2017-10-10
சமஷ்டி குறித்த உயிர்நீதிமன்ற தீர்ப்பு தென்னிலங்கை மக்களை சென்றடைய வேண்டும்
மூத்த சட்ட விரிவுரையாளர் சர்வேஸ்வரன்
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரட்ணவேல் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சட்டம் தெளிவோம் நிகழ்வில் சமஷ்டி (இணைப்பாட்சி) என்பது பிரிவினை அல்ல -உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிவானில் ஒரு விடிவெள்ளி என்ற தலைப்பில் கொழும்புப் பல்கலைக்கழக சட்டபீட மூத்த விரிவுரையாளரும் சட்ட ஆய்வு நிலைய பணிப்பாளருமான அ.சர்வேஸ்வரன் உரையாற்றினார்.
சந்திரசோமா எதிர் மாவை சேனாதிராஜா என்ற வழக்கில் (SC SPL No. 03/2014) உயர்நீதிமன்றத்தால் கடந்த மாதம் வழங்கப்பட்ட சமஷ்டி என்பது பிரிவினை என்று ஆகாது என்ற தீர்ப்பானது தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஒரு படிக்கல் ஆக அமைந்துள்ளது என்று இங்கு உரையாற்றிய சர்வேஸ்வரன் கூறி னார்.
இவ் வழக்கின் முதலாவது எதிர்வாதியான இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்திருந்த இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியானது அதன் குறிக்கோள்களில் ஒன்றாக இலங்கை ஆள்புலத்தினுள் தனியான அரசு ஒன்றை அமைப்பதைக் கொண்டுள்ளது என விளம்புமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கிடப்பட்டது. 1983 ஆம் ஆண்டில் அரசியலமைப்பிற்குக் கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தத்தின் மூலம் இலங்கை ஆள்புலத்தினுள் தனியான அரசைத் உருவாக்க முயற்சிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
தனியான அரசை நிறுவ கட்சியொன்று முயற்சிப்பதாக உயர்நீதிமன்றம் விளம்பிய பின்னர் அவ்வாறான முயற்சியில் அக்கட்சியானது ஈடுபடுமாயின் அக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குற்றம் புரிந்தவர்களாகக் காணப்படுவதன் மீது அவர்களது குடியுரிமையை ஏழு வருட காலப்பகுதிக்கு இழப்பதுடன் அவர்களது அசையும் அசையாத சொத்துக்கள் பறிமுதலுக்கு உள்ளாவதுடன் அவர்கள் நாடாளுமன்ற அங்கத்தவர்களாயின் அவர்களது பதவியையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இலங்கை தமிழரசுக் கட்சிக்கெதிராக வழக்கிட்டவர் இக் கட்சியானது தனது யாப்பினை 2008 இல் திருத்தி சமஷ்டி என்று இருந்த சொற்பதத்தை கூட்டாட்சி என்ற சொற்பதத்தால் பதலீடு செய்துள்ளது எனவும் பதிலீடு செய்யப்பட்ட இச் சொற்பதமானது தனியான சுதந்திர அரசுகள் ஒன்றாக சேருவதையே குறிக்குமென்பதால் இலங்கை தமிழரசுக் கட்சியின் குறிக்கோள்களில் ஒன்றாக தனியான அரசு ஒன்றை இலங்கை ஆள்புலத்தினுள் தாபிப்பது உள்ளதென வாதிட்டார்.
தனது வாதத்திற்கு ஆதாரமாக 1976 இல் பண்ணாகத்தில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவ கட்சியாக இருந்து வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தமிழ் ஈழம் என்ற தனியான அரசை ஸ்தாபிப்பதை இலங்கை தமிழரசுக் கட்சியும் ஏற்று அங்கீகரித்துள்ளது என்றார். அவர் தனது வாதத்திற்கு ஆதாரமாக வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1977 ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தையும் சமர்ப்பித்திருந்தார்.
இலங்கை தமிழரசு கட்சியானது தனது அரசியலமைப்பிலுள்ள சமஸ்கிருத சொற்பதமான சமஷ்டி என்பதற்கு இணையான தூய தமிழ் சொற்பதமான இணைப்பாட்சி என்ற சொற்பதத்தால் பதிலிட்டதனை இவ்வழக்கிட்டவர் தவறான மொழிபெயர்ப்பின் மூலம் தனியான சுதந்திர அரசுகள் ஒன்றாக சேர்ந்து அமைக்கின்ற கூட்டாட்சி என்பதாக அர்த்தம் புரிந்துள்ளார் என்பதையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நோக்கம் பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கையினுள் தமிழ் பேசும் வடக்கு, கிழக்கிலான பாரம்பரிய பிரதேசங்களில் சுயநிர்ணய கோட்பாடுகளுக்கு அமைய மக்களுக்கான சுய ஆட்சியைப் பெறுவதாகும் என்பதையும் இலங்கை தமிழரசுக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதார ஆவணங்களிலிருந்து உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
தமிழரசுக் கட்சியானது தனது திருத்தப்பட்டவாறான யாப்பின் வாசகமானது ஐக்கிய இலங்கை இணைப்பாட்சி அங்கமாக என இருப்பதனை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தது. காலமாற்றத்தால் தமிழ் மக்களின் அரசியலும் மாற்றத்திற்கு உள்ளாகியதுடன் அன்று அரசியலமைப்பின் ஆறாவது திருத் தத்திற்கமைய சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்து பாராளுமன்ற பதவிகளைத் துறந் தவர்கள் இன்று முக்கியமாக பதின்மூன்றாவது திருத்தத்தின் பின்னர் நிலைமாற்றமடைந்து ஆறாவது திருத்தத்திற்கு அமைவாகச் சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்ற பதவிகளை வகிக்கின்றார்கள் என்பது எதிர்வாதி தரப்பால் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இவ் வழக்கிலே ரொனால்ட் உவாற்ஸின் ஆக்கமான கனடாவில் சமஷ்டியும் பல்லினத்தன்மையும் என்பதில் மாகாண சுயாட்சியானது ஏற்கனவே வழங்கப்படாதிருந்தால் பிரிந்து செல்வதற்கான இயக்கமானது பலவீனமடைந்திருக்கமாட்டாது மாறாக மேலும் வலுப்பெற்ற ஒன்றாகவே இருந்திருக்குமென குறிப்பிட்டதனையும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலே உள்ளடக்கியிருந்தது.
சமகால சர்வதேச சட்டத்தின் அண்மைக்கால வளர்ச்சியானது மக்களின் சுய-நிர்ணய உரிமையானது வெளியக மற்றும் உள்ளக பரிமாணங்களைக் கொண்டுள்ளதை வெளிப்படுத்துகின்றது. வெளியக சுய-நிர்ணய உரிமை என்பது அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதையும் உள்ளக சுய-நிர்ணய உரிமையென்பது தமது அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையிலிருந்து விடுபடும் வழியை தமது விருப்பில் தேர்வு செய்வதையும் குறிக்கும் என சர்வதேச நீதிமன்றமானது 2010 இல் கொசோவோ ஆலோசனை அபிப்பிராயத்தை வழங்கிய போது நீதியரசர் ஹன்காடோ ரின்டாடே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியானது இவைகளை எடுத்துக்காட்டி சுய-நிர்ணய உரிமையென்பது நாட்டினுள்ளே மக்களின் நன்மைக்காகப் பிரயோகிக்கப்படக் கூடிய உள்ளக பரிமாணமொன்றையும் கொண்டுள்ளது என சமர்ப்பணம் வைத்துள்ளதென தனது தீர்ப்பிலே உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இவ்வாறான பின்னணியில் உயர்நீதிமன்றமானது அரசொன்றில் உள்ளக சுயநிர்ணயத்தைக் கோருவது தனியான அரசைக் கோருவது ஆகாது எனவும் அரசொன்றினுள் இறைமையை மற்றும் அதிகாரத்தைப் பகிர்வதன் மூலம் சமஷ்டி முறையிலான அரசாங்கத்தைக் கோருவது பிரிவினையைக் கோருவது ஆகாது எனவும் தனது தீர்ப்பை வழங்கியது.
உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பிலே தமிழ் அரசியல் போராட்டங்களுக்கு கிடைத்த எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் சுட்டிக்காட்டியது.
சிங்கள பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பின் காரணமாக பண்டா – செல்வா ஒப்பந்தம் மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியவைகள் கிழிக்கப்பட்ட வரலாற்றையும் 1970 களில் ஆயுதப் போராட்டம் மூலம் தனியான அரசை நிறுவ தமிழ் இளைஞர்களின் போராளி குழுக்கள் தோற்றம் பெற்றதையும் இனப்பிரச்சினை தீர்வுக்காக 1985 இல் இடம்பெற்ற திம்புப் பேச்சு வார்த்தையையும் தனது தீர்ப்பில் உயர்நீதிமன்றம் உள்ளடக்கியது இத் தீர்ப்பின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இலங்கை தமிழரசுக் கட்சியானது தனியான அரசொன்றைத் ஸ்தாபிக்க முயற்சிக்கின்றது என விளம்புமாறு கோரிய வழக்கில் உள்ளக சுய நிர்ணயம் பற்றியும் சமஷ்டி முறையிலான அரசாங்கம் பற்றியும் உயர்நீதிமன்றம் விளம்பியவை வெறுமனே அபிப்பிராயங்களே அன்றி அவை வடக்குஇ கிழக்கிற்கான உள்ளக சுய நிர்ணயம் அல்லது சமஷ்டி முறையிலான அரசாங்கம் வழங்கப்படுதல் வேண்டுமென்பதான தீர்ப்பாக அமையாது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் இன்றைய முக்கியத்துவம் பற்றிய தனது கருத்தை அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் அரசியல் வரலாறு தடம் மாறுவதற்குச் சட்டங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் பங்களிப்புச் செய்துள்ளன என்றார். தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அச் சட்டமானது அப்பொழுதிருந்த சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மீறுகின்றது என தீர்ப்பளிப்பதை உயர்நீதிமன்றம் தட்டிக்கழித்தது. இது இலங்கையின் அரசியல் இனவாத அரசியலாக இன ரீதியாகத் துருவமயப்படுவதற்குப் பங்களிப்புச் செய்த காரணிகளில் ஒன்றாக இருந்தது.
சமஷ்டி என்ற கோரிக்கை வடக்கு கிழக்கில் வலுப்பெற்று வருகையில் சமஷ்டி என்பது பிரிவினை என்ற பிரசாரம் தென்னிலங்கையை அச்சமுற வைக்கையில் உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. உயர்நீதிமன்றமானது இலங்கை தமிழரசு கட்சியானது தனி அரசு ஒன்றைத் தாபிக்க முற்படவில்லை என்று வெறுமனே விளம்புவதுடன் நின்றுவிடாது அதற்கப்பாலும் சென்று சமஷ்டி அரசாங்க முறைமை பற்றியும் சமஷ்டி அரசாங்க முறைமையை வடக்கு, கிழக்கு மக்கள் கோருவதற்கு காரணமாக இருந்தவைகளையும் தனது தீர்ப்பில் உள்ளடக்கியமை அதிகார பகிர்வின் மூலமான இனப்பிரச்சினைத் தீர்விற்கான நீதித் துறையின் மனப்பான்மையில் ஏற்பட்டுள்ள சாதகமான ஒரு மாற்றமாகவே உள்ளது.
மேலும் பேசுகையில் சமஷ்டி முறையில் வடக்கு, கிழக்கு மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மிக அவசியமானது. சமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்பதனையும் பிரிக்கப்படாத ஒன்றிணைந்த அரசின் கீழான சமஷ்டி முறைமையானது பிரிவினைக்கு எதிரானதாக அமையும் என்பதையும் நாட்டின் அரசியல் தீர்வாக மட்டுமல்லாது அபிவிருத்திக்கான தீர்வாகவும் இது அமையும் என்பதையும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதாகும் என்றார். இது அவர்கள் மத்தியில் சந்தேகங்களைக் களைந்து அச்சத்தை நீக்கி நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதாக அமையும்.
இதற்கான ஒரு அடித்தளத்தை உயர்நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அமைத்துள்ளது. சமஷ்டி என்ற சொற்பதமா அல்லது வேறேதேனும் சொற்பதமா பயன்படுத்தப்படுகின்றது என்பதனை விட எந்தளவிற்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பது தான் முக்கியமானது என்றார்.
உயர்நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட அரசியலமைப்பிற்கான இருபதாவது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஏன் அவசியமானது என்பது பற்றியும் கருத்துத் தெரிவித்தார்.
மாகாண சபைக்கான அங்கத்தவர்கள் மக்களால் ஐந்து வருட காலப்பகுதிக்கென தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். மாகாண சபையின் தேர்தலை பிற்போடுவதன் மூலம் மாகாண சபையொன்றின் காலப்பகுதியை நீடிக்கும் போது அது மக்களின் இறைமையை மீறுவதாக அமைகின்றது. எனவே மாகாண சபையொன்றின் காலப்பகுதியை மக்களின் அங்கீகாரமின்றி நீடிக்க வழிசெய்யும் இருபதாவது திருத்தமானது பாராளுமன்றத்திலான மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் மாத்திரமின்றி சர்வஜனவாக்கெடுப்பின் மூலமும் நிறைவேற்றப்படுதல் வேண்டுமென்பது அவசியமாகின்றது என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.