புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழும் வகையில் அரசியல் யாப்பில் மாற்றம் வேண்டும்
புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற 2 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற வகையில் இந்த நாட்டில் அரசியல் யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இலங்கை நாடாளுமன்றில் இடம்பெறும் அரசியல் யாப்பு முன்மொழிவு விவாத்த்தில் பங கு கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
வரலாற்றில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புகள் தமிழ் மக்களுக்குரியதாக இல்லாத காரணத்தால் பல இழப்புகள், பல துன்பங்களைச் சந்தித்தது.
இந்த நாடு ஓர் ஐக்கிய நாடாகவும் மத சார்பற்ற நாடாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக, இலங்கையின் அயல் நாடுகளான இந்தியா, நேபாளம் போன்றவற்றை எடுத்துக்கொண்டால், அங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் அதிகமாக இருந்தாலும் மத சார்பற்ற நாடாகத்தான் அவர்கள் யாப்பை அமைத்து வைத்திருக்கின்றார்கள்.
அந்த வகையில் இந்த நாடு ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்.அதேநேரத்தில் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் அரச கரும மொழிகளாக்கப்பட வேண்டும். ஏனென்றால், சிங்களம் அரச கரும மொழியென்று பிரகடனப்படுத்தப்பட்டு, அதற்குப்பின் அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்தில் தமிழும் அரச கரும மொழியாதல் வேண்டுமென சேர்க்கப்பட்டது. இதன்காரணத்தால்தான் 68 வருடங்களின் பின்பு தமிழில் தேசிய கீதம் பாட வேண்டிய ஒரு சூழ்நிலை வந்ததென்று நான் நினைக்கின்றேன். அன்று அந்த யாப்பில் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் அரச கரும மொழியென்று இடம்பெற்றிருந்தால் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு 68 வருடங்கள் தேவையில்லை. நாட்டில் இருக்கின்ற தமிழ், சிங்கள மொழிகள் அரச கரும மொழிகள் என்பது வரவிருக்கின்ற புதிய யாப்பில் இடம்பெற வேண்டும்.
அடுத்து, அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கையிலும் சரி, 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் சட்டத்திலும் சரி, “மாகாணசபை நிர்வாகம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அது “மாகாண அரசு” என்று புதிய யாப்பில் இடம்பெற வேண்டும்.
மேலும், வடக்கு, கிழக்கு ஒரு மாகாணமாக இருக்க வேண்டும். அது தமிழ் பேசும் மக்களுக்குரிய மாகாணம் என்பது புதிய யாப்பில் இடம்பெற வேண்டுமென்று நான் இந்த நேரத்திலே விசேடமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். அத்துடன், மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் மீளப் பெற முடியாத வகையில் அதற்கான ஏற்பாடுகள் புதிய யாப்பில் இடம்பெற வேண்டும் .
இலங்கையின் பல இராச்சியங்களாக இருந்தது. ஆதிகாலத்தில் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு என 3 பிரதான இராச்சியங்கள் இருந்தன. அந்த ஒவ்வொரு இராச்சியங்களுக்குக் கீழும் சிற்றரசர்கள் ஆண்டிருக்கின்றார்கள். ஆனால், 3 இராச்சியங்களையும் தமிழர்கள் ஆண்டிருக்கின்றார்கள். அதன் பின்பு சிங்கள மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள். ஆனால், அனைத்து இராச்சியங்களையும் தமிழ் மன்னர்கள் ஆண்டிருக்கின்றார்கள்.
ஆங்கிலேயர் செய்த தவறான முடிவுதான் இன்று நாங்கள் 69 வருடங்களாகத் துன்பங்களை அனுபவித்துவருகின்றோம். ஆனால், அந்த சோல்பரி யாப்பில் 29வது அத்தியாயத்தில் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் சட்டங்களை இயற்ற முடியாதென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அப்படியான வரைபு இருந்தும்கூட, அப்போது ஆண்ட தலைவர்கள் 1949ஆம் ஆண்டு மலையக மக்களுடைய வாக்குரிமையைப் பறித்தார்கள். 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்பின்பு 1971ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களுடைய அனுமதி தொடர்பான சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.
ஆட்சியாளர்களுடைய ஆதிக்கம் அடிப்படையில்தான் தந்தை செல்வநாயகம் அவர்கள் "இந்த அரசாங்கங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வதில் பயனில்லை. தனிநாடு என்றவொரு கோட்பாட்டுக்குச் சென்றால் மட்டுமே தமிழர்கள் இன அடையாளத்துடன் வாழ முடியும்" என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
கோரிக்கையின் அடிப்படையில், 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்களுடைய கோட்பாட்டுக்கு அமைவாகவும், அண்ணன் பிரபாகரன் இந்த நாட்டில் தனிநாட்டுக் கோரிக்கையைப் பிரகடனப்படுத்தி, ஆயுதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். அவர் ஆயுதப் போராட்டம் முன்னெடுப்பதற்கு முன் அவர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்ததற்கு அப்போதிருந்த ஆட்சியாளர்களின் சட்டங்களும் தமிழர்கள் மீதிருந்த அடக்குமுறையுமே காரணமாக இருந்தன. இந்த ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆயுதப் போராட்டமும் 2009 ஆம் ஆண்டு மே மாதம், 18 ஆம் திகதி சர்வதேசத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டுவிட்டது.
அரசாங்க மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்களில்தான் இந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் தமிழ் மக்களுடைய மனங்களை வெல்லக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் என்ன முயற்சிகளை எடுத்திருக்கின்றது? என நான் இந்த அரசாங்கத்தைக் கேட்க விரும்புகின்றேன். மிக முக்கியமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகத் கூறி பல காலங்களாகியும் இன்னும் அச்சட்டத்தை நீக்காத இந்த அரசாங்கம், எப்படி எங்களுடைய மக்கள் இறைமையுடன் வாழக்கூடிய ஓர் அரசியல் யாப்பு வரைவை தனது ஆட்சிக் காலத்துக்குள் தரும் என்பதுதான் எங்களது மக்கள் மனதில் இருக்கின்ற சந்தேகம்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நிமித்தம் சிறையில் இருக்கின்ற அரசியல் கைதிகள் , யுத்தத்தின் காரணமாக புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற எங்களுடைய இரண்டு மில்லியன் மக்கள்கூட இந்த நாட்டுக்கு வரத் தயங்குகின்றார்கள். இங்கு வந்து தங்களுடைய பிரதேசங்களில் முதலீடுகளைச் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகத்தின் போில் ஒருவரைக் கைதுசெய்யமுடியும் என்ற சட்டம் இந்த நாட்டில் இருக்கும்போது, எப்படி அவர்கள் இங்கு வருவது? எப்படி அவர்கள் தங்களுடைய பிரதேசங்களில் முதலீடுகளைச் செய்து, எங்களுடைய மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது? என கேட்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைக்குக் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரையில் செயற்படுத்த முடியாத நிலையில் இருக்கின்ற இந்த அரசாங்கம் எமது தமிழ்மக்கள் ஜனநாயக வழியில் மேற்கொள்கின்ற போராட்டங்களை இன்று கொச்சைப்படுத்துகின்றது. எங்களுடைய மக்கள் ஜனநாயக வழியில் பல போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றார்கள். அதற்கு இந்த அரசாங்கத்தினால் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பொழுதிலும், அரசினால் வழங்கப்பட்ட காலம் காலாவதியாகியும் இன்றுவரையில் அந்த மக்கள் மேற்கொள்கின்ற ஜனநாயகவழிப்போராட்டங்களுக்கு ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் கேள்விக்குறியாகவே உள்ளது.
யுத்தம் முடிவடைந்து 8 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும், அம்மக்களின் மனங்களை வெல்லக்கூடிய வகையிலான முயற்சிகளை இந்த அரசாங்கம் எடுக்கவில்லை யுத்தத்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகளுக்குப் புனர்வாழ்வளித்தீர்கள். ஆனால், புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் என்ன முயற்சி எடுத்திருக்கிறது?
வலுக்கட்டாயமாக காணாமற்போனவர்களுடைய உறவுகள் பலமாதங்களாக தமது பிரதேசங்களில் தொடர் கவனஈர்ப்புப் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு இந்த அரசாங்கம் கூறுகின்ற பதில் என்ன? அவ்வாறு கவனஈர்ப்புப் போராட்டங்களை நடத்துபவர்களில் தங்களது கணவன், பிள்ளைகளை தாமாகவே முன்வந்து நேரடியாக இராணுவத்தினரிடம் ஒப்படைத்தவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு ஒப்படைத்த பின்னர் அவர்களைச் சந்தித்தும் இருக்கிறார்கள். ஆனால் இன்று அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. ஒருதடவை எமது பிரதமமந்திரி அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தபொழுது தமது உறவுகளை ஒப்படைத்தவர்கள் அவர்கள் தொடர்பாக வினவியபொழுது அவ்வாறு இங்கு ஒருவரும் இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற கிட்டத்தட்ட 20 மில்லியன் மக்களும் இந்த நாட்டுக்கு வந்து வாழ்வதற்கு ஆசைப்படுகின்ற வகையில் இந்த நாட்டில் அரசியல் யாப்பு மாற்றம் இடம்பெற வேண்டும். எங்களுடைய நாட்டுக்குச் சென்று எங்களால் வாழ முடியுமென்று அவர்கள் கூற வேண்டும். அதற்கேற்ற சூழ்நிலை இலங்கையில் உருவாகியிருக்கின்றதென்பதை அவர்கள் புரிந்துகொள்கின்ற அளவுக்கு இங்கு அரசியல் யாப்பு மாற்றங்களில் எங்களுடய தமிழ் மக்கள் இறைமையுடன் வாழ்வதற்குரிய வரைபுகளை மேற்கொள்ள வேண்டும்.
அயல் நாடான இந்தியாவில் எங்களுடைய மக்களில் ஓரிலட்சம் போ் இருக்கின்றார்கள். அவர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டம் எப்போது நீங்கப்படும்? தாங்கள் வந்தால் கைது செய்யப்படுவோமா? என இப்படியாக பல வினாக்களை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.