்லப்பட்டுள்ளது.  ஆனால் சமஷ்டி ஆட்சி பொருந்தாது என்று எங்கும் சொல்லப்படவில்லை.

இந்த அரசமைப்பின்படி மத்திய அரசு, மாகாண அரசு, உள்ளூராட்சி நிர்வாகம் என்று மூன்று நிலை அரச அங்கங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. மத்திய அரசிற்கும் மாகாண அரசிற்கும் என விடப்பட்டுள்ள விடயங்களின் நிரல்கள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு விடயம் எந்த நிரலிற்குள்ளும் இல்லாவிட்டால் அது மாகாண நிரலிற்குள் தான் சேர்க்கப்பட வேண்டும் என்றும்  சொல்லப்பட்டுள்ளது. தத்தமது நிரல்களில் உள்ள விடயங்களிற்குரிய மூலச்சட்டங்களையும் அவற்றை அமுலாக்குவதற்கான நியதிச்  சட்டங்களையும் ஆக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கும் மாகாண அரசுகளுக்கும் இருக்கும். அவற்றை அமுல்படுத்தும் பொறுப்பு மூன்று நிலை அரச நிறுவனங்களுக்கும் இருக்கும். அதற்காக இப்போதுள்ள பிரதேச சபைகளுக்குக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டு மின்சாரம் வழங்கல், நீர் விநியோகம் செய்தல், சமூக சேவைகள், மற்றும் முன்பள்ளிகளின் நிர்வாகம் ஆகிய பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். இந்தப் பிரதேச சபைகள் மாகாண ஆட்சியின் கீழ்த்தான் வரும்.

மத்திய அரசின் கீழ் தேசிய இறைமை, ஆள்புலஎல்லை, தேசிய பாதுகாப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு,  வெளிவிவகாரம், தேசிய நாணயம், புகையிரத சேவை, தேசிய ஆயுதப்படைகள், தேசிய பொலிஷ், தேசிய வனப்பகுதி, நீர்ப்பாசன சேவை, புதைபொருளாராச்சி, தேசியப்பூங்காக்கள் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாகாண அரசின் கீழ் கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், போக்குவரத்து, பொருளாதார அபிவிருத்தி, உற்பத்தித் தொழிற்சாலைகள், மாகாண அரச காணி நிர்வாகம், (மத்திய அரசின் நிர்வாகத்தில் வரும் விடயங்கள் தவிர்ந்த) அனைத்துச் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்தல், பிரதேச சபைகளின் நிர்வாகம்,  போன்ற விடயங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மாகாண பொலிஸ் , மாகாண பகிரங்க (பொது) சேவை என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. பகிரப்பட்ட மாகாண அதிகார நடைமுறைப்படுத்தலில் தேசியக் கொள்கை உருவாக்கம் குறுக்கிடக்கூடாது. யேர்மனியின் 72ம் உறுப்புரையில் சொல்லப்பட்டதுபோல் நடைமுறைப் படுத்த வேண்டும். என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த யாப்பின் சிறப்பம்சங்களாக அதிகூடிய ஜனநாயகத் தன்மையும் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாப்பும்  உள்ளடக்கப்பட்டுள்ளன

ஜனநாயகத் தன்மை

ஊழல்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருப்பது, அரச நிர்வாகத்தில் அரசியல் வாதிகளின் செல்வாக்கும், தலையீடும் தான். அது இந்தப் புதிய அரசமைப்பில் முற்றாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகத்தைக் கையாளும் அதியுச்ச நிறுவனமாக “அரசியல் அமைப்புப் பேரவை” ஒன்று உருவாக்கப்படும். இதில் மூன்று பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலில் ஈடுபடாத அதியுயர் கல்வி பதவி நேர்மை தராதரங்களையுடைய சுயாதீனமான 7 வெளிவாரி உறுப்பினரும் இடம்பெறுவர். நாட்டின் அதியுயர் பதவிகளை வகிப்போரையும், திணைக்களத் தலைவர்களையும், நாட்டின் அந்தந்தத் திணைக்கள நிர்வாகங்களை நடத்துவதற்காக  நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்குழுக்களையும், இந்த அரசியல் அமைப்புப் பேரவைதான் சுயாதீனமாகப் பரிந்துரை செய்யும். அவர்களையே ஜனாதிபதி நியமிப்பார். அவர்கள் அரசமைப்பு பேரவையால்த்தான் நிர்வகிக்கப் படுவார்கள்.      அரசியல்வாதிகளின் தலையீடு இருக்காது.

அரசமைப்புப்பேரவையால் நியமிக்கப்படும்

  1. நீதி ஆணைக்குழு 2. நிதி ஆணைக்குழு 3. காணி ஆணைக்குழு 4. தேர்தல் ஆணைக்குழு 5. பொலிஸ் ஆணைக்குழு 6. பகிரங்க சேவை ஆணைக்குழு ஆகிய சுயாதீனமான 6 ஆணைக் குழுக்கள் தான் அந்தந்தத் திணைக்களங்களின்நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் கையாள்வார்கள். மாகாண அரசின் நிர்வாகத்திலும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் மாகாண பகிரங்கசேவை (பொது சேவை) ஆணைக்குழுவும் இயங்கும். இந்தச் சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களாக அரசதரப்பு மற்றும் எதிர்த் தரப்பு   ஆகிய இருதரப்பாரின் பரிந்துரையோடு அரசியலில் ஈடுபடாத சுயாதீனமான கௌரவமான உயர் கல்வித் தகைமையுள்ளவர்கள்தான் அரசமைப்புப் பேரவையால் நியமிக்கப்படுவார்கள்.

மத்தி மற்றும் மாகாண அரசுகள் ஆக்கும் சட்டங்களின் செல்லுபடித்தன்மை , அவற்றிற்கிடையே எழக்கூடிய நிர்வாகப் பிணக்குகள், மற்றும் அரசியலமைப்பு சம்பந்தமாக எழக்கூடிய அனைத்துச்  சட்டப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காக, நீதி வழங்குவதற்காக     சுயாதீனமான “அரசியலமைப்பு நீதிமன்றம்” அமைக்கப்படும்.  அதனுடைய தீர்ப்பே இறுதியானதாக இருக்கும்.  உருவாக்கப்படும் அரசியல் அமைப்புப் பேரவையின்    நடவடிக்கைகள் பற்றியும் இதில் விசாரிக்கலாம். அரசியலமைப்பு விடயங்கள் தவிர்ந்த ஏனைய குற்றவியல் விடயங்கள் அனைத்தையும் சுயாதீனமான நீதித்துறை கையாளும். நீதிமன்றங்கள் அரசியலமைப்புக்கும் சட்டத்திற்கும் மாத்திரமே கட்டுப்பட்டவை. தலையிடும் அதிகாரம் எந்தவொரு அரசியற் சபைக்கும் கிடையாது. இவ்வாறாக இந்த அரசமைப்பின் மூலம் அரசியல் வாதிகளின் தலையீடில்லாத  நாட்டின் ஜனநாயக நிர்வாகத் தன்மை பெரிதும் பேணப்படும்..

அடிப்படை உரிமைகளை நிலைநாட்டுதல்

அடிப்படை மனித உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையால் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை மனித உரிமைகளை முழுமையாக நடைமுறைப் படுத்தினாலே ஒரு நாட்டின்     முக்கால் பகுதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அவற்றை அமுல்படுத்துவதில்தான் ஒரு நாட்டு ஆட்சியின் தராதரம், சிறப்பு கணிக்கப்படுகின்றது. முன்னேறிய நாகரீகமான ஜனநாயக நாடுகள் பல அவற்றைத் தமது நாட்டில் அமுல்படுத்துகிறார்கள். இந்த சர்வதேச அடிப்படை மனித உரிமை பட்டியலில் கொடுக்கப்பட்டவற்றை ஏறக்குறைய முழுமையாக புதிய  அரசமைப்பில் சேர்த்துள்ளார்கள். இவற்றை அங்கு யாருமே எதிர்க்காதபடியால் அவற்றைச் சேர்ப்பதில் சிரமம் இருக்கவில்லை. ஆனால் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு     அதுதான் மிகப்பெரிய பாதுகாப்பாக  அமைந்துவிட்டது.

  1. குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அளிக்காமல் இருக்கும் உரிமை
  2. யுத்த கால நிலைமை உட்பட வலுக்கட்டாயமாக காணாமற் போதலைத் தடுக்கும் உரிமை.
  3. சித்திர வதைக்கு உட்படாமல் இருக்கும் உரிமை.
  4. எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படாமல் இருக்கும் உரிமை.
  1. சுயமாகச் சிந்திக்க, (வன்முறையையோ பிரிவினையையோ தூண்டாமல்) சுயமாகப் பேச, எழுத, வெளியீடு செய்ய, மற்றும்விரும்பிய மதத்தைப் பின்பற்ற , தகவல்களை அறிய இருக்கும் உரிமை.
  2. விரும்பும் மொழியைப் பேச, தனியாகவோ அல்லது கூட்டாகவோ தனது மொழி கலாச்சாரம் பண்பாட்டை பேணி வளர்க்கும் உரிமை.
  1. நீதியான நிர்வாகத்தைப் பெறவும், தேவையாயின் சட்ட ஆலோசனைக்கான நிதி உதவியைப் பெறும் உரிமை,
  2. அவசர யுத்த காலத்திலும் கூட தனிமனிதனுக்கு கிடைக்கவேண்டிய பாதுகாப்பு உரிமை,
  1. அரச நடவடிக்கையால் பாதிக்கப்பட்டால் அதற்கான பரிகார நட்டஈடு பெறும் உரிமை,
  2. தாய் மொழி மூலம் இலவசக் கல்விக்கான உரிமை.
  3. சொந்தமாக காணி சொத்துக்களை வைத்திருக்கும் உரிமை.

என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.

அத்தோடு போரின் போது அரசினால் கையகப் படுத்திய காணிகளை உரிமையாளரிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும்; வடமாகாணத்திற்கு போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வு இழப்பீட்டுக்கான மேலதிக நாடாளுமன்ற ஆசனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படவேண்டுமென்றும்  சொல்லப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் ஆளுநர் பதவிகள்

ஜனாதிபதி பாராளுமன்றத்தாலும் ஆளுநர் முதலமைச்சரின் சிபாரிசில் ஜனாதிபதியாலும் நியமிக்கப் படுவர். அவர்கள் ஒரு சம்பிரதாய வகையிலான அரச தலைவர்களாகவே பாணியாற்றுவர். அவசர கால நிலைமையில் அவர்களுக்கான விசேட அதிகாரங்களைப்    பயன்படுத்தலாம். அவர்கள் நியமனத்திற்கு முன் குறைந்தது 2 வருடங்களுக்கு மேல்   அரசியலில் இருந்து விலகியிருந்திருக்க வேண்டும். ஆளுநர் கையொப்பமிடாமல் விட்டாலும் 2 வாரங்களின் பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவே கொள்ளப்படும். மாகாண சட்டவாக்கங்களை அவரால் தடுக்க முடியாது. அவசியமானால் அரசமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பலாம்.

சிறுபான்மையினரின் பாதுகாப்பு

வடக்கு-கிழக்கில் 16 இலட்ஷம் தமிழரும் வடகிழக்குக்கு வெளியே 15 இலட்ஷம் தமிழரும் வாழ்கிறார்கள். அதனால் வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழரின் பாதுகாப்பும் உரிமைகளும் கூட மிகவும்  முக்கியமானவைதான். இந்த அரசமைப்பு ஆலோசனையில் எந்தவொரு பிரதேசப் பிரிவிலும் சிறுபான்மையினராக வாழும் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் உரிமைகளும் பாதுகாப்பும் மிகத் தெளிவாக வரையறுக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சிங்களவருக்குள்ள உரிமையும் பாதுகாப்பும் கொழும்பிலும் கண்டியிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள தமிழ் முஸ்லீம் மக்களுக்கும் இருக்கும்.

வடக்கு கிழக்கு இணைப்பு

இது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனையாக உள்ளதே தவிர அரசமைப்பை உருவாக்குவோரின் பிரச்சனையாக இல்லை. (ஏதாவது இரு மாகாணங்கள்) வடக்கும் கிழக்கும் விரும்பினால் இணையலாம் என்பதுதான் இறுதிவடிவில் இடம்பெறும். இப்போது கிழக்கில் தமிழர் 39 வீதம்தான். 61 வீதமாக உள்ள முஸ்லீம் சிங்கள மக்கள் இப்போது இணைப்பை விரும்பாத காரணத்தால் அதை வலியுறுத்த முடியாமல் இருக்கின்றது. இருவரில் (இரு மாகாணங்களில்) ஒருவர் விரும்பாத போது எப்படி இருவரையும் இணைக்கலாம். ஆனால் புதிய அரசமைப்பால் இனமுறுகல் இல்லாமல் ஒற்றுமையாய் வாழும்போது முஸ்லீம் மக்கள் விரும்பும் ஒரு முஸ்லீம் மாவட்டத்தை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை அவர்களுக்கு வழங்கினால் இணைப்புக்கு முஸ்லிம்கள் உடன்படுவார்கள். அவ்வாறு வடக்கு கிழக்கு இணைப்பு வருங்காலத்தில் நிட்சயம் சாத்தியமாகும்.

மேற்சபை

மத்திய அரசின் பெரும்பான்மை ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மாகாணங்களுக்கு வழங்கிய அதிகாரங்கள் குறைக்கப்படாமலும் மீளப்பெறப்படாமலும் இருப்பதை வலுப்படுத்தவும் ஒரு மேற்சபை உருவாக்கப் படுகிறது. மாகாணங்களுக்கு அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்று 7 சிங்கள மாகாணங்கள்தான் இப்போது அதிகம் வலியுறுத்தியுள்ளன. அந்த நிலைமைதான் எப்போதும் தொடரும். மேற்சபையில் 9 மாகாணங்களில் இருந்து (5 பேர் வீதம்) 45 உறுப்பினரும் மத்திய அரசிலிருந்து 10 பேருமாக 55 உறுப்பினர் இருப்பர். அப்படி மேற்சபையானது மாகாணங்களின் ஆதிக்கத்தில் இருக்கப்போவதால் மாகாணங்களின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதோ   பறிக்கப்படுவதோ சாத்தியமில்லை. அத்துடன் தனியொரு மாகாணத்திற்கான வீட்டோ அதிகாரமும் பரிசீலனையில் உள்ளது. அத்துடன் மத்திய அரசின் நீதியற்ற திடீர் திருத்தங்களையும் மாற்றங்களையும் மேற்சபை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தும்.

மொழி உரிமை

சிங்களம், தமிழ் இரண்டும் அரச கரும மொழிகளாகும். ஆங்கிலம் இணைப்பு மொழியாகும்.

தேசிய கீதம் இருமொழியிலும் பாடப்படும். மத்திய அரசினதும்.மாகாண அரசினதும் சட்டங்கள் மும்மொழிகளிலும் இருக்க வேண்டும். அவை சமமான அதிகாரமுள்ளவையாய் இருக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசநிர்வாக மற்றும் நீதிநிர்வாக மொழியாகவும் பதிவேடுகள் பேணப்படுகின்ற மொழியாகவும் தமிழ் மொழி இருக்கும். ஒரு இலங்கைத் தமிழ்ப் பிரசை இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளிடம் தமிழில் தொடர்புகொண்டு தமிழில் பதில் பெறலாம்.

மத உரிமை

“எல்லா மதங்களையும் அவற்றின் நம்பிக்கைகளையும் மரியாதையுடனும் மாண்புடனும் பாரபட்சமின்றியும் நடத்துவதுடன்; பவுத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்கி அதைப் பாதுகாத்து பேணி வளர்ப்பதும் அரசின் கடமையாகும்”. என்று சொல்லப்பட்டுள்ளது.

பவுத்த மதத்திற்கு முதன்மைத் தானம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான். அது அனைத்து மதங்களையும் பாரபட்சமின்றி நடத்த வேண்டும் என்ற கருத்திற்கு முரணானது. இருப்பினும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாகக் கொடுத்துள்ள ஒன்றை பறிப்பது பெரும் பிரச்சனை என்பதோடு இந்த ஒரு காரணத்திற்காக இவ்வளவு சாதகமான விடயங்களைக் கொண்டுவரும் முழு அரசியலமைப்பையுமே நிராகரிப்பது விவேகமான செயல் அல்ல. சிங்களத் தரப்பிடமும் பவுத்தத் தரப்பிடமும் இதை விற்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அதனைக் கருதித்தான், 2 வருட இழுபறியின் பின் தமிழர் தலைமை இதற்கு  விட்டுக்கொடுப்பதை பரிசீலனை செய்யச் சம்மதித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல்

இப்போது இருக்கின்ற தேசிய அரசு தொடரும்வரை நாடாளுமன்றத்தில் இந்தப் புதிய அரசமைப்பிற்கு 2/3 பெரும்பான்மை பெறுவதில் சிரமம் இருக்காது. நல்லாட்சி அரச தரப்பினர், ரணில், மைத்திரி, சந்திரிக்கா, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பு ஆகியோர் மக்களிடத்தில் இறங்கி உண்மையை விளக்கிப் பிரச்சாரம் செய்தால் மக்களும் அதை அங்கீகரிப்பார்கள். ஆனால் தமிழர் தலைமை தமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக மிகப் பலமாக, கடினமாகப்  போரிடவேண்டி இருந்ததால் கயிறிழுப்பில் காலம் இழுத்தடிக்கப்பட்டு விட்டது.அதனால் புதிய அரசமைப்பை கொண்டுவந்தபின் தேர்தல்களை நடத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இனியும் உள்ளூராட்சித் தேர்தல்களை தள்ளிப்போட முடியாதென்பதால் அந்தத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இன்றய சூழலில் இந்தத் தேர்தல் வெறும் உள்ளூராட்சித் தேர்தலாக அல்லாமல் புதிய அரசமைப்பிற்கான இடைக்காலக் கருத்துக் கணிப்பாகவும் இருக்கப் போகிறது.  ஒன்றுசேர்ந்து அரசமைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம். அதனால் தேசிய அரசு உடைந்துவிடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சுதந்திரக் கட்சியை விட கூட்டுஎதிரணி பலமடைந்து மைத்திரி பலவீனப்பட்டாலும் அரசு பலமிழந்துவிடும். அப்படியேதும் நடந்துவிடடால் புதிய அரசியலமைப்பும் தடைப்பட்டுவிடும். அதனால் சிங்களவருக்கு அப்படியேதும் பெரிய இழப்பு ஏற்பட்டாது. தமிழர் தரப்புத்தான் மீண்டும் மீளமுடியாத பாதாளத்தில் தள்ளப்படும்.

ஆனால் சிங்களத் தரப்பின் எதிரணியும் தமிழர் தரப்பின் எதிரணியும் மிகப் பலவீனமாக இருப்பது ஒரு பிரகாசமான நம்பிக்கையைத் தருகிறது. நம்பிக்கொண்டு இருந்தால் போதாது. மிகக் கடினமாக உழைக்க வேண்டும். தற்செயலாக இந்தப் புதிய அரசமைப்பு   தோல்வியுற்றால் யார் யாரெல்லாம் தோற்கப்போகின்றார்கள், அடுத்து  இருக்கக்கூடிய தெரிவு என்ன, அடுத்து நடக்கக் கூடிய நிகழ்வுகள் என்ன? என்பவையெல்லாம் இருதரப்பாரினதும் கவனத்தில் இருக்கத்தான் செய்கின்றன. தோல்வி தமிழருக்கு மட்டுமன்றி நல்லாட்சி அரசிற்கு, முழு இலங்கைக்கு, இன்றய நல்லாட்சி அரசை உருவாக்கி கண்காணித்து வரும் சர்வதேசத்திற்கு என்று பலதரப்புக்குமான தோல்வியாகும். இந்த விடயத்தில் தமிழர் தனியாக இல்லை. அதனால் எல்லாம் நன்றாகவே, சரியாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வதே இன்று நமக்குள்ள பெரும் பொறுப்பும் கடமையுமாகும்.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply