வரவு செலவுத் திட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

வரவு செலவுத் திட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

நமது நிருபர் தயாளன்( யாழ்ப்பாணம்)

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள 10 பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட 2018ம் ஆண்டில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் பிரதமரின் ஆலோசகர் மற்றும் 5 மாவட்டச் செயலாளர்களிற்கு இடையிலான விசேட சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்திற்கான குறித்த விசேட கலத்துரையாடல் பிரதமரின் ஆலோசகர் சரித்த ரத்வத்தை தலமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள் தலைமையிலும் வவுனியா மற்னும் மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர்கள் தலமையிலான குழுவினரும் பங்கு கொண்டிருந்தனர்

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த ஆண்டிற்கான விசேட திட்டமாக வட்டுவாகல் பாலம் உள்ளிட்ட சீரமைப்புப் பணியும் 468 குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டின் கீழாக 1905 ஏக்கர் மரமுந்திரிகைத் தோட்டம் தொடர்பிலும்  ஆராயப்பட்டது. குறித்த மர முந்திரைத் தோட்டத்திற்காக 72 ஆயிரம் மரமுந்திரை விதை வழங்கப்படுவதோடு அதன் முதல் கட்டப் பணிகளிற்காக 7.2 மில்லியன் ரூபாவும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் நடுகை காலத்தில் இருந்து 3 ஆண்டுகளில் பெறப்படும்  மரமுந்திரியை  அப்படியே சந்தைப்படுத்தும்போது உற்பத்தியாளர்கள் குறைந்த இலாபத்தையே ஈட்டமுடியும் . ஆனால் மரமுந்திரியைப் பதப்படுத்தி விற்பனை செய்யும்போது அதிக இலாபம் நேரடியாக உற்பத்தியாளர்களுக்குச் சென்றடையும். எனவே மாவட்டத்தில் அதற்கான நிலையம் அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் அடுத்த ஆண்டு வீதி சீரமைப்பிற்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபாவும் மருதங்கேணிப் பிரதேசத்தில் 50 ஏக்கர் மரமுந்திரைத் திட்டம் என்பன முன்னெடுப்பதோடு வடமராட்சிப் பகுதியில் உள்ள லகூன் சீரமைப்பு , ஆறுமுகம் திட்டத்தின் கீழான உப்பாறுப் பகுதி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் நன்நீர் தேக்கத் திட்டம் ஆகியவற்றிற்கான அளவீட்டுப் பணிகளை மேற்கொண்டு திட்டித்திற்கான விரைவு படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகப் பகுதியில் போரிற்கு முன்பு பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் புகையிலைச் செய்கையை மேற்கொண்டு வாழ்ந்த நிலையில் தற்போது புகையிலைச் செய்கை தடுக்கப்பட்டுள்ளதனால் அப்பகுதியில் போதிய வருமானம் இன்றி குறைந்தளவு மக்களே வாழ்கின்றனர். ஆனால் போதிய நில வாய்ப்பு உள்ளது.  இப் பகுதிகளில் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் மக்களை திரும்ப அழைக்க முடியும். அதனால் தீவுப் பகுதி மக்களிற்கும் குறித்த மரமுந்திரைத் திட்டத்திற்கான விதைகளையும் அதற்கான மாணியத்தையும் வழங்குவதோடு அவை அறுவடையை நெருங்கும்போது அங்கும் ஒரு  தொழிற்சாலையை அமைக்க முன்வர வேண்டும் என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

பதிலளித்த பிரதமரின் ஆலோசகர் இது தொடர்பில் உடன் ஆராயப்படும் அத்துடன் மர முந்திரிகை கூட்டுத்தாபன அதிகாரிகள் அடங்கிய குழுவினை அப்பகுதிக்கு அனுப்பி அப்பகுதியில் குறித்த செய்கை மேற்கொள்ள முடியுமா ? என ஆய்வு செய்யப்படும். செய்கைக்கு உகந்த நிலம் இருப்பின் அதற்கான ஏற்பாட்டினை செய்து கொடுப்பதாகத் தெரிவித்தார்.

இநேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் திட்டங்களுடன்  சிறப்பாக  முன்மொழியப்பட்ட பரந்தன் முதல் முருகண்டி வரையிலான ஏ9 பாதைக்கான மாற்றுப் பாதையும் தார்ப்படுக்கை வீதியாக அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பணிக்கான 1665 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று ஆயிரம் ஏக்கர் மரமுந்திரிகைத் திட்டம் மற்றும் கிளிநொச்சி பொதுச் சந்தைக் கட்டிட அபிவிருத்திக்கு 765 மில்லியன் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கூறப்பட்டது.

இதேபோன்று வவுனியா மன்னார் மாவட்டங்களில் அடுத்த ஆண்டு முன்னெடுக்கும் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.


 

About editor 2996 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

1 Comment

  1. முன் எப்போதும் இல்லாதவாறு வட மாகாணத்துக்கு பெருந்தொகை நிதி 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ததேகூ நிதி அமைச்சர் மங்கள சமரவீராவிடம் கையளித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரா ஒரு முற்போக்குவாதி. இனம், மொழி என வித்தியாசம் பார்க்காத ஒரு அமைச்சர். 2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் வாதிக்கப்பட்டு ஒப்புதலுக்கு நாடாளுமன்றத்தில் வாக்குக்கு விடப்பட்ட போது ததேகூ அதற்கு அணியமாக வாக்களித்துள்ளது. ஒருவர் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் பெயர் சிவசக்தி ஆனந்தன். கட்சி இபிஎல்ஆர்எவ். வாக்கெடுப்பு நேரம் அவர் சபையில் இருக்கவில்லை. வேண்டும் என்றே நாடாளுமன்றம் வருவதைத் தவிர்த்திருக்கிறார். முஸ்லிம்கள் ஆளுக்கொரு கட்சி வைத்திருந்தாலும் தங்களது மக்களுக்கு தேவையான பொருளாதார உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுக் கொடுக்கிறார்கள். இந்த உத்தி தமிழர் தரப்பில் கையாளப்படுவது குறைவு. தெரியாமல்தான் கேட்கிறோம் இந்த 2018 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கில் பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை நிதி சிவசக்தி ஆனந்தனுக்கு வேண்டாமா? அரசியலையும் பொருளாதர மேம்பாட்டையும் போட்டுக் குழப்புவதில் பயனில்லை.

1 Trackback / Pingback

  1. Nakkeran

Leave a Reply