தமிழர்களுக்கு உச்ச அதிகாரம் வழங்கி நாட்டைத் துண்டாடச் சதி!
டிசெம்பர் 26, 2017
தமிழர்களுக்கு அதியுச்ச அதிகாரத்தை வழங்கி நாட்டைப் பிளவு படுத்தும் சதித்திட்டத்தை இந்த அரசு முன்னெடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டினார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவரையும் தம்முடன் கைகோர்க்குமாறும் அவர் அறைகூவல் விடுத்தார். இந்த அரசை வீழ்த்தும் போராட்டத்துக்குத் தலைமை தாங்க தாம் தயார் எனவும் முழக்கமிட்டார்.
சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி யின் மக்கள் சந்திப்பு கோமாகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை மூன்று ஆண்டுகளில் அரசு நாசமாக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு நிலங்களை விற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எமது வளங்களைத் தாரை வார்த்தும் வரும் பணத்திலேயே அரசு தனது செலவுகளைப் பார்த்துக்கொள்கின்றது. நாம் மோசடிகளைச் செய்தோம், களவுகளை செய்தோம், மக்களின் சொத்துக்களைச் சூரையாடினோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நபர்கள் எம் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் வெளிப்படுத்த முடியாது தடுமாறி வருகின்றனர். மாறாக இவர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து வருகின்றனர்.
புதிய அரசமைப்பை உருவாக்கி நாட்டைத் துண்டாடும் சதித் திட்டமும் முன்னெடுக்கபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, அவர்களுக்கு அதியுச்ச அதிகாரங்கள் என்று அனைத்தையும் வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட வேண்டுமா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்கவேண்டும். இந்த நாடு பிளவுபடுவதை விரும்பாத சகலரும் தேர்தலில் எம்முடன் கைகோருங்கள்.
சிறிலங்கா பொது மக்கள் முன்னணி மக்களின் ஆதரவை பெற்று வருகின்ற நிலையில் எமது மக்கள் எதனை விரும்புகின்றனரோ அதையே நாமும் செய்ய வேண்டும். மக்கள் விரும்பாத எதையும் நாம் முன்னெடுக்கத் தயாராக இல்லை. மக்களுக்காகத் தலைமை தாங்க நாம் தயாராகவே உள்ளோம். இம்முறை தேர்தலில் மக்கள் ஆதரவை பெற்று எமது பலத்தினை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருந்தே உறுதிப்படுத்துவோம் என்றார்.
தமிழர்களுக்கு உச்ச அதிகாரம் வழங்கி நாட்டைத் துண்டாடச் சதி!
Leave a Reply
You must be logged in to post a comment.