ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்? நக்கீரன் பதில்!

ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்? நக்கீரன் பதில்!

தமிழினத்துக்கு வடகிழக்கு இணைந்த கூட்டாட்சி அரசியல் அமைப்புக்கு கடினமாக உழைத்து தமிழரை இன அழிப்பில் இருந்து பாதுகாப்போம் என்று கடைசி தேர்தலில் கூக்குரல் இட்டுவிட்டு மக்களின் வாக்குகளை பெற்றபின் ஊமைகளாகி போய்விட்டார்கள். இவர்கள் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் பயந்தவர்களா?1. சர்வதேச விசாரணையை சுமந்திரன் வேண்டாம் என்றபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
பதில்: யாரும் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியம் இல்லை. எனவே சமரசம் செய்யுமுகமாக கலப்பு விசாரணைக்கு ஒத்துக்கொண்டோம். அவ்வளவுதான். அரசியலில் இராஜதந்திரம் என்ற ஒரு கோட்பாடு இருக்கிறது. அதை நீங்கள் அறியவில்லை போல் தெரிகிறது.
2. இரண்டு வருடம் இலங்கைக்கு கால அவகாசம் ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் சொன்னபோது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
பதில்: இரண்டு ஆண்டு அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் எடுத்த முடிவு. அதனை நாம் ஏற்றுக் கொண்டோம். இரண்டு ஆண்டு அவகாசம் கொடுக்கக் கூடாது என்று சொல்வது இராஜதந்திரம் அல்ல.
3. சிங்கள அமைச்சர்கள், தமிழர்கள் அரசியல் வழிகாட்டு குழுவில் இருந்தும் வடகிழக்கு இணைப்பையும், கூட்டாட்சி (சமஷ்டி) கேட்கவில்லை என்ற போது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
பதில்: வட கிழக்கு இணைப்பை ததேகூ கேட்டிருக்கிறது. அதே போல் இணைப்பாட்சி அரசியல் அமைப்பையும் கேட்டிருக்கிறது. வட கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள். இணைப்பாட்சி என்ற சொல் வரைவு யாப்பில் இல்லை. ஆனால் அதன் உள்ளடக்கம் உள்ளது.
4. ஒவ்வொரு எம். பி. க்கும் சிங்கள அரசாங்கம் 2 கோடி கார் இறக்குமதி உரிமத்துக்கு என்று கொடுத்த அந்த காசை மொத்தமாக (16×2) 32 கோடியை எடுத்து போரால் வாடும் தமிழர்களுக்கு தொழில் வாய்ப்புக்கு அல்லது உணவு வழங்குவதற்கு அல்லது சிறு குடிசை கட்டுவதற்கு பாவிக்காமல், அந்த 32 கோடியையும் பெற்றுக்கொண்டு ஏன் ஊமையாக்கினார்கள்.
பதில்: சிங்கள அரசு கொடுக்கவில்லை. இலங்கை அரசு கொடுத்தது. உங்கள் வருமானத்தில் வன்னியில் வாழ வழியில்லாமல் வாழும் மக்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்து உதவினீர்கள்? ஊருக்குத்தான் உபதேசம். அது உங்களுக்குப் பொருந்தாதா?
5. இராணுவத்தினை வடகிழக்கில் இருந்து எடுக்க வேண்டும் என்று கூறாமல் ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
பதில்: ஊமைகளாக இருக்கவில்லை. வட கிழக்கில் இருக்கும் இராணுவத்தினை குறைக்கக் கேட்கலாமே ஒழிய முற்றாக அகற்றிக்கொள்ளுமாறு கேட்க முடியாது. வட மாகாண முதலமைச்சர் தொடங்கி எல்லோரும் இராணுவத்தை அகற்றுமாறு கேட்கிறார்கள். அது சாத்தியமில்லை.
6. காணாமல் போனவர்களை எங்கே எனறு கண்டுபிடியாது ஏன் இவர்கள் ஊமையாகிப் போனார்கள்.
பதில்: இல்லையே காணாமல் போனோர் தொடர்பாக சட்டம் இயற்றப்பட்டு அது நடைமுறைக்கு வந்துள்ளது. காணாமல் போனவர்கள் தமிழர்களில் மட்டுமல்ல சிங்களவர்களிலும் இருக்கிறார்கள். வி.புலிகள் பிடித்துக் கொண்டு போய் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.
7. தமிழர்களின் நிலத்தினை மீட்பதற்கு போராடாமல் ஏன் இவர்கள் ஊமையாகிப் போனார்கள்.
பதில்: எந்த நிலத்தைச் சொல்கிறீர்கள்?நிலத்தை மீட்பதற்காகத்தானே வி.புலிகள் 26 ஆண்டுகள் ஆயுதம் எடுத்துப் போராடினார்கள். மணலாற்றுச் சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் 3,000 சிங்களக் குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் குடியேறி விட்டார்கள். அவர்கள் குடியேறிய காணிகளுக்கு உரிய உரிமைப் பத்திரத்தை 2014 க் கடைசியில் கிளிநொச்சி சென்று கொடுத்தார். இராணுவம் பிடித்து வைத்துள்ள நிலம் படிப்படியாக விடுவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக் கடைசிக்குள் வடக்கில் கணிசமான நிலம் விடுவிக்கப்படும் என்று இராணுவம் சொல்லியுள்ளது. போரில் தோற்றால் போரில் வென்றவன் காணிகளைப் பிடிக்கத்தான் செய்வான். இஸ்ரேலைப் பாருங்கள். பாலஸ்தீனியர்களுக்கு 45 விழுக்காடு காணி கொடுக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு எதிரான போரில் அந்தக் காணிகளில் 30 விழுக்காட்டை இஸ்ரேல் பிடித்து அதில் வீடுகள் கட்டி குடியேறிவிட்டார்கள்.
 
8. சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் விகாரைகள் கட்டும் போது அதை எதிர்த்து அல்லது நீக்கும் வரை போராடாமல் ஏன் இவர்கள் ஊமையாகிப்போனார்கள்.
பதில்: தமிழர் நிலம் என்று எதைச் சொல்கிறீர்கள்? நீங்கள் அங்கு நின்று போராடாமல் வெளிநாடுகளுக்கு ஓடி வந்து விட்டீர்கள். வந்த பின்னர் அங்குள்ள ஏழை மக்கள் போராட வேண்டும் என்று கேட்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்? அநியாயமாக இருக்கிறதே?
9. தமிழீழ எல்லைப்புறத்தில் சிங்கள முஸ்லீம் மக்கள் பலாக்காரமாக தமிழர் நிலங்களை பறித்து குடியேறும் போது ஏன் இவர்கள் ஊமைகளாக இருந்தார்கள்.
பதில்: பறித்துக் குடியேறுகிறார்களா? அல்லது காசு கொடுத்து வாங்குகிறார்களா? தமிழர் அல்லாதவர்களுக்கு காணி விற்கக் கூடாது என நீங்கள் பரப்புரை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழர்கள் விற்கும் காணிகளை வாங்க வேண்டும். வாங்கி காணியில்லாத தமிழ்க் குடும்பங்களுக்கு கொடுக்க வேண்டும். அதைவிடுத்து நாற்காலியில் இருந்து கொண்டு கேள்விகள் கேட்பது அதிகப் பிரசங்கித்தனம்!
10. சுமந்திரன் வடகிழக்கு இணைப்பு இப்போதைக்கு நடைமுறைப்படுத்த முடியாது என்றபோது வடகிழக்கு இணைக்காமல் தமிழர்கள் தனிமைப்படுத்தி இன அழிப்புக்குள்ளாவார்கள் என்றும் வடகிழக்கு தமிழர்கள் பூர்வீகம் நிலம் என்று கூறாமல் இவர்கள் ஊமைகளாக ஏன் இருக்கின்றார்கள்?
பதில்: இது ஒரு பாமரத்தனமான கேள்வி. இனப்இ்படுகொலை என்று சொல்பவர்கள் யார்? எப்போது எங்கே வழக்குப் போட்டார்கள்? டப்லின் தீர்ப்பாயத்திலா? அதற்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.ஐநாமஉ பேரவை தனது அறிக்கையில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்று சொல்லவில்லை. இனப்படுகொலைக்கு கொடுக்கப்படும் வரைவிலக்கணத்துக்கு வேண்டிய கனதியான சான்றுகள் இல்லை என்று ஐநாமஉ பேரவை பேச்சாளர் தெரிவித்தார். ஒருவேளை வருங்காலத்தில் அதற்கான சான்றுகள் கிடைக்கக் கூடும் என்றார். அதனைத்தான் சுமந்திரன் சொல்கிறார். அரசியல் யாப்பின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் தீர்மானங்களை இயற்றி ஒரே மாகாணமாக இணைய யாப்பில் இடம் இருக்கிறது.
11. வெளிநாடுகளில் பலர் எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்றும், சிங்கள இராணுவத்தை சிறையிட வழக்கு போட்ட போது எல்லா எம். பி. களும் அவர்களின் செயல்களுக்கு நன்றி சொல்லி அதனைப் பெரிது படுத்தாமல் ஏன் ஊமைகளாக இருந்தார்கள்.
பதில்: இது ஒரு பாமரத்தனமான கேள்வி. இனப் படுகொலை என்று சொல்பவர்கள் யார்? எப்போது எங்கே வழக்குப் போட்டார்கள்? டப்லின் தீர்ப்பாயத்திலா? அதற்கு எந்தவிதமான சட்ட அங்கீகாரம் இல்லை.
 
12. 70 ஆண்டுகளாக சிங்களவர்களால் ஏமாந்த தமிழ் இனத்துக்கு வெளிநாட்டு சக்திகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைதான் எனிமேல் உதவி செய்ய வேண்டும். அல்லாவிடில் தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடும்.
ஆனால் சுமந்திரன் சில மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில், தான் வெளிநாடுகளில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவி கேட்டால், தன்னைப்பற்றிய சிங்களவர்களின் பார்வை குறைந்துவிடும் என்று கூறியதன் மூலம் தமிழினத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்த சுமந்திரனை ஏன் இந்த தமிழ் எம்.பி. க்கள் கட்சியினை விட்டு அகற்றாமல் ஊமைகளாகினார்கள்?
பதில்: இரு ஒரு விசர்த்தனமான கேள்வி. தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சுமந்திரனை ஏனைய பங்காளிக் கட்சிகள் எப்படி அகற்ற முடியும்? சுமந்திரன் மக்களால் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் போனவர். அவரை அகற்ற வேண்டும் என்றால் அவருக்கு வாக்களித்த மக்களால்தான் முடியும். சுமதந்திரன் அப்படிப் பேசினாரா என்தெபது தெரியவில்லை. சுமந்திரன் சிலவற்றை இராஜதந்திரத்தோடு பேசுபவர்.
 
13. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் அரசியல் ஆலோசனைகளை ஜனநாயகமாக எல்லோரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேளாது ஏன் இவர்கள் ஊமைகளாக போனார்கள்.
பதில்: ததேகூ இல் இருக்கும் கட்சிகள் கூடிப் பேசுகிறார்கள். இந்த மாதம் கூட வவுனியாவில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. ஊடகவியலாளர்கள் என்கிறீர்கள் நீங்கள் செய்தித்தாள்களைப் படிப்பதில்லையா?
14. கிழக்கு தமிழர்கள் பற்றியும், அங்கு தமிழ் மாகாண ஆட்சியையும் புறக்கணித்த சம்பவத்தினை கேள்வி கேட்காமல் ஏன் இவர்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.
பதில்: யார் புறக்கணித்தார்கள்? கிழக்கு மாகாணத்தில் ததேகூ – முஸ்லிம் காங்கிரஸ் இரண்டின் இணைப்பாட்சி நடக்கிறது. ததேகூ தனித்து ஆட்சி அமைக்கப் போதிய பலம் இல்லை. 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் 11 ததேகூ உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள்.
15. சம்பந்தன், சுமந்திரன் எடுக்கும் முடிவுக்கெல்லாம் இவர்களின் முடிவு, தமிழருக்கு என்ன தீங்கு செய்யும் என்று கேட்காமல் ஏன் இவர்கள் ஊமையாக இருக்கின்றார்கள்?
அனுபவித்துக்கொண்டு மௌனமாய் இருப்பதுதான் நன்மை என்றும், இல்லாவிட்டால் சலுகைகளை இழந்து விடுவார்கள் என்ற பயமோ?
போதிய கல்வி அறிவோ அல்லது உள்ளூர், சர்வசே அரசியல் அறிவு போதிய அளவு இல்லாமையின் காரணங்கள் இவர்களை ஊமைகள் ஆக்கியதோ?
இல்லாவிட்டால் சம்பந்தனைக் கேள்வி கேட்டால் அல்லது அவரை மீறிக் கதைத்தால் அடுத்த முறை எம்.பி. பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்று இவர்களை ஊமைகள் ஆகியுள்ளார்களோ?
தமிழர்கள் இந்த ஊமைகளை அரசியல் அந்தஸ்த்து கொடுக்காமல் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தகுந்தவர்களுக்கு அரசியல் எதிர்காலத்தில் கொடுக்கப்பட வேண்டும்.
இவர்கள் கடமை தமிழர்களது உரிமைகளை பெற்றெடுப்பது. அதனை விடுத்து இவர்கள் மௌனமாக இருப்பது தமிழர்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம்.

பதில்:சம்பந்தன் சுமந்திரன் மற்றவர்களோடு ஆலோசித்து விட்டுத்தன் முடிவு எடுக்கிறார்கள். இன்னொரு உண்மை. தமிழரசுக் கட்சிதான் பெரிய கட்சி. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ததேகூ சார்பி்ல் போட்டியிட்டு வென்றவர்களில் 4 பேர் தமிழரசுக் கட்சி. ஒருவர் புளட். அவரும் தமிழரசுக் கட்சியின் தூண்களில் ஒருவராக இருந்த அமரர் தர்மலிங்கத்தின் படத்தைக் காட்டித்தான் தேர்தலில் வென்றார். அவர் வவுனியாவில் போட்டியிட்டிருந்தால் கட்டுக்காசு கிடைத்திராது! தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் தகுந்தவர்கள் யார்? யார்? முதலில் அதைப் பட்டியல் இடுங்கள். நீங்கள் புலத்துக்கு ஓடிவந்து விட்டு அங்கு போதிய கல்வி அறிவோ, உள்ளூர் அரசியல் அறிவோ, சர்வதேச அறிவோ இல்லாமல் இருக்கிறார்கள் என்கிறீர்கள்.  அதற்கு என்ன செய்யலாம்?  தகுதியானவர்களை கல்வித் தகைமை அனுபவம் உள்ளவர்களை எங்கேயாவது அங்காடிகளில் வாங்க முடியுமா?  அல்லது இணக்க முடியுமா? முடியுமென்றால் சொல்லுங்கள். நீங்கள் அரசியல் சாணக்கியர்களாச்சே!

மேலும் இன்னொரு கேள்வியையும் கேட்டிருக்கலாம். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 2010 இல் 9 உறுப்பினர்கள் இருந்தார்கள். 2015 இல் அந்த எண்ணிக்கை  7 ஆகக் குறைந்துவிட்டது. இப்படி எண்ணிக்கை குறைந்த போது ஏன் ஊமைகளாக இருந்தீர்கள்? திருப்பி ஏன் போராடவில்லை? நக்கீரன்

நன்றி,
புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் ஊடகம்.
செப்டெம்பர் 18, 2017
About editor 3017 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply