பொய்களை மெய்கள் என நம்பி ஏமாந்த தமிழர்கள்
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம். பொய் சொல்லலாகாது. பிழைபடச் சொல்லேல்.
பொய்யாமை என்பதே சிறந்த அறமாகும். பொய் சொல்லக்கூடாது என்பதற்காகத் தமிழ்ச்சான்றோர் பலர் எடுத்தியம்பிய பொன்மொழிகளில்தாம் இவை. ஆயினும், பொய்மையே தம் கைப்பொருளாகக் கொண்டு தமிழினத்தைப் பல்லாண்டு காலமாக ஏமாற்றிப் பிழைத்து வருகின்ற தர்ப்பைகள் வாழ்கின்ற பூமி இதுவாகும். பிறருக்குத் தீங்கு வாராத சொற்களை மொழிவதே வாய்மையாகும். அதுவே தமிழரின் உயர்ந்த ஒழுக்கமாய்க் கொண்டு, புகழ் வாய்ந்த பண்பாட்டோடு வாழ்ந்து வந்த தமிழரிடையே பொய்ச்சொற்களும் கலந்து உறவாடத் தொடங்கியது. எப்போது? எவரால்?
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
என்று தீமைக்கும், நன்மைக்கும் தாமே காரணி எனவும், நோவும் அது தணிந்து விடுவதும் பிறரால் ஏவப்பட்டதல்ல; தாமே ஏற்படுத்திக்கொண்டது என எண்ணித் தமிழர் வாழ்ந்த காலையில் தமிழனிடம் குற்றம் ஏற்படவில்லை; பொய்யுரைகள் பொழியப்படவில்லை.
யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
எனத் தமிழர் வாழ்ந்த காலத்தில் யாரையும், எவரையும் முறைகேட்க முற்படவில்லை, தாமும் பிறர்க்கு எம்முறையென அறிந்திட முனையவில்லை. அதனால்தான் தமிழர் யாரையும் நொந்து கொள்ளவோ, குறைபட்டுக் கொள்ளவோ வேண்டியதில்லாமல் வாழ்ந்தனர். தமிழரின் வாழ்விலும் குறையோ, குற்றமோ ஏற்படவில்லை. அதற்காகப் பிறரிடம் பொய்சொல்லி வாழ வேண்டிய நிலையும் தமிழர்க்கு ஏற்படவில்லை. அப்படியென்றால் பொய் எப்போது நிலைகொண்டது? எவரால் நிலை நிறுத்தப்பட்டது?
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகிற்கு ஒருமைப்பாட்டினை உணர்த்தி வாழ்ந்த தமிழரிடம் யாரை ஏய்த்து வாழவேண்டி பொய் பேசித்தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டது? தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா!
அண்டிவந்த ஆடுமாடுகளுக்குப் புல்லும், தம் பண்டிக்குச் சோறுமாய்க் குகைவழி நுழைந்து நம் நாட்டிற்குள் வந்த ஆரியப் பார்ப்பனர்கள்தாம் முதன் முதலில் பொய்யை இம்மண்ணில் விதைத்த குற்றவாளிகள் ஆவர்.
கல்லைக் கடவுள் என்றனர். மண்ணைக் குவித்துக் கடவுள் என்றனர். கல்லும், மண்ணும் எப்படியடா கடவுளாகும்? நாளும் நாம் காலால் மிதித்து நசுக்கிச் சிதைத்தெடுப்பதே கல்மீதும் மண்மீதும் தானேயென்று எவரும் உரைக்கத் துணியவில்லை.
இயல்பிற்கு மாறாய்க் காய்த்திடும் காய்கள், பூத்திடும் பூக்களிலெல்லாம் கடவுள் இருக்கிறார் என்றனர். அனைவரும் விரும்பும் அழகு வடிவான காய்களில், பூக்களில் ஏன் கடவுள் உறையக்கூடாது என எவரும் எதிர்வினா வினவவில்லை.
இறந்தவர் உயிர் ஆவியாகிப் பேயாகித் தொல்லைகள் பல தரும் என்றனர். சிரார்த்தம் தந்து எம் தொப்பையை நீவீர் செம்மையாய் நிரப்புவீராயின் இறந்தநும் தந்தையார், முன்னோர் வைகுண்டபதியை வாக்குச்சீட்டுப் பெறாமல் பெற்றுவிடுவர் என் றனர். இறந்தவரின் பேய் பார்ப்பனரைத் தொல்லைப்படுத்தாமல், அவரிடம் மட்டும் எப்படியடா எனக்கு விருப்பப்பட்டதை வாங்கித்தா என்று கேட்கிறது என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.
நரகத்தில் வீழாமல் சொர்க்கலோகத்தில் சேர வேண்டுமாயின் வேள்விகளை, யாகங்களை நடத்திடுங்கள். பருப்பில் ஊற்றவேண்டிய நெய்யை நெருப்பில் ஊற்றுங்கள். வயிற்றில் போடவேண்டிய நவதானியங்களை நெருப்புத் தானிகளில் போடுங்கள் என்றனர். சொர்க்கத்தில் ரம்பை உண்டு, மேனகை உண்டு, ஊர்வசி உண்டு, திலோத்தமையெல்லாம் உண்டு. அவர்களோடு சல்லாபித்திருக்கலாம் என்றனர். உலகில் இறந்த ஆண்களில் கால்வாசிப் பேராவது சொர்க்கம் சென்றிருப்பார்களே. அந்த யவ்வன அழகிகளோடு லயித்து இன்பத்தில் திளைத்திருப்பார்களே. அப்படியானால் இந்நேரம் அங்கும் எய்ட்ஸ் நோய் தீராப்பிணியாக, விடாப் பிணியாக நிலைகொண்டிருக்க வாய்ப்புண்டே, அங்கிருந்துதான் அந்த நோய்க் கிருமி இங்கும் பரவுகிறதோ என எவரும் கேட்கவில்லை.
செல்வத்துள் செல்வம் இல்லத்துள் சேரவேண்டுமாயின் பதி, பத்தினி சமேதரராய்ப் பஞ்சகவ்யம் எனும் மாமருந்தினை நாங்கள் தரப் பவ்யமாய்ப் பருகுவீர் என்றனர். அதுஎன்னடா மாட்டுச் சாணம், மூத்திரம், பால், தயிர், நெய்தானே. அதைக் குடித்தால் எப்படியடா செல்வம் பெருகும். உழைத்தால்தானே பெருகும் என எவரும் நையப்புடைக்கவில்லை.
இல்லாத எமகண்டம், ராகுகாலம், கரிநாள், தேய்பிறை பார்த்து நன்னாளில் நல்ல நேரத்தில் திருமணத்தையோ, பணியையோ செய்திடுவீராயின் துன்பம், துயரம் ஏதுமண்டா. வந்த வினையும் விலகிப்போம் என்றனர். விலங்குகள், பறவைகள் நேரம் பார்த்தாடா இவையெல்லாம் நடத்துகின்றன. அவையெல்லாம் வாழாமலாடா போய்விட்டன என்று எவரும் சாட்டையடி கொடுக்கவில்லை.
மகாமகக் குளத்தின் நீரைப் பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை உள்ளங்கையில் எடுத்து உச்சந்தலையில் ஒத்திக்கொண்டாலே செய்த பாவம், சொல்லிய பொய், பிதற்றிய பித்தலாட்டம், நடத்திய கொலை, வஞ்சகம், சூது, பாலியல் வன்முறை எல்லாக் குற்றமுமே விலகிப் போய்விடும் என்றனர். அடப்பாவிகளா! எண்ணாயிரம் அறிவாளிகளை மதுரையில் கொன்று இப்படித்தான் பாபவிமோசனம் தேடிக்கொண்டீர்களோ? என்று எவரும் கேட்க விரும்பவில்லை.
அக்னியில் அண்ணாமலையார் தெரிகிறார். அதோ பார்! தண்டனிட்டுக் கும்பிடு போடு என்றனர். அண்ணாமலையாரின் (சிவபெருமான்) அடியும், முடியும் தெரியாமல்தானே பிரம்மனும், விஷ்ணுவும் முட்டிமோதிக் கொண்டனர். எங்களுக்குத் தெரிகிறது பார் என்கிறீர்களே. இது மூக்கறையன் மூக்கறுத்த கதைதானேயென்று எவரும் கேட்கத் துணியவில்லை.
சபரிமலையில் மகரஜோதி தானாகத் தெரிகிறது, தரிசியுங்கள் என்றனர். தரிசனத்தோடு நின்று விடாமல் எங்கள் மீது கரிசனமும் கொண்டு இருமுடி கட்டி இலஞ்சத்தைக் காணிக்கையாகத் தந்து விடுங்கள் என்றனர். மகரஜோதியில் மின்னிடும் பொன்னம்பல மேட்டிற்கு ஏனடா மின்சார விளக்குகள் என்று எவரும் இதுவரை வினவவில்லை.
கிருஷ்ணன் கடவுளல்ல, விஷ்ணுவின் கருப்பு மயிர்தான் கிருஷ்ணன் என்றனர். பலராமன் விஷ்ணுவின் வெள்ளைமயிர் என்றனர். உதிர்ந்த மயிரை எப்படியடா உயிராக்கிக் கடவுளாக்கினாய் என எவரும் எதிர்க்கேள்வி விளம்பவில்லை.
நான் ஒருவனுக்கு ஒருத்தியென்று வாழ்ந்த பத்தினி என்பது உண்மையாயின், மதுரையம்பதியே எரிந்து போ! என்று சூளுரைத்த இலக்கியம் இலங்கிய தமிழகத்தில் அய்வருக்கும் தேவிதான் அழியாத நிலைகொண்ட பத்தினி என்றனர். அய்வரையல்லாது ஆறாவதாகவும் ஒருவரை விரும்பியவள் எப்படியப்பா பத்தினியாக இருக்க முடியுமென்று எந்தப்புலவரும் உரைவீச்சில் கேட்கவில்லை. வங்கக் கடலுக்குள் காணும் மணல் திட்டெல்லாம் எங்கள் ராமன் கட்டிய பாலம் என்றனர். அவன் காலத்தில் வாழ்ந்த (திராவிடர்களை) தமிழர்களையெல்லாம் அரக்கர்கள், அசுரர்கள், தஸ்யூக்கள், குரங்குகள் என்று இழித்தும் பழித்தும் கூறினர். எங்களையா குரங்குகள், தஸ்யூக்கள் என்கிறீர்கள்? என எந்தக் கவியரசர்க.ளுக்கும் கோபம் வரவில்லை.
ராகு என்ற பாம்பு சூரியனை விழுங்கி, பின், கக்கிவிடுகிறது என்றனர். ராகு என்பது பாம்பானால் சூரியன் என்னும் நெருப்புக் குண்டத்திற்கு அருகிலாவது செல்ல இயலுமா? என்று எந்த விஞ்ஞான மேதைகளும் வினாக்குறி எழுப்பவில்லை.
ஒரு தேவ வருடம் (100வருடம்) தொடர்ந்து சிவனும், பார்வதியும் கலவியில் ஈடுபட்டனர் என்றனர். முடியுமா? இயலுமா? இந்த இழிநிலைக்குரியவர்கள் கடவுளாக எப்படியடா மதிக்கப்படுவர் என்று எந்த பக்திமானும் கேட்கவில்லை.
சிந்தூரா என்ற ராட்சஷி பார்வதியின் யோனி வழியே கருப்பைக்குள் சென்று குழந்தையின் தலையைக் கடித்து மென்று தின்று விட்டதால் முண்டமாகப் பிறந்தவன்தான் யானையின் உதவியால் அண்டத்தைக் காக்கும் முழுமுதற் கடவுள் விநாயகன் என்றனர். அரக்கி நூழைவது கூடத் தெரியாது இருந்தவள் எப்படியடா எல்லார்க்கும் வீரத்தைக் கொடுக்கும் வீரியகாரியாக இருக்க முடியுமென்று எந்த சைவ அன்பரும் விளம்பிடவில்லை. மழையில்லையா! கழுதைக்கும் கழுதைக்கும், தவளைக்கும் தவளைக்கும், இல்லையாயின் இவைகளோடு மனிதர்க்குமோ கலியாணம் செய்து வையுங்கள், நாங்கள் மாங்கல்யம் தந்துனானே… மந்திரத்தைச் சொல்கிறோம். மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமென்றனர்.
தங்கத்தேர், வெள்ளித்தேர் இழுத்தால் பதவிகள் தானே பாய்ந்து தேடி ஓடி வரும் என்றனர். இழுத்தனர், ஏமாந்த சோணகிரிகள்.
மண்சோறு உண்டால் முன்செய்த தீவினைகள் எல்லாம் தடையின்றித், தண்டனையின்றித் தகர்ந்துவிடும் என்றனர். மண்சோறு தின்றனர். ஆனால், விணைதான் தனிநீதிமன்றம் வரை இழு, இழுவென்று இழுத்துச் செல்கிறது.
நாங்கள் (பார்ப்பனர்கள்) பிரம்மனின் நெற்றிக்குறியில் பிறந்ததால் உயர்ந்தவர்கள். நீங்கள் (திராவிடர்கள்) பிரம்மனின் கண்ட கண்ட இடத்தில் பிறந்ததால் சூத்திரர்கள் (வேசிமக்கள்) என்றனர். பல்லாண்டுகள் கேட்டுப் பழக்கப்பட்ட எவருக்கும் ஆத்திரம் பொங்கி அடித்திடவில்லையே!
பார்ப்பனர்கள், பெற்ற தாயைக்கூடப் புணருவோம். பாவம் எங்களைச் சேராது. உச்ச கட்டமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டால் எங்களின் பாவம் நிவர்த்தியாகி விடும் என்றனர். மயிலைக் கண்ட வான்கோழி தானும் அதுவாகி ஆடியதுபோலத் தமிழர்பலர் தாமும் நீறணியா நெற்றி பாழ் எனப் பூசி ஆடினரேயொழிய இது அநியாயமில்லையா எனக் கேட்கவில்லை.
வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்
என்றார் அதிவீரராமபாண்டியனார். பார்ப்பனர்களின் பணியென்பது வேதங்களை ஓதுவதும், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நடப்பதுமாகும் என்றார். ஆனால், அவ்வாறு நடந்தனரா? நடந்து வருகின்றார்களா? இல்லையே.
பார்ப்பனர்கள் இப்பூவுலகில் உமிழ்ந்த பொய்யுரைகள் கணக்கிலடங்கா. குறிப்பிட்ட சிலவற்றை எடுத்துக்காட்டியுள்ளோம். இத்தனைப் பொய்களையும் மெய்யென நம்பி அவர்பின் சென்ற தமிழர்கள் பலராவர். பக்திப் பழங்களாய்க் கனிந்து கசிந்துருகி அவரின் பின்னால் சென்றதுண்டு. பொய்யாமை யன்ன புகழில்லை என்று வாழ்ந்த தமிழர் ஆரியப் பார்ப்பனரின் பொய்யுரைக்கு என்று அடிமையாய்த் தலை குனிந்தனரோ அன்றே வாழ்விலும் சீரழிவுகள் ஏற்படலாயின.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப
என்ற நிலை தமிழர் வாழ்வில் உருவாயிற்று. இல்லாததை இருக்கிறதென்றும், நடவாததை நடக்குமென்றும், தராததைத் தருமென்றும், கிடைக்காததைக் கிடைக்குமென்றும் தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றினர் பார்ப்பனர்கள்.
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே
என்பதற்கிணங்க அக்ரஹார மொழியில் பேசித் தமிழர்களை மயக்கிடச் செய்தனர். பார்ப்பனர்கள். ஆரியப் பார்ப்பனர்கள் மொழிந்தவை அத்தனையும் மெய்யல்ல, பொய்யே என்று மெய்யாய் மெய்பட உரைத்தவர் பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள். சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு, மனிதன் மானத்தோடு வாழவேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில் பொய்யைப் புறந்தள்ளி மெய்வாழ்வு வாழச்செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!
ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதைமறைத்துத் தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியம்
என்ற புரட்சிக் கவியின் வைரவரிகட்கு ஏற்பத் தந்தை பெரியார் அவர்களும், பார்ப்பனர் கூறும் கூற்றெல்லாம் மெய்க்கூற்றுகளல்ல. அவரின் தொப்பையை உழைப்பின்றி வளர்த்திட உதவிடும் பொய்க்கூற்றுகளே என்றார்கள். பார்ப்பனரின் பொய்யுரைகளை நம்பாதீர் என்று மனமறிந்து பொய்யாது மெய்யுரைத்தவர் அறிவுலக ஆசான், சமுதாய விஞ்ஞானி தந்தை பெரியார் அவர்கள். அதனால்தான் விடுதலை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பினைத் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் அவர்களிடம் தந்தை பெரியார் அவர்கள் ஏற்குமாறு கூறிய வேளையில், இதழியல் துறையில் அரிச்சுவடி கூடத் தெரியாத நான் எப்படி நாளிதழினை நடத்துவேன் என்று ஆசிரியர் கேட்க. அய்யா சொன்னார்களாம், இந்து வில் வடக்கு என்று எழுதினால் தெற்கு என்றும் நன்மை என்று எழுதினால் தீமை என்றும் எழுதுங்கள் என்று!
பார்ப்பனரின் உரையெல்லாம் பொய்யுரையே, தமிழரைத் தம்முன் மண்டியிட்டுப் பணிந்து பணிவிடை செய்திடச் செய்த சூழ்ச்சிதான் அப்பொய்யுரைகள் என்று தமிழர் முன் மனதறிந்து மெய்யுரைத்து வாழ்ந்த தந்தையின் மண்டைச் சுரப்பை இன்று உலகம் தொழுகிறது!
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லா முளன் தந்தை பெரியாரே!
Leave a Reply
You must be logged in to post a comment.