ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு – சட்ட வடிவிலான அடக்குமுறைகள் (41-43)
41: தங்கத்துரையின் சூளுரை
கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து, விசாரித்தபோது ஈழத் தமிழர்களின் பிரச்னை என்ன என்பதைத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கதுரை தெரிவித்த கருத்துகள் வரலாற்றுப் புகழ்பெற்றவை. அந்த உரை, தனக்கு மரண தண்டனை நிச்சயம் என்பது தெரிந்திருந்தும் தனது கொள்கைகளிலிருந்து மாறாது உறுதியாய் நின்ற சாக்ரட்டீஸின் உரைக்கு நிகரானது அந்த உரை. நவீன கால உதாரணம் சொல்ல வேண்டுமானால், கியூபாவின் விடுதலைக்காக ஆயுதமேந்தி அப்போதிருந்த அரசிடம் மாட்டிக் கொண்டு நீதிபதிமுன் நிறுத்தப்பட்ட ஃபெடல் காஸ்ட்ரோவின் உரைக்கு ஒப்பானவை எனலாம்.
1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் நாளன்று கொழும்பு நீதிமன்றத்தில் தங்கதுரை நிகழ்த்திய வாதத்திலிருந்து: *
”கனம் நீதிபதி அவர்களே!
ஸ்ரீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் எம்மை விசாரிப்பதற்கான, அதிகாரம் உரிமை கிடையாதென்ற எமது ஆரம்ப ஆட்சேபணையையும் மீறி, ஸ்ரீலங்கா அரசின் நீதி நிர்வாகப் பிரிவின் ஓர் அங்கமாகிய இம்மன்றம் எம்மீது இவர்களால் சோடிக்கப்பட்ட இவ்வழக்கை கடந்த நான்கு மாதங்களாய் விசாரித்து வந்துள்ளது.
நாமும் இரண்டாம் கட்டமாகிய பகிஷ்கரிப்பு என்பதனை மேற்கொள்ளாது, இம்மன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளோம்.
எமது குற்றமற்ற தன்மை, மற்றும் எமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை எமது சட்டத்தரணி, எமது சாட்சிகளின் மூலமாயும், சித்திரவதைப் புகழ் ஸ்ரீலங்கா அரசுப் போலீஸ் அதிகாரிகளைத் தமது குறுக்கு விசாரணைகளின்போது அடிக்க வைத்த குட்டிக்கரணங்களாலும் மற்றும் சட்ட வாதங்களின் மூலமாயும் மிக வெற்றிகரமாய் நிரூபித்து விட்டமை கண்கூடு.
வெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாம்தரப் பிரஜையாக்கமாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே.
இதன் விளைவே தமிழ் தலைவர்கள் தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விஷயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும், தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புக்களையும் மீறித் திட்டமிட்ட முறையில் சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடந்துவிடாத விஷயங்கள் அல்ல.
இக்காலகட்டத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும், உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன?
நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ் செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீலங்காவின் ஏவல் ராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல.
இப்படி ஒன்றா இரண்டா? கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின்வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா? தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன? எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன?
காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில லட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்.
இத்தனை இம்சைகளையும் கண்ட தமிழ் மக்கள் மனச் சோர்வுற்றார்களா, இல்லை. தமது போராட்டத்தில் இருந்து இம்மியேனும் பின்வாங்கினார்களா, கிடையாது. இந்த இம்சைகள் யாவும் அவர்களின் லட்சியத்திற்கு உரம் போட்டவையாகவே அமைந்தன. சமயம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மக்கள் அதை ஸ்ரீலங்கா அரசிற்கு நன்கு உணர்த்தியே வந்தனர். சமீப காலமாக ஸ்ரீலங்கா அரசால் நடத்தி முடிக்கப்பட்ட தேர்தலில் அதை மிக உறுதியாய் நிரூபித்தனர்.
இனவெறியைத் தூண்டியும் இனப்படுகொலையை நடத்துவதன் மூலமாயும் அரசில் கூதல் காய்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசு, நேர்மையான போராளிகளான எம்மைப் பார்த்துப் பயங்கரவாதிகள் என்பதிலும் வேடிக்கை வேறு என்ன இருக்க முடியும்? பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதே வேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே பாராளுமன்ற உறுப்பினர்களை அர்த்தசாமத்தில் ராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்?
பயங்கரவாதம், கொள்ளை என்கிறீர்கள். ஸ்ரீலங்கா அரசின் ஏவல் படைகளினால் நடத்தி முடிக்கப்பட்ட பயங்கரவாதங்களுக்கு இணையாக பயங்கரவாதங்கள் இத்தீவில் எக்காலத்திலும் நடக்கமுடியா. அதே ஏவல் படைகளினால் சூறையாடிய தமிழ் மக்களின் சொத்துக்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டமையும் இத்தீவு மக்கள் ஒன்றும் அறியாத ரகசியங்கள் அல்ல. போதாக் குறைக்கு அவ்வப்போது உங்களது அரசியல் ஏஜண்டுகள் அரசியல் என்ற பெயரில் துப்பாக்கிகளைச் சுழற்றித் திரிந்தமை மிக அண்மைக்கால வரலாறு.
இத்துணை கேவலங்களையும் நடத்தி முடித்திருக்கும் நீங்கள் எம்மைப் பயங்கரவாதிகளாய் சித்தரிக்கக் கச்சை கட்டியிருப்பதைவிட இந்நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்?
பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்? ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை.
ஆக்கிரமிப்புக்கள் வேறுபட்ட அதிகார அமைப்புக்களினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை.
இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம் குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று.
இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது லட்சியம் மட்டுமல்ல இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்னையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விஷயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும், தமக்கு உண்டான அரசியல் பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவர்.
எந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும், பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.
எமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கீகரித்திருப்பின் இந்நிலை இத் தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த முப்பத்தைந்தாண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளை தக்க வைத்துக்கொள்வதற்கு அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவித்தையே ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.
ஆனால் சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்கு தமிழனத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்.
வழமையாக ஸ்ரீலங்கா அரசின் எதிர்க்கட்சிகளே தாம் பதவிக்கு வருவதற்காக தமிழ் மக்களின் பிரச்னையில் ஆளும் அமைப்பு ஏதும் தீர்வுகாண முயல்கையில் அதை எதிர்த்துக் கழறுவதும், சிங்கள மக்களைத் தூண்டிவிடுவதுமான ஒரு நிலையே இருந்து வந்துள்ளது. முதல் முறையாக ஓர் ஆளும் அமைப்பு – நேரடியாய்த் தமிழ் மக்கள் பால் இனவெறியைத் தூண்டியமை கடந்த ஆறு ஆண்டுகால ஆட்சியின் மிக மோசமான நடவடிக்கை. ஸ்ரீலங்காவின் ஆளும் அமைப்பு – தமிழ் மக்கள் இடையேயான உறவுநிலை எப்போதும் இல்லாதவாறு மிகவும் பழுதுபட்ட ஒரு நிலையை தோற்றுவித்தமையை இத் தார்மீகப் பொறுப்பைத் தற்போதைய ஆளும் அமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்ப்போம், தீர்ப்போம் என்றே கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சில ஸ்ரீலங்கா அதிகார அமைப்புக்கள் சொல்லி வருகின்றன. நாங்கள் உங்கள் தீர்வை ஏற்கின்றோமோ இல்லையோ, நீங்கள் இதுவரையில் கபடமற்ற முறையில் எக்காலத்திலும் தமிழ் மக்கள் பிரச்னையைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுத்தது உண்டா? மாறாக, பிரச்னையைத் தீர்க்கின்றோம் என கபடப் போர்வையுடன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யும் காரியங்களிலேயே காலம் காலமாக ஈடுபட்டீர்கள்.
உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள்? பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும்? அது ஒன்றும் அல்லாத மீதி எந்த சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே.
இத்தீவில் வனவிலங்குகளுக்கேனும் ஒரு வரையறுக்கப்பட்ட பிரதேசம் உண்டு. ஆனால் தமிழன் தமிழனாக வாழ்வதற்குப் பாதுகாக்கப்பட்ட வரையறை உள்ள எதுவும் உங்களினால் இதுவரை வழங்கப்படவில்லை. நீங்களாகவே வழங்கப் போவதுமில்லை. இந்நிலைக்கு நாம் வந்து பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாகின்றன.
விசாரணையின் நடுவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, ”இந்நீதிமன்றத்தை உமக்குக் கிடைத்த மேடையாகப் பாவிக்கும் நோக்கமா?” என்றார்.
”எமக்கு எதற்கு மேடை? அப்படி ஒன்றை உருவாக்கித் தரும்படி நாமாக யாரையும் கேட்கவும் இல்லையே. மாறாக நீங்களே வலிந்து கொண்டு வந்து எம்மை இங்கு நிறுத்தியிருப்பதுமல்லாமல், எம்மீது அபாண்டங்களையும் சுமத்தினீர்கள். எம்மீது பொய்களைப் புனையச் செய்தது அல்லாது எம்மையே பொய்யராக்கவும் எத்தனித்தபோது சில உண்மைகளை இங்கு நாம் பேசினோமே அல்லாமல் நாம் மேடை நாடகம் எதுவும் ஆடவில்லை. உண்மைக்கு மேடையோ, அன்றி வெளிச்சமோ போட்டுக் காட்ட வேண்டியதில்லை. அது மிகவும் மகத்தானது. அது வெளிவருவதை எந்தச் சக்தியாலும் நிரந்தரமாய்த் தடுத்துவிட முடியாது.
நாம் பயங்கரவாதிகளும் அல்லர். அதன் எந்த எந்த உருவையும் ஆதரிப்போரும் அல்லர். மாறாக, அதை நாம் கண்டித்து உள்ளோம். ஆனாலும் பயங்கரவாதம், பயங்கரவாதம் என ஓலமிடும் பெருந்தகையாளர் கட்சிக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். உங்களினால் கிளப்பிவிடப்பட்ட இனத்துவேசத் தீயினாலும், ஆயுதக் காடையர்களினாலும் நூற்றுக்கணக்கான தமிழர் உயிர் இழந்தபோதிலும், தமிழ்ப் பெண்கள் கற்பு அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டபோதும், அவர்களின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்ச் சொத்துகள் சூறையாடப்பட்ட போதும் அவை உங்கட்கு பயங்கரவாதம் எனத் தோன்றவில்லையா? இல்லை, அதற்கு மேற்பட்ட சொற்கள், அதற்கு ஏதேனும் உண்டா என இன்னமும் அகராதியில் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?
மாறாக, தமிழ் ஈழத்தில் ஒருசில போலீஸôரின் உயிர்கள் பறிக்கப்பட்டபோதும், வங்கி உடைமைகள் கொள்ளை போனதுமேதானா உங்களுக்குப் பயங்கரவாதமெனத் தோன்றுகிறது. அப்படியாயின் இங்கு ஏற்கெனவே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா? அன்றி, எமக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தி எம் இறைமையை அங்கீகரிக்கும்படியும், அதன் முதல் கட்டமாய் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் ஓர் அம்சமாய், அதன் மொத்த உரித்தாளரான ஸ்ரீலங்காவின் ஆயுதப் படைகளை எம் பூமியில் இருந்து மீளப்பெற உங்கள் அரசை வற்புறுத்துவதன் மூலம் உங்கள் மனோ விலாசத்தை உலகிற்கு உணர்த்தப் போகின்றீர்களா? தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விடுகின்றோம்.
* நாம் வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர் – தங்கதுரை
(வெளியீடு: தமிழ் ஈழ விடுதலை இயக்கம்)
42. நீதிமன்றம் மெüனமானது!
நான் வேறானாலும்கூட ஒரே தீவின் பிரஜைகள் என்ற வகையில் உங்கள் புரிந்துணர்வைப் பெற வேண்டும் என்ற நல்நோக்குடனேயே இவ்வழக்கின் விசாரணைக்கு நாம் சமூகமளித்தது மட்டுமல்லாது, இன்று எமது நிலையையும் உங்கட்கு தெளிவாய் காட்டினோம். இதனால் ஏற்படும் புரிந்துணர்வின் மூலம் எதிர்காலத்தில் எம்பொருட்டு நீங்கள் குரல் கொடுப்பீர்களே ஆயின், மிக்க மனநிறைவை எய்தியவர்களாவோம்.
இல்லாவிடினும்கூட தற்போதைய சமூக, பொருளாதார நடவடிக்கைகளே தொடர்ந்து அதன் சுமை தாங்காது என உணர்ந்து அதன் தளைகளை உடைத்து உங்களை விடுவிக்க நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் மிக உறுதுணையாய் இருப்போம் என்பதை மனப்பூர்வமாய் உங்கட்கு தெரிவிக்கிறோம்.
தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றேதான் எமது முற்றான பணி. ஈழத்திய தமிழர், தமிழராய் தொடர்ந்து வாழ வேண்டுமாயின் தமிழ் ஈழம் அமைப்பது ஒன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி என்பதனை ஸ்ரீலங்கா அரசு எம்மைப் பல வழிகளிலும் உந்தியதன் மூலமே அவ்வழியில் மிக முனைப்பாய் உள்ளோம்.
எமது நோக்கு மிக விசாலமானது. ஆப்பிரிக்கக் கண்டம் என்றால் என்ன, லத்தீன் அமெரிக்க நாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகப் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது. அப்படி இருக்கையில் எமது சகதேசத்தவரான மக்களின், குறிப்பாக சிங்கள மக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படிப் போகும்.
இப்படி இருக்கையில், ஸ்ரீலங்காவின் போலீஸôர் மட்டுமே உங்கள் பார்வையில் அப்பாவிகளாய் தோற்றம் தருகின்றார்களா? பச்சைக் கொலையாக 1977-ஆம் ஆண்டில் மட்டும் உயிர் இழந்தவர்களே 400-க்கும் மேற்பட்ட தமிழர்கள். அவர்களின் குருதி பாய்ந்து ஓடியதால் இத் தீவின் மேல் கவிந்திருந்த வானமே செக்கல் மயமானது. அவை எல்லாம் உங்களுக்குப் பயங்கரவாதம் என்று தோன்றவில்லையா? தமிழ் மக்களைக் கொலை செய்தவர்கள் மட்டுமே அப்பாவிகளாகவும், குற்றம் செய்யாதவர்களாகவும் உங்களுடைய கண்களுக்கு தோற்றம் தருகின்றார்களா? தமிழ் மக்களின் உயிர், உடைமை என வரும்போது உங்கள் சிந்தனையின் மெல்லிய உணர்வுகள் அறவே மரத்துவிடுகின்றனவா? அல்லது அப்படியான ஓர் உணர்வு உங்கள் வாழ்வில் புரியாத ஒரு மொழியா?
நாம் வன்முறை மீது காதல் கொண்டவர்களோ, அன்றி அது மாதிரியான நோய்களால் பாதிப்புற்ற மன நோயாளிகளோ அல்லர். மாறாக, விடுதலையை முன்வைத்துப் போராடும் ஒரு ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நேர்மையான போராளிகளே நாங்கள்.
சிங்கள மக்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்வேன். எமது பூமியில் மட்டுமல்லாது உங்கள் நாட்டின் பல பாகங்களிலும் மிக அண்மைக்காலம் வரை தமிழ் மக்கள் மீது பல தடவைகள் உங்கள் நாட்டு அதிகார அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தைச் சரி என நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? அன்றியும் இவை மட்டுமல்லாது நம்மை நாம் அல்லாதவராக்கும் முயற்சியில் பல வழிகளிலும் ஈடுபட்டு வரும் உங்கள் அரசின் நாகரிகமற்ற நடவடிக்கைகளின் பாதிப்பில் இருந்து எம்மக்களை மீட்க நாம் முன்னின்றமையைத் தான் தவறு என்று சொல்வீர்களா?
அப்படியான ஓர் உயர்ந்த லட்சியத்தை முன்வைத்துப் போராடிய எம் மீது பயங்கரவாதத் திரையைப் போர்த்தி, உங்கள் நாட்டுச் சட்டங்களிலும் பயங்கரவாதத்தைப் புகுத்தி புதுப் பெருமையைத் தேடிக்கொண்ட உங்கள் அதிகார அமைப்பு எம்மீது விசாரணை என்ற பெயரில் நடத்தும் கண்துடைப்புகளையும் சரி என ஏற்றுக் கொள்கின்றீர்களா? அல்லது பாதிக்கப்படுபவன் தமிழன்தானே என்ற பொறுப்பற்ற உணர்வா? அப்படியாயின் தற்போதைக்கு உங்கள்மீது எம்மால் அனுதாபம் கொள்ள மட்டுமே முடியும்.
நாம் விடுதலை பெறுவது நிதர்சனமான உண்மை. அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டப் புத்தகங்களில் நிரந்தர இடம் பெற்றுவிட்ட எச்சட்டங்களும் எம்மை அணுகா. அப்படியாயின் இச்சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுப்பீர்கள் என்ற கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா?
இரு அயல் தேசங்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற நிர்ப்பந்தம் இல்லை. மாறுபட்ட கொள்கை உடைய எத்தனையோ நாடுகள் பொருளாதாரம், பாதுகாப்பு என்ற விஷயங்களுக்காகச் சில பொதுக் கோட்பாடுகளுக்கு இடையில் ஓர் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வரவில்லையா? அதற்காக அந்நாடுகள் தமது இறைமையை விட்டுக் கொடுத்து விட்டன என நாம் சொல்ல முடியுமா?
இவ்வுலகின் வல்லாதிக்கம் கொண்ட சில சக்திகள், தெற்காசியப் பிராந்தியத்தில், குறிப்பாய் மூன்றாம் மண்டல நாடுகளைப் பொருளாதார ரீதியில் தலையெடுக்க விடாது செய்து வரும் கூட்டுச் சதியை முறியடிக்கும் விதத்தில், இந்த உபகண்டத்தின் தன்னாதிக்கமுள்ள முற்போக்குக் குடியரசுகள், இவ்வுபகண்ட நன்மை கருதி அதற்கு ஒரு பொது அமைப்பையோ அல்லது எந்தக் குடியரசினதும் தன்னாதிக்கத்திற்கு பங்கம் வராவகையில் பல குடியரசுகள் கொண்ட ஒரு ஒன்றியத்தை உருவாக்கும் பட்சத்தில் உபகண்ட நன்மை கருதி தமிழ் ஈழம் நிச்சயமாக தன் பங்களிப்பை வழங்கும்.
இறுதியாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஸ்ரீலங்கா அரசின் எந்த அமைப்பிலும் இருந்து நாம் நீதியை எதிர்பார்க்கவில்லை. இம்மன்றமும் அதற்கு விதிவிலக்கல்ல. எமக்குத் தெரியும் உங்களது சங்கடமான நிலைமை. சுயேட்சையான நிர்வாகம் அருகிவரும் உங்கள் அரசியல் அமைப்பில் நீதி நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் அரசைத் திருப்தி பண்ணியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை ஏற்பட்டிருப்பது இயல்பே.
இந்நிலையில், தமிழ் இன விடுதலை இயக்கங்களை நசித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஓர் அரசின் மன்றத்தில் இனியும் மெனக்கெடுவதற்கு ஏதுமில்லை. எமது இயக்கத்தின் மீதும் இம்மன்றத்தில் நடத்தி முடிக்கப்பட இருக்கும் இரண்டாவது வழக்கு இது. இனி எத்தனை வழக்குகள் எம்மீது உங்களால் சோடிக்கப்பட்ட போதும் நாமும் விசாரணையில் பங்கெடுத்துக் கொண்டது எனும் நிலை இவ்வழக்குடன் பூர்த்தியாகின்றது. உங்களது நோக்கம் எம்மைத் தண்டிக்க வேண்டும் என்பதே. அதை இனி எமது எந்தவித இடையூறும் இல்லாது விருப்பம்போல் மிகச் சுலபமாய்ச் செய்யுங்கள். தற்போதைக்கு உங்களுக்கு நாம் செய்யும் உதவி இதுவே.
தற்போதைக்கு இவ்வழக்கின் மூலம் உண்மை நிலையை உலகிற்கும், குறிப்பாய் இத்தீவின் மக்கள் யாவர்க்கும் உணர்த்திவிட்ட மகிழ்வே எமக்கு மேலோங்கி உள்ளது. மக்களின் மனத்தீர்ப்பே எமக்கு முக்கியமானவை. அவர்கள் தீர்ப்பு நிச்சயமாய் எமக்கே சாதகமாய் அமையும் என்ற நிறைவே எய்தியுள்ளோம்.
இனி எம்மீது எத்தனை வழக்குகள்தான் சோடிக்கப்பட்டாலும், எத்தனை அவதூறுகள் வாரி இறைக்கப்பட்டாலும் எமக்கு அதுபற்றிக் கவலை இல்லை. உங்களது அந்த நடவடிக்கைகள் மூலம் வெற்றி பெறப்போவதும் நாமே. உங்கள் தீர்ப்பின் பாதிப்புகள் எம்வரை அந்நியமானவையே.
எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தைச் சிறையில் கழிக்கவோ- வேண்டுமாயின் மரணத்தைக் கூடத் தழுவவோ நாம் தயங்கவில்லை.
ஓர் இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிகச் சர்வ சாதாரண சம்பவங்களே! இதை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவுமே இல்லை. எதை எய்கின்றோமோ அதுவேதான் நம்மிடம் திரும்பி வரும், எதை விதைக்கின்றோமோ அதையேதான் அறுவடை செய்ய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவன் நான். நாம் விதைத்தவை விஷ விதைகளுமல்ல, எய்தவை நச்சு பாணங்களுமல்ல. அதனால்தான் இந்த நிமிடத்திலும் நான் மிகத் தெளிவாக மனநிறைவுடன் நிற்கின்றேன்.
வாழ்க தமிழ்
வளர்க தமிழ் ஈழம்
அகன்று போகட்டும் வறுமையும்
அணுவாயுதப் பயமுறுத்தலும்.
ஒழிக பசியும் பிணியும்.
ஓங்கட்டும் மனித நேயம்.
தங்கதுரை வாதம் முடிந்ததும் நீதிமன்றம் மெனமானது.
43. வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்!
சிங்கள அரசு ஈழப் பகுதிகளில் கைது செய்யும் தமிழ்ப் போராட்ட வீரர்களைத் தமிழர் பகுதியிலுள்ள சிறைகளில் அடைக்காது சிங்களவர் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைத்து வைப்பதே வாடிக்கை. இந்த நடவடிக்கை மிகவும் பாதுகாப்பானது என்றே அவர்கள் நினைத்திருக்க வேண்டும். பின்னாளில் இந்த நினைப்பு உண்மையாகவும் ஆனது.
இலங்கையின் மிகப் பெரிய சிறைச்சாலை கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறையேயாகும். இங்கு சுமார் மூவாயிரம் கைதிகளை அடைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. இச்சிறைக் கட்டடம் சிலுவை வடிவில் பிரிட்டிஷார் காலத்தில் (1843-இல்)கட்டப்பட்டதாகும்.
இந்தச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வீரர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அடைக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டிருப்பர். இங்கு அடைபட்டிருக்கும் ஏனைய சிங்களக் கைதிகளைப் போல் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்திப் பத்திரிகைகள் வாசிக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ, வானொலி கேட்கவோ, காற்றோட்டமான வசதிகளோ, சிறை நூலக வசதியோ மறுக்கப்பட்டு இருட்டு குகையில் வசிக்கிற நிலைமையைத் தோற்றுவித்தார்கள்.
தமிழ்ப் பகுதிகளில் நடந்ததாகக் கருதப்படும் சம்பவங்களுக்கான வழக்குகள் யாவும் சிங்களப் பகுதிகளிலுள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களின் பெற்றோர், மனைவி மக்கள், உற்றார் உறவினர், நண்பர்கள், வழக்கறிஞர்கள் யாவரையும் சந்திக்க அனுமதியும் மறுக்கப்பட்ட நிலையில்தான் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையம் வெளியிட்ட ஸ்ரீலங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் நூலிலிருந்து-சிறிதே திருத்தப்பட்ட பகுதி இதோ:
இங்குள்ள பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட சப்பல் கட்டடம் இரண்டு மாடிகளைக் கொண்டதாகும். கட்டடத்தின் கீழ்ப்பகுதி ஏ-3, பி-3, சி-3, டி-3 என நான்கு விசேஷ பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் கட்டடத்தின் மேல்மாடிகள் இரண்டும் சாதாரணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சாதாரண கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மேல்மாடிகளிலும் பலதரப்பட்ட குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சுமார் 600 கைதிகள் இருந்தனர்.
இவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, தீவைப்பு, வீடுடைப்புப் போன்ற பலதரமான குற்றங்களைச் செய்த இவர்கள், தமிழ் இளைஞர்களைக் கொலை செய்வதற்கு அதிகாரிகளால் ஏவிவிடப்பட்டனர்.
கீழ்ப் பகுதியின் விசேஷ நான்கு பிரிவுகளில் பி-3 பிரிவில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன், நடேசதாசன், சிவபாதம் மாஸ்டர், தேவன் ஆகிய ஆறுபேரும் தண்டிக்கப்பட்ட கைதிகளாக, வேறு சில சிங்கள விசேஷ சிறைக் கைதிகளுடன் தனித்தனி அறைகளில் பூட்டப்பட்டிருந்தனர். சி-3 பிரிவில் பனாகொடை ராணுவ முகாமில் சித்திரவதையை அனுபவித்தபின் கொண்டுவரப்பட்ட 28 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வறைகள் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறைந்த அறைகளாகும். டி-3 பிரிவில் 29 தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகள் தனித்தனி அறைகளில் இருந்தனர். ஏ-3 பிரிவில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த சிங்கள விசாரணைக் கைதிகள் இருந்தனர்.
பலம் வாய்ந்த இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்த பி-3, சி-3 பிரிவுகள், பூட்டுக்கள் பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும். இப் பிரிவு திறந்து விட்டாலன்றி எவரும் (சக அதிகாரிகள் உள்பட) உள்ளே செல்ல முடியாது. டி-3 பிரிவின் கதவு பலகையால் இருந்தாலும் பலம் வாய்ந்த பூட்டு பூட்டப்பட்ட நிலையிலேயே எந்நேரமும் இருக்கும்.
இந்த நான்கு விசேஷ பிரிவுகளுக்கும் பொறுப்பாக ஒரு ஜெயிலரும், ஒரு பொறுப்பதிகாரியும், நான்கு பிரிவுகளுக்கும் தனித்தனியே நான்கு சிறைக் காவலர்களும் கடமையில் ஈடுபட்டு இருப்பார்கள். இக்கட்டடத்தைச் சுற்றி இருவரிசை முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு வெளியே பலத்த ராணுவக் காவல் போடப்பட்டிருந்தது.
25-7-1983-இல் இலங்கையில் இனவெறி கோரத் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. தமிழ் இனப் படுகொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள், தீவைப்புகளில் சிங்கள இனவெறியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அன்று பிற்பகல் இரண்டு மணியில் இருந்து ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின் சிறை அதிகாரிகள் தமது திட்டத்தை மிகவும் நுட்பமாக நிறைவேற்றத் தொடங்கினார்கள்.
ரெஜஸ்-துணைத் தலைமை சிறை அதிகாரி, சமிதரத்ன-சிறை அதிகாரி, பாலித-காவலதிகாரி. ஆகிய மூன்று சிறை அதிகாரிகளுமே இனப் படுகொலைக்கு சிறைக்குள்ளே திட்டம் போட்ட சூத்ரதாரிகள்.
திட்டமிட்டபடி இவ்வதிகாரிகள் குறிப்பிட்ட சிறைக் கைதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சாராயம், கசிப்பு போன்ற மது வகைககளைக் கொடுத்து, உற்சாகப்படுத்திக் கொலை வெறியைத் தூண்டினர். அந்த நேரத்தில் சிறைச்சாலை உயரதிகாரிகள் மதிய உணவுக்காகத் தத்தம் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். உயர் அதிகாரிகள் சிறையில் இல்லாதபோது நடந்த வன்முறையெனத் தப்பித்துக் கொள்ள இந்த ஏற்பாடு.
தருணம் பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறியர்கள் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்தார்கள். மணி பிற்பகல் 2.30. பயங்கர வெறிக்கூச்சல் எழுப்பிக் கொண்டு கொலைகாரர்கள் ஆயுதபாணிகளாகத் தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டு இருந்த சப்பல் கட்டடத்தை நோக்கி ஓடி வந்தார்கள். தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடங்களின் கதவுகள் ஏற்கெனவே இனவெறியர்களின் வரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டு இருந்தன. கத்திகள், பொல்லுகள், வாள், கோடரிகள், இரும்புக் கம்பிகள், குத்தூசிகள், விறகுக் கட்டைகள், தமிழ் இளைஞர்களின் உடல்களில் பதம் பார்க்கத் தொடங்கின.
வீரத்தமிழ் இளைஞர்களின் செங்குருதி சிலுவைக் கட்டடத்திற்குள் ஆறாக ஓடத் தொடங்கியது. தலைகள் பிளக்கப்பட்டன. கண்கள் தோண்டப்பட்டன. இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உறுவப்பட்டன. குரல்வளைகள் அறுக்கப்பட்டன. கை, கால்கள் துண்டிக்கப்பட்டன. இவ்வளவு கொடூரச் சித்திரவதைகளும் சிறைக்காவலர் முன்னிலையிலேயே நடைபெற்றன.
சிங்கள சிறைக்கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளைக் கொல்வதை இனவெறி பிடித்த சிங்கள சிறைக் காவலர் பார்த்து ரசித்தார்கள். கொலைகள் முடிந்தவுடன் கண்துடைப்பு நடவடிக்கையாக வெளியே காவலுக்கு நின்ற இராணுவ வீரர்கள் (தமிழ் அரசியல் கைதிகள் தப்பியோடாது இராணுவ வீரர்கள் வெலிக்கடையில் தொடர்ந்து காவலுக்கு நின்றார்கள்) உள்ளே அழைக்கப்பட்டார்கள். உள்ளே வந்த இராணுவ வீரர்கள் கொலை வெறிக்கு உரமூட்டினார்கள்.
ஆகாயத்தை நோக்கி வேட்டுகளைத் தீர்த்தும் இப்படுகொலைக்குத் தமது தார்மீக ஆதரவையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். வெலிக்கடையில் இப்படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளை ஹெலிகாப்டர் ஒன்று வெலிக்கடைச் சிறையின்மேல் தாழப் பறந்து கொண்டு இருந்தது. இது வெலிக்கடைக் கொலைக்கும் அரசாங்க உயர் மட்டத்திற்கும் இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை கிடைத்த வேளையில் அவர்கள் இருவரும் தங்களது கண்களைக் கண்பார்வையற்ற தமிழர்களுக்கு அளிக்கும்படியும் அதன்மூலம் மலரவிருக்கும் ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உருக்கமான பொருள் நிறைந்த வேண்டுகோளை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதே காரணத்திற்காகக் குட்டிமணி குற்றுயிருடன் வெளியே இழுத்துவரப்பட்டு, சிறைச்சாலையின் மத்தியில் போடப்பட்டார். சிங்கள வெறியர் விசிலடித்து ஆர்ப்பரித்து “”ஜெயவேவா” (மகிழ்ச்சி ஆரவாரம்) கோஷம் எழுப்பிக் குட்டிமணியின் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தோண்டியெடுத்தனர்.
குட்டிமணியின் கண்கள் தோண்டியெடுக்கப்பட்டதும் சிங்களக் கைதிகள் கைதட்டி விசிலடித்து வெறியுணர்ச்சி பொங்க ஆர்ப்பரித்தனர். அதே வேளை குட்டிமணியின் கண்களைத் தோண்டிய இனவெறியன் ஏனைய சிங்களக் கைதிகளினால் தோளில் தூக்கப்பட்டுச் சிங்கள வீரனாகக் கொண்டாடப்பட்டான். ஏனைய கைதிகள் குட்டிமணியின் உடலைக் குத்திக் கிழித்து அவரின் ஆணுறுப்பையும் வெட்டினார்கள். இறுதியாக 15 வெறியர்கள் குட்டிமணியின் குருதியைக் குடித்தனர்.
பின்னர் சிங்கள இனவெறியர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்த விகாரையின் புத்தர் சிலையின் முன் குட்டிமணியின் உடலை நிர்வாணமாக்கிப் போட்டார்கள். இவ்வாறாக ஜெகனின் கண்களும் தோண்டப்பட்டு ஆணுறுப்பு வெட்டப்பட்டு அவரின் உடலும் நிர்வாணமாகப் புத்தர் சிலையின் முன்னால் வீசப்பட்டது. காட்டுமிராண்டித் தனமான கூச்சல்களுக்கு மத்தியில் ஏனைய தமிழ் இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டு புத்தரின் காலடியில் எறியப்பட்டனர்.
சிங்கள புத்த வெறியர்கள், தமிழிளைஞர்களின் தலைகள், கண்கள், கால்கள், கைகள், உடல்கள், செங்குருதி யாவற்றையும் புத்தருக்கு காணிக்கையாக அளித்தனர். இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்திற்கு முதல்நாள் புத்தர்களின் புனிதநாளான போயா தினமாகும். போயா தினத்தில் உபவாசம் இருந்து “”சில்” அனுஷ்டித்தவர்கள் மறுநாள் இப்படுகொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர்.
சிறுவன் மயில்வாகனத்திற்கு ஏற்பட்ட மரணம் மனதை உருக்குவதாகும். இச்சிறுவன் கப்பற்படையினரின் தண்ணீர் எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு (பவுசர்) பொன்னாலைப் பாலத்தடியில் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.
இச்சிறுவன் சப்பல் கட்டடத்திற்கு வெளியே சாதாரண கைதிகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில் மறைந்திருந்ததைக் கண்ணுற்ற சிறை அதிகாரி சமிரத்ன அச்சிறுவனின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் கத்தியால் அவன் குரல்வளையை வெட்டினான். இரத்தம் பீறிட்டுவர அச்சிறுவனும் புத்தருக்குக் காணிக்கையாக்கப்பட்டான். இச்சிறுவனைப் படுகொலை செய்த சமிதரத்ன ஒரு பட்டதாரியாவான் என்பதும் வெட்கக் கேடான உண்மையாகும்.
சிறைச்சாலை வாகனத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இளைஞர்களின் உடல்கள் முழு நிர்வாணமாகப் போடப்பட்டன. அந்த உடல்களின் மத்தியில் உயிர்ப் பிரிவின் முனகல் கேட்டபோது கொலை வெறியர் பொல்லால் அடித்து கம்பியால் குத்தி அவ்வொலிகளை நிரந்தரமாக நிறுத்தினார்கள்!
பிரசுரித்த நாள்: Jun 22, 2009 10:39:28 GMT
http://eezhathtamilarinporaaddavaralaaru.blogspot.ca/2010/11/44.html
http://eezhathtamilarinporaaddavaralaaru.blogspot.ca/2010/11/45.html
இந்தத் தொடரின் 46-178 பாகங்களை கீழ்க் கண்ட இணைய தளத்தில் பார்க்கவும்,
http://eezhathtamilarinporaaddavaralaaru.blogspot.ca/2010/11/178-2008.html
Leave a Reply
You must be logged in to post a comment.