முன்னாள் ஆயுதக் குழுக்கள் தனியாக மக்கள் முன்னால் வருவார்களாயின் தூக்கி வீசப்படுவார்கள்!
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் யஸ்ரின் சொய்சா தெரிவிப்பு
நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணம் டிசெம்பர் 08, 2017
கூட்டமைப்பின் பெயரால் புனிதர்களாகிய முன்னாள் ஆயுதக் குழுக்கள் அதில் இருந்து வெளியேறி தனியாக மக்கள் முன்னாள் வருவார்களாயின் தூக்கி வீசப்படுவார்கள் என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் யஸ்ரின் சொய்சா தெரிவித்தார்.
இது தொடர்பில் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் நாம் எத்தனையோ பிரிவுகள் துரோகங்கள் இழப்புக்கள் அனைத்தையும் கண்டவர்கள். இந்த நிலையில் எதிரியிடமிருந்து மட்டும் நாம் இழப்புக்களை சந்திக்கவில்லை. இந்த ஆயுதக் குழுக்களின் மூலமும் இழப்புக்களை சந்தித்திருந்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பு மன்னிப்பு வழங்கியதனால் மக்களும் வாய்மூடி ஏற்றுக்கொண்டனரே அன்றி இவர்கள் செய்த அநியாயங்கள், அட்டூழியங்கள், கொலைகள் , கொள்ளைகளையும் மறக்கவில்லை.
இருப்பினும் தமிழ் மக்கள் இன்று அநாதைகளாக நிற்கும் நிலையில் அரசியலிலும் அநாதைகளாக நிற்கக் கூடாது என்பதற்காகவே இவர்களையும் இணைத்து வாக்களிக்கப்படுகின்றது. முன்னாள் ஆயுதக் குழுக்களில் அரசியலில் உள்ளவர்களில் எந்தக் கட்சியும் உத்தமர்களோ அல்லது புனிதர்களோ கிடையாது. வேண்டுமானால் அவர்கள் செய்த கொலைகளும் காட்டிக்ங்கொடுப்புக்களும் கொள்ளைகளுமே அளவில் மாறுபட முடியும்.
இந்த நிலையில் மக்களிற்கான பிரச்சணைக்கான தீர்வு விடயம் அல்லது ஓர் அரசியல் நிலைப்பாட்டால் ஓர் பிரிவினை அல்லது விலகல் என ஆராய முடியும். ஆனால் தமது கட்சிகளை பிரதான கட்சிகளில் சவாரி செய்து வளர்க்க நினைக்கும் இந்த ஆயுதக் குழுக்களின் உண்மை முகமும் தற்போது தெரிந்து விட்டது. இதனால் இவர்கள் இனி கூட்டமைப்பிலோ அல்லது தனியாகவோ தேர்தலுக்காக மக்கள் முன் களம் இறங்கும்போது வாக்களிக்கும் மன நிலையில் நாம் இல்லை.
இதனால் இவர்கள் உண்மையான தற்துணிவு இருந்தால் தனியாக களமிறங்கி தமது பலத்தை கான்பிக்க வேண்டும். அல்லது கூட்டமைப்பில் இணைந்து என்ற ரீதியில் கட்சி ரீதியான பாகுபாடு இன்றி வருவார்களானால் ஒற்றுமையின் பெயரால் வாக்களிக்க முடியும் அல்லது மாவட்டத்தில் எந்த ஆயுதக் குழுவிற்காவது சபை ரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டு எனையவை ஆயுத கலாச்சாரமே அற்ற அரசியல் கட்சி வாக்கு கேட்குமானால் அவர்களிற்கு நாம் முழுமையாக ஆதரவளிப்பதோடு இந்த ஆயுதக் குழுக்கள் போட்டியிடும் அத்தனை சபைகளில் மட்டும் தனியாக சுயேட்சையாக வேட்பாளர்களை களமிறக்க நேரிடும்.
இதனை எதிர்கொள்ள தற்துணிவு கொண்ட எந்த ஆயுதக் கட்சியானாலும் தமது கட்சியின் பெயரை முதன்மைப் படுத்தி தேர்தலில் களமிறங்கி வெற்றியீட்டும் முயற்சியினை நாம் தடுத்தே தீருவோம். அத்தோடு பகிரங்கமாக தேர்தலில் ஈடுபடாது விடினும் மாவட்ட ரீதியாக , சபை ரீதியாக மேடை அமைத்து இந்த ஆயுதக் குழுக்களை ஓரம் கட்டவேண்டிய தேவையை முன்னெடுக்கும் பணிக்கான ஓர் வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கும் வகையில் தற்போது ஆலோசிக்கின்றோம்.
கூட்டமைப்பின் பெயரால் வெற்றியீட்டிய இந்த ஆயுதக் குழுக்கள் இன்று யாழ்ப்பாணத்தில் 5 சபை , மன்னாரில் 2 , மட்டக்களப்பில் 3 சபை என பேரம்பேசி மீண்டும் தமது தனியான ஆயுதக் குழுக்களை வளர்க்கவே துடிக்கின்றனர். கூட்டமைப்பின் தலைமைகள் இதற்கு இடமளிக்கவே கூடாது. அவ்வாறு இந்த ஆயுதக் குழுக்களின் தலையில் எமது சபைகளை ஈடுவைக்க வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரிடமும் அதன் பிரதான கட்சியிடமும் நாம் வினயமாக வேண்டுகின்றோம்.
மாறாக எமது சபைகள் இவர்களிடம் ஈடு வைக்கப்படுமானால் தாம் என்றுமே கூட்டமைப்பிற்கோ அல்லது ஆயுத வன்முறையில் ஈடுபடாத கட்சிகளிற்கோ எதிராக செயல்பட மாட்டோம். கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் போட்டியிடும் சபை தவிர்த்து உடனடியாக கட்டுப்பணம் செலுத்தும் முயற்சியில் எதிர் வரும் திங்கட் கிழமை முதல் செயல்படவுள்ளோம். இதனால் கூட்டமைப்பில் எந்தக் கட்சிக்கு எந்த சபை என்ற விபரம் வெளிவரும் வரை காத்திருக்கின்றோம் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.