கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்

கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்
– இலக்குவனார் திருவள்ளுவன்

சோழ நாட்டின் எல்லை:
கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1)
[கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.]

பாண்டிய நாட்டின் எல்லை:
வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி. (2)
வடக்கே வெள்ளாறு, மேற்கே பெருவழி, தெற்கே தெளிந்த நீருடைய குமரி, கிழக்கே ஆட்சிக்குட்பட்ட கடல். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 56 காதப் பரப்பு பாண்டியநாடாகும். அஃதாவது தெற்கே கடல் எனக் குறிப்பிடாததால் கம்பர்காலத்தில் தெற்கே, குமரிமலையிலிருந்து பெருக்கெடுத்தோடிய குமரியாறுதான் இருந்துள்ளது.]

சேர நாட்டின் எல்லை:
வடக்கு திசைபழனி வான்கீழ் தென்காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம் – கடற்கரையின்
ஓரமோ தெற்காகும் உள்ளெண் பதின்காதம்
சேரனாட் டெல்லையெனச் செப்பு. (3)
[ வடதிசையில் பழனி, கிழக்கே பெருமை தென்காசி, மேற்கே கோழிக் கோடு, தெற்கே கடற்கரை. இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 80 காதப்பரப்பு சேரநாடு. அப்படியானால், கம்பர்காலத்தில் சேரநாடு பெரும்பரப்பாக இருந்துள்ளது.]

தொண்டைநாட்டு எல்லை :
மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்காம்
ஆர்க்கும் உவரியணி கிழக்கு – பார்க்குளுயர்
தெற்குப் பினாகினி திகழிருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு. (4)
[மேற்கே பவளமலை, வடக்கே திருவேங்கட மலை, கிழக்கே கடல், தெற்கே உலகில் சிறந்த பெண்ணை ஆறுஇவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 20 காதப் பரப்பு, தொண்டை நாடு.]

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply