இஸ்ரேல் பிறக்க வழி செய்த ‘பால்ஃபோர்’ பிரகடனத்தின் நூற்றாண்டுப் பயணம்: வாழ்த்தும் யூதர்கள், விமர்சிக்கும் பாலத்தீனர்கள்
இந்த இரு தரப்பினரின் வரலாற்றுப் பாடத்திலும் 1917 நவம்பர் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவரது ‘பால்ஃபோர் பிரகடனம்’ முக்கியப் பாடம். ஆனால், இரு இடங்களிலும் வேறுபட்ட தேசிய உரையாடலாக அது இருக்கும்.
அரபு, இஸ்ரேல் மோதலின் தொடக்கப் புள்ளியாக இதைப் பார்க்க முடியும். இந்த பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு வியாழக்கிழமையோடு நூறாண்டு நிறைவடைந்தது.
மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் நதியின் கிழக்குக் கரை வரையில் உள்ள, பாலத்தீனம் என்று அப்போது அறியப்பட்ட, தங்களது வரலாற்றுத் தாயகத்தில் யூதர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் எனக் கோரிய ஜியோனிஸத்தின் ஆதரவாளரான வால்டர் ரோத்ஷீல்டு பிரபுவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் அப்போதைய பிரிட்டன் வெளியுறவுச் செயலாளரான பால்ஃபோர் இந்தப் பிரகடனத்தை வெளியிட்டார்.
“பாலத்தீனத்தில் யூத மக்களுக்கு ஒரு தேசியத் தாயகம் அமைப்பதை,” பிரிட்டிஷ் அரசு ஆதரிப்பதாக 67 சொற்களில் எழுதப்பட்ட அந்தப் பிரகடனம் குறிப்பிட்டது.
அதே நேரத்தில் அங்கு இருந்த யூதர்கள் அல்லாத சமூகங்களின் குடிமை, மத உரிமைகளுக்கு எதுவும் பாதகம் ஏற்படுத்தக்கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது.
பாலத்தீனர்கள் இதை துரோகமாகப் பார்த்தனர். குறிப்பாக அப்போது ஓட்டோமான் துருக்கியர்களால் ஆளப்பட்ட அராபியர்களின் அரசியல் மற்றும் ராணுவ ஆதரவை முதல் உலகப் போரின்போது பெறுவதற்காக பிரிட்டன் அளித்த வேறொரு வாக்குறுதியில் இருந்து முரண்படுவதாக அவர்கள் கருதினர்.
மத்தியக் கிழக்கின் பெரும்பகுதியை அப்போது உள்ளடக்கி இருந்த ஓட்டோமான் பேரரசியில் இருந்து பல இடங்களில் விடுதலை பெறுவதற்கான அராபியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாக அந்த வாக்குறுதி குறிப்பிட்டிருந்தது. இந்த வாக்குறுதியில் பாலத்தீனத்தைப் பற்றிய குறிப்பு இல்லை என்றபோதும் இந்த வாக்குறுதி பாலத்தீனத்தையும் குறிப்பதாக அராபியர்கள் எடுத்துக்கொண்டனர்.
“பாலத்தீன மக்களுக்கு எதிராக பிரிட்டன் ஒரு குற்றமிழைத்ததாக நீங்கள் கருதுகிறீர்களா?” என்று பாடம் நடத்தும்போது கேட்கிறார் மேற்குக் கரை நகரான ரமல்லாவில் உள்ள பாலத்தீனப் பள்ளி ஒன்றின் ஆசிரியை. எல்லா மாணவர்களும் கை தூக்கி ஆமோதிக்கின்றனர்.
ஆம் என்று கூறிய ஒரு 15 வயது மாணவி, “இந்தப் பிரகடனம் சட்டவிரோதமான ஒன்று. ஏனெனில் இது பிறப்பிக்கப்பட்டபோது பாலத்தீனம் ஓட்டோமான் பேரரசின் அங்கமாகவே இருந்தது. பிரிட்டன் அதைக் கட்டுப்படுத்தவில்லை,” என்றார்.
“இப் பகுதியில் அரேபியர்கள் சிறுபான்மையினர் என்று பிரிட்டன் கருதியது. ஆனால், இப்பகுதி மக்கள் தொகையில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களாக அரேபியர்கள் இருந்தனர்,” என்றார் அந்த மாணவி.
‘பெரிய நம்பிக்கை’
உயர்நிலைப் பள்ளியில் பால்ஃபோர் பிரகடனம் பற்றிய பாடம் ஒன்றைப் படிக்கும் இஸ்ரேலிய மாணவர்கள் பிரிட்டிஷ் ஈடுபாட்டை நேர்மறையாகப் பார்க்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது.
வட இஸ்ரேலில் உள்ள பால்ஃபோரியா என்ற சிற்றூரைச் சேர்ந்த நோகா யெஹிஜிகிலி என்ற ஒன்பது வயது சிறுமி இந்தப் பிரகடனத்தின் ஹீப்ரூ மொழி பெயர்ப்பை மனப்பாடம் செய்துவிட்டார்.
இந்தப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட நிமிடமே ஜியோனிசத்துக்கு பெரிய நம்பிக்கையையும் உந்துதலையும் அது தந்தது என்கிறார் அச்சிறுமியின் தந்தை நிவே.
பிரிட்டிஷ் அரசாங்கம் அப்படி ஒரு பிரகடனத்தை தந்திருப்பதால் ஒரு நாள் யூத தேசம் அமைக்கப்பட வாய்ப்பிருப்பதாக மக்கள் நினைத்தனர். 1948ல் இஸ்ரேலிய அரசு அமைக்கப்பட்டது.
1925ல் பால்ஃபோர் அங்கு வந்தபோது, நிவேவின் தாத்தா உள்ளிட்ட பால்ஃபோரியா வாசிகள் பாலத்தீனத்தில் பெருகி வந்த யூத மக்கள் தொகையின் ஒரு பகுதியினர். அவர்கள் பால்ஃபோரை ஒரு நாயகனைப் போல வரவேற்றனர். அப்போது அப்பகுதி பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
பாலத்தீனத்தை பிரிட்டனுக்கு ஒப்பளிக்கும் பன்னாட்டுக் கழகத்தின் (ஐ.நா.வுக்கு முந்திய உலக அவை) தீர்மானத்தில் பால்ஃபோர் பிரகடனம் முறைப்படியாக ஏற்கப்பட்டது.
ஒப்பளிப்புக் காலத்தின் முதல் பாதிக் காலத்தில் அலையலையாக யூதர்கள் பாலத்தீனத்தில் குடியேறுவதை பிரிட்டன் அனுமதித்தது. ஆனால், அரேபியர்கள் திருப்பியடிக்கத் தொடங்கிய நிலையில், ஹிட்லரின் ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் என்ற யூத இன அழிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பி வந்தவர்களை பிரிட்டன் எப்படி இங்கே குடியேற அனுமதிக்க மறுத்தது என்பதை இஸ்ரேலியர்கள் நினைவுகூர்கின்றனர்.
நிறைவேற்றுவதில் சிரமம்
“நாஜிக்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு அரசியல் நிலைமை மோசமாகிவிட்டது. அரபு நாடுகளின் நட்பும் உதவியும் இங்கிலாந்துக்குத் தேவைப்பட்டது. எனவே இந்தப் பிரகடனத்தை நிறைவேற்றுவதை பிரிட்டன் மட்டுப்படுத்தவேண்டியதாயிற்று. இது ஒரு பரிதாப நிலை,” என்கிறார் ஜெருசலம் ஹீப்ரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூத் லபிடோத். இவர் பால்ஃபோர் பிரகடனத்தை ஆய்வு செய்தவர்.
இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டு முன்னதாக, 1938-ம் ஆண்டு ஜெர்மனியை விட்டு வெளியேறியவர் பேராசிரியர் லபிடோத். எனவே அவருக்கு இந்தப் பிரகடனத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. “பாலத்தீனத்துக்கு திரும்பி வருவதற்கான உரிமையின் ஊற்று இந்தப் பிரகடனம்தான். எனவே அதற்கு மிகுந்த நன்றியுடையவன் நான்,” என்கிறார் அவர்.
‘நீண்டகால உறுதிமொழி’
தமது நாட்டை நிறுவுவதற்கான முக்கிய மைல்கல் இந்தப் பிரகடனம் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இந்தப் பிரகடனத்தின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவரை பிரிட்டன் அழைத்தது.
இஸ்ரேலிய பாலத்தீன அமைதிக்கான நம்பிக்கைகள் மங்கிவரும் இந்த நேரத்தில் பிரிட்டனின் இந்த முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியுள்ளது. பால்ஃபோர் பிரகடனத்தை பிறப்பித்ததற்காக பிரிட்டன் மன்னிப்பு கோரவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
“காலம் கடந்து செல்வதால் பிரிட்டிஷ் மக்கள் வரலாற்றின் பாடத்தை மறக்கிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்றார் பாலத்தீன கல்வி அமைச்சர் சப்ரி சய்தாம்.
இஸ்ரேலோடு கூடவே பாலத்தீனர்கள் தங்களுக்கான அரசை உருவாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த இருநாட்டுக் கொள்கையை சர்வதேச சமூகமும் ஆதரிக்கிறது.
“பாலத்தீனம் சுதந்திர நாடாகவும் நீண்ட காலம் நிறைவேற்றப்படாத வாக்குறுதி நிறைவேற்றப்படவும் தற்போது நேரம் வந்துவிட்டது,” என்கிறார் சப்ரிசய்தாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.