வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்!

வன்னி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நேயம் நிறுவனம்!

ஞாயிறு மாலை நேயம் நிறுவனம் நடத்திய Critical Needs 2017 (முக்கிய தேவைகள் 2017) என்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். இந்த நிறுவனம் பெரும்பாலும் கனடா, ரொறன்ரோவில் வாழும் கத்தோலிக்க சமயத்தவர்களால் 2014 இல் தொடக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை கட்டி வளர்ப்பதில் வண. பிதா யோசேப் சந்திரகாந்தன், மார்கி வின்சென்ட் டி போல் (இணையர்), முனைவர் வசந்தகுமார், குயின்ரஸ் துரைசிங்கம் போன்றோர் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்.

இந்த நிறுவனம் போரினால் வாழ்வாதாரங்களை இழந்த வன்னி மக்களை மையப்படுத்தி இயங்கி வருகிறது. சென்ற ஆண்டு 2016 இல் நடத்திய இரவு விருந்தின் மூலம் திரட்டிய நிதி விபரத்தை வெளியிட்டிருந்தார்கள். வருவாய் 92,769.00, செலவு 26,437.38 மிகு வருவாய் 63,316.62 டொலர்கள். இந்த நிதி உருத்திரபுரம், ஜெயந்திபுரம், பாரதிபுரம், முழங்காவில், மடு, நொச்சிக்குளம், உயிலங்குளம், வண்ணான் குளம் போன்ற ஊர்களில் வாழும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள், கைம்பெண்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை திருக்குடும்பத்தைச் சேர்ந்த சகோதரி மர்க்கிரட் எடுத்துரைத்தார். தையல் பயிற்சி, கோழி வளர்த்தல், வீட்டுக்குத் தேவையான பலவித பொருட்களை சந்தைப்படுத்தல் போன்ற சிறுதொழில்களில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

மக்கள் தொண்டென்று வரும்போது கிறித்தவர்களை வெல்ல யாராலும் முடியாது. ‘மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்று சொல்லப்பட்டாலும் அதனை நடைமுறையில் செய்து காட்டுபவர்கள் பெரும்பாலும் கிறித்தவர்களே. ஒரு தேவாலாயத்தை நிறுவினால் பக்கத்தில் கட்டயமாக ஒரு பள்ளிக்கூடத்தையும் கட்டிவிடுவார்கள்.

யூதர்கள் ஒரு மருத்துவமனையை சேர்த்துக் கட்டிவிடுவார்கள். இஸ்லாமியர்கள் தங்கள் வருவாயில் இரண்டரை விழுக்காடு அறத்துக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சொல்லப்பட்டாலும் இந்து (சைவ) கோயில்கள் மற்றும் நிறுவனங்கள் (தனிப்பட்ட முறையில் சிலர் உதவி செய்கிறார்கள்) மக்களுக்கு உதவி செய்வது குறைவு. அர்ச்சனை, அபிசேகம், தேர், திருவிழா போன்றவற்றோடு அவர்களது நேரமும் நினைப்பும்உழைப்பும் நின்றுவிடுகிறது. வாழ்வாதாரங்களை இழந்து அல்லல்படும் வன்னி மக்களுக்கு இங்குள்ள கோயில்கள் ஏதேனும் உதவி செய்வதாகத் தெரியவில்லை. விதிவிலக்குண்டு.

இலண்டனில் இயங்கும் கோயில்கள் மிகுவருவாயில் மூன்றில் ஒரு பங்கை வட – கிழக்கில் துன்பப்படும் மக்களது குடிதண்ணீர், உறைவிடம் போன்ற தேவைகளை நிறைவு செய்யக் கொடுத்து உதவுகிறார்கள். ஈழபதீஸ்வரர் கோயில் கிழக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தையே தத்தெடுத்துள்ளது. இரண்டு கிணறுகள் வெட்டிக் மக்களின்  குடிதண்ணீர் சிக்கலைத் தீர்த்துள்ளது.

நிகழ்ச்சியை இராகவன் பரஞ்சோதி தொகுத்தளித்தார்.

நேயம் நிறுவனத்தின் தொண்டு மேன் மேலும் சிறப்புற எனது வாழ்த்துக்கள். (படங்கள் நினைவுகள் இணைய தளம்)

About editor 3099 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply