சமயம் தோற்றமும் வளர்ச்சியும்
சும்மா இருப்பது எப்படி பேராற்றலாகும் இறைநிலையிலிருந்து தோண்றிய சக்திதான் தெய்வம் என்ற பெரியவர்கள் சாக்த சமயத்தை உருவாக்கினர்.
விண் தற்சுழற்சியின் போது சத்தத்துடன் சுழல்வதை உணர்ந்தவர்கள் இறைவனுக்கு சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து வைணவ சமயத்தை உருவாக்கினர்.
அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற பஞ்ச தன்மாத்திரைகளை உணர்ந்தவர்கள் இவை இயற்கையின் ஐந்து கரங்கள் என விநாயகனை படைத்து காணபத்தியம் என்ற சமயத்தை உருவாக்கினர்.
பஞ்ச தன்மாத்திரைகளோடு உயிரின் அலையான மனத்தையும் சேர்த்து இயற்கைக்கு ஆறு முகங்கள் என அறிந்தவர்கள் கெளமார சமயம் எனக் கூறி வழிபட்டனர்.
சமயம் (சமம்+இயம்) என்றால் எல்லோரும் சமம் என்ற எண்ணத்தோடு ஒத்தும், உதவியும் வாழ வேண்டும் என்பதாகும். ஆனால், இதை உணராத மக்கள் இறைநிலை உணர்ந்து வாழ்க்கை நெறிகளை தந்த மகான்களின் பெயரால் பல மதங்களை உருவாக்கினர்.
சமயம்
தனிமனிதர் பெறுகின்ற தெளிவையும் செயல்பாடுகளையுமே தொகுத்த விளைவாக சமுதாய தாக்கமாக வெளிப்படுகிறது. சமுதாய தாக்கமே தனிமனித வாழ்வை உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்கிறது என்பதை ‘புத்தர்’ தெளிவுபடக் கூறுகிறார். இக்கருத்தையே திருவள்ளுவரும்,
“வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு” (குறள் – 595) என்று கூறுகிறார்.
புத்தரின் இறுதிக்கால சூத்திரமான ‘தாமரை சூத்திரம்’ (சத்தர்ம புண்டரீகம்) மனித குலம் உய்ய தியாக வழியைப் போதிக்கிறது.
கிறித்துவத்தில் யோகம்
உலகில் மனிதன் தோன்றி குழுவாக வாழ்ந்து சூமுகமானபோது சமயங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய பல்வேறு சமயங்களில் முக்கியமானவையாக இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவை முப்பெரும் சமயங்களாகும். இவற்றுள் கிறிஸ்தவம் உலகெங்கும் பெரும்பாலாகப் பரவியுள்ளது. இதைத் தோற்றுவித்தவர் ‘இயேசு கிறிஸ்து’. இவர் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். ‘கிறிஸ்து’ என்ற சொல் கிரேக்கச் கொல்லிலருந்து பெறப்பட்டது. அதற்கு “புனிதப்படுத்தப்பட்டவர்” என்று பொருளாகும். (1 சாமுவேல் 2.10).
பத்துக் கட்டளைகள்
இறைத்தூதர் ‘மோசே’ மூலமாக இறைவன் அளித்த பத்துக் கட்டளைகள் கிறித்துவத்தில் முகிகியமாகக் கருதப்படுகின்றன.
1. என்னையன்றி உனக்கு வேறு கடவுள்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
2. மேலே வானத்திலும் கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு உருவத்தையாகிலும், விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவும் அதை வணங்கவும் வேண்டாம்.
3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணாகச் கொல்லாதிருப்பாயாக.
4. ஓய்வு நாளைப் பரிசுத்தருடைய அனுசரிப்பாயாக.
5. உன் தந்தையையும், தாயையும் மதித்துப் போற்றுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறருடைய வீட்டையும், மனைவியையும், பிறருக்குரிய யாதொன்றையும் விரும்பாதிருப்பாயாக.
இஸ்லாத்தில் யோகம்
‘இஸ்லாம்’ என்பது ஓர் அரபுச் சொல். அதன் பொருள் பணிதல், சரணடைதல், கீழ் படிதல் என்ற மூலக் கூறுகளை உள்ளடக்கியது. ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் நேர்ப் பொருள் ‘அமைதி’ என்பதாகும். ஒருவன் உடலையும் உள்ளத்தையும் அல்லாவிடம் பணிவாக ஒப்படைக்கும்போது அமைதியைப் பெறுகிறான் எனப் பொருள்படும். அல்லாவின் விதி முறைகளுக்கேற்ப பணிந்து செயல்படுபவர்கள் இசுலாமியர் என்பர். இசுலாம் சமயத்தின் தீர்க்க தரிசியாக முஸ்லீம்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் ‘முகமது நபி’ யாவார்.
இஸ்லாமிய மார்க்கம் இறைவனைத் தொழுகை செய்யும் முறையையே யோகம் என எடுத்து இயம்புகிறது. தொழுகையுல் அமரும்பொழுது, நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங்ககை விரல்கள் உட்பட இருபாதங்களின் விரல்களை பூமியின் மேல் நட்டு, இரு முழங்கால்கள் ஆக எட்டு உடல் உறுப்புகள், தரையில்பட தொழுகை நடத்த வேண்டும் என பணிக்கிறது. இந்நிலையை யோகாசனத்தில் ‘யோக முத்திரை’ என்றும் கூறுவர். தொழுகையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கான சிறந்த பயிற்சி ஆகும்.
குரானில் இறைவனின் கருணை கிடைக்க எளிய வழி துறவு வாழ்க்கையோடு தியான முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது. அப்பொழுதுதான் இறைவன் கருணை காட்டி அழைப்பதற்கேற்ற பக்குவ நிலையை மனிதன் அடைய முடியும் என்கிறது.
(நபியே, மனிதர்களை நோக்கி,) “நீர் கூறும் அல்லாஹ் ஒருவன்தான்.
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கிறன.)
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை; சந்ததியுமில்லை.)
தவிர, அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. “(அத்தியாயம் 112)”
இஸ்லாத்தில் இறை நிராகரிப்பு, இறைநிலைக்கு இணை வைத்தல், பல தெய்வகொள்கை போன்ற சிந்தனைகள், கோட்பாடுகள் ஆகியவற்றிற்குச் சிறிதும் இடமில்லை. இறைவன் எந்தப் பாவதிதையும் மன்னித்து விடுவான். ஆனால், இணை வைக்கும் பாவத்தை மட்டும் மன்னிக்க மாட்டான் என்பது இறைவனே செய்யும் அறிவிப்பாகும்.
ஐந்து கடமைகள்
இஸ்லாமியருக்கு ஐந்து முக்கியமான கடமைகள் இருக்கின்றன. அவை:
(1) ஈமான்
(2) தொழுகை
(3) நோன்பு
(4) ஜக்காத்
(5) ஹஜ்
என்பனவாகும். இவற்றை இஸ்லாமின் தூண்கள் என்று அழைக்கின்றனர்.
(1) ஈமான்:
இஸ்லாத்தில் மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை அவசியமாக வலியுறுத்தப்படுகிறது. மனிதன் இம்மையில் செய்த செயல்களுக்கு ஏற்றவாறு மறுமைக்கு ஏற்ற நீதியை இறைவன் தவறாது அளித்தே தீருவான் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். இந்தக் கருத்தின் அடிப்படையில் இஸ்லாத்தில் சொர்ககம், நரகம் என்ற கோட்பாடுகளும் அமைந்துள்ளன. இஸ்நெறியைப் பின்பற்றி ஒழுக வேண்டும். அதற்கு அயரா விழிப்புணர்வு என்ற நிலையை மனித உள்ளத்தில் நிலை நிறுத்த ஐந்து வேளை தொழுகை இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது.
(2) தொழுகை:
இறைவனை நினைவு கூர்தல், இறைவனுடைய மேன்மையை ஒப்புக்கொள்ளுதல், அவனைப் போற்றி புகழ்தல், தேவைகளைக் கேட்டு இறைஞ்சுதல், நல்வழி காட்டும்படி வேண்டுதல் ஆகியன தொழுகையில் இடம்பெறும், இறைவனைத் தவிர யாருக்கும் சிரம் தாழ்த்துதல் தேவையில்லை என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது. இறைவன் முன்பு அனைவரும் சமமானவர்களே என்ற உணர்வு சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதாக அமைந்துள்ளது.
ஓர் உண்மையான இஸ்லாமியர் தினமும் ஐந்து நேரம் தொழ வேண்டும், தொழும் போது ‘மக்கா’ இருக்கும் திசையை நோக்கித் தொழ வேண்டும்.
(3) நோன்பு:
ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்பதை ஆண், பெண் இருவருக்கும் இஸ்லாம் கடமை யாக்கியுள்ளது. சூரிய உதயம் முதல் மறையும் வரை உள்ள காலத்தில் இறையுணர்விலேயே இருந்துகொண்டு தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக்கூடிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க வேண்டும். இக்காலத்தில் எந்த வகையான உணவுகளையும், நீர்ப் பொருளையும் சிறு அளவு கூட உண்ணாமல் இருந்து நோன்பு இயற்ற வேண்டும். நோன்பு இயற்றுவதால் மனிதன் பழிச்செயல்களிலிருந்து விலகுகிறான். பிறருடைய துன்பங்களை உணரவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
ரம்ஜான் மாதம் முழுவதும் அதிகாலையிலிருந்து மாலை வரை ஆகாரம், தண்ணீரின்றி விரதம் இருப்பது முஸ்லீம்களின் முக்கிய கடமையாகும். நோயாளிளும், குழந்தைகளும், யாத்திரை செய்பவர்களும் இதற்கு விலக்கு.
(4) ஜக்காத்
அல்லாஹ், நோன்பாளிகள் மீது “ஜக்காத்’ என்ற ஏழை வரியைக் கடமையாக்கி உள்ளார். ஜக்காத் யார் மீது கடமை என்பதையும், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
நோன்பாளி, “லைலத்துல் கத்ர்’ என்ற நாளிலோ அல்லது அதற்கு முன்போ, தன்னிடம் உள்ள சொத்து, தங்கம், மற்ற வருவாய்களில் இரண்டரை விழுக்காட்டைக் கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியான ஏழைகளுக்கு கொடுத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோன்பாளிகள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போலவே, ஏழை எளியவர்களும் அந்தப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஜக்காத் குறித்து நபிகள் நாயகம் அருளியது:
“எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. வாய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனும் ஏழைகளுக்கு உதவியை கொடுக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்”.
“நெருப்பை தண்ணீர் அழித்து விடுவது போன்று, செய்கின்ற தர்மங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன; தர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடுகின்றது; துர்மரணத்தையும் தடுக்கின்றது”.
இன்னும் இது போன்ற பல சிறப்புகள், ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதில் இருக்கின்றன.
(5) ஹஜ்
புனித மெக்காவிலுள்ள “கஃபா” எனும் இறையில்லத்தைச் சந்தித்துவர மேற் கொள்ளும் புனிதப் பயணமே ஹஜ்ஜாகும். உடல் நலமும், பயணம் செய்ய ஏற்ற வகையில் வாய்ப்பும் வசதியும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் இந்தப் புனிதப் பயணம் கடமையாக்கப்பட்டுள்ளது. தமது வாழ்நாளில் ஒருமுறையேனம் இதனைச் செய்து முடிக்கக் கடமைப்பட்டுள்ளனர். திருத்தூதர் இப்றாஹிம் (அலை) அவர்கள் இறைவனுக்காகப் புரிந்த தியாகங்களை நினைவு கூர்வதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைக் கட்டளைகளை நிறைவேற்றிய வரலாற்றைப் புதுப்பிப்பதும் இந்தப் புனித ஹஜ்ஜின் முக்கிய கூறுகளாகும்.
இந்திய நாட்டில் ஆறு சமயமங்கள்:
பரிணாம வரிசையை அடிப்படையாகக் கொண்டு சமயம் ஆறு பிரிவுகளாக உருவாயின.
அவை:
1) சைவம்
2) சாக்தம்
3) வைணவம்
4) செயரம்
5) காணபத்தியம்
6) கெளமாரம் ஆகும்.
1. சைவ சமயம்:
இறைநிலை எவ்வாறு இருக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது தூயவெளியாக எல்லையில்லாததாக மெளனமாக இருக்கிறது என்று கண்டனர். அரூபமான இறைநிலையே அனைத்து தோற்றங்களின் உட்பொருளாக உள்ளது என்ற கருத்தில் எல்லோரிடத்தும் அன்பும் கருணையும் காட்டி யாருக்ம் துன்பம் செய்யாது வாழும் நெறியே சைவ சமயம் எனப்பட்டது.
இத்தகைய செய்வ உணர்வில் இருந்துகொண்டு தாவரத்தைத் தவிர்த்த எந்த உயிரினங்களையும் கொன்று உணவாகக்கொள்வாதில்லை என்ற உணர் நோக்கில், மரக்கறி உணவை மட்டும் உட்கொள்ளும் வழக்கம் வந்தபோது அதுவே சைவ உணவு என பெயர் பெற்றது.
2. சாக்த சமயம்:
கடவுள் மெளனமாக இருக்கிறார் என்றால் நம்மை எப்படிக் காப்பாற்றுவார்? எப்படிப் பேசுவார்? என்ற எண்ணம் ஒரு புதிராக இருந்தது. நேரிடையாகப் பரம்பொருளை விளக்குவதைவிடப் பரம் பொருளிலிருந்து தோன்றி யிருக்கும் இயக்க நிலையான விண் என்ற சக்தியையே நாம் வணங்கும் பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்றனர்.
சக்தி என்பது இந்தப் பிரபஞ்சமே இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணமாகியது. சக்தி என்பது விண் என்ற சிறிய துகள். இந்த விண்களின் திணிவு நிலைதான் இந்த உடலும், உயிரும். பார்க்கும் பொருள் எல்லாமே சக்தி மயம். சக்தியே அணு முதல் அண்டமங்கள், உயிர்கள், உடல்கள் அனைத்துமாய் உள்ளதால் சக்தியையே வணக்கத்திற்குரிய கடவுளாகக் கொண்டு இறைவழிபாடு ஆற்றி வந்தோர் தங்கள் வாழ்க்கை நெறியைச் சாக்த சமயம் என்று சொன்னார்கள்.
3. வைணவ சமயம்:
விண் என்ற சக்தி சுழன்று கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும் இருக்கின்ற நிலைகளைக் கண்டார்கள். சுழற்சி, சத்தம் என்ற இரண்டு அம்சங்களுக்கும் சக்கரம், சங்கு என உருவம் கொடுத்தபோது ஒரு கையிலே சக்கரத்தையும், இன்னொரு கையிலே சங்கையும் கொடுத்து, மெய்ப்பொருளுக்கு மகாவிஷ்ணு என்ற உருவம் அமைத்து வழிபட்டோர் தங்ககள் வாழ்க்கை நெறியை வைணவ சமயம் என்று சொன்னார்கள்.
4. செளர சமயம்:
சூரியன் வெளிச்சம், வெப்பம் ஆகியவற்றால்தான் உயிர்கள் தோன்றுகின்றன. சூரியன் இல்லாவிட்டால் உணவும் இல்லை; உணிரும் இல்லை, சூரியனின் ஆற்றலே உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, அழவு ஆகியவற்றிற்குக் காரணம் எனத் தேர்ந்து, சூரியனைக் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியைச் செளர சமயம் என்று சொன்னார்கள்.
5. காண பத்தியம்:
சிவம் சக்தியாகி, அதிலிருந்து அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளை விண் கூட்டமாகிய பஞ்பூதங்களில் உணர்ந்தார்கள். அவை இயற்கைக்கு ஐந்து கரங்கள் என்பதற்குக் குறிப்பாக யானைமுகன் என்ற தோற்றத்தைக் கொணடுத்து, அதை ஒரு தெய்வமாக மதித்து ஒரு சமயத்தை நிறுவி வழிபட்டவர்கள், தங்கள் வாழ்க்கை நெறியைக் காணபத்தியம் என்று சொன்னார்கள்.
6. கெளமார சமயம்:
சிவம், சக்தி கூட்டால் இந்தப் பிரபஞ்சத்தில் அழத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் என்ற ஆறு நிகழ்ச்சிகள்தாம் உண்டு என்று உணர்ந்தனர். இவை பேரியக்க மண்டலச் சிறப்புகளாகவும், உயிர்களுக்கு இன்ப துன்ப உணர்வுகளாகவும் உள்ளன. எனவே, இத்தகைய ஆறு நிகழ்ச்சிகளையே தெய்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவிலே விளங்கிக் கொண்டனர். ஆறு நிகழ்ச்சிகளை ஆறு முகங்களாகக் கொண்டு குமரக்கடவுள் என்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்து, ஒரு சமயத்தை நிறுவி வழிபட்டபோது, தங்கள் வாழ்க்கை நெறியை கெளமார சமயம் என்று சொன்னார்கள்.
கருத்திற்கு ஒத்த தெய்வநிலைத் தேர்வு செய்து வழிபட்டபோது, காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம், மக்கள் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப இறைவழிபாடு வேறுபட்டது. இயற்கையின் நிலைகளும் ஆற்றல்களும் மறைபொருளாக இருப்பதால் அவற்ளைப் பொதுவாக மக்கள் உணர்ந்து கொள்ள வழியில்லை. எனவே, அம்மறை பொருட்களின் குறிப்பை உணர்த்தும் வடிவங்களை வணக்கத்திற்குரிய தெய்வநிலைத் தேர்வுகளாக்கிக் கொடுத்தனர்.
நன்றி:- இந்தியா கலாசார புரட்சி அமைப்பு
சமயம் தோற்றமும் வளர்ச்சியும்
பெளத்தம் கி.மு.566-கி.மு.486 ல் வாழ்ந்த புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். இந்தியாவில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது.
“எல்லாத் தீமைகளையும் கைவிடுதல். நன்மையே செய்தல் ஒருவரின் உள்ளத்தைத் தூய்மையாக்கல் என்பனவே புத்தரின் போதனைகளாகும்.” (தம்மபதம், XIV, 5)
பௌத்தம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல், மனப்பயிற்சி என்பவற்றைக் கொண்டுள்ளது. இச் செயல்களின் நோக்கம், தனியொருவரினதோ அல்லது சகல உயிரினங்களினதுமோ கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஞானம் பெறுவதாகும். ஞானம் பெறுவதென்பது நிர்வாணம் அடைதலாகும்.
உலகின் தோற்றம் பற்றி பெளத்தம்
உலகின் தோற்றம் பற்றி பல சமயங்களில் உறிதியுடன் தகவல்கள்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகை தேற்றுவித்த ஒன்றை பற்றி குறிப்பிட்டு சொல்கின்றன. பெளத்தம் இக்கேள்வி தேவையற்ற ஒன்றாக கருதி, விடையை நோக்கி கற்பனை கதைகளை தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்ததின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது என கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே.
சார்பிற்றோற்றக் கொள்கை
கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகை தோற்றுவிக்கிவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையை தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிரதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்பர்.
இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்:
“எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தை கொண்டது.
(பக்கம் 269) – சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
கடவுள் கோட்பாடு
பெளத்த உலக பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதை பெளத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுகும்மான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான Anicca, Anatta, Dukkha மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலக பார்வைக்கு ஒவ்வாது.
அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களை கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதை புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகை பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்களால் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளை புரிய கூடியவர்கள் அல்லது அனுபவங்களை பெற அல்லது அனுபவிக்க கூடியவர்கள், ஆனால் அவர்கள் கர்ம விதிகளுக்கு கட்டுபட்டவர்களே.
புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள்.
புத்தர் கண்ட நான்கு உண்மைகள்
துக்கம்: மனிதர்களால் துக்கத்தை தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்கு துக்கத்தை தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துக்கம் தருபவையே.
ஆசை/பற்று: துக்கத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று.
துக்க நிவாரணம்: ஆசையை விட்டுவிடுவதுவே துக்கதுக்கான நிவாரணம்.
எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தை போக்க உதவும் வழிமுறைகள் ஆகும்.
எட்டு நெறிமுறைகள்
நற்காட்சி – Right View
நல்லெண்ணம் – Right Thought
நல்வாய்மை – Right Speech
நற்செய்கை – Right Conduct
நல்வாழ்க்கை – Right Livelihood
நன்முயற்சி – Right Effort
நற்கடைப்பிடி – Right Mindfulness
நற்தியானம் – Right Meditation
பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள்
1. பேதைமை
2. செய்கை
3. உணர்வு
4. அருவுரு (Mind-Body Organism)
5. ஆறு வாயில்கள் (Six Senses)
6. ஊறு (Sense contact)
7. நுகர்ச்சி (Sense Experience)
8. வேட்கை
9. பற்று
10.பவம் (Will to born)
11.பிறப்பு
12.வினைப்பயன் (Suffering)
பெளத்த எண்ணக்கருக்கள்
அகிம்சை
கர்மம்
சம்சாரம்
ஆத்மன்
தர்மம்
நிர்வானம்
புத்தம்
மீள்பிறவி
நன்றி:- விக்கிபீடியா
ஒரு மொழியை வளப்படுத்தும் திறமை, ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே உண்டு. மொழி வளம் பெறும் போது சிந்தனையும், அறிவும் வளம் பெறும். பின்னர் அது வலுப்படும். பல்வேறு மொழிகள் இருப்பினும் தமிழ்மொழி எந்த வகையில் சைவ சமயத்திற்கு தொண்டாற்றியுள்ளது என்பதை மட்டுமே ஆய்வதே கட்டுரையாளரின் நோக்கமாகும்.
சைவ சமயத்தின் தொன்மை
சமயம் ஒரு தத்துவம்; ஒரு மதக்கோட்பாடு; ஒரு வாழ்வியல் நெறி. சமயம் பற்றிக் காந்தியடிகள் குறிப்பிடுகையில் “சமயம் இல்லாமல் மனிதன் உயிர் வாழ முடியாது’ என உறுதியுடன் மொழிகின்றார். அந்தளவுக்குச் சமயம் மானுட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. சமயங்கள் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும். சமயங்களிடையே சடங்குகள், வழிபாட்டு முறை போன்றவைகள் மாறுபட்டாலும், அடிப்படையில் சமயக்கொள்கை ஒன்றே எனக் கருதலாம். உலகில் இன்று கிறித்துவம், இசுலாம் சமயங்களுக்கு அடுத்ததாக இந்து சமயம் (சனாதன தர்மம்) உலகம் முழுவதும் பரவியுள்ளது.
சைவம், வைணவம் என இரு பிரிவுகளை கொண்ட இந்து சமயம் உலகில் தோன்றிய பழமையான சமயம் ஆகும். அதில் குறிப்பாக சைவ சமயம் தொன்மை வாய்ந்தது எனக் கூறலாம். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு போன்ற நூல்களில் சிவனைப் பற்றிய செய்திகள் பல உள்ளன. புறநானூற்றில்
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன்
எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்….’ என சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.
சைவ சமயம் சிவனோடு தொடர்புடையது. இச்சமயமே உலகில் தோன்றிய முதற்சமயம் ஆகும்.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவளச் சடைமுடித் தாமரை யானே!
என்று திருமந்திரத்தின்படி சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவபெருமான் ஆவான்.
“சைவ சமயமே சமயம்’ என்று தொடங்கும் தாயுமானவரின் தமிழ்ப்பாடல் சைவ சமயத்தின் மாண்பை உலகெங்கும் பறைசாற்றுவதாக அமைகிறது. “சைவத்தின்மேற் சமயம் வேறில்ø ல அதில் சார் சிமாம் தெய்வத்தின்மேல் தெய்வம் வேறில்லை’ என்று சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளது சிந்திக்கத்தக்கது.
சிந்துவெளி நாகரிக காலத்தின்போதே சிவலிங்க வழிபாடு இருந்தமையை நிரூபிக்க சிந்துவெளி அகழ்வாராய்ச்சியின்போது கிடைத்த பொருட்களில் சிவலிங்கமும் ஒன்றாகும். மொகஞ்சதாரோ அகழ்வாராய்ச்சியின்போது பண்டைய காலத் தமிழ் எழுத்துகள் பல கிடைத்துள்ளன.
சிவலிங்க வழிபாடு என்பது நம் பாரத நாட்டில் மட்டுமேயன்றி எகிப்து, சிரியா, பாரசீகம், ஆப்பிரிக்கா, திபெத்து, அமெரிக்கா, சுமத்ரா, ஜாவா தீவுகள் போன்ற உலகின் பல பகுதிகளிலும் ஒரு கால கட்டத்தில் பரவியிருந்தது என்பதை மேலைநாட்டு வரலாற்று அறிஞர்கள் எச்.எம்.வெஸ்ட்ராப், இ.டி.டெய்லர் ஆகியோர் தங்களின் நூலில் விளக்கியுள்ளனர். அதே போன்று இலங்கைக்கும், சைவ சமயத்திற்கும் மிக நெடிய வரலாற்றுத் தொடர்பு உண்டு. இராமேசுவரம், திருக்கேதீசுவரம், கோணேசுவரம், முன்னேசுவரம், நகுலேசுவரம் போன்ற சிவாலயங்கள் புரதானப் பெருமையும், சிறப்பும் பெற்றவை. இவற்றில் இராமேஸ்வரம் தவிர்த்து மற்ற ஏனைய நான்கும் இலங்கையில் உள்ளன.
தமிழ்க் கடவுளான முருகன் தமிழர் தம் தெய்வம் என்பதற்குக் கீழ்கண்ட சங்கநூல்களே சான்றாகும்.
“மணிமயில் உயரின மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும்’ (புறநானூறு)
சங்க காலத்திலேயே தமிழகத்தில் இந்து சமயம், சமண சமயம், பௌத்த சமயம் போன்ற மூன்று சமயங்கள் தோன்றின. இந்த காலகட்டம் சைவ சமயத்திற்கு ஓர் இருண்ட காலம் என்றே கூறலாம். காரணம் சமண சமயத்தையே களப்பிரர்கள் ஆதரித்து வந்தனர். அதன் பின்னர், சமய குரவர்களின் வருகையால், சைவப்பயிர் செழுமையாக வளர்ந்தது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் போன்ற மன்னர்கள் சைவ நெறியைச் சிறப்பாக வளர்த்தனர்.ஏழாம் நூற்றாண்டில் சைவ நெறிக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது எனக் கூறலாம். காரணம், இந்தக் காலத்தில்தான் இறைவனின் தூதர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற நால்வர்கள் தோன்றிக் காலத்திற்கும் அழியாத அரிய செயல்களை செய்தனர். இவர்களால் சைவமும் வளர்ந்தது. தமிழும் வளர்ந்தது. பின்னர்த் தென்னிந்தியாவில் (கேரளா) தோன்றிய ஆதிசங்ககரரால் சைவ சமயம் தழைத்தோங்கியது. இந்து மத வழிபாட்டைக் காணபத்தியம் (கணபதி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), சௌரம் (சூரியன் வழிபாடு), வைணவம் (திருமால் வழிபாடு), சைவம் (சிவன் வழிபாடு) என ஆறு வகையாகப் பிரித்து இறையின்பம் பெற வழிகாட்டினார். “ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும்….’ என்கிற பெரிய புராணம் மற்றும் “அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வலர் பொருளாய்’ என்கிற சிவஞான சித்தியார் பாடல் மூலம் நாம் அறியலாம். ஆதிசங்கரர் தமது வேதாந்தக் கொள்கையான அத்வைதத்தைப் போதித்து, அதைத் தொடர்ந்து நிலைநாட்டவும், இந்தியாவில் சிருங்கேரி, பூரி, பத்ரி, துவாரகை போன்ற புண்ணிய தலங்களில் திருமடங்களை நிறுவினார்.
பின்னர்ச் சைவ சமயம் சற்று நிலைகுன்றிய நிலையில் இருந்தபோது அருளாளர்கள் தோன்றி ஆதீனங்கள் (சைவத்திருமடம்) மூலம் சமயத்தை காத்தனர். புராணங்கள் பதினெட்டு, சித்தர்கள் பதினெண்மர் போன்று சைவ ஆதீனங்கள் பதினெட்டு ஆகும். இவற்றைச் “சுத்த சைவ பதினெண் ஆதினங்கள்’ என்றும் கூறுவர். இவற்றில் முதலில் தோன்றியது திருவாவடுதுறை ஆதீனம், அடுத்துத் தோன்றியது தருமபுர ஆதீனம் ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் இந்து மதத்திற்கு சுவாமி விவேகானந்தர் மூலம் இளம் ரத்தம் செலுத்தப்பட்டது எனக் கூறலாம்.
சைவ சித்தாந்த தத்துவத்தை விளக்கும் திருமந்திரம் பதி, பசு, பாசம் என்னும் மூன்றை வலியுறுத்துகிறது.
‘பதிபசு எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகில் பசுபாசம் நிலாவே’
ஆன்மாவைப் பசுவாகவும், இறைவனைப் (சிவன்) பதியாகவும், அவனை அடைவதற்குப் பாசத்தை விடுவதுவும் இந்தத் தத்துவ விளக்கம், தமிழ்நாட்டில் சைவ சமயம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருத் தொண்டினால் புத்துயிர் பெற்று நன்கு வளர்ந்தது.
தமிழ் மொழியின் பங்களிப்பு
தகவல் பரிமாற்றத்திற்கு மொழி அவசியம். மனிதன் தோன்றிய காலம் முதலே மொழி எனும் கருவி நடைமுறையில் இருந்தது. மனித உறவுக்கு ஒரு பாலமாக அமைவது மொழி ஆகும். ஒரு சமுதாயத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, இலக்கியம் போன்ற அனைத்தும் மொழியைச் சார்ந்தே அமைகிறது. உயிருக்கும், இறைவனுக்கும் உள்ள தொடர்பை அறிவதற்கு மொழி அவசியம் தேவைப்படுகிறது.
சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது தமிழ்மொழியும் சமற்கிருதமும் ஆகும். தமிழ் அறிஞர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி இதுபற்றிக் கூறுகையில், “தமிழும் சமற்கிருதமும் இந்திய பண்பாட்டின் இரு தூண்கள்’ எனத் தனது ஆழ்ந்த அனுபவத்தின் முதிர்ச்சியால் தெரிவிக்கிறார். தமிழும், வடமொழியும் கி.மு.5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தமிழாராய்ச்சி அறிஞர் க.வெள்ளைவாரணனார் தெரிவிக்கிறார்.
‘மன்னுமா மலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்று வித்தருளியும்’
எனும் திருவாசக வரிகள் மூலம் தமிழ்மொழியின் இலக்கணத்தைச் சிவபெருமான் முதன்முதலில் அகத்திய மாமுனிக்கு உபதேசித்தோர் என்பதை அறியலாம்.
மேலைநாட்டு மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சீன மொழிகளுக்கு நிகரான பழமையும், சிறப்பும் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி….’ என்கிற சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு. சைவ சமயம் தழைக்க அரும்பாடுபட்ட சமய அருளாளர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர், சேக்கிழார், அருணகிரிநாதர், குமரகுருபரர், இராமலிங்க அடிகளார் மற்றும் பல சிவனடியார்களின் வழிவழியாக வந்து இறைவன் மீது தெய்வத் தமிழால் பாடியருளினார்கள்.
சுந்தரர், “இறைவன் தமிழை ஒத்தவன்’ என்றும், நாவுக்கரசர், “பண்ணின் இன்மொழி கேட்கும் பரமன்’ என்றும், “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்’ என்றும், சேக்கிழார் “ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்’ என்றும் இறைவனைத் தமிழாகவே போற்றியுள்ளார்கள்.தமிழில் சைவ சமயத்தின் தோத்திரப் பாடல்களை அருளிச் செய்தவர்கள் திருஞான சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை உள்ள சமயக்குரவர்கள் ஆவர். அவை பன்னிரண்டு திருமுறைகளாக வகுக்கப் பெற்று தொகுக்கப் பெற்றன. இவற்றை “பன்னிரு திருமுறை’ என அழைப்பார். இவை முதலாம் இராசராசன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவரால் தொகுக்கப் பெற்றன.
தோடுடைய செவியன் விடையேறியோர்தூ வெண்மதிசூடிக்
காடுடைய கடலைந் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பொம்மாள் இவனன்றே!
என்று தொடங்கும் முதலாம் திருமுறை (1469 பாடல்கள்), இரண்டாம் திருமுறை (1331 பாடல்கள்), மூன்றாம் திருமுறை (1358 பாடல்கள்), யாவும் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். நான்காம் திருமுறை (1070 பாடல்கள்), ஐந்தாம் திருமுறை (1015 பாடல்கள்) மற்றும் ஆறாம் திருமுறை (981 பாடல்கள்) அனைத்தும் திருநாவுக்கரசர் அருளிய தேவார பாடல்கள் ஆகும்.
பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லூ ரருட்டுறையுள்
அத்தா உனக் காளாய்இனி அல்லேன் எனலாமே!
என்று தொடங்கும் ஏழாம் திருமுறை (1025 பாடல்கள்) சுந்தரர் அருளிய தேவாரப் பாடல்கள் ஆகும். எட்டாம் திருமுறை மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருகோவையார் ஆகும். திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை; பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம்; பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் போன்றோர் முதல் நம்பியாண்டார் நம்பி வரை பன்னிருவர் பாடிய திருப்பாடல்கள்; பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் பெருமான் அருளிய “திருத்தொண்டர் புராணம்’; 12 திருமுறைகளில் சுமார் 18 ஆயிரம் பாடல்கள் உள்ளன. அவை இறைவனை அடையச் செய்யும் தோத்திரப் பாடல்கள் ஆகும்.
திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, உண்மை நெறி விளக்கம் மற்றும் சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்கு சாத்திர நூல்கள் சைவ இறை நெறியை உணர்த்தும் நூல்கள் ஆகும்.
தமிழைப் போற்றி, தமிழ் வழியே சைவ சமயத்தைப் பரப்பச் செய்த தவச் சான்றோர்களால் செந்தமிழும் வளர்ந்தது; சிவநெறியும் வளர்ந்தது.
இவ்வாறு உயர்தனிச் செம்மொழியாகிய தமிழும், சைவமும் சிறப்புடன் பொலிவு பெற சைவச் சான்றோர்கள் பலர் பாடுபட்டுள்ளனர். தமிழர்கள் சைவத்தையும், தமிழையும் இரு விழிகளாய்ப் போற்றிக் காத்து வருகிறார்கள். சனாதன தர்மம் எனும் இந்து மதத்தின் உயிர்நாடியாகச் சைவசமயம் விளங்குவது போலச் சைவசமயத்தின் உயிர்நாடியாகச் செந்தமிழ் விளங்குகிறது. கிறித்தவர்களுக்கு பைபிள் புனித நூல் (Holy Book) போல, இசுலாமியர்களுக்குத் திருக்குர் ஆன் புனிதநூல் போல, சைவர்களுக்குச் சமயக்குரவர் அருளிய தேவாரம் புனித நூல் என்றே கூறலாம்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!’
கட்டுரை:- முனைவர் இரா.இராஜேஸ்வரன்
நன்றி:- தினமலர்
Leave a Reply
You must be logged in to post a comment.