முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உளவியல் ஆலோசனை அவசரமாகத் தேவைப்படுகிறது!
நக்கீரன்
(நேற்றைய தொடர்ச்சி)
இயேசுபிரான் மீது சுமத்திய குற்றச்சாட்டு அவர் தன்னை யூதர்களின் அரசன் என்று சொன்னது மட்டுமே. ஆனால் காவியுடை அணிந்த பிரேமானந்தா தனது ஆச்சிரமத்தில் வாழ்ந்த 16 வயதுக்குக் கீழே உள்ள 13 ஏதிலிப் பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். இந்த 13 ஏதிலிப் பிள்ளைகளில் மூவர் பூப்படையாத – வயதுக்கு வராத மொட்டுக்கள். அவர்களையும் கசக்கி தனது காமப் பசியைத் தீர்த்துக் கொண்டது காவி உடையில் இருந்த மனித மிருகம். இந்தக் பாலியல் ஆசாமியின் காமப்பசிக்கு இரையான ஒரு பிள்ளை கற்பம் அடைந்தது. அந்தப் பிள்ளை நீதிமன்றத்தின் அனுமதியுடன் கருவைக் கலைத்துக் கொண்டது. டிஎன்ஏ பரிசோதனையின் போது அந்த கருவின் தந்தை சாட்சாத் பிரேமானந்தா என உறுதி செய்யப்பட்டது. மேலும் அதே ஆச்சிரமத்தில் வாழ்ந்த ரவி என்ற பொறியாளர் பிரேமானந்தாவின் காமலீலைகளைத் தட்டிக் கேட்டதால் அவரை அடித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிரேமானந்தா ஆச்சிர வளவுக்குள் புதைத்து விட்டார். பின்னர் அந்தச் சடலம் நீதிமன்ற உத்தரவின் படி தோண்டி எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை ரவி அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்பது எண்பிதமானது.
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் தனக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா மேன் முறையீடு செய்தார். விசாரணைக்குப் பின்னர் மாவட்ட நீதிபதியின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேமானந்தா இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார். அவர் சார்பில் பிரபல சட்டத்தரணி ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினார். பிரேமானந்தாவுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் சாட்சியம் அளித்தார். இருந்தும் உச்சமன்ற நீதியரசர்கள் பிரேமானந்தாவின் தண்டனையை உறுதி செய்தார்கள். விக்னேஸ்வரனது சாட்சியம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவர் ஒரு கற்பனாவாதி (wishful thinker) எனத் தலையில் குட்டியது!
அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது குரு பிரேமானந்தாவை இயேசு பிரானுடன் ஒப்பிட்டுப் பேசி ஒட்டுமொத்த கிறிஸ்தவ மதத்தினரை அவமானப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவை பாப்பாண்டவருடன் ஒப்பிட்டுப் பேசி எரிகிற நெருப்பில் நெய் ஊற்றியிருந்தார். இது விக்னேஸ்வரன் திட்டமிட்டே கிறிஸ்தவ மக்கள் மீது ஒரு திட்டமிட்ட எதிர்மறைப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார் என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக கிறிஸ்தவ செயற்பாட்டாளரும், மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவருமான பிரபல சட்டத்தரணி.அன்ரன் புனிதநாயகம் முதலமைச்சரை கண்டித்து கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
யேசுபிரான் 2000 வருடங்களுக்கு முன் ஒரு குற்றவாளியாகக் கருதப்பட்டார் என்றும் அவர் ஒரு பாவி என்றும் இதற்காகவே அவருக்கு மரணத்தண்டனை வழங்கப்பட்டது. இருந்தும் இவரை கிறித்தவ மக்கள் வழிபடுகின்றார்கள் என்றால் பாலியல் கொலை வழக்கில் 13 சிறுமிகளை கற்பழித்த பிரேமானந்த சுவாமியையும் மக்கள் வழிபடுவதில் தவறில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகம் ஒன்றிற்கு பரபரப்பான நேர்காணல் அளித்தார். விக்னேஸ்வரின் வாதம் மிகவும் கண்டனத்திற்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்தது. (http://www.thinachsudar.com/?p=2103).
ஆசாமிகளை சாமிகள் என எண்ணி ஏமாறுபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேற்றுமை இல்லை. பிரேமானந்தாவைப் போல் ஹரியானா – பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் தனது இரண்டு பெண் சீடர்களைப் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சிக்கினார். அவருக்கு எதிரான வழக்கு நீண்ட காலம் நடந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் கடந்த ஓகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் தீர்ப்பு வழங்கியது. தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. இதனையடுத்து ராம் ரகீம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சாமியார் குர்மீத் சிங்கிற்கு உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அரியானா, பஞ்சாப், டெல்லி, மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன. அதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அதே சமயம் அவரைக் கடவுள் அவதாரமாகக் கொண்டாடிய பக்தர்கள் இப்போது வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். இவர்கள் குர்மீத் ராம் ரகீமின் படங்களைத் தூக்கி சாக்கடையில் எறிந்தார்கள்.
இராம் சிங்கின் இரண்டு பெண் சீடர்கள்தான் சாமியார் தங்களை பாலியல் பலாத்காரம் செய்தார் என எழுத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் அரியானா – பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமாருக்கும் கடிதம் எழுதினார்கள்.
அந்தக் கடிதத்தில் “நான் பஞ்சாபை சேர்ந்தவள். எனது குடும்பத்தினர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தீவிர பக்தர்கள். அவர்களின் விருப்பத்தின்பேரில் நான் சிர்ஸா ஆசிரமத்தில் பெண் துறவியானேன். ஆச்சிரமத்தின் பாதாள அறையில் குர்மீத் ராம் ரஹீம் வாழ்ந்து வந்தார். ஒருநாள் காலை 10 மணிக்கு என்னை, தன்னுடைய அறைக்கு வரவழைத்தார். அங்கு சென்றபோது அவர் படுக்கையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் ஆபாசப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அவரது தலையணை அருகே ஒரு கைத்துப்பாக்கி இருந்தது. இந்த காட்சிகளைப் பார்த்ததும், சுவாமி குர்மீத் ராம் ரஹீம் சிங் இப்படிப்பட்டவரா என்று திகைத்துப் போனேன். குர்மீத் ராம் ரஹீம் இப்படிபட்டவர் என நான் கனவிலும் நினைக்கவில்லை. தொலைக்காட்சி பெட்டியை அணைத்த அவர் என்னைத் தனக்கு விருப்பமான பெண் துறவியாகத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறினார். எனக்குக் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார். அத்தோடு நிற்காமல் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். நான் என்னுடைய மறுப்பைத் தெரிவித்தேன்.
நான் கிருஷ்ணரை போல ‘கடவுள்’ என்று கூறும் நீங்கள், இத்தகைய இழிவான செயலில் ஈடுபடலாமா? என கேள்வியை எழுப்பினேன். ஆனால் குர்மீத் ராம், பகவான் கிருஷ்ணருக்கு 360 கோபியர்கள் இருந்தனர். அவர்களோடு கிருஷ்ணர் தினமும் காதல் கொண்டார். அவரை கடவுள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
அவரது விளக்கத்தை ஏற்க மறுத்த காரணத்தினால் என்னை மிரட்டினார். என்னை கொலை செய்துவிடுவேன் என வெருட்டினார். எனக்கு அரசியல் பலமும் உள்ளது, பண பலமும் உள்ளது, அவர்கள் எனக்கு எதிராக ஒன்று செய்யமாட்டார்கள் எனக் கூறினார். அதன்பின் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக அவரது அத்துமீறல் தொடர்ந்தது. நான் மட்டுமல்ல, என்னோடு தங்கியிருந்த சக பெண் துறவிகளையும் பலாத்காரம் செய்தார்.”
பிரேமானந்தாவும் இந்த குர்மீத் அராம் சிங் போலவே பகலில் விக்னேஸ்வரன் போன்ற இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவில் இளம் சிறுமிகளோடு சரச சல்லாபம் செய்தார். தனது இச்சைக்கு இணங்குவது மகேசனுக்கு செய்யும் சேவை என அந்த அப்பாவிச் சிறுமிகளிடம் சொன்னார். அவர்களோடு கலவிகொண்டால் தனது அருள் வாக்குப் பலிக்கும் என்று வாதிட்டார்.
இதில் உள்ள சோகம் என்னவென்றால் விக்னேஸ்வரன் இப்போதும் பாலியல் ஆசாமி பிரேமானந்தா குற்றமற்றவர் எனக் கூறுகிறார். அவர் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்கிறார். குற்றமற்ற யேசுபிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டது போல குற்றமற்ற பிரேமானந்தாவும் தண்டிக்கப்பட்டார் என்கிறார். உச்ச கட்டமாக புளியங்குளத்தில் பிரேமானந்தாவுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்.
கடந்த ஏப்ரில் 24, 2015 இல் விக்னேஸ்வரன் பிரேமானந்தாவோடு இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற 3 சிறைக் கைதிகள் சார்பாக இந்தியப் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் வட மாகாண சபைியின் கடிதத் தலைப்பில் எழுதினார். அதில் கமலானந்தா, பாலன் அல்லது பாலேந்திரன், சதீஸ் அல்லது சதீஸ்குமார் மூவரும் இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பி்ரேமானந்தா ஆசிரமத்தையும் அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமரிடம் கோரியிருந்தார். பிரேமானந்தா 2011 ஆம் ஆண்டு பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு கூடலூர் சிறையில் இறந்து போனார். சிறைக் கைதிகள் அனைவரும் இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருந்ததும் குற்றவாளிகளை அப்பாவிகள் என்று சுட்டிக்காட்டியிருந்ததும் இந்தியாவின் மூத்த அதிகாரிகளை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது.
கமலானந்தாவின் மனைவி மருத்துவர் சந்திரதேவி. இவர் சில பெண்களின் கருவைக் கலைத்தார் என்ற குற்றச்சாட்டில் 39 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அவர் சிறைத் தண்டனையை முடித்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டார்.
கடந்தவாரம் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்தமனையின் உளநல மருத்துவப் பிரிவிற்கான புதிய கட்டிடம் மற்றும் வைத்திய நிபுணர்களின் விடுதி ஆகியவை அரசமுறையாக திறந்து வைக்கப்பட்டது. அதில் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் “நீண்ட கால யுத்தத்தின் காரணமாக எம்மவர்களில் பலர் சோகச் சுமைகளைச் சுமந்த வண்ணம் நடைப்பிணங்களாக எம்மிடையே உலாவி வருவது கண்கூடு. இவர்களில் பலருக்கு உளவியற் தாக்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை குறைப்பதற்கான அல்லது குணப்படுத்துவதற்கான உளவியல் மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுவது அவசியமாகின்றன” எனக் குறிப்பிட்டார்.
உண்மையில் இந்த உளவியல் ஆலோசனை விக்னேஸ்வரன் அவர்களுக்கே மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. தனது மருமகனுக்குப் பதவி கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக வட மாகாண விவசாயத்துறையை மேம்படுத்த 2015 இல் யூஎன்டிபி வழங்க முன்வந்த 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வேண்டாம் என்றார். தனது அமைச்சர்களோடு மோதுகிறார். அமைச்சர்களை பழிவாங்குகிறார். சத்தியலிங்கத்தை மாட்ட முடியாதா என்று தான் நியமித்த விசாரணைக் குழு உறுப்பினர்களிடமே கேட்கிறார். ஒரு நாள் சிவராமின் கொலையில் சம்பந்தப்பட்டவரை அமைச்சராக்க முடியாது என்கிறார். மறு நாள் அவரை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார். ஒரு நாள் ரெலோ அமைப்பிடம் அமைச்சர் பதவிக்கு ஒருவரை பரிந்துரை செய்யுமாறு கேட்கிறார். அதனை நம்பி ரெலோ ஒருவரைப் பரிந்துரை செய்கிறது. ஆனால் அந்தப் பரிந்தரையை புறம்தள்ளிவிட்டு அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவரை அமைச்சராக நியமிக்கிறார். இதனால் ரெலோ அமைப்பில் ஒரே குழப்பம். குடுமிச் சண்டை. முன்னர் கல்வி அமைச்சராக ஒருவரை பரிந்துரை செய்யுமாறு தமிழரசுக் கட்சித் தலைவரிடம் கேட்கிறார். பின்னர் பரிந்துரையை எழுத்தில் தருமாறு கேட்கிறார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் எழுத்தில் கொடுத்த பின்னர் வேறு கட்சியைச் சார்ந்த இன்னொருவரை கல்வி அமைச்சராக நியமிக்கிறார்.
சிறிது காலத்துக்கு முன்னர் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கியோடு மல்லுக்கு நின்றார். அவரது கட்சி மாமன் – மருமகன் கட்சி என்று வசை பாடினார். வெறுமனே 45 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமராகி விட்டார் என்று ஏசினார். இப்போது யேசுபிரானையும் பாலியல் ஆசாமி பிரேமானந்தாவையும் ஒரே தட்டில் வைத்து நிறுக்கிறார். எந்த வெட்கமோ துக்கமோ இன்றி பிரேமானந்தாவுக்குக் கோயில் கட்டி கும்பிடுகிறார்.
ஏதோ நான்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்துகிறேன் என நினைக்க வேண்டாம். கடந்த 01-09-2017 வெளிவந்த கொழும்பு டெயிலி மிரர் நாளேட்டில் எஸ்.எம். அயூப் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரையின் தலைப்பு ‘Wigneswaran’s ever opened can of worms’ (விக்னேஸ்வரன் ஒரு பிரச்சினையைத் தீர்க்கப் போய் பல பிரச்சினைகளை உருவாக்குகிறார்) என்பதாகும். (http://www.dailymirror.lk/article/Wigneswaran-s-ever-opened-can-of-worms-135770.html). கட்டுரையாளர் விக்னேஸ்வரனின் வண்ட வாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுகிறார். படிக்க வெட்கமாகவும் துக்கமாகவும் இருக்கிறது.
இப்போது சொல்லுங்கள் யாருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுகிறது? அதுவும் அவசரமாகத் தேவைப்படுகிறது?
Leave a Reply
You must be logged in to post a comment.