மன்மோகன் மட்டும் சிபிஐக்கு உதவியிருக்காவிட்டால்.. ராம் ரஹீம் வழக்கு பற்றி விசாரணை அதிகாரி பரபர தகவல்
Wednesday, August 30, 2017,
பெங்களூர்: ராம் ரஹீம் மீதான பாலியல் வழக்கில் ஏராளமான அரசியல் தலையீடுகள் இருந்தபோதிலும் சிபிஐ அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று சிபிஐ முன்னாள் அதிகாரி தெரிவித்தார். கடந்த 2002-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் வைத்து இரு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு திருப்தி அளிப்பதாக சிபிஐயின் ஓய்வு பெற்ற டிஐஜி நாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் நியூஸ் 18 ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ராம் ரஹீமுக்கு எதிராக கடந்த 2002-ஆம் ஆண்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் 2007-ஆம் ஆண்டு வரை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதைத் தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
சிபிஐ தலைவருக்கு சம்மன்
உயர் நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ அமைப்பின் தலைவர் விஜய் சங்கருக்கு சம்மனும் அனுப்பியது. அதன்பின்னர் எங்களிடம் அந்த பெண் சீடர்கள் அளித்த புகார் கடிதத்தையும், பத்திரிகையாளர் ராமசந்திரா சத்ரபதி மற்றும் டேரா அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் சிங் ஆகியோர் கொலை வழக்கு தொடர்பான கோப்புகளையும் விஜய் சங்கர் அளித்தார்.
57 நாள்களில் முடிக்க..
இவற்றை ஒப்படைத்த விஜய் சங்கர், இந்த வழக்கு விசாரணைகளை இன்னும் 57 நாள்களில் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்து எங்களிடம் தெரிவித்தார். பெண் சீடர்கள் தங்கள் முகத்தைக் காட்டினால் கொலை செய்யப்படுவோம் என்று பிரதமர் அலுவலகத்துக்கு மொட்டை கடிதத்தை அனுப்பினர். இதனால் வழக்கில் விசாரணை நடத்த சிரமம் இருந்தது.
200 பெண் சீடர்
பாலியல் பலாத்காரத்தால் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரை தேரா சச்சா அமைப்பின் ஆசிரமத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பெண் சீடர்கள் வெளியேறியது தெரியவந்தது. இறுதியாக சாமியாரால் பாதிக்கப்பட்ட 10 பெண் சீடர்களை கண்டுபிடித்தோம். அவர்களுக்கு அப்போது திருமணமாகிவிட்டதால் அவர்கள் சாமியாருக்கு எதிராக புகார் அளிக்க முன்வரவில்லை. பின்னர் வழக்கு ஒப்படைக்கப்பட்ட 56-ஆவது நாள் சாமியாருக்கு எதிராக அம்பாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம்.
நுழையமுடியாத கோட்டை
சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைமையகத்துக்குள் நுழைவது சற்று சிரமமான வேலையாக இருந்தது. என் தலைமையிலான குழுவினரை ராம் ரஹீமின் அடியாள்கள் மிரட்டினர். பெண் சீடர்களுக்கு மத்தியில் பேரரசர் போல் ராம் ரஹீம் வாழ்ந்து வந்தார். தினமும் இரவு 10 மணிக்கு தலைமை பெண் சீடரை அழைத்து தன் படுக்கைக்கு ஒரு சீடரை அனுப்புமாறு ராம் ரஹீம் உத்தரவிடுவார். அதுவும் அவர் எந்த சீடரை விரும்புகிறாரோ அவரை இந்த தலைமை சீடர் கட்டாயப்படுத்தி சாமியாருடன் படுக்கைக்கு அனுப்புவார்.
ஆதாரமின்றி குற்றங்கள்
ராம் ரஹீம் அனுபவமுள்ள குற்றவாளிகள் போல் தான் செய்யும் திருட்டுத்தனத்துக்கு ஆதாரமில்லாமல் செய்துவந்தார். அவரது அறையில் ஏராளமான ஆணுறைகளும், கருத்தடை சாதனங்களும் காணப்பட்டது. அவர் பெண்கள் மீது வெறி பிடித்தவர் போன்றும் கிட்டதட்ட காட்டுமிராண்டி போன்றும் நடந்து கொண்டார்.
அரசியல் தலையீடுகள்
இந்த வழக்கு விசாரணையின் போது ராம் ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பஞ்சாப், ஹரியானா மாநில எம்பிக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அழுத்தம் கொடுத்தனர். இந்நிலையில் சிபிஐ முன்னாள் தலைவர் விஜய் சங்கரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அழைத்தார். அப்போது இரண்டு பெண் சீடர்களின் புகார் கடிதத்தை படித்து பார்த்த மன்மோகன்சிங், ராம் ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார்.
சட்டபடி நடந்து கொள்ள அறிவுறுத்தினார்
மன்மோகன் சிங், விஜய் சங்கரிடம் கூறுகையில், இரு பெண்கள் நீதிபதி முன்பு என்ன வாக்குமூலம் அளித்தார்களோ அதன்படி செல்லுங்கள். சட்டபடி உங்கள் விசாரணை இருக்கட்டும். அரசியல் ரீதியிலான நெருக்கடிகளை பற்றி கவலைப்படாதீர்கள். அந்த பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.
சர்ச்சை சாமியார் ராம் ரஹீம் சிங் யார் தெரியுமா?-வீடியோ
விஜய் சங்கர் மறுப்பு
ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க எம்பிக்கள், ராம் ரஹீமுக்கு எதிரான வழக்கை முடித்து விடுங்கள் என்று சிபிஐ அமைப்பின் தலைவராக இருந்த விஜய் சங்கரிடம் கேட்டனர். எனினும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் பிரதமரும், சிபிஐ முன்னாள் தலைவரும் எங்களுக்கு முழு சுதந்திரம் அளித்தனர். தற்போது ராம் ரஹீமுக்கு 20 ஆண்டுகள் தண்டனை என்பது திருப்திகரமானது. இரு கொலைகளுக்காக அவருக்கு மேலும் தண்டனை கிடைக்கும் என்றார் நாராயணன்.
Leave a Reply
You must be logged in to post a comment.