பூனை என்ன நிறமானாலும் பருவாயில்லை  அது எலி பிடித்தால் போதும்!

பூனை என்ன நிறமானாலும் பருவாயில்லை  அது எலி பிடித்தால் போதும்!

நக்கீரன்

“உத்தேச அரசமைப்பு இன்னும் ஒரு வடிவத்தை எடுக்கவில்லை. இப்போது பல்வேறு தரப்பினரதும் யோசனைகள் மட்டுமே முன் வைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு தரப்புகளினாலும் பிரேரிக்கப்பட்ட யோசனைகளில் இணக்கம் காணப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கி ஓர் இடைக்கால அறிக்கை மட்டுமே வெளியாகியிருக்கின்றது. இப்போது இடைக்கால அறிக்கையின் மீது நாடாளுமன்றத் தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்த வாரத்திலும், இவ்வாரம் திங்கட்கிழமையன்றும் ஒன்று கூடி, விவாதித்துத் தமது கருத்தை முன்வைத்திருக்கின்றன” என எழுதிவிட்டு “”கானல் நீராகும் அரசமைப்பு முயற்சி” என அறிதியிட்டு எழுவது  ஒரு முரண்பாடு. அதில் அறம் இல்லை. பொருள் இல்லை.

“கானல் நீராகுமா அரசமைப்பு முயற்சி?” என்று கேள்வி கேட்டு எழுதுவது சரியாக இருந்திருக்கும். அதைவிடுத்து “கானல் நீராகும் அரசமைப்பு முயற்சி” என அடித்துச் சொல்வது  வேறு ஆகும். சண்டை தொடங்கு முன்னரே ஆசிரியர் வெள்ளைக் கொடி காட்டுவது நியாயமில்லை.  அது கோழைத்தனம்.   அது, இந்த அரசமைப்பு முயற்சி வெற்றிபெறக் கூடாது என்ற  எண்ணத்தை வெளிக்காட்டுகிறது.

அரசமைப்பு சபையில்  3 நாள்கள் நடக்க இருந்து விவாதம்   5 நாள் நடைபெற்றது  நம்பிக்கை தருவதாகவே உள்ளது. அமைச்சரும் நா.உ  ஆன டிலான் பெரேரா பேசும்போது தான் சந்திரிகா குமாரதுங்கா 2000 இல் கொண்டுவந்த பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பை இப்போதும்  ஆதரிப்பதாக  பேசியிருக்கிறார்.

பேச்சு வார்த்தை என்றால் விட்டுக் கொடுப்புக்கள் இருக்கவே செய்யும். ஏக்கியஇராஜ்ஜிய என்றால் ஒற்றையாட்சிதான் என்று சிலரும் இல்லை ஒருமித்த நாட்டைக் குறிக்கிறது என்று சிலரும் வாதிடுகிறார்கள். அது ஒற்றையாட்சியாகவே இருந்து விட்டுப் போகட்டும். இன்று ஒற்றையாட்சிக்கான வரைவிலக்கணம் மாறிவிட்டது. ஒற்றையாட்சி என்றால் அதிகாரம் முழுதும் ஒரு மையத்தில்தான் குவிந்திருக்கும். அதிகாரம் பகிரப்படாது. ஆனால் இணைப்பாட்சியில் இரண்டு அதிகார மையங்கள் இருக்கும். அதிகாரப் பகிர்வு யாப்பிலேயே இடம் பெறும். 13ஏ சட்ட திருத்தமே இலங்கையில் மத்தி, மாகாணம் என்ற இரண்டு  அதிகார மையங்களை உருவாக்கியுள்ளது. உள்ளடக்கத்தில் அது அரைவாசி (quasi-federal) இணைப்பாட்சிதான்.

ஸ்கொட்லாந்து பிரதேசத்துக்கு இணைப்பாட்சியில் காணப்படும் அத்தனை அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒரு  பொது வாக்கெடுப்ப நடத்தி பிரிந்து போகவும் ஸ்கொத்லாந்து மக்களுக்கு உரிமை   இருக்கிறது. பொது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. அது தோல்வியில் முடிந்தது வேறு கதை.

“இந்தப் புதிய அரசமைப்பு மூலம் தீர்வு ஒன்றை எதிர்பார்த்து நிற்கும் தமிழர்கள் ஏமாறுகின்றமை தவிர்க்க முடியாததாகி விடும்”என எதிர்கூறல் கூறப்பட்டுள்ளது. எமது மக்கள் புத்திசாலிகள். எழுபது ஆண்டு கால அரசியல் அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு பணியாரத்துக்கும் சிலுசிலுப்பைக்கும் உள்ள வேறுபாடும்  நன்றாகத் தெரியும்.

எனவே உருவத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உள்ளடக்கத்தை நாம் பார்க்க வேண்டும். “இனிமேல் யாரும் நாடாளுமன்றத்  தேர்தலில் நிற்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் மாகாண சபைத் தேர்தலில்தான் போட்டியிட விரும்புவார்கள்” என முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்கா நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அதில் பொருள் இருக்கிறது. கடந்த காலத்தில்  நா.உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் துறந்துவிட்டு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள்.

பூனை என்ன நிறமானாலும் பருவாயில்லை. அது எலி பிடித்தால் போதும்.  ததேகூ இன் நம்பிக்கை அதுதான்.

 

நக்கீரன்


கானல் நீராகும் அரசமைப்பு முயற்சி

புதிய அரசமைப்பு ஒன்றை எப்படியாவது மக்கள் மத்தியில் செலுத்தி விடவேண்டும் என்பதற்காக ஒரு தரப்பும் –
எப்படியாவது அதனைத் தோற்கடித்துவிட வேண்டும் என் பதற்காக மற்றொரு தரப்பும் –
மாறி மாறி கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.
புதிய அரசமைப்பு முயற்சி குறித்து இந்தத் தரப்புகள் கூறும் விளக்கங்கள், வியாக்கியானங்களைப் பார்க்கும்போது “குருடன் யானையைப் பார்த்த கதைதான்’ நினைவுக்கு வருகின்றது.
உத்தேச அரசமைப்பு இன்னும் ஒரு வடிவத்தை எடுக்கவில்லை. இப்போது பல்வேறு தரப்பினரதும் யோசனைகள் மட்டுமே முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
பல்வேறு தரப்புகளினாலும் பிரேரிக்கப்பட்ட யோசனைகளில் இணக்கம் காணப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கி ஓர் இடைக்கால அறிக்கை மட்டுமே வெளியாகியிருக்கின்றது.
இப்போது இடைக்கால அறிக்கையின் மீது நாடாளுமன்றத் தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கடந்த வாரத்திலும், இவ்வாரம் திங்கட்கிழமையன்றும் ஒன்று கூடி, விவாதித்துத் தமது கருத்தை முன்வைத்திருக்கின்றன.
இந்த இடைக்கால அறிக்கையின் மீது மக்களின் கருத்தும் திரட்டப்படும் என்றும் –
அதனடிப்படையில் நகல் யாப்பு ஒன்று உருப்பெறும் என்றும் – கூறப்படுகின்றது.
ஆனால், புதிய அரசமைப்பு குறைந்த பட்சம் நகல் வடிவத்தை எடுக்க முன்னரே அதனை சிலாகித்தும், விமர்சித்தும் கருத்துகள் தீவிரமாக முன்வைக்கப்படத் தொடங்கிவிட்டன.
குறிப்பாகக் கூட்டு எதிரணி, புதிய அரசமைப்பை ஏற்படுத்தும் முயற்சிக்கு எதிராக ஒரு போர்ப் பிரகடனமே செய்யும் நிலைக்குச் சென்று விட்டது.
எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறும் பகிரங் கக் கூட்டத்தில் இந்தப் போர்ப் பிரகடனத்துக்கான சங்கு ஊதப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
“இல்லாத நாடகத்தில் எல்லோரும் நடிப்பது போல’ இன்னும் ஒரு வடிவம் எடுக்காத அரசமைப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் பிரசாங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன.
தற்போதைய அரசமைப்பில் பெளத்த மதத்துக்கு வழங்கப்பட்ட மேலான இடமும் முக்கியத்துவமும் அடியோடு பறிபோய் விட்டன என்றும் –
அரசு ஒற்றையாட்சி முறையை இழந்து சமஷ்டி முறைமைக் குள் போவதால் நாடு பிளவுபடப் போகின்றது என்றும் –
கூட்டு எதிரணி கூக்குரலிடுகின்றது. புதிய அரசமைப்பால் நாட்டுக்குள் பேரழிவு வந்து விட்டது என்றும் அது அலறுகின்றது.
ஆனால், அரசுத் தரப்போ – குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் – நாட்டின் அரசமைப்பில் பெளத்தத்துக்குக் கொடுக்கப்பட்ட மேலான இடம் தொடர்ந்தும் உறுதி செய்யப்படும், அதில் மாற்றமில்லை என்கின்றனர்.
“நாட்டின் அரசமைப்பு ஒற்றையாட்சி முறைமையிலிருந்து சமஷ்டி முறையின் அடிப்படைகளைக் கொண்டதாக மாற்றப்பட மாட்டது. அதற்கு நான் இடமளிக்கவே மாட்டேன்” – என்று நேற்று முன்தினம் அம்பாறையில் கமுனுபுர பெளத்த மத்திய நிலையத்தில் பெளத்த பிக்குகளுக்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேன கூறுகின்றார்.
ஆனால் தமிμத் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் – குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், இலங்கைத் தமி ழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எம்.பி., செயலா ளர் துரைராஜசிங்கம் மற்றும் சுமந்திரன் எம்.பி. போன்றோர் புதிய அரசமைப்பு விடயம் சமஷ்டி முறைமைக்கான அடிப்படை களைத் தன்னகத்தே கொண்டதாக அமையும் என்று அடிக்கடி கூறி வருகின்றனர்.
ஆனால், ஒரே அரசமைப்பை – அது நகல் வடிவத்தைக் கூட எடுக்க முன்னர் – ஒவ்வொருவர், ஒவ்வொரு விதமாக அடையாளப் படுத்தவும், விமர்சிக்கவும் முற்பட்டுள்ள நிலைமையே நாம் இப் போது காண்கின்றோம்.
அதேசமயம் –
புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிக்கு எதிரான கூட்டு எதிரணியின் கை தெற்கில் பிரசார ரீதியிலும் ஆதரவு மட்டத்திலும் அதிகம் ஓங்குகின்றமையையும் –
புதிய அரசமைப்பைக் கொண்டு வரமுயற்சிக்கும் நல்லாட்சி அரசின் நிலைமை தற்காப்புத் தந்திரோபாயத்தைக் கைக்கொண்டு பின்வாங்கும் போக்கு நிலைமை நோக்கி நகர்கின்றமையை யும் –
அரசியல் அவதானிகள் நன்கு ஊன்றிக் கவனித்து, நிலையை வெளிப்படுத்தி வருகின்றார்கள். தெற்கில் இதே கடும் போக்குத் தொடர்ந்து நீடித்துத் தீவிரமாகுமானால் புதிய அரசமைப்பு முயற்சி முன்நகராமலேயே தோற்றுவிடுவது தவிர்க்க முடியாதாகி விடும் என்கின்றனர் நடுநிலை அவதானிகள்.
அதுதான் நிலைமை என்றால் – யதார்த்தம் என்றால் – இந்தப் புதிய அரசமைப்பு மூலம் தீர்வு ஒன்றை எதிர்பார்த்து நிற்கும் தமிழர்கள் ஏமாறுகின்றமை தவிர்க்க முடியாததாகி விடும்.

About editor 3188 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply