காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே!

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்

ரொரன்ரோ
கனடா

திருவள்ளுவராண்டு 2032 புரட்டாதி 18

(ஒக்தோபர் 04,2002)

செய்தி அறிக்கை

காவேரி கன்னடர்களுக்கு என்றால் நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே!

”காவேரி கன்னடர்களுக்கு என்றால்  நெய்வேலி மின்சாரம் தமிழர்களுக்கே” என்ற முழக்கத்தோடு தமிழ்த் திரை உலகம் தமிழர் நல  பாதுகாப்புக்  கழகம் என்ற  அமைப்பின் கீழ் அணி திரண்டு களத்தில்  இறங்கியுள்ளது.  இயக்குனர்  திலகம்   பாரதிராசா எடுத்த  முயற்சியினாலேயே இந்தக் கழகம் உருவாகியுள்ளது.

காவிரி நீர் சிக்கல் தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையில் கடந்த 72 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
இந்தச் சிக்கல் இப்போது தமிழக கர்நாடக  மாநிலங்களுக்கு  இடையே மோதலாக வெடித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி  ஆணையத்தின் கட்டளையையும்  நடைமுறைப் படுத்த முடியாதென கர்நாடக அரசு சண்டித்தனம் செய்வதே இந்த மோதலுக்குக் காரணமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி ஆணையத்தின் கட்டளையையும் கர்நாடக அரசு துச்சமாகமதித்து அதனை நடைமுறைப் படுத்த மறுப்பது கர்நாடகம்   இந்தியாவின்   25 மாநிலங்களில் ஒன்றா அல்லது அது தனிநாடா  என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
முதலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீரை திறந்துவிட்ட கர்நாடகஅரசு அங்கு காட்டப்படும் எதிர்ப்பை அடுத்து அந்த முடிவை மாற்றியுள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவு உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். காவிரி ஆணையத்தினை கேலி செய்வதாகும்.  ஒரே இந்தியா, எல்லோரும் இந்திய மக்கள்  என்ற கோட்பாட்டுக்கு ஆணி அறைவதாகும்.

காவிரி நீரைத் தமிழகத்துக்கு திறந்துவிடக் கூடாது என்பதில் கர்நாடக திரைப்பட உலகத்தினர் முனைப்பாக உள்ளனர். சந்தனக் கடத்தல் வீரப்பனால் விடுவிக்கப்பட்ட நடிகர் ராஜ்குமார்  எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்துகிறார்!
எதிர்வரும் ஒக்தோபர் 12ஆம் நாள் நெய்வேலியில்   தமிழர் பாதுகாப்புக் கழகம் இயக்குனர் திலகம் பாராதிராசாவின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தஉள்ளது.

இந்தப்  போராட்டத்துக்கு  பா.ம.க.   நிறுவனர் டாக்டர் இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. தலைவர் எல்.கணேசன் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களது  தமிழுணர்வையும்  இனவணர்வையும்  பாராட்டி வரவேற்கிறோம். அவை மேலும் வளர வேண்டும்.Image result for cauvery water dispute
அதே சமயம்  இந்திய தேசியக் கட்சிகளான பாரதிய ஜனதா, இந்திய காங்கிரஸ், ஐக்கிய  ஜனதா தளம், வலது  இடது கம்யூனிஸ்டு கட்சிகள் காவிரிச் சிக்கலில்  விடம்  உண்ட நீலகண்டனைப் போல விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் திண்டாடுகின்றன.
காவிரிபோல் தமிழுணர்வும் தமிழ்த் தேசிய  உணர்வும்  வற்றிப்போனதன் காரணமாகவே  தமிழ்த்திரைப்படங்களுக்கு  ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் அளவுக்கு நிலமை சீர்குலைந்துள்ளது.   தமிழுணர்வையும் தமிழ்த் தேசியத்தையும் கட்டி  எழுப்பினால் காவிரிச் சிக்கலுக்கு  மட்டுமல்ல தமிழ்மொழிக் கல்வி,  தமிழில்  திருக்கோயில்  வழிபாடு  போன்றவற்றிற்கு காஞ்சி சங்கராச்சியார் போன்ற தமிழ்ப் பகைவர்கள் காட்டும் எதிர்ப்புக்கும்  முடிவு கட்டலாம்.

இயக்குனர் திலகம்  பாரதிராசா  தலைமையில் தமிழர் நல பாதுகாப்புக் கழகம் நடத்தும் இந்த உரிமைப் போராட்டத்துக்கு  கனேடிய  தமிழர்களின் சார்பில்  எங்கள் முழு ஆதரவையும் நல்வாழ்த்துக்களையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

-30-
தொடர்பு – (416) 281 1165, (416) 447 6314, (416) 261 9099, தொ.நகல் (416) 281 1165
Email-athangav@sympatico.ca

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply