தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம் – ஒரு மறுப்பு

தமிழர் தேசிய அடையாளத்தை முற்றாக ஒழிக்கும் இலங்கையில் புதிய அரசியல் சட்டம்

விவரங்கள்

எழுத்தாளர்: பெரியார் முழக்கம்

தாய்ப் பிரிவு: பெரியார் முழக்கம்

பிரிவு: பெரியார் முழக்கம் – நவம்பர் 2017

வெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2017

(1) எந்த ஒரு சட்டமும் நியாய மதிப்பீட்டிற்கு (Test to Fairness) உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பது உலக வரைமுறை. அதாவது நியாய மதிப்பீடுகள் காலப் போக்கில் மாற்றம் பெறலாம். அதற்கேற்ப சட்டத்தில் மாற்றம் செய்யும் நெகிழ்வுத் தன்மையைக் கொண்டதாக சட்டம் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் ஆப்ரிக்க இன மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்வதை சட்டம் அனுமதித்தது. அங்கீகரித்தது. அடிமைத்தனம் சட்டப் பூர்வமானதாக இருந்தது. ஆனால் காலப் போக்கில் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. அடிமைத் தனம் அநாகரிகமானது என்பதை மக்கள் உணர்ந் தனர். அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதை புரிந்துக் கொண்டனர். அதற்கேற்ப அமெரிக்க சட்டத்தி லும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அடிமைத் தனத்தை சட்ட விரோதமாகவும் சமத்துவத்தை வலியுறுத்தியும் பல சட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதுதான் நியாய மதிப்பீடு என்று வழங்கப்படுகிறது.

ஆக இந்த நெகிழ்வுத்தன்மை எந்தவொரு சட்டத்திலேனும் மறுக்கப்படுமானால் அது உலக சட்ட வரையறைகளுக்கே விரோதமானதாகும்.

இந்த அடிப்படையில் நோக்கினால் இலங்கையில் அரசியல் யாப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் அடிப்படையிலேயே உலக சட்ட வரையறைகளுக்கு முரணானதாக உள்ளன.

விளக்கம்: யாப்பு இன்னும் இயற்றப்படவில்லை. வெளிவந்துள்ளது இடைக்கால அறிக்கை அரசியல் யாப்பு எழுதுவதற்கான யோசனைகள், வியந்துரைப்புக்கள் மட்டுமே. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் வெளிவந்துள்ள இடைக்கா அறிக்கை வரைவு யாப்பு என நினைக்கிறார்கள். அந்தக் கோணத்தில் விமர்சனம் செய்கிறார்கள்.

(2) எந்தவொரு அரசியல் யாப்பிற்கும் கொடுக்கப்படும் முன்னுரை (Preamble) அந்த அரசியல் யாப்பின் நோக்கத்தை விளக்குவதாகவும், அந்த நாட்டின் அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்துவதாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் அரசியல் யாப்பின் முன்னுரை இந்தியாவை ஒரு சமய சார்பற்ற நாடாகவும், இந்திய மக்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியையும், எண்ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு ஆகியவற்றில் கருத்துரிமையையும், சமத்துவமான நிலையையும் வாய்ப்புகளையும் தனி நபர் மாண்பையும் உறுதி செய்வதாகவும் சொல்கிறது.

ஆனால் இலங்கையின் அரசியல் யாப்பின் இந்த முன் மொழிவு மீண்டும் மீண்டும் ஒரே ஒரு கருத்தையே பல விதங்களில் வலியுறுத்துகிறது. அதாவது இலங்கை ஓர் “ஒருமித்த தேசம்” என்பதுதான் அது.

அதிலும் குறிப்பாக ஆங்கில சொல்லான Unitary என்பதன் பொருள் இன்று மாறி வடக்கு அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் பிரிட்டனிடமிருந்து பிரிந்து போனதைச் சுட்டிக் காட்டி அதனால் Unitary என்ற சொல் இலங்கைக்குப் பொருந்தாது என்று தெளிவாகக் கூறியுள்ளனர். அதோடு அதற்கு மாற்றாக சிங்களத்தில் ‘அய்க்கிய ராஜ்ய’ என்ற சொற்றொடரை முன் மொழிந்து அதன் தமிழ் மொழிப்பெயர்ப்பாக ‘ஒருமித்த தேசம்’ என்ற சொற்றொடரையும் வழங்கியுள்ளனர். இந்த ‘ஒருமித்த தேசம்’ என்றச் சொற்றொடர் பல இடங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகளவில் பயன்படுத்தப்படும் சொல்லான Unitary என்பதை நீக்கிவிட்டு அதன் இடத்தில் சிங்கள சொல்லை வைப்பது என்பதே உலக அளவிலான விளக்கங்கள் இதற்கு பொருந்தாது என்பதையும் அவற்றைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய விளக்கங்கள் கொடுக்க இயலாது என்பதையும் தெளிவாக வலியுறுத்துவதாக உள்ளது. ஆக இலங்கை எக்காலத்திலும் ஒரே நாடாகதான் இருக்க வேண்டும் என்பதை அரசியல் சட்ட ரீதியாக வரையறுக் கின்றனர்.

விளக்கம்: இந்த இடைக்கால அறிக்கையின் முன்மொழிவுகள் யோசனைகள்  இலங்கை அரசின் தன்மையை ஒற்றையாட்சி (இப்போதுள்ளது போல) எனச் சொல்லவில்லை. அதே நேரம் இணைப்பாட்சி என்றும் குறிப்பிடவில்லை. அதற்கு ஈடாக ஒருமித்த நாடு எனக் குறிப்பிடப்பட்டு அதன் பொருளும் கூறப்பட்டுள்ளது. 13ஏ சட்ட திருத்தம் முக்கால்வாசி இந்திய அரசியல் யாப்பை அப்படியே பிரதிபண்ணியதாகும். எடுத்துக்காட்டு சட்டம் ஒழுங்கு, ஆளுநரின் அதிகாரம்  போன்றவை.

(3) அதிலும் அரசியல் யாப்பின் முன்னுரையிலேயே இலங்கையை ‘ஒருமித்த தேசம்’ என்று திட்டவட்டமாக வலியுறுத்துவதும், அதற்கு மாறாக பிரிவினை குறித்த எந்த ஒரு கருத்தையும் செயலையும் சட்ட விரோதமாக்குவதும் மிகவும் விநோதமானதாகும்.

பதில்: சிங்கள மக்கள் இணைப்பாட்சி என்றால் அது தனிநாடு என நினைக்கிறார்கள்.  அல்லது தனி நாட்டுக்கு இட்டுச் செல்லும் என நினைக்கிறார்கள். அந்தப் பயத்தைப் போக்கவே ஒருமித்த நாடு, பிரிக்கப் படாத பிரிக்க  முடியாத நாடு என வரையறை செய்யப்பட்டுள்ளது.

(4) பிரிவினைக்கு எதிரான சட்டங்கள் பல நாடுகளிலும் இருக்கதான் செய்கின்றன. ஆனால் அரசியல் யாப்பின் முன்னுரையிலேயே வலியுறுத்து வது என்பது புதுமையானது. இப்படி அதனை மீண்டும் மீண்டும் முன்னுரையில் பலவிதமாக வலியுறுத்துவது என்பது இந்த அரசியல் யாப்பு மாற்றத்திற்கான நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது.

விளக்கம்: மேலே கூறியவாறு பெரும்பான்மை சிங்களவர்களது பயத்தைப் போக்கவே இது வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய யாப்பிலும் பிரிவினைக்கு எதிரான விதிகள் இருக்கின்றன.

(5) மேலும் இது உலக சட்ட வரையறைகளுக்கு விரோதமாகவும் உள்ளது. ஏனெனில் சட்டம் நியாய மதிப்பீட்டின் மாற்றத்துடன் இணைந்தது. ஆனால் அரசியல் யாப்பின் முன்னுரை திட்டவட்டமானது. அதில் ஒரு கருத்து வலியுறுத்தப்படுமானால் நாட்டின் அனைத்துச் சட்டங்களுக்கும் அதுவே அடிப்படை என்று வரையறுப்பதாகும். அப்படியாயின் அது நியாய மதிப்பீட்டிற்கு உட்படாததாகும். அந்த அடிப்படையில் அது உலக சட்ட வரையறைகளுக்கு விரோதமானதாக உள்ளது.

விளக்கம்: இலட்சியம் வேறு. நடைமுறை வேறு. இலங்கைத் தீவில் சிங்களவர் பெரும்பான்மை (74 விழுக்காடு). இதில் சிங்கள – பவுத்தர்கள் 70 விழுக்காடு. இலங்கைத் தமிழர்கள் 11 விழுக்காடு மட்டுமே. 47 இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய குடியரசு நாடுகள். குரான் என்ற மதநூல் அரசியல்யாப்பாக வைத்துள்ள நாடுகளும் உண்டு.

இரண்டாவதாக இலங்கையை ஒரு பவுத்த நாடாக மீண்டும் இந்த முன் மொழிவு உறுதி பட வரையறுக்கிறது. ஒரு நாடு மதம் சார்ந்ததாக தன்னை வரையறுக்குமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் அந்த மதத்தின் விதிகளுக்குக் கட்டுப் பட்டவர்கள் என்பது பொருள். அரேபிய நாடுகளில் ரமலான் மாதத்தில் பகலில் உணவகங்கள் மூடப் பட்டிருப்பது இந்த அடிப்படையில்தான். பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் அரசு மதத்தின் சட்டங்களை பின்பற்ற வேண்டியதும் சட்ட விதிகளை கடைப்பிடித்து காப்பாற்ற வேண்டியதும் கடமையாகும்.

பரித்தானியாவில் கூட இங்கிலாந்து தேவாலயம்தான் அரச மதம். அந்த மதத்தைச் சார்ந்த ஒருவர்தான் பிரதமராக வரமுடியும். சிங்களவர்கள் 2,000 ஆண்டுகளாக இலங்கை ஒரு பவுத்த நாடாக இருந்து வருகிறது. அத தொடர வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். இலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் கோரிக்கை.

மேலும் அரசு மதத்தைச் சேர்ந்தவரே அந்த நாட்டின் தலைவராக வர இயலும் என்பது எழுதப்படாத சட்ட விதியாகும். இவை இரண்டுமே அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமானவை. நல்லிணக்கத்தை வலியுறுத்துவதற்காக இச்சட்ட மாற்றம் முன்மொழியப் படவில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது. நல்லிணக்கமே நோக்கமாக இருந்திருப்பின், நாட்டின் மதத்தை பவுத்த மதமாக அது வலியுறுத்தியிருக்காது. ஒருவேளை அதை வலியுறுத்தி இருந்தாலும், பிற மதத்தைச் சேர்ந்தவர், அதாவது ஒரு தமிழ் கிறித்தவரோ, இந்துவோ, முஸ்லிமோ, மதமற்றவரோ அந்நாட்டின் தலைவராக வருவதற்கு தடையில்லை என்பது வெளிப்படையாக எழுதப் பட்டிருக்கும். அப்படி இல்லாத இந்த மாற்றம் என்பது ஏற்கெனவே இரண்டாந்தர குடிமக்களாக உள்ள பவுத்தர் அல்லாத தமிழ் மக்களின் நிலையை இன்னும் அழுத்தமாக உறுதி செய்வதாகவே உள்ளது.

விளக்கம்: இலட்சியம் வேறு. யதார்த்தம் வேறு. மதசார்பற்ற நாடு என்று இருப்பது நல்லதுதான். அதற்கான சூழ்நிலை இன்றில்லை. பிரித்தானியாவில் பிரதமர் புறட்டஸ்தான் மதத்தைச் சோந்துவராக இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். அதனை யாரும் மீறுவதில்லை.

(6) மூன்றாவதாக நில உரிமை. இந்த முன் மொழிவு நிலங்களை மறு பங்கீடு செய்யும் போது அந்த நிலம் உள்ள கிராமத்தை, மாவட்டத்தை, மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கப்படும் என்று சொல்கிறது. ஆனால் இது இராணுவம் அல்லாத காரணங்களுக்காக அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு மட்டுமே. இராணுவத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு எவ்வித வரையறையும் கிடையாது. இராணுவம் நினைத்தால் எந்த நிலத்தையும் கேள்வியின்றி கையகப்படுத்த முடியும். அதனை மறு பங்கீடு செய்வதை குறித்தும் இராணுவமே முடிவு செய்யும் என்று இந்த முன் மொழிவு சொல்கிறது. இன்று ஈழத்தின் பெரும் பகுதி நிலங்கள் இராணுவத்தால் ஆக்ரமிக்கப்பட்டதாகவே உள்ளன. ஒரு புறம் இராணுவம் அல்லாத சிவில் காரணங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களை பங்கீடு செய்வதில் நியாயமான முறை பின்பற்றப் படுவதுப் போன்ற தோற்றத்தை உருவாக்கும் இந்த முன் மொழிவு, இராணுவம் கையகப்படுத்தும் நிலங்கள் குறித்து நேர் எதிர் மறையான வரையறைகளை வகுத்திருப்பது என்பது, பின் வாசல் வழியாக தமிழரின் நிலங்களை பறிப்பதற்கான திட்டமாகவே உள்ளது.

ரெச காணி அனைத்தும் குடியரசுக்கு உரித்தாகும். அரச காணி உரிமை தேசிய நிரலிலும் மாகாண நிரலிலும் இருக்கும். காணிப்பங்கீடு அந்த நிலம் உள்ள கிராமத்தை, மாவட்டத்தை, மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கப்படும் என்று சொல்கிறது.  இது நியாயமான பங்கீட்டு முறை. பண்டா – செல்வநாயகம் உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டட உடன்பாடு.  இராணுவத்துக்கு காணி தேவைப்பட்டால் ஒருதலைப் பட்சமாக காணியை கையகப்படுத்த முடியாது. மாகணாசபையின் ஒப்புதல் வேண்டும்.  காணி பங்கீடு பற்றிய கொள்கை  தேசிய ஆணைக்குழுவிடும் உள்ளது. அதில் மகாணங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். காணி பற்றிய சில விடயங்கள் பற்றி தமிழர் தரப்பு அரசியல்யாப்பு பேரவையில் பேச இருக்கிறது.

நான்காவதாக தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்பது முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு இணைப்பை இனச் சிக்கலுக்கான தீர்வை நோக்கிய பயணத்தில் முன் நிபந்தனையாகவே தமிழர் தரப்பினர் பல ஆண்டுகளாக வைத்துள்ளனர். பல முறை அது குறித்து விவாதிக்கப்பட்ட போதும் இந்திய – இலங்கை ஒப்பந்ததத்தின் ஒரு கூறாக அது சேர்க்கப்பட்ட போதும் சிங்களர் தரப்பு அந்த இணைப்பிற்கு எதிராகவே இருந்து வந்துள்ளனர். இருந்து வருகின்றனர். தமிழர் பகுதிகள் இணைந்திருப்பது எந்த அளவு அவசியம் என்று தமிழர் தரப்பு நினைக்கிறதோ அதே அளவு தமிழர்களை பிரித்து வைப்பதை அவசியம் என்று சிங்களர் தரப்பும் நினைக்கிறது. இந்த இரண்டு மாகாணங்களை இணைத்து விட்டு எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவரும் சிங்கள மக்களை எதிர்கொள்ள முடியாது. அதுவே இந்த முன்மொழிவிலும் வெளிப்பட் டுள்ளது. இந்த இணைப்பை பற்றி முடிவெடுக்காமல் எந்த ஒரு அரசியல் தீர்வும் தமிழர்களுக்கான நியாயத்தைப் பெற்றுத் தந்துவிட முடியாது.

விளக்கம்: இது உண்மைக்கு புறப்பான கூற்று.  இந்திய – இலங்கை உடன்பாட்டின் கீழ் இயற்றப்பட்ட 13 ஏ சட்ட திருத்தம் வடக்கையும் கிழக்கையும் தற்காலிகமாக இணைத்தது. கிழக்கில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்திய பின்னரே நிரந்தர இணைப்பு நடைமுறைப்படுத்தப்படும். இப்போது 3 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 1)இப்போதுள்ள ஏற்பாடுகள் தொடர வேண்டும். 2) இணைப்பிற்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்தலாகாது. 3) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனியொரு மாகாணமாக புதிய அரசியல் அமைப்பு அங்கீகரிக்கும்.  யதார்த்தம் என்னவென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர் அல்ல. கிழக்கில் உள்ள மூன்று மாவட்டங்களில் திருகோணமலை (32 விழுக்காடு) அம்பாரை (17 விழுக்காடு) சிறுபான்மையராக இருக்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தமிழர்கள் பெரும்பான்மை (74 விழுக்காடு). முஸ்லிம்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், அறிவுப்பிழைப்பாளர்கள்  போன்றோர்கள் ஈழத்தமிழர் சிக்கலை அறிவுபூர்வமாக இல்லாம் உணர்வுபூர்வமாகவே அணுகுகிறார்கள். அங்குள்ள யதார்த்த நிலைமையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இந்த அரசியல் அமைப்பு யோசனைகள் கிட்டத்தட்ட இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒத்ததாக இருக்கும். எங்களுக்கு சிலு சிலுப்பை தேவையில்லை. பணியாரம்தான் தேவை. பூனை என்ன நிறமாக இருந்தாலும் எலி பிடித்தால் அது கெட்டிக்காரப் பூனைதான்.

இப்படி இந்த முன்மொழிவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான, தமிழர்கள் மீதான உரிமைப் பறிப்பை சட்டப் பூர்வமாக ஆக்குவதற்கான கூறுகளைக் கொண்டதாகவே உள்ளது.

ஆக இந்த சட்ட மாற்ற  முன் மொழிவு என்பது தமிழர் இழந்துள்ள உள்ள உரிமைகளை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தி தமிழர்களுக்கு எதிராக சட்டத்தை மேலும் இறுக்குவதாகவே உள்ளது.

(‘அறிவாயுதம்நடத்திய கருத்தரங்க துண்டறிக்கையிலிருந்து)

 

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply