புதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவு முறை பற்றிய விரிவான விளக்கம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில்- வட்டார மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் நடைபெறவுள்ளமையே சிறப்பு அம்சமாகும்.
இந்தத் தேர்தல் எவ்வாறு நடக்கும்? இரண்டு முறைகளிலும் எவ்வாறு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள்? வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிப்பது? இதுபோன்ற கேள்விகளுக்கு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் விளக்கங்களை அளித்துள்ளார்.
கட்டுப்பணம்
வேட்புமனு தாக்கலுக்கான காலப்பகுதியின் இறுதி நாளுக்கு முதல்நாள் 12 மணிக்கு முதல் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் தங்களது கட்டுப்பணத்தை செலுத்த வேண்டும். இம்முறை ஒரு புதிய ஏற்பாடு அமுலுக்கு வருகிறது. அதாவது 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் சுயேட்சைக்குழுக்கள் மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் தமது வேட்பாளர்களுக்காக கட்டுப்பணத்தை செலுத்தவேண்டும்.
சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருவர் 5000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் வேட்பாளர் ஒருவருக்கு 1500 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும். இம்முறை இது கலப்பு தேர்தல் முறை என்பதனால் வட்டாரமுறையில் போட்டியிடுபவர்களும் பிரதேச வாரி பட்டியல் முறையில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை செலுத்த வேண்டியது அவசியமானது.
சிறிலங்காவில் செல்லுபடியாகும் நாணயம் ஊடாக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் கட்சியின் செயலாளர் அல்லது அவரால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும்.
சுயேட்சைக்குழுவாயின் சுயேட்சைக் குழுவின் தலைவர் அல்லது அவரினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட முகவரினால் கட்டுப்பணம் செலுத்த முடியும்.
கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் தேர்தலில்ஒரு ஆசனத்தையேனும் பெற்றுக்கொண்டால் அவர்களின் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும். வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும் கட்டுப்பணம் மீளச் செலுத்தப்படும்.
வேட்புமனுத்தாக்கல்
இம்முறை வேட்புமனுக்கள் ஒரே வேட்புமனுப் பத்திரத்தில் இரண்டு பகுதிகளாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அதாவது ஒரே பத்திரத்தில் இரண்டு வேட்புமனு பகுதிகள் இருக்கும். வேட்புமனுப்பத்திரத்தின் முதலாவது பகுதியானது வட்டாரங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்குரியதாகும்.
வேட்புமனு செயற்பாடு தொடர்பில் கொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது புதிய தேர்தல் முறைமையின்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த வட்டாரங்களுக்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
கொழும்பு மாநகரசபை
கொழும்பு மாநகரசபையில் தனி அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படும் வட்டாரங்கள் 31 ஆக உருவாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அந்த 31 வட்டாரங்களுக்கும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 31 வேட்பாளர்கள் நியமிக்கப்படவேண்டும்.
அடுத்ததாக கொழும்பு மாநகரசபையில் 13 வட்டாரங்களுக்கு இருவர் வீதம் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது. அதாவது இந்த 13 வட்டாரங்களிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அதற்கும் இந்த 13 வட்டாரங்களுக்கும் இருவர் வீதம் 26 பேரை அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும்.
அதேபோன்று கொழும்பு மாநகரசபையில் ஒரு வட்டாரத்தில் மூவர் தெரிவு செய்யப்படக் கூடிய வகையில் மூன்று வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருவட்டாரத்திற்கு மூவர் வீதம் ஒன்பது வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் நியமிக்க வேண்டும்.
அந்தவகையில் ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவானது கொழும்பு மாநகரசபையின் வட்டாரங்களுக்கு 31 + 26 + 9 என்றவகையில் 66 வேட்பாளர்களை களமிறக்க வேண்டும். இந்த 66 பேரும் வேட்பு மனுப்பட்டியலில் முதல் பகுதியில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களினால் நியமிக்கப்பட வேண்டும். ஒன்று கூட குறையக் கூடாது.
இந்த 66 வேட்பாளர்களை 60 வீதமானவர்கள் என எடுத்துக் கொண்டால் மீதம் 40 வீதமே விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுவார்கள். உள்ளூராட்சிமன்ற தேர்தல் 60 வீத தொகுதி முறைமையிலும் 40 வீதம் விகிதாசார முறையிலும் நடைபெறவுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
அது ஒரு முறைமையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படும். அதாவது ஒரு உள்ளூராட்சி மன்றத்தில் 60 வீதமான வட்டார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள்? விகிதாசார முறைமையில் எத்தனைபேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றம் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனை அண்மையில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டிருந்தார்.
அந்த சட்டத்தின் படி கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசார மூலமாக 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். எனவே இந்த 44 பேருடன் இன்னும் மூன்று பேரை கூடுதலாக சேர்த்து கொழும்பு மாநகரசபைக்கு ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்ச்சைக்குழு சார்பில் 47 பேர் வேட்பாளர்களாக தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில் கொழும்பு மாநகரசபைக்கு வட்டார முறைமையில் 66 மற்றும் விகிதாசார முறைமையில் 47 பேருமாக 113 வேட்பாளர்கள் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் நியமிக்கப்படவேண்டும். அதன்படி வட்டார முறைமையில் 66 பேரும் விகிதாசர முறைமையில் 44 பேருமாக 110 பேர் கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அரசியல் கட்சியொன்று கொழும்பு மாநகரசபைக்கு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும்போது ஒரு வேட்பாளருக்கு 1500 ரூபா வீதம் 1 இலட்சத்து 69 ஆயிரத்து 500 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும். சுயேட்சைக்குழுவைப் பொறுத்தவரையில் ஒரு வேட்பாளருக்கு 5000 ரூபா வீதம் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
பெண் வேட்பாளர்கள்
இதற்கிடையே புதிய சட்டமூலத்திற்கு அமைவாக ஒரு கட்சியின் சார்பில் அல்லது சுயேட்சைக்குழுவின் சார்பில் இரண்டு பகுதிகளைக் கொண்ட இந்த வேட்புமனுப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறை செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபையை எடுத்துக்கொண்டோமானால் வட்டார முறை மூலம் 66 பேர் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் அதில் 11 பேர் கட்டாயம் பெண் வேட்பாளர்களாக களமிறக்கப்படவேண்டும்.
அதேபோன்று விகிதாசார முறைமையில் களமிறக்கப்படும் வேட்பாளர்களில் 50 வீதமானவர்கள் பெண்களாக இருக்க வேண்டும். அதாவது கொழும்பு மாநகரசபைக்கு விகிதாசாரம் மூலம் 47 வேட்பாளர்கள் களமிறக்க வேண்டிய நிலையில் அதில் 23 பேர் பெண்களாக இருக்க வேண்டியது சட்டமாகும்.
அப்படியாயின் மொத்தமாக கொழும்பு மாநகரசபைக்கு 66+47 என்ற வகையில் 113 வேட்பாளர்கள் களமிறக்கப்பட வேண்டியுள்ள நிலையில் அதில் 34 பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது சட்டம். இந்த விகிதம் மாறியமைந்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விடும் என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிடுகின்றோம்.
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படல்
இங்கு நாம் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. புதிய சட்டத்தின்படி இரண்டு முறைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். அதாவது முழுமையான வேட்புமனு நிராகரிக்கப்படுகின்றமை ஒரு சந்தர்ப்பமாகவும் ஒரு வேட்புமனுவில் ஒரு வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுகின்றமை மற்றுமொரு சந்தர்ப்பமாகவும் சட்டத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளன.
முழு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படுதல்
வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்களை முதலில் பார்ப்போம்.
கொழும்பு மாநகரசபையை உதாரணமாக எடுத்தோமானால் 113 வேட்பாளர்கள் மொத்தமாக வேட்பு மனுவின் இரண்டு பகுதிகளிலும் உள்ளடக்கப்படாவிடின் குறித்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.
தேவையான பெண் பிரதிநிதித்துவங்கள் குறிப்பிட்ட வீதத்தில் இடம்பெறாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும். அதாவது கொழும்பு மாநகரசபைக்க வட்டாரமுறையில் 11 பெண் வேட்பாளர்களும் விகிதாசார முறையில் 23 பெண் வேட்பாளர்களும் நியமிக்கப்படாவிடின் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.
கட்டுப்பணம் உரிய முறையில் செலுத்தப்படாவிடின் அப்போதும் முழுமையான வேட்புமனுவும் நிராகரிக்கப்படும்.
அடுத்ததாக அரசியல் கட்சியாக இருப்பின் செயலாளரும் சுயேட்சைக்குழுவாக இருப்பின் அதன் தலைவரும் கைச்சாத்திட வேண்டும். இல்லாவிடின் முழுமையாக வேட்புமனு நிராகரிக்கப்படும். இவர்களின் கையொப்பத்தை ஒரு சமாதான நீதிவான் முறையாக அத்தாட்சிப்படுத்த வேண்டும். இல்லாவிடின் அப்போதும் வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.
வேட்புமனுவை கட்சியென்றால் செயலாளரும், அல்லது அவரால் அதிகாரம் அளிப்பட்ட முகவரும், சுயேட்சைக்குழுவென்றால் அதன் தலைவரும் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளிக்க வேண்டும். இவர்களைத் தவிர்த்து வேறுயாராவது கையளித்தால் அந்த வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்படும்.
வேட்பு மனுவில் ஒருவர் மட்டும் நிராகரிக்கப்படுதல்
தற்போது தனிப்பட்ட ரீதியில் வேட்பாளர்களின் வேட்புமனு நிராகரிக்கும் சந்தர்ப்பத்தை பார்ப்போம். 113 வேட்பாளர்களும் வேட்புமனுவில் கையொப்பமிடவேண்டும். அதில் ஒருவர் கையெழுத்திடாவிடின் அவருடைய பெயர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படும். ஏனையவர்களுக்கு அதில் பாதிப்பு ஏற்படாது.
அதேபோன்று இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதற்கு எதிராக வேட்பாளர் ஒரு உறுதியுரை செய்ய வேண்டும். அதனை வழங்கத் தவறினால் அந்த வேட்பாளர் மட்டும் நிராகரிக்கப்படுவார்.
அந்த உறுதியுரையை வழங்கி அதில் அவர் கையொப்பமிடாவிடின் அவருடைய பெயர் மட்டும் நிராகரிக்கப்படும். அதேபோன்று கடந்த தேர்தல் முறையில் இளைஞர்கள் 40 வீதம் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இம்முறை அது 30 வீதமாக மாறியுள்ளது. ஆனால் அது கட்டாயமாக்கப்படவில்லை.
எனினும் ஒரு கட்சி தான் ஒரு இளைஞரைக் களமிறக்குவதாக குறிப்பிட்டால் அந்த வேட்புமனுவில் பிறப்புச்சான்றிதழலில் அவர் இளைஞராக இருக்காவிடின் (வயது மட்டம் சட்டத்தில் உள்ளது) அவர் மட்டும் வேட்புமனுவிலிருந்து நிராகரிக்கப்படுவார். இதனுடன் வேட்புமனு விவகாரம் முடிவுக்கு வருகிறது.
வாக்களிப்பு முறை
அடுத்ததாக வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணும் பணி மற்றும் தெரிவு செய்யும் பணி என்பவற்றைப் பார்ப்போம்.
வாக்குச்சீட்டானது இதுவரை காலம் இருந்ததைப்போன்று இருக்காது. அதாவது முதல் பகுதி மட்டுமே இருக்கும். கீழ் பகுதி இருக்காது. சரியாக கூறுவதென்றால் வாக்குச்சீட்டில் வட்டாரத்தில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள் (மும்மொழியில்), சின்னங்கள், வாக்களிப்பதற்கான ஒரு வெற்றுக்கூடு ஆகியவை இருக்கும். கட்சிகளின் பெயர்கள் சிங்கள அகரவரிசைப்படியே அமையும். கட்சிகளின் பெயர்களுக்கு கீழ் சுயேட்சைக்குழுகளின் இலக்கங்களும் இருக்கும்.
விருப்பு வாக்கு இல்லை
மாறாக விருப்புவாக்குக்கான வெற்றுக்கூடோ, மற்றும் வேட்பாளர்களின் பெயர்களோ வாக்குச்சீட்டில் இருக்காது. இதன்போது தன்னுடைய வட்டாரத்தில் எந்தக் கட்சியின் சார்பில் எந்தவேட்பாளர் போட்டியிடுகின்றார் என்பது மக்களுக்குத் தெரியும். அது வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியிலும் காட்சிப்படுத்தப்படும். வாக்காளர் அட்டையிலும் இந்த விபரங்கள் சில வேளைகளில் வீடுகளுக்கு அனுப்பப்படும். எனவே வாக்காளர்கள் இதன்போது தான் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேட்சைக்குழுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்.
வாக்கு எண்ணும் நிலையங்களாக மாறும் வாக்களிப்பு நிலையங்கள்
குறித்த வட்டாரத்தில் ஒரு கட்சிக்கு ஒரு வாக்காளர் வாக்களிக்கும்போது அந்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கே அந்த வாக்கு செல்லும். வாக்களிப்பு முடிந்ததும் மாலை 4.00 மணிக்கு பிறகு அனைத்து வாக்களிப்பு நிலையங்களும் வாக்கு எண்ணும் நிலையங்களாக மாறிவிடும். மாலை 4.00 மணிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படும்.
காலைலிருந்து மாலை வரை வாக்களிப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள் மாலை 4.00 மணிக்குப் பிறகு வாக்கு எண்ணும் அதிகாரிகளாக மாறிவிடுவர். அந்த இடத்திலேயே வாக்குகள் எண்ணப்படும்.
வட்டார முடிவு உடனடியாக அறிவிக்கப்படும்
அதன்படி வாக்குகள் எண்ணப்பட்டு அந்த வட்டாரத்தில் எந்தக் கட்சி வெற்றி பெற்றுள்ளது என உயர் அதிகாரி அறிவிப்பார். அதன்படி வெற்றிபெற்ற கட்சியின் சார்பில் குறித்த வட்டாரத்தில் போட்டியிட்டவர் வெற்றிபெற்றதாக எடுத்துக் கொள்ளப்படுவார். சிலவேளை ஒரு வட்டாரத்திற்கு இரண்டு மூன்று வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்படலாம். அப்படியான சந்தர்ப்பம் வந்தால் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்குகள் எண்ணப்பட்டு ஒன்றாக சேர்க்கப்பட்டு வெற்றிபெற்ற கட்சி அறிவிக்கப்படும்.
வட்டாரத்திற்கான வாக்குப் பெட்டி உடைக்கப்படும் போது அதற்குள் அந்த வட்டாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள தபால் வாக்குகளும் கொட்டப்பட்டு முழுமையாகவே எண்ணப்படும். இதன்படி மாநகரசபையில் வட்டாரங்களுக்கான வெற்றிகள் அறிவிக்கப்படும். இதன்படி வெற்றிபெற்ற 66 பேரும் அறிவிக்கப்படுவார்கள்.
விகிதாசார தெரிவு
எஞ்சிய 44 பேரை இப்போது நாம் விகிதாசார முறைமையில் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. தற்போது கொழும்பு மாநகரசபையில் 31+13+3 என்ற வகையில் 47 வட்டாரங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்காக 66 பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும் விகிதாசார முறைமையில் 44 பேரை தெரிவு செய்யவதற்காக இந்த 47 வட்டாரங்களுக்கும் அளிக்கப்பட்ட வாக்குகள் முழுமையாக எண்ணப்படும்.
கொழும்பு மாநகரசபைக்கான இந்த நடவடிக்கை ஒரு பாடசாலையில் இடம்பெறும். உதாரணமாக கொழும்பு மாநகரசபைக்கு செல்லுபடியான 220000 வாக்குகள் கிடைத்துள்ளன என வைத்துக்கொள்வோம். இந்த 220000 வாக்குகளில் மொத்த உறுப்பினர்களான 110 பிரித்தால் 2000 ஆம் என விடைவரும்.
இப்போது 47 வட்டாரங்களில் ‘ஏ’ என்ற கட்சி 25 வட்டாரங்களை வென்றுள்ளது என்றும் பி என்ற கட்சி 15 வட்டாரங்களையும் சி என்ற கட்சி 7 வட்டாரங்களையும் வெற்றி பெற்றுள்ளது என்றும் உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்.
அதன்படி 25 வட்டாரங்களில் வெற்றிபெற்ற ஏ என்ற கட்சிக்கு 30 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் 15 வட்டாரங்களை வென்ற பி என்ற கட்சிக்கு 24 உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்றும் ஏழு வட்டாரங்களை வென்ற சி என்ற கட்சிக்கு 12 பேர் கிடைத்துள்ளார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். ( சில தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று பேர் தெரிவு செய்யப்படுவதால் வட்டாரங்களைவிட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்) இது உதாரணம் மட்டுமேயாகும். உண்மையாக வீதங்கள் மாறலாம்.
இதில் 47 வட்டாரங்களில் ஏ,பி, சி. என்ற கட்சிகள் பெற்றுக்கொண்ட முழு வாக்குகளும் எண்ணப்படும். இங்கு ஏ என்ற கட்சி 1 இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் எடுத்துள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதனை முதலில் பெற்ற விடையான இரண்டாயிரத்தால் பிரித்தால் அந்த கட்சிக்கு 55 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் ஏ என்ற அந்தக்கட்சி ஏற்கனவே வட்டாரமுறைமையில் 30 உறுப்பினர்களைப் பெற்றுவிட்டதால் மீதி 25 உறுப்பினர்கள் விகிதாசர முறையில் கிடைப்பார்கள்.
பி என்ற கட்சி 80 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு 40 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதில் பி என்ற கட்சி ஏற்கனவே 24 உறுப்பினர்களைப் வட்டார முறையில் பெற்று விட்டதால் அவர்களுக்கு விகிதாசர முறைமையில் 16உறுப்பினர்கள் கிடைப்பார்கள்.
சீ என்ற கட்சி 26000 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அதனை இரண்டாயிரத்தால் பிரித்தால் 13 உறுப்பினர்களை கிடைப்பார்கள். அந்தக் கட்சி ஏற்கனவே வட்டார முறையில் 12 உறுப்பினர்களை பெற்றுவிட்டதால் விகிதாசார முறைமையில் ஒரு உறுப்பினரைப் பெற்றுக்கொள்ளலாம்.
விகிதாசார முறையில் 44 உறுப்பினர்களே கொழும்பு மாநகர சபைக்கு உள்ளன. இந்நிலையில் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற ஆசனங்களை தவிர்த்து எஞ்சியுள்ள 2 ஆசனங்களை குறைந்த ஆசனங்களை வென்ற கட்சிகள் பெற்றுக்கொள்ளும்.
இந்த இடத்தில்தான் சிறிய கட்சிகளுக்கான சந்தர்ப்பம் உறுதி செய்யப்படும். அதன்படி விகிதாசர முறைமையில் போட்டியிட்ட கட்சிகளுக்கு எத்தனை உறுப்பினர்கள் கிடைத்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறிவிப்போம்.
அவர்கள் அதன்படி உறுப்பினர்களை எமக்கு அறிவிக்கலாம். அதன்படி விகிதாசார வேட்புமனுப்பட்டியலில் பெயரிடப்பட்டவர்கள் அல்லது வட்டாரமுறையில் தோற்றவர்கள் கூட நியமிக்கப்படலாம்.
பெண் பிரதிநிதித்துவம்
இவ்வாறு கொழும்பு மாநகரசபைக்கு 110 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். ஆனால் இங்கு பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் 25 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது சட்டம். அந்தவகையில் கொழும்பு மாநகர சபையை எடுத்துக் கொண்டால் குறைந்தது 110 பேரில் 27 பேராவது பெண்களாக இருக்க வேண்டும்.
இங்கு மொத்தமாக பெறப்பட்ட 220000 வாக்குகளிலிருந்து 20 வீதத்திற்கு குறைவாக பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்துவிட வேண்டும். அவர்களுக்கு பெண்களை நியமிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. அப்படி பார்க்கும் போது உதாரணமாக இரண்டு இலட்சம் வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனை இந்த 27 பெண் உறுப்பினர்களுக்காக வீதத்தினால் பிரித்தால் கிட்டத்தட்ட 7500 என்ற விடை வரலாம்.
இப்போது அந்த 7500 என்ற தொகையினால் ஏ பி மற்றும் சி என்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைப் பிரிக்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி 1இலட்சத்து 10 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது. அதனை 7500 ரூபாவால் பிரித்தால் ஒரு தொகை வரும். உதாரணமாக ஏ என்ற கட்சிக்கு 14உம், பி என்ற கட்சிக்கு 8 உம் சி. என்ற கட்சிக்கு 3 உம் விடைகளாக கிடைத்துள்ள என்று வைத்துக்கொள்வோம். இதுதான் குறித்த கட்சிகள் சார்பாக கொழும்பு மாநகர சபைக்கு செல்ல வேண்டிய பெண் பிரதிநிதித்துவங்களின் எண்ணிக்கையாக அமையும்.
தொடர்ந்து இந்தக்கட்சிகளின் வட்டாரங்களில் எத்தனைப் பெண்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். உதாரணமாக ஏ என்ற கட்சி வட்டார முறையில் ஐந்து பெண் உறுப்பினர்களைப் பெற்றிருந்தால் மிகுதி 9 பெண் உறுப்பினர்களை விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதாவது ஏ என்ற கட்சியானது 9 பெண் உறுப்பினர்களை தனக்கு விகிதாசாரம் மூலம் கிடைத்த 25 உறுப்பினர்களிலிந்து மாநகரசபைக்கு அனுப்ப வேண்டும்.
இந்த முறைமையையே அனைத்துக் கட்சிகளும் செய்ய வேண்டும். ஒரு வேளை ஒரு கட்சியின் சார்பில் வட்டார முறையில் ஒரு பெண் பிரதிநிதியும் வெற்றிபெறாவிடின் இங்கு விகிதாசாரத்தின்படி விகிதாசார முறையிலிருந்து வெற்றி பெற்றவர்களிலிருந்து பெண்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது கட்டாயமாகும்.
கொழும்பு மாநகர சபையை பொறுத்தவரை ஒரு கட்சி வட்டார மற்றும் விகிதாசார முறைமைகளில் 56 உறுப்பினர்களைப் பெற்றால் மேயரையும் பிரதி மேரையும் நியமனம் செய்யலாம். எனினும் கொழும்பு மாநகரசபையில் எந்தவொரு கட்சியும் 56 உறுப்பினர்களைப் பெறாவிடின் கூட்டாட்சியே நடைபெறும்.
வழிமூலம் – ரிஎன்ஏ செய்தி
http://www.puthinappalakai.net/2017/11/11/news/27202
Leave a Reply
You must be logged in to post a comment.