சம்பந்தன் – மஹிந்த சந்திப்பு: தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பயம்!

சம்பந்தன் – மஹிந்த சந்திப்பு: தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பயம்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியல் ரீதியாகவும் மற்றும் சமூக ரீதியாகவும் பல்வேறு குழப்ப நிலைகள் தோன்றியுள்ளன.

தென்னிலங்கை அரசியலில் பிணைமுறி மோசடி தொடர்பான சர்ச்சை சில திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. யாரும் எதிர்பாராத நேரத்தில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை துறந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில் அநேகமானவர்கள் ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலானது அரசியலில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அறிகுறி என்ற வகையிலான கருத்துக்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு வந்தன.

இது இவ்வாறிருக்க, கடந்த எட்டாம் திகதி தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால், மேல் மாகாண கலாச்சார சதுக்கத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வொன்று நடைபெற்றிருந்தது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட பல அரசியல் புள்ளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கும் மற்றும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான கைக்குலுக்கலானது தென்னிலங்கையில் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பீதியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இந்த கூற்று அரசியல் தரப்பினர் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், இதனைத் தொடர்ந்து ரவி கருணாநாயக்கவின் பதவி விலகலையடுத்து முன்வைக்கப்பட்டு வந்த கருத்துக்கள் அந்த குழப்பங்களை இன்னும் அதிகப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி மாற்றம் தொடர்பில் வலிமையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மாதம் 22ஆம் திகதி மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் மகிந்தவின் தமிழர் அணியினது ஒன்று கூடலொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த ஒன்றுகூடலில் மஹிந்த அணியின் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கையில், 2020 இல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் உருவாகும் எனவும், மக்கள் தற்போது நடக்கும் ஆட்சியில் நம்பிக்கை இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எப்பொழுதும் நாம் நடக்கவுள்ள ஒரு விடயத்தை சந்தேக கண்ணோட்டத்துடனேயே நோக்குவோம். அதுவே இயல்பு.

எனவே எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஒரு விடயம் நூறு சதவீதம் இவ்வாறு தான் நடக்கும் என யாராலும் கூற இயலாது. அப்படிக் கூறினால் ஒன்று என்ன நடக்கப் போகின்றது என்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். இல்லையெனில் அது அவர்களது அதிகபட்ச நம்பிக்கையின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம்.

இவ்வாறானதொரு நிலையே ஆட்சி மாற்றம் தொடர்பில் மஹிந்த அணியினரது விடயத்திலும் காணப்படுகிறது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சியின் மீது, தென்னிலங்கையில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டு எதிர்க் கட்சியினர் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

தவிர, அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பது தென்னிலங்கையின் வெளிப்படையான குற்றச்சாட்டு.

அதேபோன்று, அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் ஏற்கனவே பல்வேறு விமர்சனங்களை அரசாங்கம் சம்பாதித்திருக்கிறது.

இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும், ஒன்றாக ரவி கருணாநாயக்க மீதான குற்றச்சாட்டுக்களில் ஒன்று சேர்ந்து நின்றதன் விளைவாக தான் அவர் பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

எனவே, அரசாங்கத்தை சுற்றி தற்பொழுது பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் உரையும் கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. நில மீட்புப் போராட்டம், கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம், வேலைவாய்ப்பு என்று மக்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தை போராட்டத்தில் கழித்துக் கொண்டிருக்கிறார்.

அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கால தாமங்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் தன்னுடைய விமர்சனத்தை முன்வைப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கலாம் என்கிறார்கள் தென்னிலங்கை அரசியல் விமர்சகர்கள்.

எதுவாயினும் ஆட்சி மாற்றம் என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

About editor 3157 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply