கொஞ்சம் தமிழ்.. கொஞ்சம் இலக்கணம்!
ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா?
இலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி என்பது ஓசைகளின் கூட்டம்தான். பல்வேறு ஓசைகளைக் காதால் கேட்கும்போது, அவற்றை நினைவில் வைத்து, மீண்டும் அதே ஓசைகளை எழுப்பும்போது, அது மற்றவர்களுக்குப் புரிந்துவிட்டால் அது மொழி! எந்த ஒரு மொழியும் ஓசைகளில் ஒழுங்குதான்; ஓசைகளின் அமைப்புத்தான். ஓசைகள் பிறக்கும், ஓசைகள் ஒலிக்கும், ஓசைகள் சேரும் நுட்பங்களை எடுத்துச் சொல்வதுதான் இலக்கணம்!
நுட்பங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்வது?
நுட்பங்கள் தெரிந்தால் சரியாக எழுதலாம். நுட்பங்களை அறியாமலா உலகத்தார் இயங்குகின்றனர்.? ஏ.சி. மின்சாரம், டி.சி. மின்சாரம் என இரண்டு வகை உண்டு. இதற்குப் பயன்படுத்த வேண்டிய பல்பினை அதற்குப் பயன்படுத்தலாமா? அப்படித்தான் மொழி நுட்பங்களும்!
இரவு பகலும் பாடுபட்டேன் என்று மக்கள் பேசுகின்றார்கள். இதில் ‘உம்’ என்னும் சாரியை உள்ளது. இது மறைந்து இரவுபகல் என்று வந்தால் அது தொகை. மொழியைக் கற்றவர்கள் இவற்றைக் கவனிக்கின்றார்கள்; மற்றவர்கள் கவனிப்பதில்லை. பென்சிலை அரிவாளால் சீவ முடியுமா; வாழை மரத்தை பிளேடால் வெட்டலாமா?
தமிழில் எத்தனை ஓசைகள் இருக்கின்றன?
இப்போது நீங்கள் கேள்வியைச் சரியாகக் கேட்கின்றீர்கள். தமிழில் முப்பது (30) முதன்மை ஓசைகள் இருக்கின்றன. இந்த ஓசையைத்தான் எழுத்து என்றனர். எழுத்து என்றால் ஓசை என்பது பொருள், ”அகர முதல எழுத்து எல்லாம்” என்றால், ஓசைகள் எல்லாம் அகரமாகிய ஒலியை முதலாகப் பெற்றிருக்கின்றன என்று பொருள். அதாவது உலக மொழிகளில் ஓசைகளுக்கு எல்லாம் அகரம் முதல் ஒலியாக உள்ளது (வடமொழி, இந்தி, ஆங்கிலம் மற்ற பிற மொழிகளுக்கும்)
வேறு ஓசைகள் உண்டா?
உண்டு. மூன்று (3) சார்பு ஓசைகள் உள்ளன. அந்த ஓசைகள் மற்றவற்றைச் சார்ந்தே எழும்.
மொத்தமாக முப்பத்து மூன்று (33) ஓசைகள் என்று குறிப்பிட்டுவிட்டீர்கள். அவை என்னென்ன?
உயிர் எழுத்து (ஓசை) 12, மெய்யெழுத்து 18, சார்பு எழுத்து 3. ஓசை ஓசை என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதற்குக் காரணம், ஒரு மொழியில் ஓசைகள்தாம் முக்கியமேதவிர வடிவங்கள் அல்ல என்பதை நிறுவிடத்தான். ‘அ’ என்னும் ஓசைதான் முக்கியம்; அதன் வடிவம் அன்று. வடிவங்கள் காலத்திற்குக் காலம் மாறுபட்டுள்ளன; ஓசைகள் மாறுபடுவதில்லை! திருவள்ளுவரை அழைத்து ‘ஏரின் உழார்’ என்னும் குறளைப் படிக்கச் சொன்னால், அவருக்குப் புரியாது; அவர் காலத்தில் ஏயன்னாவிற்கு இந்த வடிவம் இல்லை.
இனி, எழுத்து என்பதை ஓசை என்று அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டா. எழுத்து என்றே எழுதுவோம். உயிர் எழுத்துப் பன்னிரண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அவை குற்றெழுத்து, நெட்டெழுத்து ஆகியவையாம்.
அ, இ, உ, எ, ஒ ஆகியன குற்றெழுத்துக்கள்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெட்டெழுத்துக்கள். ஆக பன்னிரண்டு (5+7=12).
மெய்யெழுத்துக்கள் 18 ஆகும். இவற்றை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்றாகப் பிரிக்கலாம்.
க், ச், ட், த், ப், ற் வல்லெழுத்து;
ங், ஞ், ண், ந், ம், ன் மெல்லெழுத்து;
ய், ர், ல், வ், ழ், ள் இடையெழுத்து.
கசடதபற வல்லினமாம் என்று குறிப்பிடுகின்றார்களே என்று கேட்கத் தோன்றும்.
க்+அ = க ; இது போல அகரச் சாரியையைச் சேர்த்துச் சொல்வதற்கு வசதி கருதி அப்படி அழைப்பதுண்டு.
ஆக மொத்தம் மெய்யெழுத்துகள் பதினெட்டு (6+6+6=18).
இதுவரை தமிழ் மொழியின் மேல் உள்ள முப்பது முதன்மை ஓசைகளைப்பற்றி அறிந்து கொண்டோம்.
ஓசைகளைக் குறில், நெடில் என்று குறிப்பிடுகின்றீர்களே, அதற்கு ஏதாவது அளவு உண்டா?
ஓசைகள் ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு அளவு கணிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு ‘மாத்திரை’ என்று பெயர்.
கண்களை ஒருமுறை இமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கை விரல்களை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை என்பர்.
குறில் ஓசைக்கு (அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை; நெடில் ஓசைக்கு (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ) 2 மாத்திரை; மெய் ஓசைக்கு 1/2 மாத்திரை;
இங்கே ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். ‘க’ என்னும் உயிர்மெய் எழுத்தில் ‘க்’+’அ’ என்னும் எழுத்துக்கள் உள்ளன. மேற்கண்ட கணக்கின்படி ‘க்’ கிற்கு 1/2 , ‘அ’ விற்கு 1 என்று கொண்டு, ‘க’ வுக்கு 1 1/2 மத்திரை என்று சொல்லலாமா? கூடாது!
மூன்று துணை ஓசைகள் என்று குறிப்பிட்டீர்களே, அவை யாவை?
துணை ஓசைகளைச் ‘சார்பு எழுத்து’ என்று இலக்கண நூலார் அழைப்பர். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன.
இவற்றுள் ஆய்தம் புரிகிறது; குற்றியலுகரம், குற்றியலிகரம் புரியவில்லையே!
குற்றியலுகரம் என்பதற்கு பொருள் குறுகிய உகரம் என்பதாகும். அதாவது உகரத்துக்கு (உ) ஒரு மாத்திரை; அது 1/2 மாத்திரையாகக் குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம்.
இதை எப்படி கண்டுபிடிப்பது?
கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் இல்லை. அணுவையே பிளக்கலாம் என்று கண்டுபிடித்த நமக்கு இது ஒன்றும் கடினமில்லை!
வல்லெழுத்தின் மீது (க், ச், ட், த், ப், ற்) உகரம் ஏறி ( குசுடுதுபுறு), அந்த எழுத்தை இறுதியாகக்கொண்டு ஒரு சொல் முடியுமானால், அதில் வரும் உகரம் ( நாகு, மாசு, நாடு, காது, மார்பு, ஆறு) குற்றியலுகரம் ஆகும்.
ஆனால், தனிக் குறிலை அடுத்து கு சு டு து பு று என்றும் ஆறு எழுத்துக்கள் வருமானால் ( நகு, பசு, மடு,புது, தபு, வறு) அவை குற்றியலுகரம் ஆகா.
மேலும் இந்த உகரம் மெல்லெழுத்து ( ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ) இடையெழுத்து (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஆகியவற்றின் மீதி ஏறி வந்தாலும் குற்றியலுகரம் ஆகாது ( அணு – (ண்+உ), ஈமு (ம்+உ), திரு(ர்+உ), குரு(ர்+உ), கதவு(வ்+உ), கனவு(வ்+உ), நிலவு(வ்+உ), முழு( ழ்+உ), ஏழு( ழ்+உ), தள்ளு(ள்+உ) ).
இனி, குற்றியலிகரம் பற்றி பார்ப்போம்.
இரண்டு சொற்களில் ஒரு சொல்லின் கடைசி எழுத்து குற்றியலுகரமாகவும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து யகரமாகவும் ( ய, யா )இருந்தால், அவை இரண்டும் சேர்ந்து ஒலிக்கும்போது அந்த குற்றியலுகரம் ‘இ’கரமாக மாறிவிடும். அந்த எழுத்து 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் ‘இ’கரம் குற்றியலிகரம் ஆகும்.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
நாடு + யாது = நாடியாது. ‘நாடு’என்னும் சொல்லில் வரும் ‘டு’ என்பது குற்றியலுகரம். இதனை அடுத்து வரும் ‘யாது’ என்னும் சொல் ‘ய’கரத்தில் தொடங்குவதால், ‘டு’ என்ற குற்றியலுகரம், ‘டி’ என மாறிவிடுகிறது. ( ‘டி’ = ட்+ இ ) என 1/2 மாத்திரையில் ஒலிக்கும் இந்த ‘டி’ குற்றியலிகரம் ஆகும்.
மேலும் சில உதாரணங்கள் : பாடு + யாது = பாடியாது, கொக்கு + யாது = கொக்கியாது.
தற்போது குற்றியலிகரச் சொற்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.
நீங்கள் குற்றியலிகரச் சொற்களுக்கு உதாரணம் முயற்சி செய்து பாருங்கள்.
சார்பு எழுத்தில் ‘ஆய்த’திற்கான உதாரணங்கள் : எஃகு, அஃது, இஃது.
‘எஃகு’ என்னும் சொல்லில் ‘கு’ 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும்.
உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தையும் நெடில் தொடர்க் குற்றியலுகரத்தையும் எப்படிப் பிரித்தறிவது?
நாகு, காடு, மாசு, மாடு, ஆடு, தேடு, யாது, காது, பாகு, ஆறு – இந்தச் சொற்களில் வரும் ‘உ’ கரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.
‘உ’கரத்தின் முன் ஒரு நெடில் எழுத்துதான் இருக்கவேண்டும்.
நாகு என்பதில் உள்ள ‘நா’ வை ‘ந்’ + ஆ எனப் பிரித்துப் பார்த்து, ‘உ’கரத்துக்கு முன் உயிர் எழுத்து வந்துள்ளதே.. அதனால் இதனை உயிர்த் தொடர் என்று சொல்ல வேண்டும் என்று எண்ணுவது தவறு.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் அதன் முன்பு இரண்டு மூன்று எழுத்துக்களுக்கு மேல் அமைந்திருக்க வேண்டும். அரசு, அழகு, பயறு, வயிறு, உதடு, செவிடு, குருடு, ஏற்காது, வாராது, போராடு, வருமாறு – இவை உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள்.
குசுடுதுபுறு என்பவற்றில் ஏதாவது ஓர் ‘உ’கரத்தைக்கொண்டு ஒரு சொல் முடிந்துவிட்டதாலேயே, அந்தச் சொல் குற்றியலுகரத்தில் முடிந்திருப்பதாகக் கருத முடியுமா?
முடியாது.
அது, ஒடு, முசு, பசு, கொசு, நடு, படு, குறு, பகு, தபு – இந்தச் சொற்கள் குசுடுதுபுறுவில் முடிந்தாலும், இந்த ‘உ’கரங்கள் குற்றியலுகரங்கள் ஆகாது. அதே வேளையில் யாது, ஓடு, மூசு, நாடு, பாடு, கூறு, பாகு என்று நெடிலாக வந்தால் குற்றியலுகரங்களாக மாறிவிடும்.
எழுத்துகளைப்பற்றி வேறு செய்திகள் உள்ளனவா?
உள்ளன. உயிர் எழுத்து, மெய்யெழுத்து, சார்பு எழுத்து என்று கண்டோம்.
போலி எழுத்து என்பது உண்டு. போலி எழுத்தாளர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. எழுத்தில் போலியா?
ஆம். போலி எழுத்து குறி்த்து பார்ப்போம்.
‘ஐ’ என்னும் நெடில் எழுத்துடன் ‘அ’ ‘இ’ சேர்ந்து போலியாகும். எப்படி? ‘ஐவனம்’ என்பதை ‘அஇவனம்’ என எழுதலாம். (ஐவனம் என்றால் மலை நெல் என்று பொருள்)
‘ஔவை’ என்பதை ‘அ உவை’ என எழுதலாம்.
மேலும் ‘ஐ’ என்பது ‘ய’கரப் புள்ளியையும் ஔ என்பது ‘வ’கரப் புள்ளியையும் பெறும். அதாவது அய்வனம் என்றும், அவ்வை என்றும் எழுதலாம். ( இன்னமொரு உதாரணம் ‘ ஐயப்பன் ‘ ‘அய்யப்பன்’ )
ஐவனம், அஇவனம்= அய்வனம்; ஔவை, அஉவை= அவ்வை என மூன்று மாதிரியாக எழுதலாம்.
எழுத்துக்களைப் பற்றி அறிந்தோம், இனி சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?
தமிழ் மொழியில் உயர்திணை சொற்கள், அஃறிணைச் சொற்கள் என இரு பிரிவுகள் உண்டு.
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்.
உயர்ந்த ஒழுக்கமுடையவன் மனிதன், கடவுள், தேவர்கள்.
அவர்களைக் குறிக்கும் சொற்கள் உயர்திணை என (திணைக்குப் பிரிவு என்றும் பொருள் உண்டு) குறிப்பிடப்படும்.
உயர்திணையில் ‘மூன்று பால்களும்’, அஃறிணையில் ‘இரண்டு பால்களும்’ எனக் கூடுதல் ‘ஐந்து பால்கள்’ உண்டு.
உயர்திணை : ஆண்பால், பெண்பால், பலர்பால். அஃறிணை : ஒன்றன்பால், பலவின்பால்.
பால் என்றால் அதை ‘பிரிவு’ என்று பொருள் கொள்ள வேண்டும்
அறத்துப்பால் என்றால் அறமாகிய பிரிவு என்று புரிந்து கொள்ளவேண்டும்.
பாலாகிய பிரிவினையை உதாரணமாக வைத்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்:
அவன் வந்தான்; அவள் வந்தாள்; அவர் வந்தார் (அவர் என்பது பன்மை); அது வந்தது; அவை வந்தன.
தமிழ்மொழியின் அடிப்படைகளில் வேறு என்னென்ன அறிந்துகொள்ள வேண்டும்?
திணை, பால், எண் (ஒருமை,பன்மை), இடம் (தன்மை – நான், நாம்; முன்னிலை – நீ, நீவிர், நீங்கள்; படர்க்கை – அவன், அவள், அவர், அது, அவை), காலம் ( இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்) ஆகியவை அடிப்படையாக அறிந்து கொள்ள வேண்டியவை.
ஆங்கிலத்தில் பெயர்ச் சொல், வினைச் சொல் என்று சொற்களைப் பலவாறு பிரிக்கின்றார்களே, அப்படிப்பட்ட பிரிவு தமிழில் உண்டா?
உண்டு. பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், என்று நான்கு வகை உண்டு.
கனி=பெயர்ச் சொல்
பழுத்தது=வினைச் சொல்
கனியைச் சுவைத்தேன்= இதில் ‘ஐ’ என்பது இடைச் சொல் ( ஐ= வேற்றுமை உருபு);
கனி நனி சுவைத்தது – இதில் ‘நனி’ என்பது உரிச்சொல்.
எழுத்தாளர்கள் எழுதும் போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படுகின்றன?
தவறுகள் பலவகை. சொற்பொருள் தெரியாமல் ஏற்படுவது ( அரம் -அறம்)
ஒற்றெழுத்துப் பிழை (விளையாட்டு செய்திகள்= கண்டிப்பாக ‘ச்’ வர வேண்டும்)
முயற்ச்சி (கண்டிப்பாக ‘ச்’ வரக் கூடாது)
ஒருமை பன்மை பிழைகள் – ( நிவாரணங்கள் வழங்கப்பட்டது. ( வழங்கப்பட்டன என்பதே சரி ) )
ஒரு போடவேண்டிய இடத்தில் ஓர் போடுவது – (ஓர் கண்ணாடி – ஒரு கண்ணாடி என்று தான் எழுத வேண்டும்)
செய்வினை, செயப்பாட்டுவினை தவறுகள் எனப் பலவகை உண்டு.
இவ்வகைத் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி என பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
ஆங்கில மொழியில் ‘a’, ‘an’ எங்குப் பயன்படுத்த வேண்டும் என்று விதி உண்டு. அதைப்போல் தமிழிலும் உண்டா?
உண்டு. உயிர் எழுத்துக்கு முன்பு ‘ஓர்’ பயன்படுத்த வேண்டும்.
ஓர் இரவு ஓர் இலை ஓர் ஊர் ஓர் அணு ஓர் ஏர் ஓர் இந்தியன்
மெய்யெழுத்துக்கு முன்பு ‘ஒரு’ பயன்படுத்த வேண்டும்
ஒரு சொல் ஒரு வில் ஒரு வீடு ஒரு நாற்காலி
‘ஓர், ஒரு’ போல வேறு சொல்லமைப்புகள் உண்டா?
உண்டு.
இரு, ஈர் என்னும் சொற்கள் உண்டு. உயிருக்கு முன்பு ஈரும், மெய்யுக்கு முன்பு இருவும் பயன்படுத்த வேண்டும்.
ஈருடல் ஈர் ஓடை ஈர் உருளி ஈர் இரண்டு ஈர் உளி
இரு கப்பல்கள் இரு புலிகள் இரு தலைகள்
தமிழ் மிக இனிமையான, எளிமையான மொழி தான்.
ஒரு, ஓர்; இரு, ஈர் என்னும் அமைப்பினைப் போல பெரிய, பேர் என்னும் சொல்லமைப்பு உண்டு.
உயிர் எழுத்துக்கு முன் ‘பேர்’ வரும்; உயிர்மெய் எழுத்துக்கு முன் ‘பெரிய’ வரும்.
பேர் + அவை= பேரவை
வேறு சில உதாரணங்கள் : பேரணி, பேராசிரியர், பேராறு, பேராழி, பேராசை, பேரியக்கம், பேரிரைச்சல், பேரீச்சம் பழம், பேருலகம், பேருந்து, பேருலை, பேரூராட்சி, பேரூக்கம்.
‘பெரிய’ உதாரணங்கள் : பெரிய மலை, பெரிய காடு, பெரிய தாடி, பெரிய நாடு, பெரிய பாலம், பெரிய வாகனம்.
‘இயக்குநர்’, ‘இயக்குனர்’ என்று சிலர் இப்படியும் சிலர் அப்படியும் எழுதுகின்றார்களே- எது சரி?
நீங்கள் தனிச் சொல்லைப்பற்றிக் கேட்கத் தொடங்கி விட்டீர்கள், சரி. எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் இத்துடன் நிறுத்தி, தனிச்சொற்களில் கவனம் செலுத்துவோம்.
ஆங்காங்கே தேவையான இடங்களில் தேவையான இலக்கணங்களை மீண்டும் நினைவுகொள்வோம்.
‘இயக்குநர்’ என்பதே சரி, ‘இயக்கு’ என்னும் வினைச்சொல்லைப் பெயர்ச்சொல் ஆக்குவதற்கு ‘நர்’ விகுதி சேர்க்க வேண்டும்.
ஓட்டு=ஓட்டுநர், ஆளு(ள்+உ)+நர்= ஆளுநர், பெறு+நர்=பெறுநர்,
அனுப்புநர்= அனுப்பு+நர்,பயிற்று+நர்=பயிற்றுநர், வல்லு(ல்+உ)+நர்=வல்லுநர்.
வந்தனர், ஆடினர், பாடினர்,அழைத்தனர் ஆகிய சொற்களில் வரும் ‘ன’ பன்மையைக் குறிக்கும்.
அஃறிணையாக இருந்தால் வந்தன, ஆடின, பாடின,அழைத்தன என வரும். இங்கே ‘ஆடிநர்’, ‘ஆடிந’ என்று எழுதுவது தவறு.
அணுகுண்டா-அணுக்குண்டா- எது சரி?
அணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டே சரி; ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும்.
தங்கக் காசு – தங்கத்தினால் ஆகிய காசு
வெள்ளிக்கொலுசு – வெள்ளியால் ஆகிய கொலுசு
வேறு சில உதாரணங்கள் : பிளாஸ்டிக் வாளி – பிளாஸ்டிக்கினால் ஆகிய வாளி
தோல் செருப்பு – தோலால் ஆகிய செருப்பு
ஸ்டீல் பீரோ – ஸ்டீலால் ஆகிய பீரோ
இவை மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
தொகை என்றால் என்ன?
இது மக்கள் தொகையுமன்று; பணத்தொகையும் அன்று.
தொகை என்றால் மறைதல், தொகுதல், தொக்கி நிற்றல் என்று பொருள்.
எது மறைதல்?
வேற்றுமை உருபுகள் மறைதல்!
வேற்றுமை என்றால் என்ன?
பொருளை (அர்த்தத்ததை) வேறு படுத்துதல் என்று பொருள்.
1. காவலர் அடித்தார்
2..காவலர் ஐ அடித்தனர்
இந்த இரண்டு சொற்றொடர்களும் வேறு வேறு பொருளைத் தருகின்றன.
‘ஐ’ என்னும் உருபைச் சேர்த்தால் பொருள் மாற்றம் உண்டாகிறது.
பொருள் வேற்றுமையை உண்டாக்கும் உருபுகளுக்கு வேற்றுமை உருபுகள் என்று பெயர்.
அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகும். இவை முறையே 2,3,4,5,6,7- ஆம் வேற்றுமை உருபுகள்.
இந்த உருபுகள் வெளிப்பட்டும் வரலாம்; மறைந்தும் வரலாம்.
கற்சிலை என்றால் தொகை; கல்லால் செய்யப்பட்ட சிலை என்றால் விரிவு.
உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று சொன்னீர்களே?
ஆம். வேற்றுமை உருபும் அதன் பயனும் சேர்ந்து மறைந்துவிட்டால் ‘உடன் தொக்க தொகை’ என்று பெயர். அதாவது கல்லால் ஆகிய சிலை என்பதில் ஆல் என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும், அதன் பயன் ‘ஆகிய’ மறைந்து ‘கற்சிலை’ என்று நின்றது.
இப்போது ஒரு புதிய சொல் வந்திருக்கிறதே மடிக்கணினி என்று- அது மடிக்கணினியா-மடிகணினியா?
இரண்டும் சரிதாம்; ஆனால், வேறு வேறு பொருள். மடியின் கண் (மீது ) வைத்துப் பார்த்தால் ஒற்றெழுத்து மிகுக்க வேண்டும் (மடிக்கணினி).
ஒற்றெழுத்தினை மிகுக்காமல் எழுதினால் மடிக்கப்படும் கணினி என்று பொருள். உங்களுக்கு எந்தக் கணினி வேண்டும்?
மடித்த, மடிக்கிற, மடிக்கும் கணினி என்று வினைத் தொகையாகவும் கருதலாம்.
மடிக்கணினி = மடியின் கண் வைத்துப் பார்க்கப்படும் கணினி
மடிகணினி = மடித்த, மடிக்கிற மடிக்கும் கணினி
முன்னது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; பின்னது வினைத்தொகை.
வினைத்தொகை என்றால் என்ன?
காலம் காட்டும் இடைநிலைகள் விகுதிகள் மறைந்து வந்தால் வினைத்தொகை என்று பெயர்.
வினை மறைகிறதா, காலம் மறைகிறதா?
வினைச் சொல்லின் முக்கியத் தொழில் காலம் காட்டுதல், காலம் மறைவதால், அதே வேளை முக்காலத்துக்கும் பொருந்துவதால் வினைத் தொகை. மடித்த, மடிக்கிற, மடிக்கும் என்பன மடி (த, கிற, உம் என்பன மறைந்து) என நின்று முக்காலத்துக்கும் பொருந்தி நடக்கும். இந்த அமைப்புத் தமிழ் மொழியில் ஒரு திறமையான, சுவையான, சிறப்பான பகுதி.
வினைத்தொகை என்பது மொழியைச் சுருக்கிப் பேசவும் எழுதவும் அமைந்த நுணுக்கமான அமைப்பு. பின்வரும் சொல்லாட்சிகளைக் கூர்மையாக நோக்குங்கள்.
திருவளர்செல்வி, திருவளர்செல்வன், திருநிறைசெல்வி, திருநிறைசெல்வன்,
நிறைகுடம், வளர்பிறை, தேய்பிறை, பழமுதிர்சோலை (பழம்+உதிர்சோலை), தொடர் சொற்பொழிவு,
எரிவாயு, விடுகதை, குடிதண்ணீர், சுடுகாடு, ஊறுகாய், ஏவுகணை, தாவுகுரங்கு, ஆடுஅரங்கு, ஓடுதளம்,
குறைதீர்கூட்டம், ஏற்றுகாதை, கடிநாய், வெடிகுண்டு, வெட்டுஅரிவாள், கொல்யானை.
மிக மிக முக்கியமான செய்தி : இவற்றில் ஒற்றெழுத்துக்கள் மிகா.
இவை ஒவ்வொன்றும் முக்காலத்துக்கும் பொருந்தும். வளர்ந்த, வளர்கின்ற,வளரும் செல்வி=இதே போன்று மற்றவற்றிற்கும் எண்ணுக.
கட்டடமா,கட்டிடமா-எது சரி?
அறிஞர்கள் பலர் பல ஆண்டுகளாகத் தமிழகத்தைத் திருத்திவரும் செய்தி இது; ஆனால் திருந்தியபாடில்லை!
கட்டடம் (BUILDING) சரி; கட்டு+இடம் = கட்டிடம்.. அதாவது, கட்டுவதற்கு உரிய இடம்.
உங்களுக்கு கட்டுவதற்கு உரிய இடம் வேண்டுமா?கட்டடம் வேண்டுமா?
தேநீரா- தேனீரா – எது சரி?
இரண்டும் சரிதாம்; பொருள் தான் வேறு!
தே+நீர் = தேநீர் (தேயிலையின் சுருக்கம் தே); தேன்+நீர் = தேனீர் (தேன் கலநத நீர்)! உங்களுக்கு எந்நீர் வேண்டும்? ( தமிழ் – தொடரும் )
பிரசுரித்த நாள்: May 07, 2012 17:25:40 GMT
Leave a Reply
You must be logged in to post a comment.