கவிஞர் இன்குலாப் மறைவு
முதற் கண் மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களது நினைவாக இந்த இரங்கல் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அன்பரசி, திருமுருகன் இருவருக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதியார் கூறியிருப்பது போல நமது நாட்டில் பிறந்த மகான்களை தீவிர பக்தியுடன் போற்றாத நாட்டில் புதிய மகான்கள் பிறக்க வழியில்லை.
கவிஞர் இன்குலாப் அவர்களது மறைவையொட்டி தமிழ்நாட்டில் நினைவு நாள் கூட்டங்களை யாரும் நடத்தியதாகத் தெரியவில்லை.
கவிஞர் இன்குலாப் கனடாவுக்கு 1999 இல் வந்திருந்தார். அப்போது அவரோடான சில இலக்கியச் சந்திப்புகள் நடந்தன. அவர் என் வீட்டுக்கும் விருந்தாளியாக வந்திருந்தார். விருந்துக்குப் பின்னர் நான் வழக்கமாக விருந்தாளிகளுக்கு மதிப்பளிப்பது போன்று கவிஞர் இன்குலாப் அவரிடம் ஒரு கடித உறையை நீட்டினேன். அவர் வாங்க மறுத்துவிட்டார். இது உங்களுக்கு இல்லை உங்களது பிள்ளைகளுக்கு என்று சொல்லிப் பார்த்தேன். அவர் ஒப்பவில்லை. உங்களது மாணவர்களுக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள் என்று வற்புறுத்தினேன். அப்போதும் மறுத்துவிட்டார்.
கவிஞர் இன்குலாப் தான் வரித்துக் கொண்ட கொள்கை வழியேதான் கடைசிவரை வாழ்ந்தார். தனது கொள்கை கோட்பாட்டை எந்தக் கட்டத்திலும் விட்டுக் கொடுக்கமாட்டார் என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு.
மார்க்கீச சிந்தனையாளரா அவர் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். தனது கொள்கையை எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டார்.
நாங்கள் இப்படியான கவிஞர்களை அவர்கள் வாழும்போது பாராட்டுவதில்லை மதிப்பளிப்பதில்லை. தமிழர்களது நேரம், நினைப்பு எல்லாம் கோயில் கட்டுவதிலும் தேர், திருவிழா செய்வதிலும் செலவழிந்து விடுகிறது. யூதர்கள் அப்படியல்ல. அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் கட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கு அந்த ஆர்வம் இல்லை. உழைக்கிற பணத்தை ஆடம்பர திருமணங்கள், பூப்பு நீராட்டு விழாக்கள் போன்றவற்றில் வீணாகச் செலவழிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
நான் கடந்த ஒக்தோபர் மாதம் தமிழ்நாட்டுக்குப் போயிருந்தேன். பழைய நண்பர்களை சந்திக்கும் பொருட்டு ஒரு ஒன்று கூடலுக்கு ஒழுங்கு செய்திருந்தேன். அதில் தோழர் தியாகு, சுப.வீரபாண்டியன், வன்னியரசு, கஸ்பராஜ் அடிகளார் போன்ற பலர் கலந்து கொண்டார்கள். கவிஞர் இன்குலாப் அவர்களுக்கும் அழைப்பு அனுப்பினேன். ஆனால் உடல் நலக் குறைவுடன் இருப்பதாகச் சொன்னார்கள். நேர நெருக்கடி காரணமாக அவரை நேரில் சென்று பார்க்க முடியவில்லை. அவர் இவ்வளவு கெதியில் மறைந்துவிடுவார் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. கவிஞர் இன்குலாப் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது மனைவி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நக்கீரன்
Leave a Reply
You must be logged in to post a comment.