தமிழீழ நடைமுறை அரசை பிரகடனம் செய்திருந்தால், இலங்கைதீவின் சரித்திரமே மாறியிருக்கும்!
ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்
ஐக்கிய நாடுகள் சபை, 1945ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேளையில், அச் சபையில், ஐம்பத்தியொரு (51) நாடுகளே அன்று அங்கத்துவம் வகித்தன. அவையாவன : அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பொலிவியா, பிரேசில், பைலோரசியன் சோவியத் சோசலிச குடியரசு, கனடா, சிலி, சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, கியூபா, செக்கோஸ்லோவாகியா, டென்மார்க், டொமினிகன் குடியரசு, எக்குவடோர், எகிப்து, எல் சால்வடார், எத்தியோப்பியா, பிரான்ஸ், கிரீஸ், குவாதமாலா, ஹைட்டி, ஹோண்டுராஸ், இந்தியா, ஈரான், ஈராக், லெபனான், லைபீரியா, லக்சம்பர்க், மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நிகரகுவா, நோர்வே, பனாமா, பராகுவே, பேரு, பிலிப்பைன் குடியரசு, போலந்து, சவுதி அரேபியா, சிரியா, துருக்கி, உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு, தென் ஆப்பிரிக்க, சோவியத் சோஷலிஸ்ட் குடியரசு, ஐக்கிய ராஜ்யம், ஐக்கிய அமெரிக்கா, உருகுவே, வெனிசூலா மற்றும் யூகோஸ்லாவியா ஆகியவை.
இதனை தொடர்ந்து சில இடைவெளியிடையே, ஓர் சில நாடுகளிற்கு ஐ.நா. அங்கத்துவம் வழங்கப்பட்டது. 1990ம் ஆண்டளவில் எல்லாமாக, நூற்று ஐம்பத்தி ஒன்பது (159) நாடுகள் அங்கத்துவத்தை பெற்றிருந்தன. இவற்றில் முன்னைய சிலோன், தற்போதைய சிறிலங்காவினது அங்கத்துவத்திற்கான விண்ணப்பத்தை, பாதுகாப்பு சபையில் சோவியத் யூனியன் தமது வீற்ரோ அதிகரத்தை பாவித்து, இரு தடவைகள் நிராகரித்திருந்தது. இறுதியில், 1955ம் ஆண்டு சிறிலங்கா அங்கத்துவத்தை பெற்று கொண்டது.
1991ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, ஐ.நா.அங்கத்துவம் மிக உச்ச நிலையை அடைந்து, இன்று ஐ.நா. நூற்று தொன்னுற்று மூன்று (193) நாடுகளை கொண்டுள்ளது. இவற்றுள் ஐ.நா.வில் பார்வையாளர் அந்தஸ்த்தை கொண்டுள்ள வத்தீக்கான், பாலஸ்தீனம் ஆகிய இருவரும், அங்கத்துவ நாடுகள் என்ற அந்தஸ்த்தை பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சோவியத் யூனியன் 1991ம் ஆண்டு முற்றாக மாற்றம் அடைந்ததை தொடர்ந்து, பதினைந்து நாடுகள் புதிதாக உதயமாகியாது. நாம் இவ் நிலைகளை மிக உன்னிப்பாக பார்க்கும் இடத்தில், 1991ம் ஆண்டில் மேலும் ஏழு (7) நாடுகள் அங்கத்தவத்தை பெற்றிருந்தனா – கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு, எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியாவின் ஒருங்கிணைந்த நாடுகள், கொரியா குடியரசு ஆகியவற்றுடன், நூற்று ஆறுபத்தியாறு (166) ஆக அங்கத்துவம் அதிகரித்திருந்தது.
1992ம் ஆண்டு, அங்கத்துவம் மேலும் பதின்மூன்று (13) நாடுகளினால் அதிகரித்திருந்தது – ஆர்மீனியா, அஜர்பைஜான், போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, குரோஷியா, ஜோர்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா குடியரசு, சான் மரினோ, ஸ்லோவேனியா, தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றுடன் அங்கத்துவம் நூற்று எண்பத்தி நான்கு (184) ஆகியது.
இவற்றை தொடர்ந்து, 1994ம் ஆண்டு பலாவு; 1999ல் கிரிபட்டி, நவ்ரு, டோங்கா; 2000 ஆம் ஆண்டில் யுகோஸ்லாவியாவின் பெடரல் குடியரசு, துவாலு; 2002ல் சுவிட்சர்லாந்து, கிழக்கு தீமூர்; 2006ல் மொண்டெனேகுரோ மற்றும் 2011ல் தெற்கு சூடான் ஆகியவற்றுடன் தற்பொழுது நூற்று தொன்னுற்று மூன்று (193) நாடுகள் ஐ.நா.வில் வாக்குரிமை பெற்றவை. ஐ.நா.வில் அங்கத்துவம் வகிக்கும் சில நாடுகளின் பெயர்கள், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பார்வையாளர் அந்தஸ்த்தை பெற்ற வத்தீக்கான், பாலஸ்தீனம் போன்றவற்றிற்கு வாக்குரிமை கிடையாது. சுவிஸ்லாந்து பல வருடங்களாக பார்வையாளார் நாடாக இருந்த பின்னர், 2002 ஆண்டில் தனது அங்கத்துவ அந்தஸ்த்தை பெற்று கொள்ள சம்பந்தம் தெரிவித்தது.
1991ம் ஆண்டிற்கு பின், அங்கத்துவம் பெற்றுள்ள நாடுகளை நாம் ஆராய்வோமானால், இவற்றில் பெரும்பான்மையான நாடுகள், தமது சுதந்திரத்திற்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் இரத்தம் சிந்தி பாரீய அழிவுகளை சந்தித்த நாடுகளாகவே காணப்படுகிறது.
இதேவேளை, ஐ.நா.அந்தஸ்து அற்ற நாடுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ் நாடுகளின் அந்தஸ்திற்கான விண்பங்கள், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீற்ரோ அங்கீகாரத்தை கொண்ட நாடு ஒன்றினால், நிராகரிக்கப்பட்டதாகவே காணப்படுகிறது. இதில் சீன குடியரசு (தைவான்), கோசவா குடியரசு காணப்படுகிறது.
கோசவா குடியரசை, நூற்று பதின் ஓன்று (111) அங்கத்துவ நாடுகள் இன்று வரை அங்கீகரித்துள்ள போதிலும், கோசவாவிற்கு அங்கத்துவம் கொடுக்கப்படவில்லை.
சீனா மக்கள் குடியரசு, சீனா குடியரசு (தைவான்) ஆகிய இரு நாடுகளின் ஐ.நா. வரலாற்றை ஆராய்வோமானால், 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி வரை, ஐ.நா. பாதுகாப்பு சபையில், வீற்ரோ அதிகாரத்தை கொண்ட ஐந்து நிரந்தர அங்கத்தவர்களில் ஒருவராக, சிறிய தீவான சீன குடியரசு திகழ்ந்துள்ளது. 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி முதல் சீனா குடியரசிற்கு பதிலாக, சீனா மக்கள் குடியரசிற்கு பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அவ்வேளையில், சீனா குடியரசிற்கு பொதுச்சபையில் அங்கத்துவம் வழங்கப்பட்ட பொழுதிலும், அன்றைய ஜனதிபதி சியங் கே-சேக், ‘சீனா மக்கள் குடியரசு ஐ.நா.வில் அங்கத்தவம் பெற்றிருக்கும் வரை, தாம் அங்கு அங்கத்துவம் வகிக்க போவதில்லையென’ கூறி, ஐ.நா.விலிருந்து வெளியேறியிருந்தார்கள்.
இது சியங் கே-சேக்கினால் சீனா குடியரசு மக்களிற்கு இழைக்கப்பட்ட வரலாற்று தவறாகும். காலபோக்கில் சீனா குடியரசில் மனமாற்றம் ஏற்பட்டு, 1991ம் ஆண்டு முதல், இவர்கள் முழுமையான ஐ.நா அங்கத்துவம் அல்லது பார்வையாளர் அந்தஸ்த்திற்கு விண்ணப்பம் செய்த பொழுதிலும், அவர்களது விண்ணப்பத்தை சீன மக்கள் குடியரசு இன்று வரை வீற்ரோ செய்து வருகிறது.
அதேவேளை, இவ்விரு நாடுகளிற்கான உறவு சிறிது சிறிதாக முன்னேற்றமடைந்து வருகிறது. ஆனால் சீன மக்கள் குடியரசை பொறுத்த வரையில், சீனா என்பது ஒரே ஒரு நாடு, அது தான் சீன மக்கள் குடியரசு. தைவான் சீனா என்று பாவிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை, முன் வைத்து வருகின்றனர்.
தூர்அதிஸ்ட்டவசமாக, இருபது ஐ.நா. அங்கத்துவ நாடுகள் மட்டுமே, சீனா மக்கள் குடியரசான தைவானை, ஓர் இறைமை கொண்ட நாடாக அங்கீகரித்துள்ளது.
சரித்திரம் தொடர்கிறது
முன்னைய சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து புதிது புதிதாக உருவாக்கப்பட்ட நாடுகள் போன்று, சுதந்திரம் பெறுவதற்கு தகமையுடைய சுயநிர்ணயஉரிமை கொண்ட தேச விடுதலை போராட்டங்கள் யாவும், மீண்டும் இன்று ஐ.நா.வின் கதவுகளை தட்ட ஆரம்பித்துள்ளன.
தன்னாட்சி பிராந்தியங்களான ஸ்பெயினில் கத்தலோனிய மக்கள், ஈராக்கில் குருடீஸ் மக்களை இதற்கு ஊதரணமாக கொள்ளலாம். இதேவேளை இத்தாலியில் கூடுதலான தன்னாட்சியை நாடி நிற்கும் செல்வந்த மாநிலங்களான வேனிசை பிரதான நகராக கொண்ட வேனிற்ரோ, மிலானை உள்ளடக்கிய லோம்பாடி போன்றவையும் அங்கீகரத்தை நாடி நிற்கின்றனர்.
ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பிரதேசங்களில் சுதந்திரத்திற்கும், சுயநிர்ணயத்திற்குமான பல தேசவிடுதலை போராட்டங்கள் தமது மிக நீண்டகால சரித்திரத்தின் அடிப்படையில், தொடர்ந்து போராடி கொண்டிருக்கின்றனர். தூர்அதிஸ்டவசமாக, ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மிகவும் கொடுரமான முறையில் இவ் போராட்டங்கள் நாளுக்கு நாள் நசுக்கபடுவதும் மட்டுமல்லாது, போராடும் மக்களிற்கு எந்தவித அரசியல் தீர்வை ஆசியா ஆபிரிக்கா அரசுகள் முன் வைப்பதற்கு முனைவதாக தெரியவில்லை. இதனால் நடைபெற்று கொண்டிருக்கும் தேசவிடுதலை போராட்டங்கள், ஐ.நா.வின் கதவுகளை தட்டுகின்றனா.
ஸ்கோட்லாந்தின் சுதந்திரத்திற்காக 2014ம் ஆண்டு செம்டம்பர் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பின் வேளையில், பிரித்தானியவின் ஆளும், மற்றும் எதிர் கட்சியினரினால் மிதமிஞ்சி கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளினால், ஓர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வாக்கெடுப்பு தோற்கடிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் மார்ச் மாதம், பிரித்தானிய ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் நிலையில், ஸ்கோட்லாந்தின் சுதந்திரத்திற்கான இரண்டாவது வாக்கெடுப்பு தவிர்க முடியாதவொன்றாகும்.
இவ் நிலையில், ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கலாநிதி பூட்டஸ் பூட்டஸ்-காலியின் ஆருடம் செயல் வடிவம் பெறுவதாக தென்படுகிறது. அவர் ஒரு முறை தனது உரையில், “காலப் போக்கில், ஐ.நா.வில் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை சரியாக இரண்டு மடங்காக பெருகவுள்ளதாக” கூறியிருந்தார்.
நாம் உலக அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் வேளையில் – தூவக்குகளும், எறிகணைகளும் மட்டும் மக்களின் அரசியலை நிர்ணயிக்கவில்லை என்பதுடன், பேனா, காகிதம் நாவன்மை ஆகியவையும் உலகில் பல விடயங்களை வெற்றிகரமாக செய்துள்ளதை காணலாம்.
இலங்கை தமிழர்
இலங்கைதீவில் தமிழர்களை பொறுத்த வரையில், இரண்டு தசாப்பதங்களிற்கு மேலாக, தமிழர்களது தயாகபூமியான வடக்கு கிழக்கில், சகல கட்டமைப்புக்களை உள்ளடக்கிய ஓர் நடைமுறை அரசாங்கம் (de-facto state) மிக அண்மை காலத்தில், இருந்துள்ளது. ஆனால் சில காரணங்களுக்காக, அதன் நிர்வாகிகள், அவ் நடைமுறை அரசை ஒரு பொழுதும் ‘தனித்துவமான சுதந்திர பிரகடனம்’ (Unilateral Declaration of Independence – UDI) செய்யவில்லை!
2008ம் ஆண்டு யூன் மாதம், என்னால் ஓர் கட்டுரை, ஆங்கிலத்திலும் தமிழிலும் “ஐ.நா. அங்கீகாரமும், சுதந்திர தன்னாட்சி கொண்ட அரசுகளும்” என்ற தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. அவ் வேளையில், இக்கட்டுரை மிகவும் வரவேற்பை பெற்றிருந்ததுடன், கொழும்பு ஆங்கில தமிழ் ஊடகங்கள் உட்பட பிரபலியமான இணைய தளங்களிலும் வெளியாகியிருந்தது. இக் கட்டுரையை ஆங்கிலத்தில் பிரசுரித்திருந்த கொழும்பு ஊடகம், சில காரணங்களிற்காக சிறு மாற்றங்களை செய்திருந்தது.
அக்கட்டுரையின் முடிவில், பின்வரும் விடயங்களை எழுதியிருந்தேன் – “தற்பொழுது ‘தமிழ் ஈழத்திற்கு’ உள்ள குறை இரண்டாகவே இருக்க முடியும். ஓன்று அங்கீகாரம், மற்றையது சொந்த நாணயம். தமிழ் ஈழம் தமக்கான வங்கி, பொருளாதார கட்டமைப்புக்களை கொண்டுள்ள போதிலும், இங்கு சிறிலங்காவின் நாணயமே பாவனையில் இருந்து வருகிறது. ஆகையால் கூடிய விரைவில் தமிழ் ஈழத்திற்கான சொந்த நாணயம் உருவாகுவது வரவேற்க கூடிய விடயம். அதேவேளை தமிழ் ஈழத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கு, புலம் பெயர் வாழ் தமிழ் மக்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டும். இவ் அடிப்படையில, கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வரும் தமிழ் ஈழத்தின் சுதந்திர தன்னாட்சி, முழுமை பெற்றுவிடும்.”
இக்கட்டுரை கொழும்பு பத்திரிகைகளில் வெளியாகிய வேளையில், காலம் சென்ற மூத்தா ஆங்கில பத்திரிகையாளர் திரு சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்கள், கொழும்பில் வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் ஆங்கிலப் பத்திரிகையில் எனது கட்டுரையை படித்ததும், அப்பத்திரிகையில் ஓர் பிரதியை எனக்கு தபால் மூலமாக அனுப்பியிருந்ததுடன், அதில் ஓர் சிறு குறிப்பையும் எழுதியிருந்தார். “இப்படியான ஒரு கட்டுரை, விசேடமாக ஓர் புலம்பெயர் வாழ் தமிழரினால் எழுதப்பட்டு, அதுவும் கொழும்பு பத்திரிகையில் வெளியாவது ஆபூர்வமானது” என கூறியிருந்தார். காரணம் அவ் வேளையில் போரில் யார் வெல்வார்களோ அவர்களே அவர்களது மக்களினால் போற்றப்படவுள்ளார்கள் என்ற கருத்தை, இலங்கைதீவு மட்டும் அல்லாது சர்வதேசமே கொண்டிருந்தது.
மூத்தா ஆங்கில பத்திரிகையாளர் திரு சுப்பிரமணியம் சிவநாயகம் அவர்களது எட்டாவது சிரார்த்ததினம் எதிர்வரும் 28ம் திகதி ஆகும்.
எது என்னவானாலும், தமிழீழ நடைமுறை அரசாங்கத்தை நிர்வாகித்தோர், ஓர் ‘தன்னிச்சையான சுதந்திர பிரகடனத்தை’ (Unilateral Declaration of Independence – UDI) அன்று செய்து இருப்பார்களெயானால், இன்று இலங்கைதீவின் சரித்திரமே வேறாக மாறியிருக்கும்.
மிகவும் வேடிக்கையான விடயம் இன்று என்னவெனில், உள்நாட்டில் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள், இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றை அன்று எதிர்த்தவர்கள், போர் மிகவும் உக்கிரமமாக நடைபெற்ற வேளையில், தாம் இலங்கை இந்திய ஒப்பந்தந்திற்கு மேலான ஓர் தீர்வை தமிழ் மக்களிற்கு கொடுக்க இருப்பதாக, இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்கும் கூறினார்கள். அதாவது 13வது திருத்தச் சட்டத்திற்கு மேலாக. ஆனால் இன்று அதே நபர்கள், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும், இலங்கைதீவில் தமிழர்களிற்கு என்ன அரசியல் பிரச்சனை உள்ளதுவென கேள்வி எழுப்புகிறார்கள்.
இந்தியாவாக இருந்தாலென்னா, சர்வதேச சமூதாயமாக இருந்தாலென்ன அவர்கள் யாரும் குருடர் செவிடர் அல்லா என நம்புகிறேன். இவர்கள் முன்னைய காலங்களில் உலகில் எந்தனையோ சர்ச்சைகளிற்கு முன்னின்று தீர்வு கண்டவர்கள். ஆகையால் நடக்க இருப்பவற்றை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வேளையில், முன்னாள் அமெரிக்கா ஜனதிபதி, ஏபிரகாம் லீங்கன் கூறிய ஓர் கருத்து நினைவில் வருகிறது – “எல்லோரையும் சிலவேளைகளிலும், சிலவேளைகளில் எல்லோரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லோரையும் எல்லாவேளையிலும் மடையர் ஆக்க முடியாது” என கூறியுள்ளார். (முற்றும்)
Leave a Reply
You must be logged in to post a comment.