தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 63ஆம் பிறந்த நாள்,

 தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 63ஆம் பிறந்த நாள், வாழ்க அவர் புகழ்! வெல்க அவர் குறிக்கோள்!

தோழர் தியாகு

November 26  2017

தலைவரை வாழ்த்துவதன் பெயரால் ஒருசில தோழர்கள் பேசி வருவதையும் செய்து வருவதையும் கருத்தில் கொண்டு சில உண்மைகளை உடைத்துச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இப்போதும் இவ்வகையில் பேசாமலிருப்பது தமிழீழக் குறிக்கோளின் பாலும் தமிழ்த் தேசியத்தின் பாலும் நேர்மை தவறுவதாகி விடும், தலைவரின் புகழையும், அவர்தம் உயிரணைய விடுதலைக் குறிக்கோளையும் களங்கப்படுத்துவதாகி விடும் என நம்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் வாழ்கிறார்! அவர் சாகவில்லை! அவருக்குச் சாவுமில்லை! அவரது குறிக்கோள் சாக வில்லை. அவரது போராட்டம் தொடர்கிறது என்ற பொருளில் இப்படிச் சொல்வதில் தவறில்லை. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று புரட்சிப் பாவலர் பாரதிதாசன் சொல்வாரே, அது போல!

தலைவர் பிராபாகரன் இப்போதும் உயிரோடிருக்கிறார், மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார், விரைவில் வரப் போகிறார் என்று நம்புவதும், அதையே மற்றவர்களையும் நம்பச் சொல்வதும் அவரைப் பெருமைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு சிறுமைப்படுத்துவதாகும்.

இறுதிப் போர்க்களத்தில் தலைவர் வீரச் சாவடைந்து விட்டார் என்பதில் எனக்குத் துளியளவும் ஐயமில்லை. பிரபாகரன் சாகவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிற பலருக்கும் இது தெரியும். ஒருசிலருக்குத் தெரியாமலிருக்கலாம். அல்லது இப்படி இருந்தால் நல்லது என்று நம்பி நம்பி இப்போது அந்த நம்பிக்கையைக் கைவிட முடியாமலிருக்கலாம்.

தீரன் திண்ணியன் தேசத் தலைவன் என்று பிரபாகரன் 50ஆம் பிறந்த நாள் மலரில் வாழ்த்துக் கட்டுரை எழுதினேன். அதில் ஒரு சொல்லைக்கூட இப்போதும் நான் திரும்பப் பெற வேண்டிய தேவை இல்லை.

தலைவர் இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற கேள்வியை 2010ஆம் ஆண்டு எழுதிய முள்ளிவாய்க்கால் – முன்னும் பின்னும் (MULLIVAAIKKAAL – BEFORE AND AFTER) நூலிலேயே கேட்டிருந்தேன். “வருவாண்டா தம்பி பிரபாகரன்” பாட்டுப் பாடி கைதட்டிக் கொண்டிருந்த யாரும் எனக்கு விடை சொல்லவில்லை. ஒரு சிலர் என்னை வசைபாடி மகிழ்ந்தார்கள், அவ்வளவுதான்.

பிரபாகரன் இல்லையென்றால் கூட இருப்பதாகச் சொல்வதால் இழப்பு என்ன? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். மாவீரர்களை மதித்து வணங்கிக் கொண்டாடிய பெருமாவீரனுக்கு உரிய இறுதி வணக்கம் செலுத்தத் தவறுவதால் தனிப்பட்ட முறையில் அவனுக்கு என்ன இழப்பு? நம் போராட்டத்துக்குத்தான் இழப்பு, அவரை இழந்தது பேரிழப்பு, அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தி, அவர் பெயரால் சூளுரைத்துப் போராட்டத்தைத் தொடரும் வாய்ப்பைத் தவற விடுவது இரண்டாவது பேரிழப்பு.

உழைக்கும் மக்களே வரலாற்றை உருவாக்குகிறவர்கள். இறுதி நோக்கில் வரலாறுதான் மாவீரர்களைப் படைக்கிறது. தமிழீழ வரலாறு படைத்துக் கொடுத்த தலைசிறந்த மாவீரனை எங்கோ ஓடிஒளிந்து கொண்டிருப்பவனாகக் காட்டி விட்டீர்களே, இது நியாயமா? மாவீரனை மாயாவி ஆக்கி விட்டீர்களே, இது முறைதானா? இந்தியப் படையெடுப்பின் போது கூட அச்சமின்றி அலம்பில் காடுகளில் பாசறை அமைத்துப் போரிட்டவர் எம் தலைவர்.

விடுதலை வீரன், புரட்சிக்காரன் தேவை கருதித் தலைமறைவாக இருப்பது பகைவனிடமிருந்துதானே தவிர, மக்களிடமிருந்தும் அவர்களது போராட்டத்திலிருந்தும் அல்ல. இனவழிப்புக்கு ஆளான தமிழீழ மக்களின் நீதிப் போராட்டத்திலிருந்து விலகி, ஓர் அறிக்கை கூட இல்லாமல் அவர் ஒளிந்து கொண்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. போராட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாமல் அவர் படைப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாக விளக்கம் தருவது அவரது அரசியல் அறிவையே இகழ்வதாகும்.

இல்லாத ஒருவரை இருப்பதாகச் சொல்லும் ஏரணமற்ற வாதமுறை வரலாற்று மாணவர்களிடையே நம்மைக் கேலிப்பொருளாக்கி விட்டது. வீர வணக்கம் செலுத்துவதற்கு மட்டுமல்ல, அவரைப் பற்றிய ஒரு புறஞ்சார் வரலாற்று மதிப்பீட்டுக்கும் இது தடையாக உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்விற்காக சுவிஸ் நாட்டுக்குப் போயிருந்தேன். பெரும் கூட்டம். அரங்கத்தில் கட்டுக்காவல் வலுவாக இருந்தது. காரணம் கேட்டபோது தோழர்கள் சொன்னார்கள்: “குலம் இருக்கிறார், அவர் மூத்த உறுப்பினர். இந்த மேடையில் ஏறித் தலைவர் படத்துக்கு சுடரஞ்சலி செலுத்துவேன் என்கிறார். அவரைத் தடுக்க வேண்டியுள்ளது.”

இப்படி எத்தனையோ பேர் உண்மை தெரிந்தும் மறுக்கிறார்கள், அல்லது மறைக்கிறார்கள், பொறுப்புள்ள பலரிடமும் சொல்லிப் பார்த்தேன், உண்மைக்கு முகங்கொடுக்கத் தயங்குகிறார்கள், நமக்கேன் வம்பு? நமக்கேன் பொல்லாப்பு? என்று நினைக்கிறார்கள்.

ஒருசிலர் மட்டும் உண்மையிலேயே தலைவர் இருக்கிறார் என நம்பக் கூடும். அல்லது அப்படி நம்ப விரும்பக் கூடும். அது அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கையைப் போல. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அந்த நம்பிக்கையைக் காயப்படுத்த விருப்பமில்லை.

நாளை மாவீரர் நாளில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் முதல் வீரவணக்கம் தலைவர் பிராபாகரனுக்கே!

வாழ்க பிரபாகரன் புகழ்! வெல்க தமிழீழம்!


 

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply