ஈழநாட்டு ஆராய்ச்சி வரலாறு – பகுதி 6

இலங்கை – பகுதி 6

ஈழம் என்னும் இப்பெயரே ஆரியர் வருகையின் பின் வடமொழியாளர் தொடர்பு ஏற்பட்டதன் பின் அதாவது இராவணன் காலத்தில் கந்தபுராணம் பாடிய காலத்திலேயே “லங்கா” என உருப்பெற்றதாகும்.

முன்னரே “ழ”ஒலி தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு ஒலி எனக் கூறினாம். ஆரிய பாடையில் அவ்வொலிக்கு ஈடாக ல,ள ஒலிகளே உள்ளன. எனவே ஈழநாடு தொடர்பாக ஆரிய மொழியில் நூல் செய்வாரும் ஆரிய மொழியில் அந்நாட்டைச் சுட்டி உணர்த்து வோரும் “ழ” கர ஒலியைவிடுத்து தம் மொழி மரபின்படியே அமைக்க வேண்டும். “பழம்” என்ற சொல்லை ஆரிய மொழியினர் “பலம்” என்றே அழைப்பர். ஆதலின் ஈழம் என்ற சொல்லை வடமொழியாளர் ஈலம் என்றே கூறுவர். இதனைக் கற்று வல்ல வடமொழிப் புலமையோர் தம் மொழி மரபுக்கமைய ஈலம் என்றதைத் திருத்தி அமைக்கலாயினர். பெயர்ச் சொற்கள் வடமொழி மரபின்படி ஏற்றவாறு அம், அஹா என்ற உப சர்க்கங்களைப் பெற்று வரும். எனவே ஈலம் + அஹா ஸ்ரீ ஈலங்ஹா என வரும். வடமொழி மரபின்படி ‘ல’ மொழிக்கு முதலில் வரும். தமிழில் ஹ – காவாக வரும் ஆதலின் ‘ஈலங்கா’ விலுள்ள ஈ கெட ‘லங்கா’ என அமையும். தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தான தமிழ்ச் சொற்கள் வடமொழியில் வழங்கப்படும் போது வடமொழி உருவம் பெறும். அப்படியே வடமொழிக்கே உரிய சிறப்பெழுத்தாலான வடமொழிச் சொற்கள் தமிழில் வழங்கப்படும் போது தமிழ் உருவம் பெறும். கஷ்டம் என்னும் சொல் தமிழ் மொழியில் வழங்கும்போது கட்டம் என உருப்பெறும். அப்படியே வேஷம் – வேடம் ஆகும்.

இனி வடமொழி உருவமாகிய லங்கா என்பது தமிழில் வந்து வழங்கும்போது தமிழ் இலக்கண மரபின்படி ‘இலங்கை’ என உருப் பெறும். ஈழம் என்ற சொல் லங்கா என எப்பொழுது வடமொழி உருவம் பெற்றிருக்கலாம் எனின் அஃது ஈழநாட்டை ஆரியர் வந்தகாலம் முதலாக எனக் கோடல் வேண்டும். அவ்வாறானால் அஃது இராவணன் ஆட்சிக்காலம் ஆதல் வேண்டும். அக்காலமே ஆரியர் ஈழநாட்டைப் பற்றிப் பேசவும், அறியவும், நூல் செய்வும் தொடங்கிய காலமாதல் வேண்டும். எனவே வால்மீகி இராமாயணகாரரே முதன் முதலாக ஈழம் பற்றிய வரலாற்றையுடைய இராமர் காதையைக் காப்பியமாகப் பாடியவர், ஆதலின வால்மீகி இராமாயண காலத்திலே முதன் முதல் ஈழம் என்ற சொல் லங்கா என உருப்பெற்றதாக வேண்டும். சுருங்கச்சொல்லின் ஈழம் என்ற தமிழ் மொழியின் வடமொழிக்குரிய மொழிபெயர்ப்பு லங்காவேயாகும். இராம, இராவண காலம் கி.மு 2300-1950 என்பது ஓர் ஐதீகம். வால்மீகியர் காலம் கி. மு. 3ம் நூற்றாண்டு. விசயன் இலங்கைக்கு வந்தது கி.மு. 543, 483, 445 என்பர். புத்த மதம் இலங்கைக்கு வந்தது. கி. மு. 307 ஆகும். ஆனால் லங்கா என்ற சொல் ஈழநாட்டிலும் பிற நாடுகளிலும் மிகுதியும் பரவலாக வழங்கத் தொடங்கியமை புத்த மதம் ஈழ நாட்டுக்கு வந்தபின்னரே ஆகும். அதன் பின்னரே ஈழம் என்ற சொல் அருகி அருகி மறையலாயிற்று.

இனி, இராமாயண காலத்துக்கு பல ஆயிரம் ஆண்டுகள் முற்பட்டது கந்தபுராண வரலாறு. வரலாறு முற்பட்டதாயினும் அது நூல் வடிவம் பெற்றது. ஆரியர் வருகைக்குப் பின்னரேயாகும். ஆதலின் கந்தபுராண வரலாற்றில் முது நூல் வடமொழி நூலே. அதனால் கந்த புராண நூல் எழுந்த காலத்திலும் ஈழம் என்ற சொல் வடமொழி உருவில் லங்கா எனவே மொழி பெயர்க்கப்பட்டது. எனவே இவ்விரு நூல்கள் வாயிலாகவே லங்கா என்ற பெயர் ஆட்சிக்கு வரலாயிற்று.

இவ்விரு நூல்களாலும் எடுத்துக் கூறப்படும் ஈழநாட்டின் புகழ் படைத்த ஆற்றல் மிக்க மாபெரும் தலைவர் இருவர். அவர்கள் சூரனும் இராவணனும் ஆவார். இவர்கள் யார்? ஈழ நாட்டின் பூர்வீக வல்லமை படைத்த தமிழ் இனத்தின் மாபெரும் தலைவர்கள். ஈழ நாட்டில் இருந்து பல நாடுகளை உள்ளடக்கி அரசு செய்த சக்கரவர்த்திகள். அவ்வாறிருந்தும் அவர்கள் வரலாறு வட மொழியில் முதன் முதல் யாக்கப்பட்டமையால் எத்துணையோ தமிழ்ச் சொற்கள் வடமொழி உருவம் பெற்று மறைந்துவிட்டன. ஏன் குமரி நாடு இருந்த காலந்தொட்டு ஈழம் என்றே சிறப்புடன் அழைக்கப்பட்டபெயர் இன்று லங்கா, இலங்கை என்றாகி மறைந்துவிடவில்லையா?

ஈழ நாட்டின் மாமன்னர் இருவரும் உலகிலேயே போற்றும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதை எவரும் அறிவர் அவ்விருவருக்கு ஒப்புக் கூறக்கூடிய மன்னர்கள் உலகில் முன்னும் இல்லை@ பின்னும் இல்லை என்றே கூறலாம். அன்றி அவ்விருவரும் ஆத்மீகத் துறையிலும் முதலிடம் பெற்றவர்கள். உண்மையான வீரம் என்றால் என்ன வீரச்செயல் என்ன என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்கள் வீர வாழ்க்கையே அவர்கள் தம்வாழ்வு ஈற்றில் அவ்விருவரும் இறைவனால் உண்மையான அடியார்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் ஏன்? அவ்விரு மன்னரதும் பூதவுடல் இன்றும் மக்களால் விழாக் கொண்டாடி வணங்கப்படுகின்றதன்றோ? இவர்களுடைய புகழுக்கு மை பூசியவர்கள் ஆரியர்களே.

ஈழமும் விசயனும்

வால்மீகி முனிவருக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விசயன் ஈழ நாட்டுக்கு வருகின்றான். கி. மு. 543ல் ஆகும். இவன் கலிங்க நாட்டு அரச குமாரன். கலிங்க நாடு தமிழ் நாடு. சிவ நெறியாகிய கடவுட் கொள்கையை உடையது. விசயன் ஆட்சி தொடங்கி 236 ஆண்டுகளின் பின்னரே கி. மு. 307ல் தேசவநம்பியதீசன் காலத்தில் அசோகன் மகன் மிகுந்து என்னும் புத்த பி;க்கு இலங்கைக்கு வருகின்றான். தீசன் வரவேற்று உபசரித்துப் புத்த சமயப் பிரவேசம் செய்கிறான். இப்போது நாம் சிந்திக்க வேண்டியன: விசயன் ஆட்சியில் விசயன் பரம்பரை தேவநம்பியதீசன் காலம் வரையும் 236, சுமார் 250 ஆண்டுகள் அவ் வரசபரம்பரையிரும் ஈழ நாட்டு மக்களும் கைக்கொண்டு ஒழுகிய மதம் யாது? பேசிய மொழி யாது? உணர்மின்! விசயன் வருகைக்கு முன் ஈழநாட்டில் சிவநெறிக் கொள்கையினை விட வேறு மதம் இருந்ததா? இல்லையே. ஆதலின் புத்தமதத்தை தேவநம்பியதீசன் கை;கொள்ளவதற்கு முன்னர் ஈழ நாட்டு மக்களும் விசய அரச பரம்பரையினரும் கைக்கொண்டொழுகிய மதம் சிவநெறிக் கோட்பாடே என்பது யாவருக்கும் எளிதிற் புலனாகும்.

இனி, மொழிக்கு வருவோம் விசயன் பரம்பரையினரும், ஈழநாட்டு அரசபரம்பரையினரும், ஈழநாட்டு மக்களும் பேசிய மொழியாதோ? சிங்களமா? அக் காலத்தில் பிக்குகள் வருவதற்கு முன்னர் சிங்களம் என்ற சொல் ஒன்று இருந்ததா? இருந்ததாயின் சான்று காட்டுக. அக்காலத்து அப்படி ஒரு சொல் உண்டாகவே இல்லை உலக அகராதியில் சிங்களம் என்றொரு சொல்லே இல்லை. சுமார் கிறீஸ்தசகாப்தத்துக்கு முன். ஆகவே புத்த பிக்குகள் நிலைப்பாடு உறுதி அடையும்;;; வரையும் ஈழ நாட்டில் வழங்கிய ஒரேயொரு மொழி தமிழேயாகும்.

இந்நாட்டின் ஈழம் என்ற பெயர் மறைந்து போகும் அளவுக்கு இலங்கை என்ற பெயர் வலியுறுத்தப்படுவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்கள் புத்தபிக்குகளேயாவர். ஈழநாட்டிற்கு ஆரியர் வருகையோ, அன்றிப் பிறமொழியாளர் வருகையோ விசயன் வருகையைத் தொடர்ந்தே ஆரம்பிக்கிறது. விசயனுக்கு முன் பிறமொழியாளரோ, வேறு மதத்தினரோ, வேறு நாட்டினரோ, ஈழநாட்டிற்கு வந்தனர் என்றோ? குடியமர்ந்தனர் என்றோ கூறுவதற்கு வரலாற்றுச் சான்று கிடையாது.

கலிங்க நாடு தமிழ் நாடு ஆனதினாலும் அஃது சிவநெறிக் கோட்பாடு உடைய நாடானதினாலும், விசயனும், அவனோடு வந்தவர்களும், ஈழநாட்டுத் தமிழர்களோடு ஊடாடி உறவாடிப் பெண்ணெடுத்துக்கலந்த வேற்றுமையின்றி ஒரே சுற்றமாகவே, ஒரே சமயிகளாகவே வாழ்ந்தார்கள் என்பது அவர்கள் வரலாறு கொண்டே உணரக் கிடக்கின்றது.

அவ்வாறிருக்க புத்த மதத்தை ஈழநாட்டுக்குக் கொண்டு வந்த பிக்குகளே ஈழத்தின் பூர்வீக நிலைமையை முற்றிலும் திரித்து மாற்றியமைத்துவிட்டார்கள். புத்த பிக்குகளால் லங்கா என்ற வழக்கு உலகில் வலியுறுத்தப்பட்டது. லங்கா என்ற வழக்கு உலகில் வலியுறுத்தப்பட்டது. லங்கா என்ற சொல்லையே இங்கு வாழ்ந்த தமிழர்கள் தம் மொழி மரபுக்கேற்ப இலங்கை என வழங்கிவரலாயினர். அதனால் இந்நாட்டிலேயே ஈழம் என்ற பெயர் வழக்கு ஒழியலாயிற்று.

புத்த பி;க்குகள் இங்கு வந்து புத்த சமய போதனை செய்து மக்களோடு உறவாடி சொல்லாட்சி பெறுதற்கு குறைந்தது 25 ஆண்டுகளேனும் சென்றிருக்கலாம். புத்த சமயம் வந்தது கி. மு. 307ல். ஆகையால் சுமார் கி. மு. 250 வரையில் லங்கா என்ற சொல் இந்நாட்டு படித்த மக்கள் இடையிலும் வழக்கில் வந்திருக்கலாம். அதன் பின்னரே படிப்படியாக உலக வழக்கில் வந்திருக்க முடியும். ஆனால் இந்தியாவில் கடைச் சங்ககாலம் இறுதியாகவும் பிற்கால சேர, சோழ, பாண்டியர் காலத்திலும் சுமார் கி. பி 12ம் நூற்றாண்டு வரை ஈழம் என்ற சொல்லே ஆட்சியில் இருந்திருக்கிறது. ஈழத்துப் பூதந்தேவனாரும் கடைச் சங்க காலத்தவரே.

ஈழமும் சிங்களமும்

சிங்களம் என்ற சொல் ஈழநாட்டைக் குறிப்பதாய் பின்னர் அவர்கள் பேசிய கலப்பு மொழியாகிய புதிதாக ஆக்கப்பட்ட மொழியைக் குறிப்பதாய் அமைந்துள்ளது. அண்மைக் காலத்தில் சுப்பிரமணிய பாரதியாரும் “சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்றார். ஆகவே சிங்களத் தீவு என்றும், சிங்கள மக்கள் என்றும் சிங்களம் என்ற வழக்கு ஏற்படுவதாயிற்று.

ஆனால் சிங்களம் என்ற சொல் எவ்வாறு வரலாயிற்று? யார் அவ் வழக்கை ஏற்படுத்தினார்கள்? என்பதை நடுநின்று வரலாற்று வழியாக ஆராய்வாம். இப் பெயர் வழக்கு விசயன் வந்து பல நூற்றாண்டுகள் சென்ற பின்னரே வந்ததாகும். விசயனால் அல்லது விசயன் வருகையால் ஏற்பட்டதன்று விசயன் சிங்களவன் அல்லன். விசயன் காலத்தில் சிங்களம் என்ற சொல்லே கிடையாது அக்கால அகராதியில் இல்லாத சொல்.

எனவே இப்பெயர் எப்போது, யாரால் புனையப்பட்டிருக்கலாம்? என்பன ஆராய்ந்து சிந்திக்க வேண்டியது. புத்த மதம் இலங்கைக்கு வந்ததினால் அம் மதத்தைப் போதித்த பி;க்குகளாலேயே இப் பெயர் புனையப்பட்டதாகும் என்றே கொள்ள வேண்டும். அ.து எவ்வாறென அறிவாம்.

கலிங்க நாட்டில் சி;ங்கபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த சிங்கவாகுவின் மகன் விசயன். விசயனும் அவன் வழித்தோன்றல்களும் ஈழநாட்டை ஆளும் ஆட்சியுரிமை பெற்றனர். புத்த மதம் வந்தது தேவநம்பியதீசன் காலத்தில். தேவநம்பியதீசன் விசயனுக்கு 4ம் தலைமுறையினன். பிக்குகள் சிங்கவாகு பரம்பரையினருக்கு உரிய நாடு ஈழம் என்னும் கருத்தை உள்ளடக்கி ஈழநாட்டுக்குப் பெயர் சூட்ட முனைந்தனர். ஏன் பிக்குகளின் நோக்கம் புத்த சமய வளர்ச்சி மாத்திரமே அதனால் தமிழர் சிவநெறிக் கோட்பாடு இவற்றை இல்லாமல் மறைப்பான் கருதி ஒர் புத்த சமய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அக் குறிக்கோளுக்கு அமைய உருப் பெற்றதே சிங்களம் என்னும் பெயர்.

இனி, அவர்கள் அப் பெயரை எவ்வாறு ஆக்கிக் கொண்டவர்கள் என்பதை அறிவோம். பிக்குகள் கற்ற வல்ல பெரியோர். மொழி அறிவு படைத்தவர்கள் ஆதலின் அத்திறமையைப் பயன்படுத்தி சிங்கன் – ஈழம் சிங்களம், சிங்கலம் எனப் பெயர் புனைவராயினர். அச் சொற் புணர்ச்சி சிங்கன் – ஈழம் – சிங்கலம் சிங்கஈளம் என ளகரம் மெய் கெட்டுப் பின் “ஈ” கரமும் கெட்டு மரூஉ வழக்கில் சிங்களம் சிங்கலம் என்றாயிற்று. “ழ’ ஒலிக்குப் பதிலான வடமொழி ஒலி ள, ல இரண்டுமே.

இம்மரூஉப் புணர்ச்சி மிகவும் எளிதான இயல்பான ஓர் அமைப்பு. சாதாரணமாக கற்காதவர்கள் தானும், சிங்கன் – ஈளம் இதைச் சேர்த்துச் சொல்லென்றால் சிங்களம் என்று கூறுவரன்றோ. எனவே சிங்களம் என்றோ, சிங்கலம் என்றோ வரலாம். வழங்கற்பாடு பற்றியதே முடிபு. சிங்களம் பிறந்த வரலாறு இதுவே.

ஆனால் புத்த மதம் இலங்கைக்கு வந்து சுமார் ஒரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே இப் புனைபெயர் வழக்கில் வந்திருக்க வேண்டும். புத்த சமயம் வந்தது தேவநம்பிய தீசன் காலத்தில், இவன் விசயன் பரம்பரையினன். இவன் தாய் மரபு ஈழ நாட்டுத் தமிழ் அரசர் பரம்பரையேயாகும். அதன் வரலாறு காண்பாம். சிங்கவாகுவின் மக்கள் விசயன், சமித்த என்போர். விசயன் ஈழநாட்டு அரச கன்னிகை குவேனியை மணம் செய்தான். பின் பாண்டியன் மகளை மணந்ததாகவும் வரலாறு கூறும். விசயனுக்குப் பின் சமித்துவின் மகன் பந்துவாசன் ஆட்சி புரிந்தான். இவன் தனது பரம்பரையில் பத்தகச்சய என்னும் பெண்ணை மணம் முடித்தான். இவனது பிள்ளைகள் அபயன், உன்மாதசித்திரை, திரிகண்டசிவன் முதலியோர். பந்துவாசனுக்குப் பின் அபயன் ஆட்சி புரிந்தான். இவன் ஆட்சி புரியும் போது அபயனின் சகோதரி உன்மாதசித்திரையின் மகன் பந்துகாபயன் மாமன்மாரோடு போர் தொடுத்து அரசைக் கைப்பற்றினான். பந்துகாபயன், அபயனின் சகோதரன் திரிகண்ட சிவனின் மகள் சுவானபாலியை மணம் முடித்தான். இவனுக்கு ஒரே மகன் மூத்த சிவன் என்பவன். இவனே பந்து காபயனுக்குப் பின்; ஆட்சி புரிந்தான்.

மூத்த சிவனில் இருந்து பின் ஆட்சிக்கு வந்த அரசர்களின் மனைவியர் குறிப்பிடப்படாமையினாலும், அவனுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் ஈழநாட்டு நாகனர்குலத் தமிழரின் பெயர்களாக அமைவதாலும் மூத்த சிவன் மணம் முடித்தது ஈழ நாட்டு நாகர் குல அரச பரம்பரையிலாம் என்பது புலனாகிறது. அவனது மக்களின் பெயர் தீசன், மகாநாகன், உத்தியன், மகாசிவன், சூரத்தீசன் என்பனவாம். தேவநம்பியதீசனே மூத்தசிவனின் மகன் தீசன் என்பவன். எனவே மூத்தசிவனில் இருந்த விசயன் பரம்பரை ஈழநாட்டு அரச பரம்பரையோடு ஒன்றிக் கலந்து ஒரே சுற்றமாக மாறியதென்பது வெளிப்படை.

தேவநம்பியதீசன் விசயனுக்குப் பின் ஈழநாட்டை ஆட்சி புரிந்த ஆறாவது அரசனாவான். இவனே புத்த சமயப் பிரவேசம் செய்தவன். அரசனைத் தொடர்ந்து அனுரதபுரி தொடக்கம் தென்னிலங்கை மக்கள் புத்த சமயத்தை நாளுக்கு நாள் கைக்கொள்வராயினர். புத்த பிக்குகள் வீட்டுக்கு வீடு திரிந்து போதனை செய்து மக்களை மனந்திருப்பினர். சில நாளில் பல்லாயிரக்கணக்கான புத்தபிக்குகள் வரலாயினர். எனவே தீசனுக்கு முற்பட்ட இலங்கை அரசனான மூத்த சிவன், பந்துகாபயன், அபயன், பந்துவாசன், விசயன் ஆதியோர் புத்த சமயிகள் அல்லர்?@ இந்துக்களேயாவர். சிவநெறிக் கோட்பாடு உடையவர்கள். மூத்த சிவன் என்ற பெயருமே அதற்குச் சான்றாகும். புத்த சமயம் வந்த காலத்து இலங்கை முழுமையும் இருந்த மக்கள் (முஸ்லிம்களைத் தவிர) எல்லோருமே ஒரே இந்துமதக் கோட்பாடு உடையவர்கள். எல்லோரும் ஒர்இனத் தமிழர்களேயாவர். ஆதலின் கி. மு. 307க்கு முன் இலங்கை முழுமையும் வாழ்ந்த மக்கள் தமிழர்களே. சமயம் இந்து சமயமே. பேசிய மொழி தமிழே. விசயன் ஆட்சி தொடங்கியும் 236 ஆண்டுகள் (543-307) இலங்கை அந்நிலையிலேயே இருந்தது.

இவ்வரலாற்று நிகழ்ச்சியை நோக்கும்போது ஓர் உண்மை புலப்படுகின்றது. என்னை? புத்த சமயப் பிரவேசம் அரசன் மேற்கொண்டதும் அனுரதபுரிக்குத் தெற்கே தென்னிலங்கை மக்களே புத்த சமயத்தைக் கைக்கொண்டார்கள். ஆனால் வட இலங்கை மக்களே கீழ்இலங்கை மக்களோ புத்த சமயத்தைக் கைக்கொள்ள வில்லை. என்பது எவரும் எளிதில் உணரும் உண்மை. ஆனால் அரசன் அனுமதியோடு புத்த பி;க்குகள் ஆங்காங்கு புத்த சமாதிகளைக் கட்டியிருக்கலாம். புத்த பிக்குகள் மடங்களில் (விகாரை) தங்கியிருக்கலாம். நிகழ்காலத்திலும் அப்படித் தானே நடந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தில் சமாதி. நயினாதீவில் சமாதி. ஆனால் மக்கள் யாரேனும் புத்த சமயிகளாய் இருக்கின்றார்களா? இல்லையே. இதற்கு என்ன காரணம்? என்று நாம் சிந்திக்க வேண்டும். இலங்கை முழுமையும் தமிழர்களேதானே வாழ்ந்தவர்கள். அப்படியிருக்க தென்னிலங்கையார் மாத்திரம் புத்த சமயிகள் ஆகவும், ஏனையோர் இன்று வரையும் இந்துக்கள் ஆகவும் இருப்பதற்கு ஓர் ஆணித்தரமான மூலகாரணம் இருக்க வேண்டும் அதுதான் என்ன? அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி ஆதலின் வடகீழ்ப் பகுதிகளில் ஈழநாட்டு அரச பரம்பரையினர் சிற்றசர்களாக ஆட்சி புரிந்து வந்தமையே காரணமாகும். அக்காலத்தினரோடு மண உறவு கொண்டு ஒரினமாக வாழ்ந்த காரணத்தால் ஒருவருக்கொருவர் எதிர்ப்பின்றி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதே உறுதி, இதுபற்றி முன்னரும் விளக்கியுள்ளேன்.

சிங்களவர், தமிழர் என்ற வேற்றுமை உணர்வு துட்டகைமுனு காலத்தில் ஏற்பட்டது. துட்டகைமுனுவின் ஆட்சி ஆரம்பம் கி. மு. 161ஆகும். புத்த மதம் வந்தது 146 ஆண்டுகளுக்குப் பின்னாகும். எனவே புத்த மதம் வந்ததும் ஒரு நூற்றாண்டு வரையில் சிங்களவர், தமிழர் என்ற சமுதாயப்பிரிவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. துட்டகைமுனு காலத்திலேயே சிங்களவர் என்ற புனை பெயர்வலுப்படுவதாயிற்று. இப் பிரிவினைச் சுட்டி உணர்த்தியவன் துட்டகைமுனுவே. அதனால் சிங்களவர், தமிழர் என்ற பிரிவினை உணர்ச்சி மேலிட்டது. அப்பொழுது புத்த சமயத்தைக் கைக்கொண்டவர்கள் அனைவரும் சிங்களவர் ஆயினர்@ சிங்களவர் எனப்பட்டனர். எனவே ஈழநாட்டு மக்கள் இரு வேறுபட்ட சமுதாயமாக மாறுவதற்கு மூலாகரணமாய் இருந்தது புத்த மதமே@ காரண கருத்தாக்கள் புத்த பிக்குகளே.

இஃது இவ்வாறாக, முதலியார் இராசநாயகம் அவர்கள் ஈழம் என்னும் சொல் சீழம் எனப்பட்டு அஃது பின் சிகரம் ஆகிச் சிங்களம் ஆயிற்று எனக்கூறுவர். பேச்சுமொழியில் வேறு வேறு மொழி பேசும் மக்களின் வாய் ஒலி மாற்றமாகச் சில சொற்கள் மரூஉ வழக்கின் பாற்பட்டு உருமாறுதல் சகசம். ஈழம் என்ற சொல்லை சீழம் என்று ஏன் உச்சரிக்க வேண்டும்? “ஈ” என்னும் ஒலியை அவர் உச்சரிக்க மாட்டாரா? எனவே ஈ – சீ ஆக வருவதற்கு என்ன காரணம்? அன்றிச் சீழம் – சிகழம் ஆவது எப்படி? “ழ” கர ஒலி தமிழின் சிறப்பொலி@ பிற மொழிக்கு இல்லாதது. எனவே ஈழத்தைச் சீழம் – சிகழம் எனத் திரித்துக் கூறியவர் தமிழரா? தமிழர் வாயில் அம்மாற்றம் ஏற்பட்டதா? இனிச் சீழம் – சிகழம் ஆக உரு மாறி உச்சரித்தவர்கள் தமிழர்களா? அப்படியானால் அதில் முரண்பாடு காணப்படுகிறதே? என்னை? சிகழம் என்ற சொல்லில் வரும் “ஹ’ ஒலி வடமொழிக்குரிய சிறப்பெழுத்து. அது தமிழன் வாயில் தமிழ் மரபில் வருமா? ஆகவே சீழம் – சிகழம் என்ற உருமாற்றத்தில் தமிழன் வாயில் “ஹ” வராது. வடமொழியாளர் வாயில் “ழ”கரம் வராது ஆதலின் ஈழம் – சீழம் – சிகழம் என்ற உருமாற்றங்கள் எவ்வகையிலும் பொருத்தமற்றன. இனி சிகழம் என்ற உருமாற்றம் சிங்களம் என்று வருமா? ஏன் அப்படி வரவேண்டும்? ஆதலின் ஈழம் என்ற சொல் சீழம் ஆகவும் பின் சிகழம் ஆகவும், அதன் பின் சிங்களம் ஆகவும் உருப்பெறுதற்கு மொழி மரபு இடமளிக்காது. ஒருவன் தான் நினைத்தவாறு தனது அறிவுக்கெட்டிய வரையில் தனது கொள்கையை நிறுவுவதற்காக தான் தோன்றித்தனமாகக் கூறுவது அருத்தமற்ற வெற்றுரையாகும்.

ஆனால் முதலியார் அவர்கள் கூற்றும் எனது கூற்றும் ஒரு புடையொப்புமையாகவே அமைகின்றன. என்னை? ஈழம் என்ற சொல்லில் இருந்தே சிங்களம் என்ற சொல் பிறந்தது என்கிறார். நானும் ஈழம் என்ற சொல்லில் இருந்தே சிங்களம் என்ற சொல் பிறந்தது என்கிறேன். ஆனால் பிறப்பு முறையிலே தான் வேறுபாடு. முதலியார் கூறும் பிறப்பு முறை, மொழி மரபுக்கோ, இலக்கண அமைதிக்கோ, மக்களின் இயல்பான பேச்சு முறைக்கோ சிறிதும் பொருத்தமற்றதாகும். ஆதலின் சிங்கன் பரம்பரையினருக்கு உரிய ஈழம் என்னும் கருத்தை உள்ளடக்கி அப் பொருள் புலப்படுமாறு சிங்கன் + ஈழம், சிங்கன் ஈழம் சிங்களம் எனப் பிறந்தமையே எவ்வாற்றானும் பொருத்தமுடையதும் உண்மையுமாகும். எனவே சிங்களம் என்பதன் பொருள் சிங்கன் பரம்பரையினது ஈழம் என்பது. பெயர் வைத்தவர்களின் குறிக்கோள் அதுவே. இனி ஈழம் – சீழம் – சிகழம் – சிங்களம் என்றால் சிங்களம் என்னும் சொல் தரும் பொருள் என்னையோ? இவ்வாறு பெயர் வைத்திருப்பின் அவர்கள் என்ன பொருளை உள்ளடக்கி அச் சொல்லை ஆக்கினாரோ? உணர்மின்!

இனி, நாட்டைக் குறிக்கும் பெயராகப் பிக்குகளால் புனையப்பட்ட சிங்களம் என்னும் பெயர் அந் நாட்டிலுள்ள மக்களையும், அவர்கள் பேசிய புதிய கலப்பு மொழியையும் குறிப்பதாயிற்று. அவை தாம் சிங்களவர், சிங்களம் என்பன. நாட்டைக் குறிக்கும் சிங்களம் என்ற பெயர்நாட்டைக் குறியாது வலு இழந்தமைக்குக் காரணம் நாட்டைக் குறிக்கும் “லங்கா” என்ற சொல்லின் வழக்கேயாகும் இடையிடையே ஒரோர் இடத்தில் சிங்களத்தீவு என்றும் வழங்கப்படுவதுண்டு. லங்கா என்பது நாட்டின் பெயராகிய ஈழம் என்ற சொல்லின் வடமொழி உருவம். சிங்களம் என்பது ஆக்க மொழி. ஆதலின் மிகுதியும் சிங்களம் என்ற சொல் மொழியையும், மக்களையும் குறிப்பதாயிற்று.

இனிச் சிங்களம் என்ற சொல்லின் வளர்ச்சிபற்றி ஆராய்வாம். அஃது தேவநம்பியதீசன் காலத்துக்குப் பின்னரே பிக்குகளால் தோற்றுவிக்கப்பட்டதென முன்னர் கூறினாம். ஆனால் அஃது கி. மு. 307 க்குப்பின் சுமார் எவ்வளவு காலத்தின் பின் தோன்றியிருக்கலாம் என சிங்கள வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ந்து உண்மை காண்போம். மகிந்தன் வந்த காலத்தில் சிங்களம் என்றொரு சொல் இல்லை என முன்னர் கூறியுள்ளேன். புத்த சமயம் வந்த பின்பும் அது வளர்ச்சியடையவும், ஈழநாட்டு மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் கலப்பு மொழி உருப் பெறவும் பல ஆண்டு காலம் சென்றிருக்கவேண்டும். மொழி வலுவடைவதற்கு முன்னரே சிங்களம் என்ற பெயர் தோன்றியிருக்க வேண்டும். அம்மொழி நாட்டையும், நாட்டு மக்களையும், அவர்கள் பேசிய மொழியையும் சுட்டி உணர்த்தியதென்பது முன்னர் கூறப்பட்டது. மிகுந்தன் வந்து சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின் சிங்களம் என்ற சொல் தோன்றியிருக்கலாம். அஃதாவது கி. மு. 250 வரையில் இருக்கலாம். ஏன் துட்டகைமுனுவின் வரலாற்றில் சிங்களவர், தமிழர் என வேறுபாட்டு உணர்வு வலுப்பெற்றிருந்தமை அறியக்கிடக்கின்றது எனவே துட்டகைமுனு காலத்தில் சிங்களமாகிய கலப்பு மொழி குழவிப் பருவம் உடையதாக இருந்திருக்கலாம். இக்காலகட்டத்தில் அம் மொழிக்கென ஒர் எழுத்து வடிவம் தோன்றியிருக்கலாம். அவ்வெழுத்து வடிவம் மக்களிடையே பரவுவதற்குப் பல ஆண்டுகள் சென்றிருக்கலாம். ஆதலின் துட்டகைமுனு காலத்தில் எழுத்து வடிவம் கருக்கொள்ளும் நிலையிலேயே இருந்திருக்க வேண்டும். ஏன்? புத்ததாசன் என்னும் சிங்கள அரசன் காலத்திலேயே “பாளி பாஷையில் இருந்த புத்த போதகங்கள் சிங்கள மொழிக்குக் கொண்டுவரப்பட்டன” எனச் சிங்கள வரலாற்று நூலாகிய மகாவமிசம் கூறுகின்றது. புத்ததாசன் காலம் கி. பி. 341 – 370 ஆகும் துட்டகைமுனு காலம் கி. மு. 161 – 137 ஆகும். துட்டகைமுனு காலம் சுமார் 500 ஆண்டுகளுக்குப் பின்னரே பாளி நூல்கள் சி;ங்கள மொழியில் எழுதப்பட்டன. இதில் நுட்பமாகக் கவனிக்க வேண்டியது மகாவமிச கூற்று. ‘சிங்களமொழிக்குக் கொண்டுவரப்பட்டன’ என்பதே. இதனால் கலப்பு மொழியாகிய சிங்களம் பரவலாக மக்களிடையே உபயோகத்துக்கு வந்தபின்னரே எழுத்துவடிவம் ஆரம்பி;க்கப்பட்டு அதன்பின் எழுத்து மொழி மக்களிடையே வலுப்பெற்ற பின்னரே சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன என்பது போதரும் . புத்த மதம் வந்தது. கி.மு 307ல் சிங்கள மொழி எழுத்துவடிவில் வலுப்பெற்ற காலம் கி. பி. 370. எனவேபுத்த மதம் வந்து சுமார் 600 ஆண்டுகளின் பின்னரே சிங்கள மொழி பேச்சு வடிவிலும், எழுத்து வடிவிலும் வலுப்பெற்ற காலமாகும்.

இலங்கை வரலாற்றில் மகாவமிச மன்னர் காலம் கி. பி. 304ல் முடிவடைகிறது. ஆகவே மகாவமிச காலத்தில் சிங்களமொழி எழுத்து வடிவில் வலுப் பெறவில்லை என்பதுதெளிவு. மகாவமிச மன்னரின் ஆட்சி முடிபு புத்ததாசன் காலத்துக்குச் சுமார் 40 ஆண்டுகள் முற்பட்டதாகும்.

இதற்கு ஆதாரமாக வாலகம்பாகு ஆட்சி புரிந்த காலத்தில் கி. மு. 85க்கு முன் புத்தமத போதனைகள், திரிபிடகக் கருத்துக்கள் யாவும் கர்ண பரம்பரையாக ஒதப்பட்டு வந்ததாக மகாவமிச வரலாறே கூறுகின்றது. ஏன்? சிங்களப் பேச்சு மொழியோ எழுத்து வடிவமோ வலுப்பெறவில்லை என்பதனாலன்றோ? புத்தமத வருகைக்கும், வாலகம்பாவுக்கும் இடைப்பட்ட காலம் (கி.மு. 307 – 85) சுமார் 220 ஆண்டுகளாகும். எனவே தேவநம்பியதீசன் தொடக்கம் மகாசேனன் முடியவுள்ள காலப்பகுதியே சிங்கள மொழி கருக்கொண்டு வளர்ச்சியுற்ற காலம் எனக்கொள்ளலாம். மகாசேனன், மகாவமிச மன்னர்களின் இறுதியரசன்.

அன்றியும் ஒரு புதிய மொழி ஒரு நாட்டு மக்களுக்குப் பேச்சு மொழியாக வருவதற்கு மிகக் குறைந்தது 25 ஆண்டுகள் ஆதல் வேண்டும். ஏன்? ஒரு நாட்டின் ஒரு இளம் சந்ததியினரின் கற்கையாண்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகும். அடுத்த இளம் சந்தததியினரின் கற்கையாண்டு 25 ஆண்டுகளாகும் எனவே 50, 60 ஆண்டுகளில் ஒரு புது மொழி நாட்டில் வழக்கு மொழியாக வருவது நூதனமல்ல. ஆதலின் கி. மு. 247ல் ஆட்சி புரிந்த சூரத்தீசன் காலம் வரையில் சிங்கள மொழி பேச்சு மொழியாக ஆரம்ப நிலையில் இருந்திருக்கலாம். அஃதாவது அரசர், படித்தவர்கள், பிக்குகள் அளவிலர் அம் மொழிப் பயிற்சி இருந்திருக்கலாம். ஆனால் பாமரமக்களிடையே வழக்கில் இருந்த மொழி தமிழே. அக்காலத்தில் சிங்களம் என்ற சொல்லும் ஆரம்ப வழக்கில் இருந்திருக்கலாம். ஆனால் ஈழநாட்டு மக்களிடையே வேற்றுமை உணர்வு இல்லாத காலமாகும். சூரத்தின் தீசன் ஆட்சி முடிய சேனன், கூத்திகன் என்ற மலையாளத் தமிழர் இருவரும் 22 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளார்கள். பின் 10 வருட இடைவெளியின் பின் எல்லாளன் என்னும் சோழ அரச குமாரன் கி. மு. 205 தொடக்கம் 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இதனால் சூரத்தீசனுக்குப்பின் 66 ஆண்டுகள் தமிழர் ஆட்சி நடைபெற்றது பின்னர் துட்டகைமுனு ஆட்சிக்கு வருகிறான். இவனே சிங்களவர். தமிழர் என்ற வேற்றுமை உணர்வை வலுப்படுத்தியவனாவான். இவன் காலம் தொடக்கம் சிங்களர். தமிழர் என்ற வேற்றுமை உணர்வு நாளுக்கு நாள் வளர்வதாயிற்று.

எனவே விசயன் ஈழநாட்டுக்கு வந்து சுமார் 250 ஆண்டுகளின் பின்னரே சூரத்திசன் காலம் வரையிலேயே சிங்களம் என்னுமோர் கலப்புமொழி உருப்பெற்று ஆரம்ப நிலையில் இருந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இக்காலத்திலும் மக்களிடையே தமிழ் மொழியே சுயமொழியாக இருக்க வேண்டும். சிங்களம் எழுத்து மொழியாகி வழக்கில் வந்த பின்னரே தமிழ்மொழி காலப்போக்கில் வழக்கொழிந்ததாகும் என்க. அம்மொழி எழுத்து மொழியாகி மக்களால் பேசவும், எழுதவும் தக்கதாக நிலவி ஆரம்ப காலம் மகாவம்சத்தின் இறுதிக்காலம் என்றே கூறலாம். ஏன்? மகாவமிசம் முடிவுற்று சலு வமிச காலத்தில் புத்ததாசன் ஆட்சி செய்த காலத்திலேயே பாளியில் இரந்தபுத்த நூல்கள் யாவும் சிங்கள மொழிக்குக்கொண்டுவரப் பட்டனவன்றோ? மகாவமிசம் முடிவு காலம் கி. பி. 304ஆகும். எனவே மகாவமிச காலம் முழுமையும் மக்கள் மொழி அரசமொழி தமிழ் மொழியே என்பதும் வெளிப்படை . மகாவமிச அரசர்களின் பெயர்களும் தமிழ் மரபைச் சேர்ந்த மொழிகளாகவே இருக்கின்றன. இம் மன்னர்களின் பெயர்களுள் ஈழநாகன் என்னும் பெயர்சிறப்பாக உற்று நோக்க வேண்டியது.

இவ்வரசன் கி. பி. 35 – 44 வரை ஆட்சி செய்துள்ளான். எனவே இக்காலத்திலும் ஈழம் என்ற இந்நாட்டின் பெயர்வழக்கு ஈழநாட்டு மக்கள் இடையேயும், மன்னரிடையேயும் மறையாது நிலவியதென்பது புலப்படுகின்றது. இக்காலத்தில் லங்கா, இலங்கை என்ற வழக்கு மிக அருமையாக படித்தவர்கள் மத்தியில் வழக்கத்தில் இருந்ததாக வேண்டும். ஈழநாகனை எலுநன் என்றும் அழைப்பர். அதனால் பெறப்படும் உண்மை என்ன? ஈழன் என்ற சொல்லின் சிங்கள உச்சரிப்பேயாகும். அவ்வாறு அழைத்தவர்கள் அவன் காலத்துப் புத்த பிக்குகளாய் இருத்தல் வேண்டும்.

இனி ஈழநாகன் என்ற பெயரில் இருந்து இவன் ஈழநாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த நாகர் குலக் கலப்புள்ளவன் என்பதும் பெறப்படும். மூத்தசிவன் தொடக்கம் விசயன் பரம்பரையினர் நாகர் குல ஈழநாட்டு அரச பரம்பரையினரோடு மண உறவு கொண்டு ஒரே கிளையினராக வாழ்ந்தார்கள் என்பது வரலாறு கொண்டு அறியலாம். மகாவமிச மன்னர்களுள் ஒரு சிலர் தவிர ஏனையோர் யாவரும் அவர்களே. அன்றி விசயன் பரம்பரை வளர்ச்சியடைந்தமைக்கு வேறு வரலாறுண்டா? உணர்மின்!

இதுவரை கூறியவற்றில் இருந்து நாம் அறியக் கூடிய உண்மைகள் இவைகளாகும். ஈழம் என்பதே இந்நாட்டின் பூர்வீக ஒரே தமிழ்ப் பெயர் என்பதும், ஈழம் என்ற சொல்லே ‘லங்கா’ வாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதும், ஈழம் என்ற சொல்லை வைத்தே சிங்களம் என ஓர் புனைபெயர் ஆக்கப்பட்டதென்பதும் ‘லங்கா’ என்ற வடமொழி உருவம் தமிழில் இலங்கை என உருப்பெற்றதென்பதும், விசயன் வந்த காலத்தில் இங்கு வாழ்ந்தோர் தமிழர்களே என்பதும், அவர்கள் வடமொழியாளரால் அம் மொழியில் இயக்கர், நாகர் என அழைக்கப்பட்டார்கள் என்பதும், விசயன் பரம்பரையினரும் ஈழநாட்டு அரச பரம்பரையினரும் மணஉறவு கொண்டு ஒரே கிளையினராக வாழ்ந்தார்கள் என்பதும், இக்கிளையினர் பேரரசாகவும் ஏனையவர்கள் பற்பல இடங்களில், சிற்றசர்களாகவும் ஒன்று பட்டு ஆட்சி புரிந்தனர் என்பதும், விசயன் ஆதியோரும் கலிங்க நாட்டுத் தமிழர்களே என்பதும், விசயன் இயக்கர் என அழைக்கப்பட்ட ஈழநாட்டு அரச பரம்பரையில் உள்ள அரச கன்னி குவேனியை மணம் முடித்தே அரசுரிமை பெற்றான் என்பதும் இவர்கள் இந்து சமயக் கோட்பாடுடையவர்கள் என்பதும் ஈழநாட்டுச் சமயம் இந்துசமயமே என்பதும், சிங்களம் என ஒரு மொழி பேசவும் எழுதவும் தக்க நிலைக்கு வரும்வரையில் ஈழநாட்டின் ஒரே மொழி தமிழே என்பதும் ஆகும்.

About editor 2991 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply