Wigneswaran should resign his post not Sathyalingam

 முதலமைச்சர் விக்னேஸ்வரன் முதலில் பதவி விலக வேண்டும்! அமைச்சர் சத்தியலிங்கம் அல்ல!

நக்கீரன் 

அற்பர்களுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்களாம். இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குபவர் பாலியல்சாமி
பிரேமானந்தாவின் பிரதம சீடர் விக்னேஸ்வரன் ஆவார்.

எப்போது விக்னேஸ்வரன் தான் தேர்தலில் வென்றதற்குக் காரணம் தமிழரசுக் கட்சியல்ல தனது சொந்தச் செல்வாக்கே என்று கூறினாரோ அன்றே அவரது வெள்ளை வேட்டி வேடம் கலைந்துவிட்டது. இந்தப் பேச்சைக் கேட்டு “இப்படியும் ஒரு நன்றிகொன்ற மனிதர் இருக்கிறாரா?” என எல்லோரும் மூக்கில் விரல் வைத்தார்கள்.

2015 இல் நடந்த தேர்தலில் “நான் நடுநிலைமை வகிக்கிறேன். நான் யாருக்கும் பரப்புரை செய்யப் போவதில்லை” என்றார். பின்னர் அடுத்தடுத்து விட்ட அறிக்கைகளில் “தேர்தல் நாளன்று வீட்டை விட்டு வெளிவந்து மாற்றத்துக்கு வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டார். “ஏன் கஜேந்திரகுமாரின் கட்சி மூன்று நான்கு இடங்களில் வெற்றி பெற்றால் என்ன குறை?” எனவும் வினாவினார்.

முன்னர் ஆயுதக் குழுக்களோடு சேர்ந்து என்னால் வேலை செய்ய முடியாது என்று சொன்ன விக்னேஸ்வரன் இன்று அதே ஆயுதக் குழுக்களோடு சேர்ந்து தமிழ் அரசுக் கட்சிக்கு குழி பறிக்கும் திருப்பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார்.

முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த த.குருகுலராசா தனது பதவியில் இருந்து விலகியபோது அவரது இடத்தில் இன்னொரு தமிழரசுக் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட் அவர்களை அந்த இடத்தில் அமர்த்துமாறு தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு இணக்கம் தெரிவித்த விக்னேஸ்வரன் அந்த வேண்டுகோளை எழுத்தில் தருமாறு ஒருமுறை அல்லர். அதற்கு இணங்க தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் நேரில் சென்று அந்தக் கடிதத்தகைக் கையளித்தார்.

ஆனால் விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியை பழிவாங்கும் அரசியல் நோக்கோடு அந்தப் பதவியை இபிஎல்ஆர்எவ் கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு வழங்கினார். இவர், இபிஎல்ஆர்எவ் கட்சித் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அவர்களது சகோதரர் ஆவார்.

2013 இல் நடந்த  வட மாகாண சபைத் தேர்தலில் இபிஎல்ஆர்எவ் கட்சியைச் சேர்ந்த இருவர் வெற்றி பெற்றிருந்தனர்.  பொ. ஐங்கரநேசன் மற்றும்   க.சர்வேஸ்வரன் ஆகிய இருவருமே வெற்றி பெற்ற வேட்பாளர்களாவர். இதில் ஐங்கரநேசன் 22,268 8 அதிகப்படி விருப்பு வாக்குகளைப்  பெற்று 8 ஆவது இடத்தில் வந்திருந்தார்.  சர்வேஸ்வரன் 14,761 வாக்குகளைப் பெற்று 13 ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.  அப்படியிருந்தும் தன்னைப் பெரிய சனநாயகவாதியாகக் காட்டிக் கொள்ளும் பிறேமச்சந்திரன் தனது சகோதரனது பெயரைத்தான் அமைச்சர் பதவிக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

அனந்தி சசிகரன் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கத் தான் யோசிப்பதாகச் சொன்ன போது அனந்தி தமிழரசுக் கட்சியின் விதிமுறைகளை மீறிய குற்றசர்சாட்டில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் ஒருவர்  அவரை அமைச்சராக நியமிப்பது பொருத்தமாக இருக்காது என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா  அவரிடம் சொன்னார். அதன்  பொருள் அனந்தியை அமைச்சர்  பதவிக்கு நியமிக்க வேண்டாம் என்பதுதான்.

ஆனால் விக்னேஸ்வரன் “நீயாரு சொல்வது, நான் ஏன் கேட்க வேண்டும்?  எனது விருப்பப் படியே நடப்பேன் என்று சொல்வது போல அனந்திக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். இதுவும் தமிழ் அரசுக் கட்சியை பழிவாங்கவே  செய்யப்பட்டது.

அமைச்சர் பதவி கேட்காத சிவாஜிலிங்கம் என்ற அரசியல் கோமாளிக்கும் ஓர் அமைச்சர் பதவி தருவதாகவும்  அதனை ஏற்குமாறும் விக்னேஸ்வரன் கேட்டிருக்கிறார். சிவாஜிலிங்கம் ரெலோ கட்சியை சேர்ந்தவர். அவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக இருந்தால் அந்த யோசனையை ரெலோ கட்சியின் தலைமையிடம் சொல்லியிருக்க வேண்டும்.  அதை அவர் செய்யவில்லை. காரணம் விக்னேஸ்வரன் சும்மா பேச்சுக்காகவே சிவாஜிலிங்கத்திடம் அந்தச் செல்லக் கதையை சொல்லியிருந்தார்!

மேலும்  அமைச்சர் பதவிக்கு புளட் அமைப்பைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சிவநேசன் மனுச் செய்திருந்தார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க  முடியாது என விக்னேஸ்வரன் கடித மூலம் அறிவித்திருந்தார். காரணம்,  சிவநேசன் ஊடகவியலாளர் தர்மரத்தினம்  சிவராம் அவர்களின் கொலையோடு தொடர்புடையவர்  என்பதாகும்.  அப்படிப் பார்த்தால் புளட் சித்தார்த்தன் கூட கூட்டமைப்பில் இருக்கக் கூடாது.  தர்மரத்தினம் சிவராம்   2005 ஆம் ஆண்டு கொழும்பில் வைத்துக் கடத்திக் கொலை  செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக பிடிபட்டவர்  சித்தார்த்தனின் தனிச் செயலாளர் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்று அழைக்கப்படும் பீட்டர்   ஆவர்.

என்னதான் விபூதிப் பட்டை,  குங்குமப் பொட்டு,  வெள்ளை வேட்டி சால்வையில் ஒளிந்து கொண்டாலும் விக்னேஸ்வரன் ஒரு கேடு கெட்ட அரசியல்வாதி.  மூன்றாம்தர அரசியல்வாதி.  உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் ஒருவர். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த ஒருவர். நன்றி கொன்றவர்!

முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அமைச்சர்கள் ப.  சத்தியலிங்கம் மற்றும் பா. டெனீஸ்வரன்  இருவரையும்  சுற்றவாளிகள் எனச் சொல்லி  விடுவித்தது. ஆனால் விக்னேஸ்வரன் விடுவதாயில்லை. அழுங்குப் பிடி பிடித்தார்.

எப்பாடு பட்டும்  யார் கழுத்தைத் திருகியும்  சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன்  இருவரது அமைச்சர் பதவிகளைப் பிடுங்க வேண்டும் என்பதில் விக்னேஸ்வரன் பிடிவாதமாக இருந்தார். உடும்புப் பிடியாக இருந்தார்.

உண்மையில்  விக்னேஸ்வரனது   இலக்கு  நல்வாழ்வு அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கம் அவர்கள்தான்.  அவர் மீதுதான் காழ்ப்புணர்ச்சி.  அதற்கொரு முக்கிய காரணம் உண்டு.   அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு  மருத்துவர் சத்தியலிங்கத்தின் பெயர் அடிபடுவதுதான் காரணம்.

உள்ள அமைச்சர்களில் வினைத்திறன் மிக்க ஒரே அமைச்சர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் அவர்கள்தான். அவர்தான் வினைத்திறன் மிக்க அமைச்சராகக் காணப்படுகிறார் எனப் பலரும் பாராட்டுகிறார்கள். இதனால் அடுத்த முறையும் முதலமைச்சராக வரும் தனது கனவு கலைந்து போகும் என்ற பயம் விக்னேஸ்வரனைப் பீடித்துள்ளது.

அண்மையில் நல்வாழ்வு அமைச்சு ஒன்றுக்குத்தான் ஒரு வேலைத் திட்டம் வரையப்பட்டுள்ளது என மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா  மனம் திறந்து பாராட்டியிருந்தார். அமைச்சர் சத்தியலிங்கம் ஒருவர்தான் மாகாண சபைக்கு வெளியே சென்று தனது அமைச்சுக்கு மத்திய அரச மற்றும் வெளிநாட்டு அரசு இரண்டிலும் இருந்து அமைச்சின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி பெற்றிருக்கிறார். வட மாகாண சபைக்கு 2013 – 2017 ஆண்டுகளுக்கு மத்திய அரசு 24,800 மில்லியன் ரூபா முதலீட்டுச் செலவுக்காக ஒதுக்கியிருந்தது. ஆனால் அமைச்சர் சத்தியலிங்கம்  இதே கால கட்டத்தில் 34,000 மில்லியன் பெறுமதியான உதவிகளை மத்திய அரசிடம் இருந்தும் வெளிநாடுகளிடம் இருந்தும் பெற்றிருக்கிறார்.

ஆனால் அழுக்காறு பிடித்த விக்னேஸ்வரன் என்ன சொன்னார்? அமைச்சரது வினைத் திறனைப் பாராட்டினாரா? ஆகா என்று பாராட்டினாரா? இல்லை.  மாறாக தனது அமைச்சர் சிலர் தனக்குத் தெரியாமல் மத்திய அரசிடம் இருந்தும் வெளிநாடுகளிடம் இருந்தும் உதவி நிதிபெற்றிருக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார்! வைக்கோல் பட்டடை நாயும் இப்படித்தான். வைக்கோலை தானும் தின்னாது மாட்டையும் தின்னவிடாது!

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது அமைச்சர் சத்தியலிங்கம் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக செய்தி வந்துள்ளது.

தமிழரசுக் கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர்களிடையேயான முக்கிய ஒன்றுகூடல்  கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதை அடுத்து  வடக்கு மாகாண முதலமைச்சர் அவர்களால் மாற்றியமைக்கப்படவுள்ள அமைச்சரவையில்  தமிழரசுக் கட்சி பங்கேற்பதில்லையென முடிவெடுக்கபட்டது.  இதன் அடிப்படையிலேயே வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருவாளர்  விக்னேஸ்வரன்  மொத்தம்  38 உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபையில் 23 உறுப்பினர்களின் நம்பிக்கையை  அவர்  இழந்துள்ளார். 

அதுமட்டுமல்ல, அவர் ஒரு வினைத்திறன் அற்ற ஒரு முதலமைச்சர் என்பது எதிர்க்கட்சித் தலைவர் கருத்து  மட்டுமல்ல ஆளும் கட்சி உறுப்பினர்களின் கருத்தும் அதுதான். விக்னேஸ்வரன் தனது பதவிக் காலத்தில் 384 அறிக்கைகளை விட்டிருக்கிறார். அதுதான் அவரது சாதனையாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளாகியும் முதலமைச்சர் நிதியம்  சட்டமாக்கப்படவில்லை.

எனவே பதவி விலகுவதாக இருந்தால் முதலில்  பெரும்பான்மை மாகாண சபை உறுப்பினர்களின் நம்பிக்கையை இழந்த சாட்சாத் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும். பதவி விலக வேண்டியவர்  அமைச்சர் சத்தியலிங்கம் அல்ல.  

About editor 3089 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply