சிங்கத்தை கொலை செய்வதற்கு ஆயுதங்கள் இல்லை

‘அடேய் முட்டாள் புருனோ, நீ சொல்வதைப்போல உலகம் உருண்டை என்றால் சொர்க்கம் எங்கேயடா இருக்கும்…?’

‘அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்…?’

கிறித்தவ மதக் கோட்பாட்டிற்கு எதிராக அறிவியல் பிரசங்கம் செய்கிறான் என்கிற பெயரில் மரணத்தண்டனைக்கு உள்ளாகும் புருனோவிடம் , நீதிபதிகள் கேட்டக் கேள்விக்கு புருனோ கேட்டிருந்த பதில் கேள்வி இது.

கேள்வி இரண்டு

இராஜகோபாலச்சாரியார் அவர்களே, வாரிசு பெற்றெடுக்கத்தான் ஒரு ஆண் , ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான் என்றால் ஒரு ஆண் , இன்னொரு ஆணை திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்ளலாமே…?’

‘ என்ன இராமசாமி சொல்கிறீர்கள், ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா என்ன…?’

‘உங்கள் இந்து மதப் பிரசங்கத்தில் ஐயப்பன் பிறந்திருக்கிறாரே…?’

இந்து மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் இராசகோபாலச்சாரியாரிடம் பெரியார் ஈ.வெ.ராமசாமி கேட்டிருந்தக் கேள்வி இது.

கேள்வி மூன்று

இத்தனை இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை

ஒரு பெண் நபி..?

rasool hgகவிஞர் ஹெச்.ஜி. ரசூல் ‘மைலாஞ்சி’ கவிதைத் தொகுப்பின் வாயிலாக மகள் தந்தையிடம் கேட்டிருந்தக் கேள்வி.

உண்மையில் இம்மூன்றும் வேறு வேறு கேள்விகளாக இருக்கலாம். கேட்டவர்கள் வேறு , வேறு நபர்களாகவும் இருக்கலாம். ஆனால் இக்கேள்விகளை எதிர்க்கொண்ட பிம்பம் மதம் என்கிற ஒன்றேதான்.

வெள்ளையாக இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்கிற திரைப்பட வசனத்திற்கு ஒத்தது ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் சார்ந்த மதத்தின் கேள்விகள் கேட்கக் கூடாது என்பது. இதையொரு கற்பு நெறியாக வைத்து கட்டிக்காப்பதில்தான் மதங்கள் இன்றைக்கும் இத்தனை இளமையோடு உக்கிரமாக செழித்துகொண்டிருக்கிறது.

மதத்திற்கு கற்பு நெறி வகுத்த முதல் மதம் கிறித்தவம். ‘ ஒரு உண்மையான கிறித்தவன் மதத்திற்கு எதிராக கேள்வி எழுப்ப மாட்டான். அதே நேரம் அவன் , மனதிற்குள் எழும் கேள்விக்கானப் பதில் கிடைக்கப்போகும் காலத்திற்காக காத்திருப்பான்….’. என்கிறது அம்மதம்.

ஐரோப்பிய நாடுகளில் அச்சுக்கலை வளரத்தொடங்கியதற்குப் பிறகு கிறித்தவ மதத்திற்கு எதிராக நிறைய புத்தகங்கள் எழுதப்படத் தொடங்கின. புற்றீசல்கள் போல பெருத்துக்கொண்டிருந்த நூல்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மதத்திற்கு எதிரான நூல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் மதக்குருமார்களுக்கு அவசரத் தேவையாகப் பட்டது.Image result for bruno burnt on stake

ரோம் கத்தோலிக்கம் 1542 – ஆம் ஆண்டு ரோம் ஒடுக்குமுறை விசாரணை என்கிற ஓர் அமைப்பை கொண்டுவந்தது. இதன் விசாரணைத் தலைவராக ஜான் பைட்ரோ என்பவரை நியமித்தது. இதன் தொடர்ச்சியாக நான்காம் போப் பால் 1555 – ஆம் ஆண்டு தடை செய்யப்பட வேண்டிய புத்தகங்களின் பட்டியலைத் தயாரிக்க ஆணையிட்டார். பைபிள் கருத்திற்கு எதிராக ஏதேனும் ஒரு வரி ஒரு நூலில் இடம் பெற்றிருந்தால் அந்நூல் நச்சு நூல் என அடையாளப்படுத்தப்பட்டு அந்நூலிற்கு தடை விதிக்க உத்தரவிட்டார்.

உலகம் முழுவதும் அச்சுக்கலை நூல்கள் சேகரிக்கப்பட்டு அதை ஒரு வரி விடாமல் வாசிக்கப்பட்டு மதத்திற்கு எதிராக, புறம்பாக எழுதப்பட்ட நூல்கள் தடை விதிக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு நூலாக ‘ தடை செய்யப்பட்ட புத்தகங்களின் இன்டெக்ஸ்’ என்கிற பெயரில் சந்தைக்கு வந்தது. அக்காலத்தில் பைபிளை விடவும் அந்நூல் அதிகமாக விற்கப்பட்டது. அத்தனை ஆண்டு காலம் எழுதிக்கொண்டிருந்த எழுத்தார்கள் அந்நூலை வாங்கி அப்பட்டியலில் தன் நூல் இடம் பிடித்திருக்கிறதா…எனப் பார்த்து அதிர்ச்சியும், வியப்பும், பதற்றமும் அடைந்தார்கள்.

கிறித்தவம் கடைப்பிடித்த கேள்வி கேட்பதற்கு எதிரான மனப்போக்கை இன்னும் சற்று கெடுபிடியோடு கையாண்ட மதம் என்று இஸ்லாம் மதத்தைச் சொல்லலாம். ‘ இஸ்லாம் மதத்திற்கு எதிராக கேள்விக் கேட்பவன் ஒரு இஸ்லாமியனாக இருக்க முடியாது…’ இவ்வளவேதான் அம்மதத்தின் அடிமானம்.

கிறித்தவம் மற்றும் இஸ்லாம் இவ்விரு மதங்களின் ஆணி வேர் ஒன்றுதான். அவ்விரு மதத்தின் பார்வையில் மதத்திற்கு எதிராக கேள்விக் கேட்பவர்கள் அடித்து விரட்டப்பட வேண்டிய ‘சர்ப்பம் ’ போன்றவர்கள். கேள்விக் கேட்டலின் குறியீடு கேள்விக்குறி ‘?’ என்பது சர்ப்பத்தின் குறியீடுதானே.

இந்த உலகில் முதல் கேள்வி என்பது சர்ப்பம் மனிதனைப் பார்த்துக் கேட்டக் கேள்வியே என்கிறது பைபிள். ‘ எல்லா பழங்களையும் திங்கலாம் எனச் சொன்னக் கடவுள் இப்பழத்தை மட்டும் திங்க வேண்டாம் என்று சொன்னானோ…?’ இதுதான் மனிதன் எதிர்க்கொண்ட முதல் கேள்வி. முதல் கேள்வி சாத்தான் கேட்டதால் கேள்வி கேட்பவர்கள் அத்தனை பேருமே சாத்தான்களாகப் பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

ஒரு கேள்வி என்பது கேட்கும் விதம், கேட்கும் நபர், கேட்கும் தொனி இவற்றால் அதன் நஞ்சாகவும், மருந்தாகவும், அமுதமாகவும் மாறிவிடுகிறது. நன்னூல் தமிழ் இலக்கண நூல் கேள்விகள் எழுத்தென ஐந்து எழுத்துகளைச் சுட்டுகிறது. எ, யா, ஆ, ஓ. ஏ . இவற்றில் கடைசி இரண்டு எழுத்துக் கேள்விகள் மற்ற மூன்று கேள்விகளை விடவும் கோபம் மூட்டக்கூடியது. பைபிள் கதையில் சத்தான் வடிவில் வந்த பாம்பு கேட்டிருந்த கேள்வி ‘ஓ’ வகை எழுத்துக் கேள்வி. ‘ இப்பழத்தை மட்டும் திங்க வேண்டாம் என்று சொன்னானோ….?’ இதை விடவும் கோபத்தை மூட்டக்கேள்வியாக ‘ ஏ’ வகைக் கேள்வியைச் சொல்லலாம். ஏன்…? என்கிற கேள்வியாகத்தான் ரசூலின் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ‘ இத்தனை ஆண் நபிகளுக்கு மத்தியில் ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி..?’.

இது தவிரவும் நன்னூல் இலக்கணம் கேள்விகளை ஆறு வகைப்படுத்துகிறது. அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா. இதில் அறி வினா வகை கேள்விகளால் கேட்கப்படும் கேள்விகளால்தான் கலவரமும், படுகொலையும் நடந்தேறியிருக்கிறது.

சர்ப்பம் ஏவாளிடமும், புருனோ நீதிபதியிடமும், பெரியார் இராசகோபாச்சாரியாரிடமும், ஹெச்.ஜி.ரசூல் தன் கவிதையில் குழந்தை வாப்பாவிடமும் கேட்டிருந்தக் கேள்விகள் இவ்வகை கீழ் கேள்விகளே. ஒன்றை முழுமையாக அறிந்து வைத்துகொண்டு அதிலிருந்து எழும் கேள்வி அது.

கட்டுரையின் தொடக்க கேள்விகளான கேள்வி ஒன்று, கேள்வி இரண்டு, கேள்வி மூன்று இவை மூன்றும் அக்கேள்விகளை எதிர்க்கொள்பவர்களால் அதிக கோபத்திற்கும், சலனத்திற்கும் உள்ளாகக் காரணம் அது அறி வினா என்பதால்தான். அப்படியாகத்தான் ஹெச்.ஜி.ரசூல் எழுதிய மைலாஞ்சி கவிதைத் தொகுப்பில் பல கவிதைகள் அவரை அவர் சார்ந்த மத விலக்கத்தை நோக்கி கொண்டுச் சென்றன.

அக்கேள்விக் கவிதைக்காக அவர் பெற்ற பரிசுகளும், வெகுமதிகளும் புருனோ பெற்ற மரணத் தண்டனையை விடவும், ஈ.வெ.இராமசாமி பெற்ற செருப்பு வீச்சுகளை விடவும் ரசூல் பெற்றது அதிகம் அதுநாள் வரைக்கும் எந்த மதத்திலும் நிகழாத ஒன்று அவருக்கு நிகழ்ந்தது. அவரது மதத்திலிருந்து அவர் விலக்கம் செய்யப்பட்டார். அக்கவிதையை எழுதியது அவர். அவர் மட்டுமே மத விலக்கம் செய்யப்பட்டார் என்றாலும் அவருடன் சேர்ந்து மொத்தக் குடும்பமும் மத விலக்கத்திற்கு உள்ளானது. இதிலிருந்து தெரிய வருவது ஒன்றேதான். மதம் என்பது ஆண்களின் விலா எலும்பிலிருந்து வடிவமைக்கப்பட்ட பெண்களுக்கான உலகம்!

பெரியாரிடம் கேட்டார்கள் ‘ இந்து மதத்தை விமர்சிக்கும் நீங்கள் ஏன் இந்து மதத்தில் இருக்கிறீர்கள். அதற்கு பெரியார் சொன்னார். ஒரு மதத்தில் இருந்துகொண்டு அம்மதத்தை விமர்சனம் செய்வது தன் கூடாரத்தை சுத்தம் செய்வது போன்றது. இதையொட்டிதான் அம்பேத்கர் அவர்களின் இந்து மத விமர்சனப்போக்கு இருந்தது. அவர் இந்து மதத்தில் இருக்கின்ற காலம் வரைக்கும் அவர் அளவிற்கு யாரும் அம்மதத்தை விமர்சித்ததில்லை. அவர் இந்து மதத்தில் இருந்து கொண்டு அவர் எழுதிய கடைசி நூல் ‘ சாதி ஒழிப்பு ’. அவர் அவரது மக்களுடன் புத்த மதத்தில் அடைக்கலமானதற்கு பிறகு அவர் புத்த மதத்தின் சிறப்புகளை பாமர மக்களுக்கு உரக்கச் சொன்னரே தவிர இந்து மதத்தினை விமர்சிக்கும் போக்கினை விட்டிருந்தார். இந்த இடத்தில்தான் பெரியார் மீது இன்றைக்கும் வைக்கப்படுகிற கேள்வியொன்று இன்றைக்கும் தேவையில்லாமல் எழவும் அதற்கு பெரியாரிஸ்டுகள் பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் எழுகிறது. ‘ பெரியார் ஏன் இந்து மதம் அளவிற்கு மற்ற மதத்தை விமர்சிக்கவில்லை…?’ .

பெரியார் இந்து மதத்தின் மீதான விமர்சனம் என்பது அவர் இந்து மதத்தின் மீது மட்டும் வைக்கப்பட்ட விமர்சனம் அல்ல. அவரவர் சார்ந்த மதத்தில் தலைத்தூக்குகின்ற முகவாயற்ற பூத கட்டமைப்பிற்கு எதிராக கேட்கப்பட்ட கேள்விகளே. அடுத்து அவரிடம் வைக்கப்படுகின்ற மற்றொரு கேள்வி ‘ இந்து மதத்தை விமர்சிக்கும் நபர் ஏன் அதே மதத்தில் இருந்தார்….?’ என்பது.

கிறித்தவ போக்கை விமர்சித்தவர்கள் கிறித்துவர்களாகவே இருந்தார்கள். அம்மதம் பிடிக்காமல் வெளியேறிவர்கள் இஸ்லாம் மதத்தினராகிப் போனார்கள். கிறித்தவ மதத்திலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்கள் இரு வேறு மன நிலையைக் கொண்டவர்களாக இருந்தார்கள். உருவம் மற்றும் உருவமற்ற வழிபாடு. மதத்திற்குள் ஒரு உருவ குறியீடு கேட்டு வெளியேறியவர்கள் ஷியா ஆனார்கள். மற்றவர்கள் சன்னி. இன்றைக்கு மெக்கா, மதினா இரண்டும் சன்னி, ஷியா முஸ்லீம்களின் இரண்டு வழிப்பாட்டு அடையாளங்களாக இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிகமாக இருப்பவர்கள் சன்னி முஸ்லீம். ஷியா சிறுபான்மையினர். ஆனால் சமீபத்தில் அயோத்தி பிரச்சனையில் ஷியா வக்பு வாரியம் பிரச்சனைக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்டிக்கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் சன்னி வக்பு வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதிலிருந்து இரு பெரும் பிரிவுகளின் கருத்தொற்றுமை முரண்பாடுகளைப் புரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் ஆரிய வருகை்கு பிறகு இந்து மதம் வேதமதத்தின் ஒரு கீழான வடிவமாகக் கட்டமைக்கப்பட்டது. சிந்து என்கிற பெயரைக் கொண்டு இந்து மதத்தினைக் கட்டமைத்தார்கள்.1891 ஆம் ஆண்டு பஞ்சாப்பில் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதியின் சீடர்கள் தங்கள் இனத்தை ஆரியர் என்றும் இந்து என்றும் பதிவு செய்துகொண்டார்கள். இதுவே இந்து மதம் தொடர்பான முதல் அரசாங்கப் பதிவாகப் பார்க்கப்படுகிறது.

இந்து மதம் சிவன் என்கிற ஒற்றை பிம்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது. வட இந்திய எல்லையான இமயமலையை சிவனாகவே பாவித்தார்கள். இம்மதம் ஒரு காலத்தில் பல கேள்விகளுக்கு உள்ளானது. கேள்விக்கான பதில் கிடைக்கப்பெறாதவர்கள் அதில் இருக்க முடியாமல் வெளியேறினார்கள். வைணவம் தோன்றியது. பெரும்பான்மை சைவம் ஆனது. வைணவம் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையலாம், நுழையக்கூடாது…என இருவேறு கருத்துகள் எழுந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்காத மதத்திற்குள் நாங்கள் இருக்க முடியாது என வெளியேறியவர்களின் வைணவம் தென் கலையானது. சாதி கெட்டித்தன்மை பெற்ற வைணவ மதம் வடகலை என்றானது. இன்றைக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலின் பிரதான பிரச்சனை வடகலை, தென்கலை இரு பிரிவுகளுக்கு இடையேயான பிரச்சனைதான்.

பெரியார் ரஷ்யாவிற்கு சென்றிருக்கையில் ரஷ்யாவில் ஒரு புது மதம் வேகமாக வளர்ந்து வருவதை அவர் கண்டிருந்தார். அப்படியொரு புது மதமொன்று தன்னால் தோன்றிவிடாமல் இருக்க அவர் எச்சரிக்கையாக இருந்தார். ரஷ்யாவில் புரட்சி முடிந்து லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அக்கட்சி கிறித்தவ தேவாலயங்கள், அது தொடர்பான ஆனந்த களியாட்டக் கூடாரங்களை இடித்து தர மட்டமாக்கியது. அவரது ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் அவரவர் இருப்புகள், அடையாளங்களைத் தக்க வைத்துக்கொள்ள ‘மதமற்றவர்கள்’ என அடையாளப்படுத்திக்கொண்டார்கள். காலப்போக்கில் அது ‘மத மற்றவர்கள்’ என்கிற ஒரு புது மதத்தை அது உருவாக்கிக் கொடுத்தது. இன்றைக்கு ரஷ்யாவில் பெரும்பான்மை மதம் ‘ மதம் அற்றவர்கள்’ என்கிற மதமே.

இந்தியாவில் மட்டுமல்ல , உலகம் முழுவதும் எந்தவொரு சிலையும் வணங்கப்படும் சிலையாக மாறவே செய்யும். அது ஏதேனும் ஒரு மதத்தி்ற்குள் தன்னை அடைத்துக்கொள்ளும் என்கிற மார்க்சிய சித்தாந்தத்தை பெரியார் அறிந்து வைத்திருந்தார்.

ஆடம்பர வாழ்க்கையிலிருந்து வெளியேறி நோயுற்ற , பசி , பட்டினி மக்களைப் பார்த்து தவ வாழ்க்கை வாழத் தொடங்கிய கௌதம சித்தார்த்தர் மாற்று மதத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் தன்னை வருத்திக்கொண்டவர் அல்ல. ஆனால் அவரது மரணத்திற்கு பிறகு அவரது பெயரால் புத்தம் என்கிற மதம் கட்டமைப்பட்டது. இன்றைக்கு அப்படியாகத்தான் வல்லரசு நாடுகளின் பார்வையில்‘ கம்யூனிசம்’ என்பது ஒரு மதமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

அறிவியலும், மதமும் இரு பரிமாணங்களைக் கொண்டவை. அறிவியல் ஏன், எதற்கு, எப்படி, எங்கே…? என என்கிற கேள்விகளின் வழியேதான் தன் பரப்பை விரிவுப்படுத்திக்கொள்கிறது. அதே நேரம் ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகளை மதமும் அனுமதிக்கிறது. ஆனால் அக்கேள்வி அறி வினா வகை கேள்வியாக இருக்கக் கூடாது என்பதில் மதம் கவனமாக இருக்கிறது.

உதாரணமாக இராமாயணத்திலிருந்து இரு நபர் ஒரே கேள்வியை கேட்பதாக வைத்துக்கொள்வோம். ‘ இராமன் ஏன் வாலியைக் கொன்றான்…?’ ‘ இராமன் ஏன் வாலியை மறைந்திருந்து கொன்றான்…?’. இவ்விரு கேள்விகளில் முதல் கேள்விக்கு இராமாயணம், மதம் சார்ந்து பதில் சொல்லத் தொடங்கிவிடும். அதற்கான பதில் உங்கள் கேள்வி தவறானது என்பதிலிருந்து தொடங்கி அதை விளக்கத் தொடங்கிவிடும். இரண்டாவது கேள்வியை மிகவும் சிக்கலானக் கேள்வியின் ஒன்றாக கையாளும். முடிந்தால் அக்கேள்வி கேட்பவரை அப்புறப் படுத்த நினைக்கும். காரணம் இக்கேள்வி மிகச்சரியாக கேட்கப்பட்டக் கேள்வியாகவும், அறி வினா வகை கேள்வியாகவும் இருப்பதால்தான்.

பகவத் கீதை கேள்வியும் பதிலுமானது. அதற்காக இந்து மதம் கேள்விக் கேட்பதை முழுமையாக அனுமதித்திருக்கிறது எனப் பொருள் கொள்ள முடியாது. குருஷேத்திரம் போரின் போது அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்கும் கேள்விகள் யாவும் அறியா வகை வினாக்களே. அத்தகைய கேள்விகள் கேட்டதனால்தான் அர்ச்சுணன் – கிருஷ்ணன் உறவுப்பந்தம் இத்தனை நூற்றாண்டுகளுக்குப்பிறகும் நிலைத்து நிற்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு வேளை அர்ச்சுணன் கிருஷ்ணன் செய்த லீலைகளில் ஒன்றான பெண்களின் ஆடைகளை அள்ளி மரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு பெண்களை நிர்வாணமாக நடத்தியதை அவன் கேள்வியாகக் கேட்டிருந்தால் அர்ச்சுணனின் ஆடையை அப்பொழுதே உருவப்பட்டிருக்கும். ‘நான் ஏன் இந்த வில் வித்தையில் கலந்துகொள்ளக்கூடாது…?’ என துரோணாச்சாரியாரிடம் கேட்டப்பட்ட ஒற்றைக் கேள்விதான் துரோணாச்சாரியாரை ஏகலைவனிடம் கட்டை விரலை குரு தட்சணையாகக் கேட்க வைத்தது.

இஸ்லாம் மார்க்கத்திலிருந்து மத விலக்கத்திற்கு உள்ளான ஹெச்.ஜி. ரசூல் கேட்டது அறிவகை வினா. ஆப்பிள் ஏன் மேலிருந்து கிழே விழுகிறது…? வானம் ஏன் நீல நிறமாகத் தெரிகிறது….?. அந்த வரிசையில் வைக்குமளவிற்கு ஏறக்குறைய மிக முக்கியமானக் கேள்வி அது. இக்கேள்வியை அம்மதம் தன் மதத்திற்கு எதிரான கேள்வியாக மட்டுமே பார்க்கப்பட்டதால்தான் அவர் மத விலக்கத்திற்கும் சமூக விலக்கத்திற்கும் ஆளாகிப்போனார். ஆனாலும் அவர் பயந்து நடுங்கியவராக இருந்திருக்கவில்லை. அதற்காக அவர் நீதி மன்றம் வரைக்கும் சென்று அவர் தரப்பு நியாயத்தின் மீது வெற்றியும் பெற்றார். அவர் வாழ்ந்தக் காலங்களில் பெரும்பகுதி அவர் இஸ்லாம் மதத்தினராக இருந்திருக்கவில்லை. ஆனால் அவர் இறந்துப் போகையில் அவரை மத விலக்கம் செய்தவர்களை விடவும் தீர்க்கமான இஸ்லாமியராக இருந்தார்.

‘ ஏன் வாப்பா இல்லை ஒரு பெண் நபி….?’. இக்கேள்வி வெறும் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானக் கேள்வியாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ‘ இத்தனை இத்தனை ஆண் சங்கராச்சாரியர்களுக்கு மத்தியில் ஏன் அப்பா இல்லை ஒரு பெண் சங்கராச்சாரியார், ஏன் மாமா இல்லை ஒரு பெண் பாதிரியார்…?’ இப்படியாக அதை பொதுமைப்படுத்தலாம்.

மத கோட்பாடுகளுக்கு எதிராக கேள்விக்கேட்டவர்கள் அல்லது மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக அறிவியல் பரப்புரை செய்பவர்களை தண்டிப்பதில் சுணக்கம் காட்டியது சார்லஸ் டார்வினின் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிற சித்தாந்த கண்டுப்பிடிப்பிற்கு கொடுக்கப்பட்ட தண்டனைக்கு பிறகுதான். மனிதன் என்பவன் சமூக விலங்கு என அரிஸ்டாட்டில் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டவர்கள் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிற டார்வின் கோட்பாட்டை மதக்குருமார்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நாடு கடத்தல்.

காலப்போக்கில் கிறித்தவ மதம் தன் மதப்போதனைகளை அறிவியலுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளத் தோன்றியது. புமி தட்டையானது. வானவில் என்பது கடவுள் இனி உலகத்தை அழிக்க மாட்டேன் என சத்தியம் செய்ததாக கற்பித்தது,. ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள், சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது…போன்றவை யாவும் அறிவியலின் போக்குடன் முரண்பட்டிருந்தது. இதைக் கண்டுப்பிடித்து சொன்னவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைக்காக வருந்தவும் செய்தது. அதன் உச்சமாக நானூறு ஆண்டுகள் கழித்து கலிலியோவிற்கு வழங்கப்பட்ட தண்டனைக்காக மன்னிப்புக் கோரி தன் மீதிருக்கும் அதிகப்பட்ச அழுக்கில் கொஞ்சத்தைக் கழுவிக்கொண்டது. இதன் பிறகு அம்மதத்தின் மீது மரியாதைச் சற்று கூடியது மறுப்பதற்கில்லை.

இதன் பிறகு ரோம் கத்தோலிக தலைமையிடத்தையொட்டிய நிலப்பரப்பிலிருந்து பெரிதாக அம்மதத்திற்கு எதிரான பிரசங்கம் தோன்றவில்லை. அப்படியே தோன்றினாலும் அதற்கான பெரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மதமும், அறிவியலும் எதிரெதிர் போக்கினில் போய்க்கொண்டிருக்கையில் 1926 ஆம் ஆண்டு ரோம் கத்தோலிக தலைமையிடத்தை அசைத்துப் பார்க்கும் படியாக நாவலொன்று வெளிவந்தது. அந்நாவல் கிறித்தவ மதத்தின் தலைமையிடமான வாடிகன் சிட்டியைச் சூழ்ந்த இத்தாலி நாட்டிலிருந்து எழுதப்பட்டு மேலும் அந்நாவல் ஒரு பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டதாக இருந்ததால் கிறித்தவ மதப் போதகர்களின் கோபத்திற்கு உள்ளானது. அந்நாவலை எப்படியேனும் தடை செய்தாக வேண்டும் என அதற்கான முயற்சியில் இறங்குகையில் அந்நாவலுக்கு 1926 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்நாவல் கிரேசியா டெலடா எழுதிய ‘ அன்னை’.

இந்நாவலின் எழுப்பியிருந்த ஒற்றைக் கேள்வி ‘ திருமணம் செய்துகொண்ட ஒருவர் ஏன் பாதிரியாராக இருக்கக்கூடாது….?’ என்பதுவே.    இந்நாவலுக்கான எதிர்ப்பு பரவலாக கிறித்தவ நாடுகளில் மதத்தின் மீது அதீத பற்றுக்கொண்டவர்களிடமிருந்து எழுந்தது. இத்தாலி நாட்டில் சற்று அதிகமாகவே இருந்தது. அதே நேரம் இந்நாவலுக்கான வரவேற்பு பெண்களின் மத்தியில் பரவலாக கூடியிருந்தது. அந்நாவலின்படி ‘பால்’ என்கிற ஒரு இளம் பாதிரியார் தினம் தினம் தேவலாயத்திற்கு வந்து போகும் ‘ஏக்னிஸ்’ என்கிற அழகியுடன் காதல் கொள்கிறார். இருவரும் அவ்வபோது சந்தித்து பேசிக்கொள்கிறார்கள்….ஒரு கட்டத்தில் இருவரும் காணாமல் போய்விடுகிறார்கள்.

இதற்கிடையில் பால் என்கிற பாதிரியாரின் தாய் அன்னை மரியா தன் மகனை ஒரு தேர்ந்த நல்ல பாதிரியாராக வளர்த்தெடுக்க வேண்டும் என அவர் கண்டிருந்த கனவு சிதைவதாக இருக்கிறது. அவர் தன் மகனுடன் ஒரு பாதிரியாரிடம் இருக்க வேண்டிய ஒழுக்கக் கட்டுப்பாடுகளை கற்பிக்கிறார். மகன் தாயிடம் எதிர்க்கேள்விகள் கேட்டுக்கொண்டு அதிலிருந்து மீறுகிறார். இப்படியாக நீளும் நாவலின் முடிவை நாவலாசிரியர் விரும்பிய இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா, இல்லை பிரிந்து விட்டார்களா…என்பதை வெளிப்படையாக சொல்லாமல் வாசகர்களின் அனுமானத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்…’

இந்நாவல் எதிர்க்கொண்ட கேள்விகள் பல. மதப்போதகர்கள் நாவலில் தாய் அன்னை மரியாவை இயேசுவின் தாயாகப் பார்த்தார்கள். நல்ல தேர்ந்த மதப்போதகர் என்றால் தற்போது இருப்பவர்கள் எப்படியாக இருக்கிறார்கள்….? என்கிற கேள்வி எழுந்தது. மதப்போதகர்களுக்கு பெண்களைப் பார்க்கையில் அப்படியான உணர்வுகள் வருவது உண்மைதானோ, இளம் பருவ பாதிரியார், இளம் கன்னி இருவரும் ஒரே அறையில் தனிமையில் இருக்கையில் அவர்களுக்குள் நிகழும் என்சைம் மாற்றங்கள் என்னவாக இருக்கும்….? இத்தகைய கேள்விகள் நாவலின் வழியே எழுந்து பெண்களின் மத்தியில் கொண்டு போய் நிறுத்தியது.

இதே கேள்வியை இன்றைய ஒற்றை மதம் இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்…ஒரு சாமியாரின் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டது, இன்னொரு சாமியார் நடிகையுடன் உல்லாசமாக இருந்தது, ஒரு பாதிரியாரால் ஒரு கன்னியதஸ்திரி கற்பழிக்கப்பட்டது யாவும் மதக்குருக்கள் திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டும் என்கிற கெடுபடியின் உச்சம்தான்.

அந்நாவலும், அந்நாவலை எழுதிய கிரேசியா டெலடாவும் மதக்குருமார்களால் தடை செய்யவும், தண்டனைக்கும் உள்ளாக வேண்டியவராகவே இருந்தார். ஆனால் நாவல் புனையப்பட்ட விதத்தாலும், முடிவை வாசகர்களின் வாசிப்பின் போக்கில் விட்டுச் சென்றதாலும் அவர் அத்தகைய இருண்ட சூழலிலிருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது. அவ்வாறாக புனையப்படாத எழுத்தாளர்கள், இந்தியாவில் பகல் படுகொலைக்கும், மிரட்டலுக்கும், மத விலக்கத்திற்கும் ஆளாகிவிடுகிறார்கள்.

ஹெச்.ஜி. ரசூல் அவர்கள் ஜிகாதி, தலித் முஸ்லீம், ஜன கண மன, பூட்டிய அறை, மைலாஞ்சி , போர்ஹேயின் வேதாளம், என பல நூல்கள் எழுதியிருக்கிறார். ஆனாலும் அவருக்கு பிடித்தமான தொகுப்பு என்பது உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் என்பதாகவே இருந்திருக்கிறது. அத்தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை அவர் அடிக்கடி மேடைகளில் கையாள்வதாக இருந்திருக்கிறார்.

சகாபி வகாபி சண்டையில்லை

சுன்னி ஷியா மோதலில்லை

பாபர்மசூதி அயோத்தி கலவரமில்லை

குரான் பைபிள் விவாதமில்லை

தொட்டில் குழந்தையின்

நிச்சலனமற்ற மௌனம்

அதிகாலை தோறும்

என்னை வீழ்த்திவிடும் தூக்கத்திற்கு

நன்றி சொல்கிறேன்

தொழுகையை விடவும் தூக்கம் மேலானது.

அதனால்தான் என்னவோ ரசூல் தன்னை நீடித்தத் தூக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டிருக்கிறார். அவரது எழுத்துகள் கர்ஜனையானது. அதை வீழ்த்த ஏது ஆயுதம்.

குறிப்பு – கட்டுரையின் தலைப்பு அவரது கவிதையொன்றின் தலைப்பு.

 அண்டனூர் சுரா

About editor 3047 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply