Political Column 2009 (3)

கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள் வைகுண்டத்துக்கு வழிகாட்டவா போகிறார்?

நக்கீரன்

தமிழகம் – புதுச்சேரி இரண்டிலும் உள்ள 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற (மே 13> 2009) இன்னும் ஆறு நாட்களே எஞ்சியுள்ளன. அயந்து கட்டமாக நடக்கும் தேர்தலில் இதுவே கடைசிக் கட்டமாகும்.

வட நாட்டில் தேர்தல் ஏறக்குறைய முடிந்து விட்டதால் வட நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்திருக்கிறார்கள்.

மாயாவதி> அத்வானி> இராகுல் காந்தி எனப் பலர் வர இருக்கிறார்கள். கடந்த ஆறாம் நாள் இந்திய காங்கிரஸ் தலைவி சோனிய காந்தியும் திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காகத் தீவுத் திடலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் யார் கண்பட்டதோ கடைசி மணித்துளியில் சோனியா காந்தி தனது தமிழக பயணத்தை நிறுத்திவிட்டார். அதற்கு நான்கு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று, தமிழக முதல்வர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. அதன் காரணமாக சோனியா காந்தி தனது பயணத்தை தள்ளிப் போட்டு விட்டார்.

இரண்டாவது காரணம், சோனியாவின் பாதுகாப்புத் தொடர்பானது. இலங்கைச் சிக்கல் உச்சக் கட்டத்தில் உள்ள நிலையில் தமிழகத்தில் சோனியாவுக்கு உரிய பாதுகாப்புத் தர முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மத்திய – மாநில உளவுப் பிரிவுகள் தந்த அறிவுரைப்படி தனது சென்னைப் பயணத்தை நிறுத்தி விட்டார்.

மூன்றாவது காரணம் இப்போதுள்ள நிலையில் சென்னையில் வந்து பரப்புரை செய்தால் இலங்கைச் சிக்கல் குறித்த எதிர்க் கட்சிகள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்குச் சோனியா காந்தி பதில் சொல்லியாக வேண்டும். ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த மத்திய அரசின் இயலாமைக்கு காங்கிரசிடம் உரிய பதில் இல்லை. வேண்டுமானால் சாக்குப் போக்குக் கூறலாம். ஆனால், மக்களிடம் இலங்கைச் சிக்கல் எப்போதும் இல்லாத அளவுக்கு உணர்வுபூர்வமாகப் பரவிவிட்டதால் சாக்குப் போக்கு சொன்னால் அது காங்கிரஸ – திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மேலும் பாதிக்குமே தவிர உதவாது. இதனால் தான் தமிழ்நாட்டுப் பக்கமே வர வேண்டாம் என சோனியா முடிவெடுத்தார்.

நான்காவது காரணம் இந்தத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என காங்கிரஸ் திடமாக நம்புகிறது. இதனால் தேர்தலுக்குப் பின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அந்தக் கட்சி தயாராகி வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் திமுகவுக்காக பரப்புரை செய்வதை சோனியா தவிர்த்தார்.

இவை அல்ல காரணங்கள்- எமது கருப்புக்கொடி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பயந்துதான் சோனியா தமிழகம் வருவதைத் தவிர்த்துவிட்டார் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் பறைசாற்றுகிறார்.

இதற்கிடையில் காய்ச்சலால் அப்போலோ மருத்துவமனையில் கிடக்கும் முதல்வர் கருணாநிதிக்கு மேலும் வெப்பத்தைக் கூட்டுவது போல் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

இரு நாட்களுக்கு முன் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் என எதிர் தரப்பில் உள்ளவர்களை இராகுல் காந்தி புகழ்ந்து பேசினார். தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி அரசமைக்கும் போது இவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் எனக் கூறினார்.

இராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பது போல் நேற்று (புதன்கிழமை) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்தும் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவை காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும் என்றார்.

காங்கிரஸ் தலைவர்களின் இந்தப் பேச்சுக்கள் கருணாநிதிக்குக் கடும் எரிச்சலை உண்டாக்கி இருக்க வேண்டும். தாலி திமுகவுடன் குடும்பம் அதிமுகவுடன் எனக் காங்கிரஸ் கூறுவதை கருணாநிதியால் செரிக்க முடியாது. இருந்தும் காங்கிரஸ் வாலைப் பிடிக்கவும் முடியவில்லை விடவும் முடியவில்லை என்ற கையறு நிலையில் கருணாநிதி தவிக்கிறார்.

திமுகவின் எரிச்சலை உணர்ந்து கொண்டுள்ள காங்கிரஸ் மேலிடம் தேர்தல் நேரத்தில் இம்மாதிரியான பேச்சு கூட்டணிக்கு மேலும் பாதகத்தையே ஏற்படுத்தும் என்பதால் குலாம் நபி ஆசாத் மூலமும் செய்தித் தொடர்பாளர் அஸ்வின் குமார் மூலமும் விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளது.

தில்லியில் அஸ்வின் குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சியமைக்கும். ஆட்சி அமைப்பதற்காக தேர்தலுக்குப் பிறகு புதிய கட்சிகளின் ஆதரவை பெற தற்போதைய கூட்டணிக் கட்சிகளைக் கண்டிப்பாக இழக்கமாட்டோம் என்றார்.

அதே போல குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுக வையும் கூட்டணிக்குக் கொண்டுவர முயற்சிகள் செய்யப்படும் என இராகுல் காந்தி கூறியதாகச் சொல்வது தவறு. அவரது செவ்வியை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளன. திமுகவுடனான எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் இராகுல் காந்தி தனது செவ்வியில் அதிமுக காங்கிரசுடன் கருத்து ஒற்றுமை கொண்ட கட்சி என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு அவர் அப்படிச் சொல்லவில்லை. கருத்து ஒற்றுமையுள்ள கட்சி என்றால் தமிழகத்தில் திமுக மட்டும் தான் என்றார்.

இப்படி ஆளாளுக்கு விளக்கம் தர வேண்டிய நிலைமை காங்கிரஸ் கட்சியில் நிலவுகிறது. நெருப்பில்லாமல் புகை வருமா?

2004 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாடு புதுச்சேரி இரண்டிலும் 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது. அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்திய போது திமுக தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே சோனியா வந்து அவரைச் சந்தித்துப்பேசினார். அவரே இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் வேண்டுகோள்களை, போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகம் எனத் தமிழக வாக்காளர்கள் நினைக்கிறார்கள்.

முதலவர் கருணாநிதியை எவ்வளவு தூரம் அவமானப் படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் சோனியா காந்தி அவமானப் படுத்தி வருகிறார். இலங்கைச் சிக்கலில் போரை நிறுத்துமாறோ வன்னியில் நடைபெறுவது மனிதப் படுகொலை என்றோ சோனியா காந்தி வாய் திறந்து இதுவரை ஒரு சொல் சொல்லவில்லை. இராசபக்சாவின் அரசுக்கு ஆயுத தளபாடங்கள் விற்பனை செய்வதையும் சோனியா காந்தி மறுக்கவில்லை. மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்களே அதே மாதிரித்தான் சோனியா நடந்து கொண்டுள்ளார்.

பொதுக் கூட்டங்கள், தந்திகள், உண்ணாநோன்புகள், மனிதசங்கிலிப் போராட்டம், பொது வேலை நிறுத்தம் எனப் பல போராட்டங்களை தமிழக மக்கள் நடத்தினார்கள். ஆனால் சோனியா காந்தி அவற்றை சட்டை செய்யவில்லை. கருணாநிதியை அவர் கணக்கில் எடுக்கவே இல்லை.

ஒரு மூத்த அரசியல்வாதியை நேற்று அரசியலுக்கு வந்த இத்தாலி நாட்டு சோனியா காந்தி அவமானப்படுத்துவதை தமிழ் உணர்வாளர்களாலேயே செரிக்க முடியாது இருக்கிறது.

அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டு சேரக்கூடும் என்ற இராகுல் காந்தியின் செவ்வியால் கடும் சினத்தில் இருக்கம் கருணாநிதியைச் சமாதானப் படுத்த பிரதமர் மன்மோகன் சிங் சென்னை செல்கிறார். பிரதமர் பொதுக்கூட்டம் எதிலும் பங்குபற்றவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியுள்ள முதல்வர் கருணாநிதியை மட்டும் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழீழ மக்கள் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக வெறிபிடித்த சிங்கள – பவுத்த இனவாத அரசினால் நூற்றுக் கணக்கில் நாள்தோறும் நரபலி எடுக்கப்படுகிறார்கள். வானில் இருந்து குண்டு மழை பொழிந்தும் தரையில் இருந்து பல்குழல் பீரங்கித் தாக்கல் நடத்தியும் ஆண், பெண், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என எல்லோரும் வகைதொகை இன்றிப் படுகொலை செய்யப்படுகிறார்கள்.

உணவு, உடை> உறையுள்> மருந்து> குடிதண்ணீர் இல்லாது மக்கள் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நடைப்பிணமாக்கப் பட்டிருக்கிறார்கள்.

சோமாலி நாட்டுக் குழந்தைகளை விட மோசமான நிலையில் அங்குள்ள குழந்தைகள் கன்னங்கள் வற்றிப்போய், வயிறு ஒட்டிப்போய், எலும்பும் தோலுமாக சாவின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வளம் கொழிக்கும் வன்னி சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.

இனவெறி பிடித்த கொடிய சிங்கள அரசு வன்னிக்குள் போதிய உணவு, மருந்து போவதைத் தடை செய்துள்ளது.

தமிழ்மக்களது இக் கையறு நிலைக்கு யார் காரணம்? யார் பொறுப்பு? வன்னியில் நடந்தேறும் இனப் படுகொலைக்கு யார் பொறுப்பு? இந்திய நடுவண் அரசும் தமிழ்நாடு அரசும் பொறுப்பு என்றே தமிழ் மக்கள் நினைக்கிறார்கள்.

அண்ணா நினைவாலயத்தில் திடீரென உண்ணா நோன்பை மேற்கொண்ட கருணாநிதி அமைச்சர் சிதம்பரம் தொலைபேசி மூலமாக ‘ஸ்ரீலங்கா அரசு போரை நிறுத்திவிட்டது” என்று சொல்ல அதனை நம்பி அவசர அவசரமாக உண்ணா நோன்பை முடித்துக் கொண்டு சரியாக மதிய உணவுக்கு வீட்டுக்குப் போய்விட்டார்.

‘போர் நிறுத்தம் என்று செய்தி வந்துதான் நீங்கள் உண்ணாவிரதத்தை முடித்தீர்கள். ஆனால், இப்போதும் வன்னியில் வான்வெளித் தாக்குதலும் பல்குழல் பீரங்கித் தாக்குதலும் நடக்கிறத.?” என்ற செய்தியாளர்களது கேள்விக்கு ‘மழை விட்டாலும் தூவானம் இருக்கத்தானே செய்யும்!” என்று அலட்சியத்தோடு கருணாநிதி பதில் அளித்தார்.

‘இலங்கைச் சிக்கலில் அடுத்த கட்டமாக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்ற அடுத்த கேள்விக்கு ‘இதுக்கு மேலே என்ன செய்ய முடியும்? வாங்க, நாம் எல்லோரும் சேர்ந்து டீ சாப்பிடப் போவோம்!” என ஈவு, கண்ணோட்டம் இல்லாது பதில் அளித்தார்.

கொஞ்சமும் பொறுப்பற்ற இந்தப் பதில்கள் தமிழ்மக்களது மனதை நோகடித்துள்ளது. வெந்த உள்ளங்களில் வேலைச் சொருகி இருக்கிறது.

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது என்பார்கள். அது போல கருணாநிதிக்கு தமிழ்மக்கள் மீது வீசப்படும் குண்டுமழை “தூவானம்” போல் தெரிகிறது! ‘இதுக்கு மேலே என்ன செய்ய முடியும்?” என்ற கேள்விக்கு வாங்க, நாம் எல்லோரும் சேர்ந்து டீ சாப்பிடப் போவோம் என மக்களது உயிரைவிட ஒரு கோப்பை தேநீருக்கு கருணாநிதி முக்கியம் கொடுக்கிறார்!

தமிழீழச் சிக்கல் பேருரு எடுத்த நிலையில் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் குட்டையை நாளும் பொழுதும் குழப்பி வருகிறார். அவர் தமிழீழம் பற்றி சிந்தாந்த அடிப்படையில் ஒருபோதும் ஆழமாகச் சிந்தித்ததே இல்லை. ஒரு கோட்பாட்டை உருவாக்கவே இல்லை. பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி, சகோதர யுத்தம் செய்தார் என மேலோட்டமாகப் பேசி தனது அறியாமையை வெளிப்படுத்தி வந்தார்.

இப்போது தமிழீழச் சிக்கல் தேர்தல் களத்தில் சூடு பிடித்துவிட்டதால் அதனைத் தணிக்க “இலங்கைத் தமிழர்கள் பெற வேண்டிய ஈழத்தை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்” என்கிறார். இதைக் கேட்டு அறிவுடையோர் சிரிக்க மாட்டார்களா? “கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத குருக்கள் வைகுண்டத்துக்கு வழிகாட்டுகிறேன்” என்று சொன்னால் யாராவது அதை நம்புவார்களா?

தொடக்கத்தில் ஈழச் சிக்கல், தேர்தல் சிக்கலே அல்ல என்று கருணாநிதி சொன்னார். அதையே ஸ்டாலினும் சொன்னார். இப்போது ஈழச் சிக்கல்தான் தேர்தலில் முதன்மைச் சிக்கலாக மாறிவிட்டது.

இப்போது காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு எதிரான தேர்தல் பரப்புரை தமிழ் நாட்டில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவதோடு நில்லாமல் எம்ஜிஆர் பாடிய பாட்டுக்களைப் பொதுக் கூட்டங்களில் பேசி அசத்துகிறார். மக்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் வாயாலேயே பதிலை வரவழைக்கிறார்.

மதிமுக செயலாளர் வைகோ> பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்மாநில செயலாளர் தா. பாண்டியன் தமிழகத்தைச் சுற்றி சூறாவளிப் பரப்புரை செய்து வருகிறார்கள்.

இயக்குநர் பாரதிராசா தலைமையில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளை இலக்கு வைத்துப் பரப்புரை செய்து வருகிறது. குறிப்பாக சிவகங்கையில் சிதம்பரம், ஈரோட்டில் இளங்கோவன், சேலத்தில் தங்கபாலு, மயிலாடுதுறையில் மணிசங்க அய்யர் போன்றோரைத் தோற்கடிக்க தமிழீழ ஆதரவு இயக்கம் பாடுபடுகிறது. பாரதிராசாவுக்குத் துணையாக இயககுநர்கள் சீமான்> சேரன்> தங்கபச்சான், அமீர் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள்.

மே 16 இல் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்ற செய்தியைச் செவிமடுக்க உலகளாவிய தமிழர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். (உலகத்தமிழர் – மே 08-14, 2009)


இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே ‘தனி ஈழம்’ அமைக்க நடவடிக்கை எடுப்பேன்!

நக்கீரன்

தமிழகத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு கிழமைகளே எஞ்சியுள்ளன. எதிர்வரும் மே 13 இல் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

பல கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக – காங்கிரஸ் அணிக்கும் அதிமுக அணிக்கும்தான் போட்டி நிலவுகிறது. இந்த அணிகளுக்கு அப்பால் குறிப்பிடத்தக்கதாகச் சொல்லக் கூடிய கட்சி நடிகர் விஜயகாந்த்தின் தேமுதிக மட்டுமே!

இருப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தேர்தலில் தமிழீழச் சிக்கல் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக தேர்தல் களத்தில் ஈழத் தமிழர் சிக்கல் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? என்பது குறித்து தமிழ்நாட்டின் அரசியல் திறனாய்வாளர்கள் வாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக பிபிசி தமிழோசை ஒரு தொடர் பெட்டக நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

முதல்வர் கருணாநிதி இலங்கைத் தமிழர் சிக்கல் தேர்தலில் பேசப்படும் பொருளாக இருக்காது என்று வெளியில் செய்தியாளர்களிடம் சொன்னாலும் தேர்தல் பரப்புரையில் இலங்கைத் தமிழர் சிக்கலே உரக்;க ஒலிக்கிறது.

அதிலும் அதிமுக ஜெயலலிதா கடந்த ஏப்ரில் 26 அன்று ஈரோட்டில் பேசும்போது “மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனித்தமிழ் ஈழம் அமைக்கப்படும்” என்று முழங்கிய பின்னர் தேர்தல் களம் கொதி நிலையை எட்டியுள்ளது.

இந்நாள் வரை ஜெயலலிதா தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவர் – வி.புலிகளுக்கு எதிரானவர் என்ற நிலைப்பாடு திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு ஆறுதல் கொடுக்கும் செய்தியாக இருந்தது.

மாங்கொல்லையில் காங்கிரஸ் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ப. சிதம்பரம் இலங்கைச் சிக்கலைப் பொறுத்தளவில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஒத்த கருத்தோடு இருப்பதாகச் சொன்னார்.

“காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு இந்தியாவின் கொள்கை

தெரிகிறது. பிரபாகரன் ஆயுதத்தைக் கீழே போட வேண்டும்;. எந்த அரசும் போராளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது. வி. புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால்தான் முடியும் என்று மூன்று கட்சிகளுக்கும் தெரிந்திருப்பதால் தமிழகம் அமைதியாக உள்ளது” என்று பேசியிருந்தார்.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்பதை நேரடியாகக் கூறாமல் சிதம்பரத்தின் வழியாக திமுக கூற முற்படுகிறது என்பதுதான் உண்மை.

திமுகவும் சிதம்பரமும் முன் வைக்கும் இந்த வேண்டுகோளைத்தான் இராசபக்சேயும்

தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்து இராம், துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி தினமலர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல்களும் இதே கருத்தைத்தான் வற்புறுத்தி வருகின்றன

சிதம்பரம் கூறும் அதே அறிவுரையைத்தான் 1987 இல் இராஜீவ் காந்தி சொன்னார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் இந்திய இராணுவம் தனது ஆதரவுக் குழுவான ஈபிஆர்எல்எப் குழுவுக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியவர் சாதாரண மனிதர் அல்ல. இந்தியப் படைக்கு தலைமை தாங்கிய தளபதி ஹர்கிரத் சிங் (General Harkirat Singh) தாம் எழுதிய  ‘Intervention in Sri Lanka: The IPKF experience retold’  என்ற நூலில் அம்பலப் படுத்தியிருக்கிறார்.

எதிர்பார்த்தது போல சிதம்பரத்தின் கூற்றை வரவேற்றுப் பார்ப்பன ஏடான இந்து தலையங்கம் எழுதியுள்ளது. “அன்று தி.மு.கவின் குரல் தனித்து ஒலித்தது. இன்று திமுகவின் குரல் அதிமுக, காங்கிரசோடும் இணைந்து கொண்டுள்ளது. அமைச்சர் சிதம்பரம் அதனை உறுதிப்படுத்திவிட்டார்” என இந்து சுய திருப்தியோடு எழுதியது.

இப்போது இந்து இராமின் ஆசையில் மண் விழுந்து விட்டது. அதிமுக தமிழீழ விடுதலைக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. “தனித் தமிழீழம் அமைத்தே தீருவேன்” என ஜெயலலிதா சூளுரைத்துள்ளார்.

தமிழீழத்துக்கான ஆதரவை ஜெயலலிதா ஒவ்வொரு நாளும் தீவிரப்படுத்தி வருகிறார். “பங்களாதேசுக்கு இந்திரா காந்தி படை அனுப்பிய தர்மத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நான் படை அனுப்பி ஈழம் அமைப்பேன்!” என அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசும் கூட்டங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசி வருகிறார்.

நாமக்கல்லில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா “இந்தியாவின் சில அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களைப் பகடைக் காய்களாக்கி அரசியல் சூதாட்டம் நடத்துகின்றனர். ஆனால், இந்திரா காந்தி எந்த அனைத்துலக சட்டத்தை பின்பற்றி பங்களாதேசத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாரோ, அதே அனைத்துலக சட்டத்தைப் பின்பற்றி – அதே தர்ம நியாயங்களைப் பின்பற்றி – நான் சொல்வதை கேட்கும் மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்பி அங்கே ‘தனி ஈழம்’ அமைக்க நடவடிக்கை எடுப்பேன்” எனக் காட்டாமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக எதிர்த்து வந்த ஜெயலலிதா இன்று தனித் தமிழீழம் அமைக்க இலங்கைக்கு இந்தியப் படையை அனுப்புவேன் என நேர் எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது திமுகவும் காங்கிரசும் கொஞ்சமும் எதிர்பாராத அரசியல் திருப்பமாகும்.

இதன் எதிரொலிதான் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட 6 மணித்தியால உண்ணாநோன்புப் போராட்டம் ஆகும். கருணாநிதி விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் என்பதை அவரது உண்ணாநோன்பு எடுத்துக் காட்டியது.

தந்தி, பொதுக் கூட்டம், உண்ணா நோன்பு, மனிதசங்கிலி, பொதுவேலை நிறுத்தம் எனக் கருணாநிதி நடத்திய போராட்டங்களை சோனியா காந்தி கண்டு கொள்ளவே இல்லை.

கருணாநிதியின் முயற்சியால்தான் 35.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 218 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி கடந்தமுறை (2004) மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்தது. தமிழகம் – புதுச்சேரி இரண்டிலும் நூற்றுக்கு நூறு என்ற விழுக்காட்டில் வெற்றிபெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரசுக்குக் கிடைத்தது.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தனியே நின்றால் ஒரு தொகுதியில் கூட கட்டுக் காசைத் தக்க வைக்க முடியாது என்கிற கையறு நிலையில் இருக்கிறது. 1967 இல் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி அதற்குப் பின்னர் இத்தனை ஆண்டுகள் கழித்தும் எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளது.

வேடிக்கை என்னவென்றால் காங்கிரசைத் தோற்கடித்த திமுக தான் இன்று காங்கிரசை தோளில் வைத்து சுமந்து கொண்டிருக்கிறது.

முதல்வர் கருணாநிதி தனது சிறுபான்மை ஆட்சியைத் தக்க வைக்கவே சோனியா காந்தி, மன் மோகன் சிங், பிரணாப் முகர்ஜி போன்றோர் இழைக்கும் அவமானத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கிறார். “இலங்கைத் தமிழ்மக்களுக்காக மூன்றாவது முறையும் பதவியை இழக்கத் தயார்” எனக் கருணாநிதி வீர வசனம் பேசினாலும் ஆட்சியை இழக்க அவர் தயாரில்லை என்பதால்தான் எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறார்.

அண்மையில் கூட வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் கொழும்பு சென்ற போது தமிழக நா.உறுப்பினர்கள் சிலரையும் அழைத்துப் போகுமாறு கருணாநிதி விடுத்த வேண்டுகோள் சோனியாவால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

உண்மையில் முதல்வர் கருணாநிதியைப் நினைக்க கோபத்தை விட பரிதாபமே மேலோங்கி நிற்கிறது. எழுபது ஆண்டுகள் அரசியலிலும் அய்ந்துமுறை தமிழகத்தின் முதல்வராகவும் இருக்கும் ஒருவர் தமிழ்மக்களது ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஏளனத்துக்கும் நகைப்புக்கும் ஆளாகி வருவது கவலை அளிக்கிறது. தமிழ் உணர்வாளர்களுக்கு அவமானமாக இருக்கிறது.

இப்போது உலகிலேயே மிகக் குறைந்த நேரத்துக்கு உண்ணாநோன்பு இருந்த “சாதனை”யைக் கருணாநிதி நிலைநாட்டியுள்ளார். காலை உணவை முடித்துக் கொண்டு கோட்டைக்குப் போனவர் திடீரென அண்ணா நினைவாலயத்தின் முன் உண்ணா நோன்பு இருந்தார். உடன்பிறப்புக்கள் வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டார்கள். உற்றாரும் உறவினரும் அமைச்சர்களும் தொண்டர்களும் உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கெஞ்சினார்கள். அப்போது சிதம்பரத்திடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. “ஸ்ரீலங்கா அரசு போர் நிறுத்தத்துக்கு ஒத்துக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அவை கூடுகிறது. விரைவில் அறிவிப்பு வரும்” என்கிறார். உடனே கருணாநிதி “மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்குத் திருப்தி அளிக்கிறது” என்று கூறி உண்ணா நோன்பை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு வீடு ஏகினார்.

கேள்வி என்னவென்றால் எதற்காக கருணாநிதி இப்படியான மலிவான அரசியல் நடத்துகிறார்? எதற்காக மற்றவர்களது ஏளனத்துக்கு ஆளாகிறார்? அதனால் அவருக்கு என்ன இலாபம்?

மருத்துவர் இராமதாசுக்குத் திரைப்பட நடிகர்களைப் பிடிக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகர் இரஜினிகாந்தை சிறிது காலம் காட்டாக விமர்ச்சித்தவர். அண்மையில் அவரிடம் செய்தியாளர்கள் ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

உங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார்?

கொஞ்சமும் யோசிக்காமல் மருத்துவர் இராமதாஸ் சொன்ன பதில் “இப்போதைக்கு எனக்குப் பிடித்த நடிகர் கருணாநிதி!”

இயக்குநர் பாரதிராசா தனது பத்மஸ்ரீ விருதை தில்லிக்கு திருப்பி அனுப்பியிருக்கிறார். அதே போல் தமிழக அரசு கொடுத்த கலைமாமணி விருதைக் கவிஞர் இங்குலாப் தூக்கி எறிந்துள்ளார். இந்த உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும்.

மே முதல் வாரத்தில் சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரை செய்ய வருகிறார்கள். சோனியா காந்தியும் – கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்ற இருக்கிறார்கள்.

எந்த முகத்தோடு சோனியா காந்தி தமிழகம் வருகிறார் என்பது தெரியவில்லை. தமிழ்மக்களின் குருதி போர்க்களத்தில் ஆறாக ஓடுகிறது. இந்த ஆண்டில் மட்டும் 7,000 க்கும் அதிகமான தமிழ்மக்கள் சிங்களப் படைகளின் குண்டு மழைக்கும் செல் தாக்குதல்களுக்கும் பலியாகியுள்ளார்கள். அதைப் போல் இரண்டு மடங்கு பொதுமக்கள் படுகாயப் பட்டுள்ளார்கள். இவர்கள் சிந்திய குருதி சோனியா காந்தியின் கைகளை நனைத்துள்ளது.

எமது மக்கள் வகைதொகையின்றி நாளும் பொழுதும் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கான பொறுப்பை சோனியா காந்தியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் தமிழகம் வரக்கூடாது, மீறி வந்தால் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என இயக்குநர் பாரதிராசா சூளுரைத்துள்ளார். திரையுலகம் எதிர்ப்புத் தெரிவித்தால் மட்டும் போதாது. திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்கும் எல்லோரும் ஒன்று திரண்டு எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அப்போதுதான் எதிர்ப்பு வெற்றி பெறும்.

நான் கடந்த கிழமை கூறியது போல் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பலை வீசுகிறது.

ஜெயலலிதா பேசும் கூட்டங்களுக்கு மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது. வைகோ, மருத்துவர் இராமதாஸ் பேசும் கூட்டங்களுக்கும் மக்கள் திரளுகிறார்கள்.

இந்த எழுச்சி தேர்தல் நாளன்று வாக்குகளாக மாறவேண்டும். அப்படி மாறினால்தான் திமுக – காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிக்க முடியும். மத்தியில் தமிழீழ போராட்டத்துக்குச் சார்பான அரசை உருவாக்க முடியும். தமிழீழ விடுதலையை விரைவில் வென்றெடுக்க முடியும். தமிழின வரலாற்றில் ஒரு பொற்காலத்தைப் படைக்க முடியும். (உலகத்தமிழர் – மே 01-07, 2009)


தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக எதிர்ப்பலை வீசுகிறது!

நக்கீரன்

திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக எதிர்ப்பலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரைக்கு சுழி போட நினைத்தபோது ஒரு செய்தி வந்திருக்கிறது. வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் நாளை கொழும்பு செல்கிறார்களாம்.

இவர்கள் இதற்கு முன்னரும் பல தடவை கொழும்புக்குப் போயிருக்கிறார்கள். ஆனால் அவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஆட்சித்தலைவர் இராசபக்சேயோடு பேசி அவரை முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுத் திரும்பிய கதையாகவே முன்னைய பயணங்கள் அமைந்திருந்தன.

இம்முறை என்ன பேசப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. வடபகுதியில் உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக இந்தியாவின் கவலையைத் தெரியப்படுத்துவதுடன், உடனடிப் போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தையும் கொடுப்பார்கள் என தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் விடுதலைப் புலிகள் பற்றி பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நேரு குடும்பத்தின் வாரிசுகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா போன்றோர் மிகவும் காட்டமாக ஒரே குரலில் ஒரே தொனியில் விமர்ச்சித்திருந்தார்கள்.

இராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசும் போது ”விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான். அவர்கள் எனது தந்தையின் சாவுக்குக் காரணமானவர்கள்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எமது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது ஒரு தேர்தல் உத்திதான்” எனக் குறிப்பிட்டார்.

பிரியங்கா “எனது தந்தையைக் கொன்ற வி.புலிகளை மன்னிக்கவும் மாட்டோம்” என்றார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்னும் விளக்கமாக “விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் “பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட குற்றவாளி’ என்று இரண்டு நாட்களுக்கு முன்னர் (ஏப்ரில் 21, 2009) கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

“புலிகள் தொடர்பான எமது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் கடந்த சில நாட்களாக தெளிவுபடுத்தியுள்ளார். அது தொடர்பான நிலைப்பாடு மாற்றமடையாமல் உள்ளது என்று நான் நினைக்கிறேன். எமது அரசாங்கத்தை பொறுத்தவரை எமது நிலைப்பாடு மாற்றமடையவில்லை’ என்று “Times Now” என்ற ஏட்டுக்குத் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று கருணாநிதி தெரிவித்திருப்பது பற்றிக் கேட்கப்பட்ட போது தனது நிலைப்பாட்டை முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார் என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

இந்திய காங்கிரஸ் பேச்சாளர் என்ன சொன்னார்? “இலங்கையின் வடக்கே நடந்து வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு பிடிப்பட்டால் அவரை இலங்கை அரசு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

மேலும் இந்தியாவே சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், இராடார்கள், பயிற்சி, புலனாய்வு, கடன் ஆகியவற்றை வழங்கி வி.புலிகளுக்கு எதிரான போரைப் பின்னால் இருந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் உதவியின்றி சிறிலங்காப் படைகள் வி.புலிகளை வென்றிருக்க முடியாது என சிறிலங்கா அமைச்சர்கள் பகிரங்கமாக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அதனை நிறுத்துமாறு அய்யன்னாவும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் மனிதவுரிமை அமைப்புக்களும் கேட்கின்றன. ஆனால் இந்தியா போரை நிறுத்துமாறு வாய்திறந்து இதுவரை சிங்கள – பவுத்த இனவாத அரசைக் கேட்கவில்லை. கேட்கவில்லை என்பதையும் சிறிலங்கா அமைச்சர்களே சொல்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் சிவ்சங்கர் மேனன், எம்.கே.நாராயணன் ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) விழுந்தடித்துக் கொண்டு கொழும்பு செல்ல இருப்பதின் மர்மம் என்ன?

எல்லாவற்றுக்கும் எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெற இருக்கும் மக்களவைக்கான தேர்தல்தான் காரணம். திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி பயம் பிடித்துக் கொண்டு விட்டது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் (2004 – 10) போட்டியிடுகிறது. இந்தப் 16 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அவா தமிழக மக்களிடம் தலைதூக்கியுள்ளது. குறிப்பாகச் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிடும் ப. சிதம்பரம், மயலாடுதுறையில் போட்டியிடும் மணிசங்கர் அய்யர் இருவரையும் தமிழினப் பற்றாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் இலக்கு வைத்துப் பரப்புரை செய்து வருகிறார்கள்.

இந்தத் தேர்தலில் இயக்குநர் பாரதிராசா தலைமையிலான தமிழக திரைப்பட இயக்குநர்கள் சங்கம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளது. “இயக்குநர் சீமான் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராய் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராய் நிறுத்தப்படுவார்” எனத் தமிழகத் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கடந்த திங்கள் மாலை (ஏப்ரில் 20) தீர்மானித்துள்ளது. இயக்குநர் சீமான் இந்திய இறையான்மைக்கு எதிராகப் பேசினார் எனக் குற்றம் சாட்டப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைக் கைது செய்யுமாறு காங்கிரஸ் கட்சிதான் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

பேராசிரியர் சரஸ்வதி தலைமையில் பெண்கள் சாகும்வரையான உண்ணா நோன்புப் போராட்டத்தை கடந்த 11 நாட்களாக தலைநகரில் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்துக்கு திரையுலக நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஞாபகங்கள். இந்தப் படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதித் தயாரிக்கிறார் விஜய். இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஏ.வி.எம் கலையரங்கில் நடந்தது.

இந்த வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்யராஜ் மிகவும் காட்டமாகப் பேசியுள்ளார்.

“உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்கள் ஈழ உறவுகளுக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்களான நாம் அதைச் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் நாம் இறங்க வேண்டும். இந்தப் பட நாயகன் விஜய்யைப் பார்க்கும் போதும், இந்த விழா நடைபெறும் இடத்தைக் கவனிக்கும் போதும் எனக்குள் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன.

நான் முதன்முதலாக சினிமா வாய்ப்புக் கேட்டு நின்ற இடம் இந்த ஏ.வி.எம். ஸ்டூடியோதான். முதன் முதலாக தயாரிப்பு முகாமையாளராக வேலை பார்த்ததும் இதே ஏ.வி.எம.; .ஸ்டூடியோவில்தான். நான் நடித்த “வேதம் புதிது’ படத்தை எம்ஜிஆர் பார்த்தது, பாராட்டியதும் இதே ஏ.வி.எம். ஸ்டூடியோவில்தான். இப்படி பலப் ஞாபகங்கள் என்னைக் கடந்து போகின்றன.

விஜய் என்ற பெயரை சொல்லும் போது எனக்கு விஜயன் என்ற பெயர் ஞாபகம் வருகிறது. யார் இந்த விஜயன் தெரியுமா நண்பர்களே… ஒரிஸ்ஸாவில் இருந்து இலங்கைக்குப் போய் குடியேறிய முதல் சிங்கள மன்னன்தான் இந்த விஜயன். அதற்கு முன்பே தமிழர்கள் அங்கு குடியிருந்தார்கள். தமிழ் மன்னர்கள் பெரும் அரசுகளைக் கட்டி ஆணடார்கள். ஆக, வரலாற்றுரீதியாக இலங்கை தமிழர்களின் பூமி.

ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரியை விரட்டியதுபோல் இன்று சிங்கள அரசு நம் தமிழர்களை விரட்டுகிறது. இலங்கை மண்ணுக்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தமிழர்கள்தான்.

அய்யா…நான் இறையாண்மைக்கு எதிரா எதுவும் பேசலீங்க… உண்மையைப் பேசுறேன்… சரித்திரத்தை, இந்திய- இலங்கை அரசுகள் ஏற்றுக் கொண்ட சரித்திரத்தைத்தான் சொல்கிறேன்.

இந்த ஞாபகங்கள் விழாவில் நெஞ்சைவிட்டு அகலாத ஞாபகமாக ஈழ மண்ணில் நம் சொந்தங்கள் அழிந்துகொண்டிருப்பது சுற்றிச் சுழல்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா அமைப்புகளும், எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஈழ தமிழர்களுக்காக மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்.

.இலண்டனில் இரண்டு இலட்சம் தமிழர்கள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். பிரான்சு, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா என உலகம் முழுக்க தமிழர் கொடியுடன் தமது உறவுகளின் உயிர்காக்க கண்ணீரும் கம்பலையுமாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவற்றைப் பற்றிய செய்திகளைப் படித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதை விட்டுவிட்டு, மீண்டும் நமது உணர்வுகளை வலிமையாக இந்த அரசுக்குப் புரியும் விதமாகக் காட்ட வேண்டும்.

அனைத்துத் தலைவர்களும், கலைஞர்களும் ஒன்று சேர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டும். அதில், அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ள வேண்டும்.

உலகம் முழுக்க 8 கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லிக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. இனி தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா என்றுதான் சொல்ல வேண்டி வரும்” என்றார.

நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு இன்றைய தமிழ்நாட்டு மக்களது உணர்வலைகளைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வழக்கறிஞர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளார்கள். மாணவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்.

திமக – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக எதிர்ப்பலை வீசிக் கொண்டிருக்கிறது. மாவீரன் முத்துக்குமார் தனக்குத்தானே மூட்டிய தீ தமிழகம் முழுதும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதன் சூட்டைத் தாங்க முடியாத காரணத்தால்தான் முதல்வர் கருணாநிதி அறிக்கைகள், தந்திகள், வேலை நிறுத்தம் எனப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சிலர் இன்று கருணாநிதி ஆட்சியில் இருப்பதால்தான் இவை நடக்கிறது என்று சொல்கிறார்கள். அது தவறான கணிப்பாகும். முதல்வர் கருணாநிதி திமுக அணிக்கு எதிரான அனல் வீச்சை எந்தளவு கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவு மிகக் கெட்டித்தனமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எடுத்துக்காட்டாக மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபின் ஏற்பட்ட மாணவர் போராட்ட எழுச்சியை கட்டுப்படுத்த அனைத்துக் கல்லூரிகளும் மூடப்பட்டது. இன்றுவரை அவை திறக்கப்படவில்லை. இது மாணவர் எழுச்சியை அடக்கவே செய்யப்பட்டது. அதே போல லோயலா, பச்சயப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டமும் தமிழக காவல்துறையைக் கொண்டு முறியடிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் கண் மண் தெரியாது தாக்கப்பட்டார்கள்.

மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருக்கிறது. மத்தியில் திமுக ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அப்படியென்றால் திமுக நடத்திய வேலை நிறுத்தம் யாருக்கு எதிராக நடத்தப்பட்டது?

வேடிக்கை என்னவென்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தது! யாரை ஏமாற்ற இந்த அரசியல் நாடகத்தை நடித்து அரங்கேற்றுகிறார்களோ தெரியவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து மத்திய அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் இருந்தார்கள். அதில் பாமக வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியைத் துறந்து விட்டார்கள். எஞ்சியுள்ள 10 அமைச்சர்கள் பதவி விலகினால் அது பெரிய நெருக்கடியை மத்திய அரசுக்கு ஏற்படுத்தும். அதை ஏன் முதல்வர் கருணாநிதி செய்யவில்லை? செய்யாத காரணத்தினால்தானே காங்கிரஸ் கட்சி முதல்வர் கருணாநிதியை கிள்ளுக் கீரை போல் நடத்துகிறது?

கடந்த ஆண்டு பதவி விலகல் நாடகத்தை முதல்வர் கருணாநிதி கதை, உரையாடல் எழுதி நிறைவேற்றினார். “மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை எனக்குத் திருப்தி அளிக்கிறது” என்று சொல்லி அந்த நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் பதவி விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்திருக்குமே?

இந்த அழகில் கொழும்புக்குச் செல்லும் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோர் எதனை வெட்டிப் புடுங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

“போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டோம். ஸ்ரீலங்கா அரசு அதனை நிராகரித்துவிட்டது” என்று அமைச்சர் சிதம்பரம் எந்த வெட்கமோ துக்கமோ இன்றிச் சொல்கிறார்.

அப்படியென்றால் பழைய பாணியில் கொழும்பு சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு, வழக்கம் போல் குசலம் விசாரித்துவிட்டு – வடக்கின் பொருளாதார மீள்கட்டமைப்புப் பற்றிப் பேசிவிட்டு – சிவசங்கர் – நாராயணன் நாடு திரும்பப் போகிறார்களா? அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

எது எப்படியிருப்பினும் எதிர்வரும் தேர்தலில் வென்று மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் எப்பாடு பட்டும் முறியடிக்க வேண்டும். தவறினால் தமிழ்மக்களது நிலைமை மேலும் மோசமடையும். (உலகத்தமிழர் – ஏப்ரில் 24-30, 2009)


மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் நிலைமை மேலும் மோசமாகும்.

அமாவாசை நல்ல காரியத்துக்கு உகந்த நாளாம். இது எனக்கு இந்நாள் வரை தெரிந்திருக்கவில்லை. அமாவாசை நாளைத் தொடர்ந்து நிலா வளர்ச்சி பெறுவதைப் போல அன்றைய நாள் எடுக்கும் எந்த முடிவுகளும் நல்ல வளர்ச்சியான பாதைக்கு கொண்டு செல்லுமாம்.

நான் நாளும் கோளும் பார்ப்பதில்லை. இதில் நான் அருணகிரிநாதர் கட்சி. “நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு தாளும் சிலம்பும் ——–என் முன்னே தோன்றிடினே!” எனக் பாடியவர் அருணகிரிநாதர்.

மார்ச்சு 26 நிறைந்த அமாவாசை நாள். இன்று தமிழக தேர்தல் களத்தில் இரண்டு முக்கிய அறிவித்தல்கள் வெளியாகின.

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் யாருடன் கூட்டணி என்பதை அறிவித்தார். அதே நாள் (வியாழக்கிழமை) முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் அறிவித்துள்ளார். தேமுதிக பொறுத்தவரை அக்கட்சி தொடங்கப்பட்டு சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

இதுவரை காலமும் தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்பதை அறிவிக்காது இருந்த விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு தொடர்ந்து மாலையில் கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணிக்கு பாம.க போய்விட்டதால் இனிமேல் அந்த கூட்டணியில் தேமுதிக சேர வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது.

பாமக பொதுக்குழுதான் அதிமுகவோடு கூட்டணி வைப்பததென முடிவு எடுத்தது. அத்தோடு இனச் சிக்கலுக்குத் தனித் தமிழீழமே ஒரே வழி என்ற தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேறியுள்ளது.

இந்த அறிவித்தல்கள் மூலம் தமிழகத்தில் நிலவி வந்த கூட்டணி இழுபறி முற்றுப் பெற்றுள்ளது.

மருத்துவர் இராமதாஸ் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை இன்று (வியாழக்கிழமை) மாலை சந்திக்க இருக்கிறார்.

அதிமுகவுடன் கூட்டணி சேருவதால் தற்போது மத்திய காங்கிரஸ் அரசில் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்து வரும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அமைச்சர் ஆர். வேலு ஆகியோர் தங்கள் பதவியை விலக்கிக் கொள்வார்கள் என்றும் இதற்கான கடிதங்களை நாளை (வெள்ளிக்கிழமை) நேரில் பிரதமரிடம் கையளிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு கட்சிகளின் முடிவுகள் திமுக கூட்டணிக்கு இரடிப்பு அடி என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இப்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை களம் இறங்குகின்றன.

அ.திமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் சிறிய கட்சிகள் இடம் பிடித்துள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் ஆகட்டும், தமிழக சட்டசபை தேர்தல் ஆகட்டும் திமுக – அதிமுக இரண்டு அணிகளில் எந்த அணியில் பலம் வாய்ந்த கட்சிகள் இடம் பெறுகிறதோ அந்தக் கட்சிதான் தேர்தலில் வெற்றி பெறும்.

2004 இல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளையும் கைப்பற்றியது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் இடம்பெற்றிருந்தன. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

திமுக            – 16

காங்கிரஸ்   – 10

பாமக           – 6

மதிமுக       – 4

இந்திய கம்யூனிஸ்ட          – 2

இந்திய மார்க்சிஸ்ட் கட்சி – 2

இம்முறை நான்கு முக்கிய கட்சிகள் அணிமாறி இருக்கின்றன. இதனால் திமுக கூட்டணி பெரிய தேர்தல் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியில் காங்கிரஸ் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கட்சியாகும்.

பாமக வை திமுக கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி பெரு முயற்சி செய்தது. சோனியா காந்தி தலையிட்டும் பாமக வளைந்து கொடுக்கவில்லை.

இந்தத் தேர்தலில் தமிழீழ சிக்கல்தான் முதன்மை இடம் பெறப் போகிறது. மக்கள் திமுக, காங்கிரஸ் இரண்டின் மீதும் கோபத்தில் இருக்கிறார்கள். தமிழீழ மக்களுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் ஆட்சி பச்சைத் துரோகம் செய்துவிட்டது என்ற எண்ணம் வலுத்துள்ளது. அதற்குத் துணை போகும் திமுக மீதும் மக்கள் நெற்றிக்கண்ணைத் திறக்க இருக்கிறார்கள்.

தமிழக சட்டசபையில் ஸ்ரீலங்காவில் இடம்பெறும் போரில் இந்தியா தலையிட்டு ஒரு போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவேண்டும் எனக் கேட்டு 3 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. போர் நிறுத்தம் செய்யப்ட வேண்டும் வன்னியில் சிக்கியுள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் அவர்களுக்கு போதிய உணவும் மருந்தும் உறையுளும் வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. இவற்றை இந்திய மத்திய அரசு அலட்சியம் செய்துவிட்டது. அல்லது குப்பைத் தொட்டிக்குள்; போட்டுவிட்டது. மொத்தம் பன்னிரண்டு பேர் அமைச்சர்களாக இருந்தும் பட்டை நாமம்தான் மிஞ்சியது!

திமுக நடத்திய உண்ணாநோன்புப் போராட்டம், மனித சங்கிலி, பொதுக் கூட்டங்கள், தில்லிக்குக் காவடி, விலகல் கடிதங்கள் இவற்றில் எதனையுமே திமுக தயவில் உயிர் வாழும் காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை.

கொட்டும் மழையிலும் சென்னையில் இருந்து செங்கல் பட்டு வரை 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீதி ஓரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியதைக் கூட காங்கிரஸ் அரசு கண்டு கொள்ளவில்லை. இதைவிட ஒரு அவமானத்தை கலைஞர் கருணாநிதிக்கு வேறு யாரும் செய்ய நினைக்க மாட்டார்கள்.

இவற்றைப் பார்த்துவிட்டுத்தான் தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிகள் என இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எள்ளி நகையாடினான். இப்போது அவன் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று எண்ணிக் கொண்டால் அதில் தவறில்லை போல் படுகிறது.

உலகத் தமிழினத் தலைவர், கலைஞர், முத்தமிழ் அறிஞர், டாக்டர், சாணக்கியன், முதுபெரும் அரசியல்வாதி, தமிழகத்தில் அய்ந்தாவது முறையாக முதல்வர் பதவி வகிப்பவர் எனப் புகழாரங்கள் சூட்டப்படும் கருணாநிதி இன்று கிட்டத்தட்ட தனிமரமாக நிற்கிறார். பாமகவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றியது எந்தமாதிரியான அரசியல் சாணக்கியம் என்பது புரியவில்லை.

இந்திய மத்திய அரசு சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள இனச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வு சரியாகாது அரசியல் தீர்வே சரியாகும் என வெறுமனே சொல்லி வந்ததேயொழிய அதன் மறைமுக நிகழ்ச்சி நிரல் முற்றிலும் வேறாக இருந்தது.

வி.புலிகளை ஓரங்கட்டிவிட்டு தமிழ் ஒட்டுக் குழுக்களுடன் பேசி 13 ஆவது திருத்தத்தை ஸ்ரீலங்கா நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் இந்த அறிவிப்பு இந்தியாவின் முகமூடியைக் கிழித்தெறிய உதவியது. போதாக் குறைக்கு வெந்த புண்ணில் வேலை நுழைப்பது போல வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து சரண் அடைய வேண்டும் என்று அமைச்சர் சொன்னது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொதிப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. பிரணாப் முகர்ஜியைத் தொடர்ந்து அமைச்சர் ப. சிதம்பரமும் அதே கருத்தை மாங்கொல்லையில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் வெளியிட்டார்.

நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ்மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பதில் தீவிர முனைப்போடும் அதிக அக்கறையோடும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் மண்கவ்வினால் வியப்பேதும் இல்லை.

பொரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி ஆகியன காங்கிரசை வீழ்த்த வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் நிற்கின்றன. மாணவர்கள், சட்டவாளர்கள், வணிகர்கள், தமிழ்ச் சான்றோர்கள், இளைஞர்கள் அதே மனதோடு இருக்கிறார்கள்.

பொதுக்கூட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாகக் குற்றம்சாட்டி திரைப்பட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோரை முதல்வர் கருணாநிதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து அழகு பார்ப்பது அவர் மீதும் மக்களது கோபம் திரும்பியுள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பெரிய சிக்கல்களுக்கு உள்ளாகி வருகிறது. பீகாரில் லாலு பிரசாத் 40 இல் 3 தொகுதிகளை மட்டும் ஒதுக்கியதால் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதே போல் உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகதிகளில் 10 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட இருக்கிறது. மாகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் காங்கிரசும் – பவாரின் தேசிய காங்கிரசும் தேர்தல் உடன்பாடு கண்டுள்ளன.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்ற கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் திமுக அணியோடு நிற்கிறது.

அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம். ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. திமுக கூட்டணியில் இருப்பதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டுள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி சேருவது என்பது ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் துரோகம் என எந்த அடிப்படையில் சொல்கிறார் என்பது விளங்கவில்லை.

ஜெயலலிதா நேற்றுவரை எமது போராட்டத்துக்கு எதிராக இருந்தவர் என்பது உண்மைதான். “இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராகப் பேசியவர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைக் கைது செய்ய வேண்டும் விடுதலைப்புலிகள் சரண் அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும் தமிழ் இனத்திற்கும் எதிராகப் பேசியவர் ஜெயலலிதா” என்கிறார் திருமாவளவன். அதுவும் உண்மைதான். ஏன் அதற்கு மேலாகவும் “தடை செய்யப்பட்ட வி.புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ, சீமான், அமீர், பாரதிராசா போன்ற தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்ய வேண்டும்” என ஜெயலலிதா அறிக்கை விட்டவர் என்பதும் உண்மைதான். ஆனால் அவர் பேசியது போன்றுதானே காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?

“எமது தலைவர் இராசீவ் காந்தியைக் கொன்றவர்களை மன்னிக்கவும் மாட்டோம் மறக்கவும் மாட்டோம். பிரபாகரனை இந்தியாவிடம் சிறிலங்கா ஒப்படைக்க வேண்டும்” என்று வீராவேசமாகப் பேசிக்கொண்டும் அறிக்கை விட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். வி.புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் அவர்களால் தமிழர்களுக்குச் சேதம் என்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் பேசுகிறார்கள். அது மட்டுமல்ல திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு குன்றுமணி அளவு கூட வித்தியாசம் இல்லை என்று கருணாநிதியும் பேசுகிறார். அப்படியென்றால் திருமாவளவன் எந்த முகத்தோடு திமுக – காங்கிரஸ் கூட்டணியோடு நிற்கிறார்?

ஜெயலலிதா இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். தமிழ் மக்கள் குண்டு போட்டுக் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறார். ஸ்ரீலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவதைக் கண்டிக்கிறார். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அது அங்கீகரிக்கப்பட வேண்டும் அதன் கீழ் அவர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கையில் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறுகிறா.

ஆனால் திமுகவின் நிலை என்ன? வன்னிமக்கள் இன்று வகைதொகையின்றி நூற்றுக் கணக்கில் நாள்தோறும் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் கொட்டிய குருதியால் வன்னி மண் செம்மண்ணாகிவிட்டது. வன்னி மக்கள் பசியால் மெலிந்து பட்டினியால் வாடி, நோயினால் நலிந்து சொல்லொணா அவலங்களுக்கும் அல்லல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கொல்லப்படுவதற்கும் அல்லல்படுவதற்கும் அவலப்படுவதற்கும் மத்தியிலுள்ள திமுக ஆதரவு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்! இது சிறு பிள்ளைக்கும் நன்கு தெரியும்.

இந்தியாவே சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், இராடார்கள், பயிற்சி, புலனாய்வு, கடன் கொடுத்து வி.புலிகளுக்கு எதிரான போரைப் பின்னால் இருந்து நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் உதவியின்றி சிறிலங்கா படைகள் வி.புலிகளை வென்றிருக்க முடியாது என சிறிலங்கா அமைச்சர்கள் பகிரங்கமாக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.

தமிழீழத்தில் ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. அதனை நிறுத்துமாறு அய்யன்னாவும் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் மனிதவுரிமை அமைப்புக்களும் கேட்கின்றன. ஆனால் இந்தியா போரை நிறுத்துமாறு இதுவரை சிங்கள – பவுத்த இனவாத அரசைக் கேட்கவில்லை. கேட்கவில்லை என்பதையும் சிறிலங்கா அமைச்சர்களே சொல்கிறார்கள்.

தமிழ்மக்களைப் பொறுத்தளவில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வருவதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி வந்தால் நிலைமை இப்போது இருப்பதைவிட மோசமாகும்.. முதலில் தமிழ்மக்களது பொது எதிரியான – தமிழ்மக்களுக்குத் துரோகம் செய்கின்ற – திமுக – காங்கிரஸ் கூட்டணியைத் தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும். மிகுதியைப் பின்னர் பார்ப்போம். (உலகத்தமிழர் – மார்ச்சு 27-03-2009)


போர்க்குற்றச் சாட்டில் சுடான் ஆட்சித்தலைவர் பஷீர் மீது பிடியாணை!

இன்று செய்தித்தாள்களில் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சுடானின் ஆட்சித் தலைவர் ஓமர் அல் பஷீர் (Omar al-Bashir) பெயர் பலமாக அடிபடுகிறது. அவருக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலை (3) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் (5) மற்றும் போர் குற்றங்கள் (2) சுமத்தப்பட்டுள்ளன.

ய+லை 2008 இல் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் முக்கிய வழக்குத்தொடருனர் Luis Moreno-Ocampo  பஷீர் டாவூர் (Darfur)  நகரில் இயங்கும் மூன்று சிறுபான்மை இனக்குழுக்கள்  efupy; ,aq;Fk; %d;W rpWghd;ik ,df;FOf;fs; (Fur, Marsalit and Zaghawa ethnic groups in Darfur) செய்த கிளர்ச்சியை அடக்க எடுத்த நடவடிக்கையின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2003 ஆம் ஆண்டு பஷீர் சுடான் இராணுவத்துக்கு கிளர்ச்சியை அடக்குமாறும் யாரையும் போர்க் கைதிகளாகப் பிடித்துக் கொண்டு வரவேண்டாம் எனவும் கட்டளை பிறப்பித்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அது மட்டுமல்ல டாவூரில் இடம்பெற்ற போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 இலட்சம் மக்கள் தாமதமான சாவுக்கு முன்னர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

ஹேக்கில் இயங்கும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் மார்ச்சு மாதம் 4 ஆம் திகதி; பஷீரைக் கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஆனால் அந்தப் பிடியாணையை சுடான் ஏற்பதற்கான சாத்தியம் இல்லை. பஷீர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார். தன்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்கிறார். மேலும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு பிடியாணை பிறப்பிக்கும் உரிமை கிடையாது என்றும் சொல்கிறார்.

இந்தப் பிடியாணைக்கு எதிராக சுடானில் பேரணிகள் நடத்தப்படுகின்றன. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றப் பிடியாணையை தாங்கள் மதிக்கப் போவதில்லை என்றும் டாவூர் எதிரிகளின் சுடுகாடாக மாறும் எனவும் எச்சரித்துள்ளனர்.

1944 இல் பிறந்த அல் பஷீர் சுடான் நாட்டு இராணுவத்தில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று மேலே உயர்ந்தார். 1989 இல் அப்போதைய பிரதமர் சாதிக் அல் மாடியை ஒரு இராணுப் புரட்சி மூலம் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார். 1993 ஒக்தோபர் 16 இல் பஷீர் தேசிய மீட்சிக்கான புரட்சிகர கட்டளை அவையைக் கலைத்துவிட்டு தன்னைத்தானே ஆட்சித்தலைவராக நியமித்துக் கொண்டார். அரசியல் கட்சிகளும் கலைக்கப்பட்டன. 1996 இல் நடந்த ஆட்சித்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒரே வேட்பாளரான பஷீர் வெற்றி பெற்றார். இன்று சுடான் நாட்டு தேசிய காங்கிரசின் தலைவராவும் விளங்குகிறார்.

ஒக்தோபர் 2004 இல் தென்சுடான் பகுதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமையை வழங்கி 19 ஆண்டுகாலமாக நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்தார். ஆனால் அவரது அரசு டாவூரில் நடத்திய மனிதப்படுகொலை கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் உரோமில் அய்க்கிய நாட்டின் பொதுச்சபையால் கூட்டப்பட்ட இராசதந்திரிகளின் மாநாட்டில் 1998 யூலை 17 இல் (International Criminal Court Statute or the Rome Statute)  உருவாக்கப்பட்டது. இந்த மாநாடு 5 கிழமை நீடித்தது. மொத்தம் 120 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஏழு நாடுகள் எதிர்த்தன. 21 நாடுகள் நடுநிலமை வகித்தன. நீதிமன்றம் யூலை 01, 2002 இல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஆண்டு சனவரி மாதம் வரை 108 நாடுகள் நீதிமன்றத்தை அங்கீகரித்துள்ளன. அங்கீகரிக்காத நாடுகளில் அமெரிக்கா, இந்தியா, உருசியா, சுடான் முக்கியமானவை.

அனைத்துலக மட்டத்தில் இனப்படுகொலை மற்றும் கடுமையான குற்றங்களை இழைப்பவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை வாங்கிக் கொடுப்பதே இந்த நீதிமன்றம் உருவாக்கப்பட்டதற்குக் காரணமாகும்.

2003 – 2005 காலப்பகுதியில் மூன்று இனக் குழுக்கள் வாழும் ஊர்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. இனப்படுகொலைக்கு பாலியல் வன்முறை, பட்டினி மற்றும் பயம் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக குமரிப் பெண்கள், 70 அகவை கடந்த மூதாட்டிகள் கும்பலான பாலியல்வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர்.

சுடானின் பதிலடியை எதிர்பார்த்து அய்யன்னா அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பன்னாட்டு அமைதிப் படையினர் அதியுச்ச எச்சரிக்கை நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அய்யன்னாவின் பொதுச் செயலர் பான் கி மூன் “யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல. நீதியும் அமைதியும் ஒன்றை ஒன்று அணைத்துப் போட வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.

பன்னாட்டு நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு வேறு காரணிகள் இருப்பதாக ஆபிரிக்கத் தலைவர்கள் எண்ணுகிறார்கள். சுடானின் எண்ணெய் வளந்தான் மேற்குலக நாடுகளது குறி அல்லது இலக்கு என்கிறார்கள்.

1800 களிலும் 1900 களிலும் சுடானில் எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அடுத்து அந்த எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்த அமெரிக்கா, அய்ரோப்பா மற்றும் சீனா தங்களுக்குள் போட்டி போடுகின்றன. மேற்கு நாடுகளை நம்பாத பஷீர் தனது நாட்டின் எண்ணெய் வளத்தையும் அது தொடர்பான உடன்பாடுகளையும் சீனாவுக்குக் கொடுத்துவிட்டார். ஒரு முதலாளித்துவ நாட்டுக்குள்ள பெரும் உற்சாகத்தோடு அந்த எண்ணெய் வளத்தை சீனா சுரண்டிக் கொண்டிருக்கிறது. சுடானின் எண்ணெய் வளத்தை மேற்குலகு நாடுகள் கோட்டை விட்டாலும் அந்த நாட்டின் ஆட்சியை மாற்றும் முயற்சியை மட்டும் கைவிடவில்லை.

1900 களில் இராக்குக்கு எதிராக இடம்பெற்ற முதல் வளைகுடாப் போரை அடுத்து சதாம் குசேன் அமெரிக்காவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தார். விற்கும் எண்ணெய்க்கு டொலருக்குப் பதில் யூறோ நாணயத்தை வாங்குவது என்ற சதாம் குசேனின் முடிவு அமெரிக்காவிற்கு எரிச்சலை கொடுத்தது. அந்த முடிவு தனக்கு எதிரான முடிவு என அமெரிக்கா எண்ணயது. எனவே இராக் மீது படையெடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. இன்று இராக்கின் எண்ணெய் வளம் அமெரிக்காவின் கைகளில் இருக்கிறது.

இராக் மீதான அமெரிக்காவன் படையெடுப்பு ஏனைய எண்ணெய் வள நாடுகளுக்கு ஒரு அபாய அறிவிப்பாகவும் எச்சரிக்கையாகவும் அமைந்தது. லிபியா அந்த எச்சரிக்கையை விளையாட்டாக நினைக்கவில்லை. எனவே அது அமெரிக்காவோடு சமரசம் செய்து கொண்டு விட்டது.

சுடான், பஷீருக்கு எதிரான பிடியாணை சீனாவை ஒதுக்கிவிட்டு மேற்குலக நாடுகளது எண்ணெய் குழுமங்களைக் கொண்டுவரும் முயற்சி என நினைக்கிறது. ஆனால் சுடான் அதற்கு மசிவதாக இல்லை. சுடான்தான் சீனாவின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடு. சீனாதான் சுடானின் ஆயுத தளபாட ஏற்றுமதி நாடு. ஒரு வேளாண்மை நாடாக இருந்த சீனா இன்று துரித கெதியில் கைத்தொழில் நாடாக மாறிவருகிறது. அதன் எண்ணெய்த் தேவை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுடானுக்கு எதிராக அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு அவை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத வண்ணம் சீனா பார்த்துக் கொள்கிறது. அமெரிக்கா இஸ்ரேலின் நலங்களை எப்படி அய்யன்னாவில் பார்த்துக் கொள்கிறதோ அதைத்தான் சீனாவும் செய்கிறது. இதில் யார் யோக்கியன் யார் அயோக்கியன் என்பதைக் கண்டு பிடிப்பது கடினமாகும்.

டாவூரில் இடம்பெற்ற கலவரத்துக்கு சுடான் அரசின் பாகுபாடே காரணமாகும். டாவூரில் வாழும் மக்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஆவர். ஆனால் அவர்கள் ஆபிரிக்க இனத்தவர். உலக நாடுகள் டாவூர் மோதல்களை பெரும்பான்மை அராபியர்களுக்கும் சிறுபான்மை அராபியர் அல்லாதோருக்கும் இடையிலான மோதலாகவே பார்க்கின்றன.

டாவூர் மக்கள் தங்கள் நிலம் அரசு ஆதரவு அராபிய நாடோடிகளால் (Janjaweed militia ) அபகரிக்கப்படுவதையிட்டு முறையிட்டு வந்துள்ளார்கள். பல்லாயிரக்கணக்கான டாவூர் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நூற்றுக்கணக்கான ஊர்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த வன்முறையைத் தடுப்பதற்கு ஆட்சித்தலைவர் பஷீர் சரி> அவரது அரசு சரி எந்த முயற்சியுமே செய்யவில்லை. டாவூர் மக்களது அவலங்கள் அவர்கள் கிளர்ச்சி செய்ததற்கான தண்டனை அல்லது படிப்பித்த பாடம் என பஷீர் அரசு நினைக்கிறது.

பாதுகாப்பு அவை பஷீருக்கு எதிரான குற்றச்காட்டுக்களை பன்னாட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்தது. அதன் அடிப்படையிலேயே அது பிடியாணை பிறப்பித்துள்ளது. பிடியாணை பிறப்பித்ததை அடுத்து சுடான் 50 விழுக்காடு பன்னாட்டு ஊழியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிவிட்டது. இவர்கள்தான் டாவூர் மக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். இது டாவூரில் வாழும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பலர் இஸ்ரேலில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

பஷீர் மீது போர்க்குற்றம் சாட்டி நடவடிக்கை எடுப்பது நல்லதுதான். ஆனால் உலகில் அவர் மட்டுந்தான் மானிடத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார்? இராக் மற்றும் ஆப்கனிஸ்தான் மீது படையெடுத்து பேரழிவை ஏற்படுத்தி போர்க்குற்றம் இழைத்த முன்னாள் அமெரிக்க ஆட்சித்தலைவர் யோர்ஜ் புஷ், ரோனி பிளேயர் போன்றோர்களை பன்னாட்டு நீதிமன்றம் நீதியின் முன் நிறுத்துமா? இராக்கில் மட்டும் பத்து இலட்சம் மக்கள் அமெரிக்க படையிரலால் கொல்லப்பட்டார்கள். நாற்பது இலட்சம் மக்கள் இராக்கை விட்டு ஓடி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தார்கள்.

சுடான் நாட்டு ஆட்சித்தலைவர் பஷீருக்கும் ஸ்ரீலங்கா நாட்டு ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. பஷிர் மீது சுமத்தப்பட்ட எதிராக இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் இராசபக்சே மீதும் சுமத்தப் படவேண்டும். ஸ்ரீலங்காவிலும் இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு கன கச்சிதமாக இடம்பெறுவதை பன்னாட்டு நீதிமன்றம் எப்போது கண்டு கொள்ளப் போகிறது? (உலகத்தமிழர் – மார்ச்சு 20, 2009)


 

About editor 3043 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply