காமத்துக்கு அடிபணிந்த முனிவர்கள். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 85 – 87
ரிஷிகள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்களாம். அதாவது… தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக.. ?
பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை.
பரலோகம் யாருக்குத் தெரியும்?…. அதைப் பார்த்தவர்கள் யார்?… இருந்தால் வரச்சொல்?… அது எப்படியிருக்கும்?…
பகுதி – 85
வேதத்தை அடுத்து வந்த உபநிஷத்துக்காரர்கள். “நகர்மனா நப்ரஜா தனேனாதியாகேன ஏகேஅமிர்தத்வம் ஆனஸோ… ”கர்மாக்களை தியாகம் செய்துவிடுங்கள். அதாவது விட்டு விடுங்கள் அதுதான் மோட்சம் என்கிறது. இப்படி… வேத, உபநிஷத்துகாக்ரர்களின் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வேறு வேறாய் இருக்க… இதன்அடிப்படையில் 6 தத்துவக்காரர்கள் தோன்றி… தத்தமது கொள்கைகளை தத்துவங்களை நிறுவினார்கள்.
அவர்கள் யார்? அவர்கள் சொன்னது என்ன?அதற்கு முன்…வேத சனாதன மதத்தின் பெரிய அதிர்ஷ்டம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான். வேதங்களும் வேத வழி விளக்கங்களும் இன்றுவரை நிலைபெற்றிருப்பதற்கு அதன் அடிப்படையில் எடுத்த வியாக்யானங்களும் விளக்க புஸ்தகங்களும்தான்.
இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை. அவனுக்கு அப்போதிலிருந்தே சிந்திப்பது மட்டும்தான் வேலை. அதனால் தான் இப்படி நிறைய புஸ்தகங்களை எழுதித் தள்ளிக் கொண்டிருந்தான்.
மதத்தை அன்று முதல் இன்றுவரை பிராமணனே கைக் கொண்டிருப்பதால் அவனே Leading பண்ணிக் கொண்டிருப்பதால்.பழையதை வைத்துக்கொண்டு புதியதை கற்பிப்பதில் பிராமணனுக்கு தனி சிரத்தை. எப்படி என்று கேட்டால் Vedic Prayer முழுக்க ‘எனக்கு அறிவைக் கொடு’ என்றே நிறைய இடங்களில் கேட்கிறான்.
சரி… அந்த 6 பேர் யாரென்று பார்க்கலாமா? கனாதர், அக்ஷபாதர், வ்யாஸர், கபிலர், பதஞ்சலி, ஜெய்மினி ஆகிய ஆறுபேர் உபதேசித்தவை தர்ஸனங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது தத்துவங்கள். இவர்களில் கனாதர், அக்ஷபாதர் ஆகியோர் உபதேசித்தது நியாயம், வைஷேஷிகம்.
அதாவது தர்க்கம் பண்ணுவது, வாதம் பண்ணுவது, கடவுளைப் பற்றி வாதம் பண்ணுவது, தர்க்கிகம் என்று பெயர் இதற்கு.கபிலர் சாங்க்யம் செய்தார். இதுவும் கடவுளைப் பற்றி கேள்வி கேட்கிறதுதான். பதஞ்சலி, ‘யோகம்’ என்ற தத்துவம் சொன்னார். நாம் இவர்களில் வ்யாஸரைப் பற்றியும், ஜெய்மினியைப் பற்றியும் தான் விஸ்தாரமாகப் பார்க்கப் போகிறோம்.
அதற்கு முன்…கங்கைக்கரை… பழைய காலத்தின் கங்கைக்கரை… அடர்ந்த காடு… அப்போதெல்லாம் நிறைய முனிவர்கள் அங்கே திரிந்து கொண்டிருப்பார்கள். தவம் செய்வார்கள். இதற்கு முனிவர்கள் மட்டுமன்றி காட்டு வாசம் செய்யும் துண்களும், அதாவது விறகு வெட்டுபவர்கள்… மூலிகை எடுப்பவர்கள். கங்கைக்கரையாதலால் மீன் பிடிக்கும் மீனவர் குலப் பெண்கள் உள்பட மக்கள் வசித்தார்கள். இவர்களுக்கிடையிலே தான் முனிவர்களும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்கள்.
‘புத்ரேனே… பார்யேனே…’ என்ற சொல்லுக்கிணங்க மனையாள் வேண்டாம், மகனும் வேண்டாம் என்று வாழவேண்டும் முனிவர்கள். ஆனால்… அந்தக்கால வாழ்க்கை முறையில் எப்படியென்றால்… தவம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே பல பெண்கள் கண்ணில் தென்படுவார்கள். காம ஆசையை தூண்டுவார்கள்.
.முனிவர்கள் அவற்றை மறுதலித்து ஆசையை அடக்க வேண்டும். ஆனாலும்… தவத்துக்கு இடையூறாக அந்த ஸ்திரிகள் தேகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தால் சட்டென அவர்களை நெருங்கித் தொட்டுத் தங்களது காம ஆசையை தீர்த்துக் கொண்டு விடுவார்கள் முனிவர்கள். அந்த ஸ்திரீகளும் முனிவர்கள் இஷ்டப்பட்டால் மறுக்க முடியாத நிலைமையில் இருப்பவர்கள்.
இப்படிப்பட்ட கங்கைக்கரையிலே தான் பராசரர் எனும் முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். கங்கைக்கரையிலே ஒரு சவுந்தர்ய பொழுதிலே அவர் நடந்து கொண்டிருந்த போதுதான்…
ஈர ஆடைகளுடன் நின்ற ஒரு தேகவனப்பு மிக்க அழகியைப் பார்க்கிறார். இவரது மனம் சட்டென அவள்மேல் தொற்றிக் கொள்கிறது. அவளை நெருங்கினார். பெண்ணே நீ யார்? “மகரிஷி… என் திருநாமம் மச்சகந்தி என்கிற சத்யவதி. நானொரு செம்படவப் பெண். என் அப்பா வலை வீசுவார். மீன் பிடிப்பார். நான் அவற்றைச் சேகரித்து எடுத்துச் செல்வேன்.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பராசரர் அவளை இன்னும் அருகே நெருங்கினார். மச்சகந்தியின் உடலிலிருந்து மீன்வாசம் ‘கப்’பென அடித்தது. ஆனால் அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை. பெண் வாசம் தான் அவருக்கு அதிகமாய் வீசியது. மச்சகந்தியின் தோளைத் தொட்டார் முனிவர்.
‘மகரிஷி…’ என உடல் சிலிர்த்து இழுத்தாள் மச்சகந்தி. பெண்ணே…! எனக்கு கங்கையைக் கடக்க உதவி செய்வாயா? சம்மதித்தாள் மச்சகந்தி.
ஆற்றைக் கடந்த முனிவரால் ஆசையைக் கடக்க முடியவில்லை. மச்சகந்தியை நெருக்கமாக அணைத்தார். “இது பகவத் முகூர்த்தம். இந்த அருமையான தருணத்தில் என்னோடு நீ சம்மதித்து இணைந்துவிடு. ஒரு மாமுனிவனை எனக்குப் பெற்றெடுத்துக் கொடு.
இது யாருக்கும் தெரியப்போவதில்லை. என்ன?”மச்சகந்தி சம்மதித்தாள். அவளது மேனியில் மீன்வாசம் போய் ஆண்வாசம் வந்தது. — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
பகுதி – 86
“மச்சகந்தி… என் ஆசைக்கு ஒத்தாசை செய்தாய் நன்றி இனி நீ என் புத்ரனை பெற்றெடுத்துக் கொடுத்து விட்டு உன் அப்பாவிடம் செல்லலாம். அவருக்கு எதுவும் தெரியாது… நீ கன்னியாகவே இருப்பாய்.”
மச்சகந்தி அடுத்த கொஞ்ச நேரத்திலே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நீங்கள் ஆச்சரியப்படலாம். என்னடா இது…? மழை பெய்தவுடன் மரம் எழுந்து வந்துவிடுகிற மாதிரி இருக்கிறதே பராசரரோடு தேகசம்பந்தம் கொண்டவள் திடீரென பிள்ளை பெறுகிறாளா? அப்படியும் கன்னியாகவே இருக்கிறாளா?
ஆமாம்… ‘ரிஷி கர்ப்பம் ராத்தங்காது’ என்பார்கள். அதாவது ரிஷிகள் தங்கள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள். அதாவது… தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக. பராசரரும் மச்சகந்தியும் இணைந்த பிறகு பிறந்தது ஒரு குழந்தை. அவன் வளர்ந்தான்.
குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியாது என்று பராசர் சொன்னார் இல்லையா? ஆனால்… இந்தப் பையன் ஒரு வலையச்சிக்கு பிறந்தவன் என்பது அந்த காட்டில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. மச்சகந்தி குழந்தையை கொடுத்துவிட்டு போய்விட்டாள். ஆனால் அப்பகுயில் உள்ள மற்ற ரிஷிகள், பிராமணர்கள் எல்லாரும்…
‘ச்சீ ச்சீ… ஒரு மீனவத்தி பெற்றெடுத்த பிள்ளையை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இவனை அவளிடமே கொண்டு விட்டுவிடுங்கள். இவனுக்கு சாத்திரம் சொல்லித்தரக்கூடாது. சம்ப்ரதாயம் சொல்லித் தரக்கூடாது” கிட்டத்தட்ட அந்தப் பையனை பிராமணர்கள் பகிஷ்காரமே செய்துவிட்டார்கள். அதாவது புறக்கணித்து விட்டார்கள்.
ஆனால் அந்தப் பையன் வளர்ந்தான். சாஸ்திரம் கற்றான். சம்ப்ரதாயம் கற்றான். தனக்கு எதையெல்லாம் கற்றுக் கொடுக்கக்கூடாது என பிராமணர்கள் மறுத்தார்களோ அதையெல்லாம் கற்றான் அப்பையன்.
வளர்ந்தான் ஞானம் வளர்ந்தது. தாடி வளர்ந்தது. ரிஷியானார். இன்றைக்கும் பிராமணர்கள் கொண்டாடுகிறார்களே வேதம் அதை வகைப்படுத்தி தொகுத்தார். இன்றைக்கும் ஆயிரமாயிரம் தெய்வக் கதைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறதே அந்த 18 புராணங்களைத் தொகுத்தார்.
இன்றைக்கும் பிராமணர்களில் முதுபெரும் புனித நூலாக முழங்கப்படுகிறதே ‘ப்ரம்மசூத்ரம்’ அதை எழுதினார். அவர்தான் வ்யாஸர் வேதவ்யாஸர். வ்யாஸர் பிறந்த சம்பவங்கள் கதை என நாம் கருதிக்கொள்ளலாம்.
ஆனால், அந்தக் கதையில் ஒரு செய்தியைப் பாருங்கள். மீனவத்திக்குப் பிறந்தான் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்த பிராமணர்கள்… பிறகு தங்கள் சமயத்துக்கே வ்யாஸரை பெரும் வரமாக ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த இடத்தில் ஒர் சின்ன சம்பவம் ஞாபகம் வருகிறது. கங்கை நதிக்கரையில் காட்டுப்பகுதியிலிருந்து அப்படியே காரைக்குடி பக்கம் வாருங்களேன்.
காரைக்குடியில் சனாதானிகள் கூட்டம். நாம் பேசிக் கொண்டிருந்தேன் நிறைய கூட்டம் கூடியிருந்து. அப்போது வியாஸரைப் பற்றியும் பேசினேன். அந்த வேளையில்…
அங்கே வந்தார் ராமசாமி நாயக்கர். நான் வ்யாஸரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ராமசாமி நாயக்கர், ‘அய்யா..வ்யாஸர் மீனவப் பெண்ணுக்கு பிறந்தவரா? என்றார்.
‘ஆமாம்’ என்றேன்‘ அவர் பிறந்த போது அவரை பிராமணர்களெல்லாம் ஒதுக்கி வச்சாங்களாமே?…‘ஆமாம்’ அப்புறம் அவர் படைச்ச விஷயங்களையும் ஒதுக்கி வைக்கலாமே…? கூட்டம் நாயக்கர் பக்கம் திருப்பிப் பார்த்தது.
சரி… மறுபடியும் கங்கைக்கரையின் காட்டுப் பகுதிக்கே திரும்பபோவோம். வ்யாஸர் தனது ப்ரம்ம சூத்திரத்தில் கடவுளைப் பற்றி நான் முன்பு கூறிய தத்துவக்காரர்களை கண்டித்திருக்கிறார்.
சரி… வ்யாஸர் வ்யாக்யானம் என்ன? “நீங்களெல்லாம் ப்ரம்மத்தை, அதாவது கடவுளை காரணத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்கள் (based on reason) ஆனால் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டவர் தர்க்கங்களைத் தாண்டியவர்.
உலகத்தைக் கடவுள்தான் படைத்தார். அவர்தான் காப்பாற்றுகிறார். அவரை அறிவு, காரணம், தாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் அணுகாதீர்கள்.
கடவுள் காரணங்களை கடந்தவன். God is above logic…”…இதுதான் வ்யாஸரின் வ்யாக்யானத்தின் எளிய வடிவம். வ்யாஸர் புராணங்களைத் தொகுத்தவர். வேதத்தை புராண வடிவத்தின் அடிப்படையில் கதைகளாக சொல்பவர். அதனால் வேதம் சொன்னபடி கடவுளை ‘Poetic’ ஆக அணுகினார்.
அதாவது கவித்துவமான கதாம்சமாக.சரி… இப்படிப்பட்ட வ்யாஸருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார். அவரை …Naturalist என்று சொல்லலாம். அதாவது இயற்கைவாதி. அவர்தான் ஜெய்மினி, வ்யாஸரின் சிஷ்யரான ஜெய்மினி, வ்யாஸரோடு நிகழ்த்திய வாதங்கள் சுவராஸ்யமானவை சிந்தனாசக்தியைத் தூண்டுபவை.
ஒருமுறை… காட்டில் வ்யாஸர் ஜெய்மினியோடு பேசிக் கொண்டிருக்கும்போது தனது வழக்கமான அறிவுரையை வழங்கினார்.
‘சிஷ்யா இந்த செடியை, மரத்தை…மண்ணை, உன்னை, என்னைப் படைத்தது கடவுள் அவர்தான் நம்மை படைத்துக் காத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறார் என வ்யாஸர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க…
ஜெய்மினி… ஒரு செடியைக் கையில் பிடித்தவாறே…’ஸ்வாமி கூப்பிடுங்கள் அவனை’ என்றார். ‘யாரையப்பா?‘ அதுதான் நீங்கள் சொன்ன கடவுளை’ ஜெய்மினியின் வினா வ்யாஸரை… — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பகுதி – 87
விழிகளை சுருக்கி இமைத்த வ்யாஸர் ‘அவன் பரலோகத்தில் இருக்கிறானப்பா… அவனை இங்கே இருந்து பார்க்க முடியாது…’ என்கிறார் வ்யாஸர் ஜெய்மினி சிரிக்கிறார் “அது எப்படி இருக்கும்?”
இங்கே யாகத்தில் புகை அதிகமாக வந்தால் புகைமூட்டமாக இருக்குமே… அதுபோல இருக்கும்…”நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்… பரலோகம் உங்களுக்குத் தெரியுமா?… அப்படி தெரிந்தால் காட்டுங்கள் இல்லையென்றால் தெரிந்தவர்களை கூப்பிடுங்கள். அடியேன் பார்த்து பரவசப்பட்டுக் கொள்கிறேன்…?
”வ்யாஸர் பதிலின்றி மௌனித்தபோது…ஜெய்மினி சொன்னார். “கோஹி தஸ்வேத யத்ய முஷ்பின் லோகஅஸ்தீ வாரவேதீ…”யஜுர் வேதத்தில் வருகிற மந்த்ரம் இது.
பரலோகம் யாருக்குத் தெரியும்?…. அதைப் பார்த்தவர்கள் யார்?… இருந்தால் வரச்சொல்?… அது எப்படியிருக்கும்?…என கேள்விகளைச் சொடுக்குகிறது அந்த யஜுர் வேத மந்த்ரம். இந்த வேதக் கேள்விகளுக்காவது விடை வைத்திருக்கிறீர்களா?…….ஜெய்மினி கேட்டார்.
வ்யாஸரோ… “அவன் பரலோகத்தில் தான் இருக்கிறான்… உனக்கும் எனக்கும் இந்த செடிக்கும் கொடிக்கும் உயிர் கொடுத்தவன்… ”ஜெய்மினி… இதைக் கேட்டதும் டக்கென ஒரு கொடியை பிடித்தார்.
இந்தக் கொடிக்கும் பிராணன் உள்ளது வளர்கிறது அசைகிறது. பூக்கிறது, காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. இதற்கு இத்தனையும்.. கொடுப்பது தண்ணீர். அந்த தண்ணீர் தான் கொடிக்கு சோறு….
இப்போது… இந்த கொடியை வாழவைப்பது கடவுள் என்றால்… தண்ணீர் தான் கடவுளா?… அல்லது கடவுள் தண்ணீர் தானா?…அந்தக் கொடிக்கு உள்சக்தி ஒன்று உண்டு…. அதற்கொரு வளரும் சக்தி உண்டு. அது தண்ணீரால் கிடைக்கிறது. அதை ஏன் கடவுள் என்கிறாய்? “இது தான் ஜெய்மினியின் மீமாம்ஸ அதாவது கடவுளைப் பற்றிய விசாரணை.
ஜெய்மினி இப்படி செடிகொடிகளை காட்டி விளக்கம் கொடுத்ததற்கு பலப் பலப் பல யுகங்கள் கழித்து தான் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று விஞ்ஞான ரீதியாக கருத்தும் உறுதிப்பட்டது.
ஜெய்மினி சொல்லும் சோறென்றால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு ஏப்பம் விடுவதல்ல… “ஏதோ வானஸ்ய மஹிமாயத அன்னேனு அதிலோகதீ…”உயிர் சக்தியை கொடுக்கும் உணவுப் பொருள்தான் கடவுள். காலையில் நாம் சாப்பிடுகிறோம். மதியம் கடக்கும் வேளையிலே வயிறு பசிக்கிறதே… ஏன்?… அந்த உணவு கொடுத்த சக்தி தீர்ந்து போய் விடுகிறது. அடுத்தபடி… உயிரும் உடலும் இயக்குவதற்கு சக்தி இல்லை. அதற்கு அன்னம்தான் கடவுள். The food is God.
ஜெய்மினி இப்படியாக இயற்கையை முதன்மைப்படுத்தினார். நம் கர்மாக்களை நாம் செய்து கொண்டிருந்தால்… கடவுளுக்கு என்ன அவஸ்யம்…? என்பது தான் ஜெய்மினியின் கேள்வி. இதுதான் வ்யாஸர்…ஜெய்மினி இடையே நடந்த உரையாடல்.
வ்யாஸர் பிரம்மசூத்திரம் எனும் நூலை இயற்றினார் என்று பார்த்தோம். அதற்கு உத்தர மீமாம்ஸா என்று பெயர். இதனை ராமானுஜர் சங்கரர் போன்றோர் பாஷ்யப் படுத்தியுள்ளார்கள். அதாவது உரையிட்டுள்ளார்கள்.
ஆனால்… ஜெய்மினி பூர்வ மீமாம்ஸ எனும் சித்தாந்த்தை கொடுத்தார். மீமாம்ஸா என்றால் enquiry விசராணை என்று பாத்தோம். வ்யாஸரின் மீமாம்ஸாவை தொட்ட சிலர் ஜெய்மினியின் ‘மீமாமம்ஸா’ வை தொடவில்லை.
ஏனென்றால் ஜெய்மினியை நாஸ்திகர் என்று அழைத்தவர்கள் கூட அன்று உண்டு. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்று கேட்டால்… அதுவும் வேதனையான வேடிக்கை…. கடவுளைப் பற்றிய enquiry விசாரணையில் ஈ டுபட்ட ஜெய்மினியை பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு… இன்னும் ஜெய்மினி கோத்ரம் என்று இருக்கிறார்கள்.
அவர்களோ… ஜெய்மினிக்கு எதிர்மாறாக இருக்கிறார்கள்.சரி… வ்யாஸரை பார்த்தோம். ஜெய்மினியைப் பார்த்தோம்.
இப்போது இன்னொரு புதிய தரிசனம் தலை முழுவதும் கிளி மாதிரி இருக்கிறது. உடல் முழுவதும் மனுஷன் மாதிரி இருக்கிறது. இந்த வித்தியாசமான பிறவி யார்…?அவர் எப்படி இப்படிப் பிறந்தார்.?…அவர் அந்த ராஜாவோடு அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்?… கேட்போமா?… இவருக்கும் வ்யாஸருக்கும் சம்பந்தம் உண்டு… — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்…)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.