சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம்!
(இனச் சிக்கல் என்பது 70 ஆண்டு கால நோய். அகிம்சை, ஆயுதம் இரண்டினாலும் நோயைத் தீர்க்க முடியவில்லை. இன்று அனைத்துலக தலையீட்டால் மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும். ஆனால் அனைத்துலகம் தமிழர் தரப்பை இலங்கை அரசோடு பேசுங்கள் என்கிறது. பேச்சு வார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்கிறது. சிறிசேனா -இரணில் இருவருக்கும் இடையில் நடைபெறும் பனிப் போர் நாம் எதிர்பாராதது. சிறிசேனா சுதந்திரக் கட்சிக்குள் தனது பிடியை இறுக்கப் பார்க்கிறார். ஆனால் மகிந்த இராஜபக்சா இருக்கு மட்டும் அது சாத்தியப்படாது. சுதந்திரக் கட்சியில் 95 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 52 பேர் மகிந்தா ஆதரவாளர்கள். எஞ்சிய 43 உறுப்பினர்களிலும் சிறிசேனாவின் ஆதரவாளர்கள். அமைச்சர் பதவிக்காகவே அவர்கள் சிறிசேனாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மகிந்த இராஜபக்சாவுக்கு இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் நாட்டமில்லை. சிங்கள – பவுத்த பேரினவாதத்தை தொடர்ந்து கையில் எடுப்பதன் மூலம் அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்பது அவரது கணக்கு. கடந்த சனாதிபதி தேர்தலில் வட கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் அவருக்கு 52 விழுக்காடு ஆதரவு காணப்பட்டது. தமிழ், முஸ்லிம் மக்களது வாக்குகளே சிறிசேனாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இன்றைய செய்தியின்படி மகிந்த இராஜபக்சா, அவரது மனைவி மக்கள், உறவினர்கள் ஆகியோருக்கு எதிரான ஊழல் விசாரணைகளை மேற்கொள்ள புதிய மாவட்ட நீதிமன்றங்களை நிறுவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்கள் Trial at Bar போல் செயல்படும். எதுவானாலும் பொறுமை காப்பதை விட வேறு வழியில்லை. கட்டுரை நடு நிலையோடு எழுதப்பட்டுள்ளது. பாராட்டுதல்கள்.) நக்கீரன்
Sutha Chandran with Sinnathurai Srivas Avarangal and 10 others.
கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதியினால் அதற்கான நேரம் இன்னமும் ஒதுக்கப்படவில்லை. வடக்கில் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெறும் கைதுகள் பற்றியும், புதிய அரசியலமைப்புப் பற்றியும் அவசரமாகப் பேசுவதற்காகவே மைத்திரியிடம் கூட்டமைப்பு நேரம் கேட்டிருந்தது.
கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையோ, குறைகளையோ கேட்பது என்பது மைத்திரி, ரணிலுக்கு மாத்திரமல்ல, தென்னிலங்கையிலிருந்து வருகின்ற அனைத்துத் தலைவர்களுக்கும் பெரும் ஒவ்வாமையாகும். அதுவும், நல்லாட்சி அரசாங்கத்துக்குள் பெரும் குழப்பம் நீடித்து வரும் இன்றைய நிலையில், இரா.சம்பந்தனின் கோரிக்கையைக் கேட்டு, பதில் சொல்லிக் கொண்டிருப்பது பற்றியெல்லாம் அவர்கள் கரிசனை கொள்வார்கள் என்று நம்ப வேண்டியதில்லை. ஏனெனில், இதுவொன்றும் தேர்தல் காலம் அல்லவே.
இதையடுத்து, சம்பந்தன் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் தூதுவர்களையும் ஒவ்வொரு நாளும் சந்தித்து, நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுப் பத்திரங்களை வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார். அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையிழப்புப் பற்றி, வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கின்றார். அதுவும், ரணிலோடு பெரும் இணக்கம் காட்டிக் கொண்டிருந்தவர், ஐக்கிய தேசியக் கட்சியை நோக்கியும் குற்றச்சாட்டுகளை அடுக்க ஆரம்பித்திருக்கின்றார். சம்பந்தன் இன்று வந்திருக்கின்ற இடம் ஒன்றும் தமிழ் மக்களுக்கு புதிதில்லை. அது 70 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட, தமிழ்த் தேசிய அரசியல் போராட்டத்தில் ஏற்கெனவே பழக்கப்பட்டதுதான். ஆனால், சம்பந்தனின் அண்மைய, தீர்க்கமான நம்பிக்கைகள் மற்றும் அதற்கான அர்ப்பணிப்புகள் சார்ந்து, அவர் ஒவ்வொரு நாளும் அடைந்து வருகின்ற ஏமாற்றம் அதிகம் கவனிக்கப்படவில்லை. அதுதான் இங்கு முக்கிய விடயமாக மாறி விட்டிருக்கின்றது.
தென்னிலங்கையோ, நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான அக- புற அழுத்தங்கள் சார்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. வடக்கு- கிழக்கோ, வடக்கு மாகாண சபைக் குழப்பங்களை மாத்திரம் கவனித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குள், சம்பந்தனின் ஏமாற்றமும் அங்கலாய்ப்பும் யாரினாலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அந்த அங்கலாய்ப்பின் தொடர்ச்சியை சுமந்திரனும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
2015இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது, மஹிந்த ராஜபக்ஷவைப் பெருமளவு பலமிழக்கச் செய்ய முடியும் என்று மைத்திரி நம்பினார். ரணிலோ, மஹிந்த என்கிற சிறு அலையைத் தக்க வைப்பதனூடு, சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்தி, ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த முடியும் என்று பெருவாரியாக நம்பினார். அதற்கான வேலைத்திட்டங்கள் சார்ந்து, அவர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெகுவாகவே இயங்கி வந்தார். தன்னுடைய காலத்தின் பின்னும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்பது சார்ந்த, அவரது திட்டமிடல்கள் பெரியது. அதற்காக, அவர் எதையும் விட்டுக்கொடுக்கவும் ஊடறுத்துச் செல்லவும் தயங்கவும் இல்லை.
ஆனால், இவ்வாறான சதுரங்கத்தில் தவிர்க்க முடியாதளவுக்கு மஹிந்த அணி பலம்பெற்றது. இதனால், ஏற்பட்ட அழுத்தங்களை மைத்திரி மாத்திரமல்ல, மறுபுறமாக ரணிலும் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதன் நீட்சிகளில் ஒன்றுதான், ரணிலின் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ரவி கருணாநாயக்கவே பதவி விலக வேண்டிய சூழலும் உள்ளானது. இது, உண்மையிலேயே மைத்திரியின் தோல்வி என்பதைத் தாண்டி, ரணிலின் தோல்வியே.
இவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் நிலைப்பாடுகள் சார்ந்து உரையாடுவதற்கு ரணிலோ, ஐக்கிய தேசியக் கட்சியோ சிறிதும் தயாராக இல்லை. மாறாக, அடுத்தடுத்த தேர்தல்கள் குறித்தும், அதனூடு தனித்த, முறியடிக்க முடியாத அரசாங்கத்தை அமைப்பது பற்றியுமே சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, பாராளுமன்றத்திடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ரணில் அதிக விருப்புக் கொண்டிருப்பது உண்மை. அதுவும், ஆட்சி மாற்றத்தின் ஆரம்பத்தில் அதை ஓரளவுக்கு இலகுவாகச் செய்துவிட முடியும் என்று நம்பினார். ஆனால், தன்னுடைய கட்சியைப் பலப்படுத்துவதற்காக, சுதந்திரக் கட்சிக்கிடையில் காணப்பட்ட பிளவைப் பெரியளவில் தக்க வைத்ததன் விளைவு, இன்றைக்கு பாராளுமன்றத்துக்குள் பெருமளவு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. இன்னும் மூன்று வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டு, அதைக் கலைக்கும்போது, தனி ஆட்சியைப் பெற்றுவிட வேண்டும் என்பது சுதந்திரக் கட்சியின் ஆசை. கூட்டு அரசாங்கத்தில் அதிகாரங்கள் அற்ற அமைச்சர்களாக இருந்து, அலைக்கழிவதை விட, தனித்த அரசாங்கம் என்பது எப்போதுமே சிறப்பானது. அதன்போக்கில், சுதந்திரக் கட்சி அமைச்சர்களே செயற்பட்டு வருகின்ற நிலையில், பாராளுமன்றம், மஹிந்த அணியினால் மாத்திரமல்ல, கூட்டு அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியினராலேயே மறைமுகமாக அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றது.
இதனால், புதிய அரசியலமைப்பை மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகின்ற சிறிய திருத்தங்களைக் கூட செய்ய முடியாத சூழல் உருவாகி விட்டிருக்கின்றது. மைத்திரியின் நிலைமையோ இன்னும் மோசமானது. அதாவது, சுதந்திரக் கட்சியை முழுமையாகத் தன்னுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவர முடியவில்லை என்பது மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் போக்கும், தான் விரும்பிய மாதிரியில்லை என்கிற விடயம், அவரை எரிச்சலூட்டிக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி மாறியது மாத்திரமே, கடந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் எடுத்த பெரும் ஆளுமையான முடிவு எனலாம். அதன்பின்னர், அவர் அதிகம் தடுமாறி வந்திருக்கின்றார். தனக்கு கீழுள்ள விடயங்கள் சார்ந்தே, ஆளுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து, விடயங்களைச் சுமூகமாக்கிக் கொண்டிருக்க முடியும் என்கிற போதிலும், அதிலிருந்து அவர் தவறி வந்திருக்கின்றார். அதன் விளைவுதான், மஹிந்த அணி அசைக்க முடியாதளவுக்கு வளர்ந்து நிற்பதற்கும் காரணமானது. ஒரு தலைவராக, அவர் பௌத்த பீடங்களை மாத்திரமல்ல, ஊடகங்களையும் கண்டு அதிகமாக பயப்பிடுகின்றார். ஒரு விடயம் சார்ந்து, ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்கொண்டு, கருத்துரைப்பதும் நியாயங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்வதுமே தலைமைத்துவத்துக்கான பண்பு. ஆனால், மைத்திரியோ அதிக நேரம் ஊடகங்களைக் கண்டு பயப்பிடுகின்றார். விமர்சனங்கள் என்கிற விடயத்தையே எதிர்கொள்ளத் தயங்குகின்றார். பல நேரங்களில் ஓட்டுக்குள் ஒழிந்து கொள்ளும் ஆமை மாதிரி தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளவே விரும்புகின்றார்.
அவ்வாறான நிலைதான், நல்லாட்சி அரசாங்கம் பற்றி, நம்பிக்கையோடு இருந்த இலட்சக்கணக்கான தென்னிலங்கை மக்களையும் சம்பந்தனையும் சுமந்திரனையும் சேர்ந்து, சோர்ந்துபோகவும் ஏமாற்றமடையவும் வைத்திருக்கின்றது.
புதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியோ, ரணிலோ இப்போதெல்லாம் பேசுவதில்லை. அந்த வார்த்தையை, கடந்த சில மாதங்களில் அதிகமாக உச்சரித்தவர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் மாத்திரமே. புதிய அரசியலமைப்பு என்கிற வஸ்து, எப்படியிருக்கும் என்கிற பருமட்டான படங்களையெல்லாம், தமிழ் மக்களிடம் சேர்ப்பிப்பது தொடர்பில் அவர்கள் இருவரும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு அளப்பரியது. ஆனால், அவர்களின் அர்ப்பணிப்பு நடுத்தெருவுக்கு வந்துவிட்ட பின்னணியில்தான், இன்றைக்கு ஒப்பாரிக்கு உண்டான குரல்களை எழுப்ப வேண்டி வந்திருக்கின்றது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவம் உள்ளிட்ட முப்படையும் ஆக்கிரமித்து வைத்துள்ள காணிகளின் விடுவிப்புத் தொடர்பில், சம்பந்தன் கடந்த ஒரு மாத காலத்துக்குள் இரண்டு கடிதங்களை ஜனாதிபதிக்கு எழுதிவிட்டார். முதலாவது கடிதத்துக்கு, ஜனாதிபதியின் செயலாளர் பதிலளித்திருந்தார். இரண்டாவது கடிதத்துக்கான பதில் இந்தப் பத்தி எழுதப்படும் வரையில் அளிக்கப்பட்டிருக்கவில்லை. கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டங்களை ஆரம்பித்த பின்னர், கூட்டமைப்பின் தலைவர்கள் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பு, மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட பல தரப்பையும் சந்தித்துப் பலதடவைகள் பேசியாகிவிட்டது.
வாக்குறுதிகளும் வாங்கியாகி விட்டது. ஆனாலும், இறுதித் தீர்வு ஏதும் இதுவரை வழங்கப்படவுமில்லை; அதுதொடர்பில் பேசுவதற்கான அனுமதி கோரினால், அரசாங்கத் தரப்பால் வழங்கப்படுவதுமில்லை. அந்த நிலையே, இப்போது சம்பந்தனை, கடிதங்கள் எழுத வைத்திருக்கின்றது. வடக்கு மாகாண சபைப் பிரச்சினையில் விக்னேஸ்வரனோடு கடிதங்களை எழுதத் தொடங்கிய சம்பந்தன், இன்றைக்கு மைத்திரிக்கு கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கின்றார். (இந்தப் பத்தி வெளிவந்திருக்கின்ற நாளில், ஐக்கிய நாடுகளுக்கும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கின்றார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.)
தமிழ் மக்களின் கிட்டத்தட்ட ஏக ஆணைபெற்ற கட்சியின் தலைவராக மாத்திரமல்ல, எதிர்க்கட்சித் தலைவராகவும் தன்னுடைய நி்லையை சம்பந்தன் இன்று இழந்து நிற்கின்றார். அவரின் சாணக்கியத்தனங்கள் அல்லது பொறுமை மீது இன்னமும் குறிப்பிட்டளவானோருக்கு நம்பிக்கையுண்டு. ஆனால், அந்த நம்பிக்கை சம்பந்தனுக்கு இப்போது இருக்கின்றதா? என்கிற கேள்வியை இப்போது எழுப்ப வேண்டிய சூழல் உருவாகியிருக்கின்றது. இவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்பு மீது தமிழ் மக்களை நம்பிக்கை வைக்கக் கோருவது, அதிக தருணங்களில் அபத்தங்களின் அலட்டலாகத் தெரியவே அதிக வாய்ப்புண்டு.
சம்பந்தன் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம்! கடந்த இரண்டு வாரங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு, தம…
Posted by Sutha Chandran on Wednesday, August 16, 2017
Leave a Reply
You must be logged in to post a comment.