வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்!

வடமொழியே தமிழ்மொழிக்குத் தாய் என்ற மாயையை  உடைத்தெறிந்த கால்டுவெல் அய்யர்!

இந்தத் தொடரை நீங்கள் படிக்கும் போது கோவையில் யூன் 23 – 27  நாள்களில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்து முடிந்திருக்கும்.  பல கோடி செலவில் தமிழக அரசால் நடத்தப்படும் இந்த விழாவில் 300 க்கும் கூடுதலான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கிறார்கள். அரசியல் மட்டத்தில் இந்த மாநாட்டுக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தாலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு இந்த மாநாடு   ஓரளவாவது பயன்படும் என்ற எண்ணம் உண்டு.

உலகமொழிகளில்  கிரேக்கம்  இலத்தீன் இரண்டும்  செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டனர். அதன் விளைவாக வடமொழியும் செம்மொழியாகக் கருதப்பட்டது. 1816 இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார்.

கால்டுவெல் அய்யர்  ஸ்கொட்லாந்து நாட்டில் பிறந்து (1814 – 1892) கிறித்துவ மதத்தைப் பரப்ப  தமிழகத்திற்கு 1838 இல் வந்தார்.Image result for கால்டுவெல் அய்யர்

திருநெல்வேலியில்  50 ஆண்டுக்காலம் தங்கிக் கிறித்துவச் சமயப்பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியை வட மொழியுடனும் தெலுங்கு, மலையாளம், கன்னடம்  போன்ற திராவிட மொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார். அவருடைய ஆய்வு அதுவரை இருந்த மொழியியல் நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது.

“வடமொழியே பிறமொழிகளுக்குத் தாய், அதிலிருந்தே மற்றமொழிகள் தோன்றின, அது தேவமொழி” என்னும் கருத்துக்களும் நம்பிக்கைகளும் வலிமையாகவும் பரவலாகவும் பரப்பப்பட்டிருந்தன. தமிழ் மொழி வடமொழியின் துணையில்லாமல் இயங்க இயலாது என்ற நம்பிக்கை வடமொழிப் பண்டிதர்களிடம் வேர் ஊன்றியிருந்தது. கால்டுவெல் அய்யரின்  ஆராய்ச்சி வேறு உண்மைகளைக் கூறியது.  1856 இல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் (The Comparative Grammar of the Dravidian Languages)   என்ற அரிய நூலை எழுதி வெளியிட்டார்.

திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் வெளி வந்த பின்னரே  தமிழ்மொழி வடமொழிக் குடும்பத்திலிருந்து  வேறுபட்டது. அது, திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி,  அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் தோன்றின. தமிழ் வடமொழியின் துணையில்லாமல் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது என்றும் தமிழ், வடமொழியின் கலப்பை எந்த அளவுக்கு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மை அடைந்து சிறந்து விளங்கும்” என்றும் அவர் எண்பித்தார்.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை (1855 – 1897) அத்தகையதொரு மொழியியல் கருத்தைத் தாம் இயற்றிய மனோன்மணியம் என்னும் நாடகநூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில் பாடியிருந்தார்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவமும்
உன்உதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகுவழக்கு அழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

கன்னடம், களிதெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் என்னும் ஒரே வயிற்றில் தோன்றிய மொழிகள். வடமொழி உலக வழக்கில் அழிந்தொழிந்து போன மொழி, தமிழ் என்றும் இளமையோடு வாழும்மொழி என்பதே இதன் பொருளாகும்.

மனோன்மணியம் சுந்தரம்பிள்ள திருவாங்கூர் பல்கலைக் கழகக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். தமிழை தெய்வத்தாய் என்று அழைத்த பெருமை இவரையே சாரும்.

பின்னர் பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தினார்.  இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோர் கட்டி வளர்த்தனர்.

தமிழின் தொன்மையையும் வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். தமிழ் முதல் செம்மொழி என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார். அவர் எழுதிய இன்னொரு நூல்  ஒப்பியல் மொழி நூல் என்பதாகும். அந்த நூலை எழுதுவதற்கு கால்டுவெல் அய்யரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலே அடிப்படை என பாவாணரே பதிவு செய்துள்ளார். இதனால்  கால்டுவெல் அய்யரின்  அளப்பரிய தமிழ்த் தொண்டு எத்தகையது என்பதை அறிய முடியும்.

கால்டுவெல் அய்யர் காலத்திற்கு முன்பே, வடமொழியில் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கிபி 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாதவச் சிவஞான முனிவர் குறிப்பிடத்தக்கவர். இவர் எழுதிய தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று அறுதியிட்டுக் கூறினார்.

இருபத்தாறாயிரத்து முந்நூற்று அய்ம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும் யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது. சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனத் தமிழறிஞர்  கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.கே. இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சி அறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

இடைக் காலத்தில் பிறமொழி மற்றும் பண்பாட்டினரின் படையெடுப்புக்களால் தமிழ் நலிந்த நிலையில் தாழ்வுற்றுக் கிடந்தது. அதிலிருந்து மீண்டு அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும், சிறப்பையும் தமிழர்கள் தாம் அறிந்தும் பிறரும் அறியக்கூடியவாறு நிலைநிறுத்தத் தொடங்கிய காலப்பகுதி தமிழ் மீட்சிக் காலம் ஆகும்.

இக்காலப் பகுதி கிபி 1856  முதல் தொடங்கியதாகக் கொள்ளலாம்.  ஏட்டில் செல்லரித்துப் போய்க்கிடந்த சங்க நூல்களை  உ.வே. சாமிநாத அய்யர், ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ள போன்றோர் அச்சேற்றிப் பொதுமக்கள் மத்தியில் உலா வரச் செய்தனர். இவற்றால் தமிழின் தலையெழுத்து  மாறத் தொடங்கியது. தமிழின் பெருமையும் தமிழரின் நாகரிகச் சிறப்பும் வெளியுலகத்துக்கு தெரியத் தொடங்கியது.

தமிழுக்கு இவ்வளவு சீரும்  சிறப்பும் இருந்தும் தமிழ்ப் பெற்றோர்கள்  தமிழ்மொழியைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கத்  தயங்குவதையும் பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக  இருப்பதையும் பார்க்கிறோம்.

தமிழைப் புலம்பெயர் நாடுகளில் பரப்பும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் நாடுகளுக்கு ஆசிரியர்களை அனுப்பியும் பாட நூல்களை வழங்கியும் தமிழ் கற்க வழிசெய்ய வேண்டும். புலம்பெயர் மாணவர்கள் தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் தமிழைக் குறுகிய காலத்தில் எழுதப் படிக்க வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

செம்மொழி மாநாடு நடத்துவதோடு நின்றுவிடாது நடைமுறையில் தமிழ்மொழி வளர ஆவன செய்ய வேண்டும். (தொடரும்)

 

About editor 3046 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply