இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 76 to 82-1

திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன?  

பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது?

ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்?

திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் “மொட்டை” அடிக்கப்படுபவர்களே!. மொட்டை அடிக்கவேண்டியது ஏன்?

பெண்னை ஆணாக மாற்றிய ஆன்மிக ஆப்பரேஷன்.

திருப்பதி பக்தர்கள் தப்பாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். சிந்தியுங்கள்.

பகுதி – 76

விரதங்கள்பற்றிப் பார்த்தோம். சாப்பிடாமல் தியானம் செய்வது வேதத்துக்கும், கீதைக்கும் எதிரானது என்பதையும் பார்த்தோம். இந்த விரதத்திலே இன்னொரு முக்கிய அம்சம்…இப்போதெல்லாம் குறிப்பிட்ட நாள்கள் விரதம் இருந்து ஒரு மண்டலமோ… இரண்டு மண்டலமோ விரதம் இருந்து… கூட்டம் கூட்டமாக பக்தர்கள் புறப்படுகிறார்கள். நடைபயணமாகவே உன்னை வந்து அடைகிறேன் என்று சொல்லி கால் கடுக்க நடக்கிறார்கள்…

பின் உடல் உயிர் எல்லாம் கஷ்டப்பட மலையேறுகிறார்கள். மலையிலே வீற்றிருக்கிற தெய்வத்தைப் பார்த்து வணங்கி தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள். விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டதாகச் சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா?

விரதம் இருந்து மலையேறுவது தொடர்பான உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

“தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரியவர்த்தம் விதுர்புதாஹா…’’ அதாவது இமயமலை, விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதி தான் தெய்வப்பகுதி மற்றவை எல்லாம் மிலேச்ச பகுதி என்று மநு சொன்னார்.

ஆனாலும்… உலகின் அந்தந்த பகுதியில் வசிக்கும் மலை மக்கள் தத்தமது மலைகளை தெய்வத்தன்மை உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்று தான் இந்த தென்னிந்திய மலை. இந்த மலையில் ஏழு குன்றுகள் இருப்பதால் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த மலை… மிக மிகப் பழங்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? சிந்தனை செய்யுங்கள். எங்கு பார்த்தாலும் காடு, மிக அடர்ந்த காடு, அதற்குள் வனவிலங்குகள் கூட்டம். இந்த இயற்கை அடர்த்திக்கு இடையே தான் அந்த மலைக்கே உரிய மலைவாசிகளும்… அதாவது Hilltribes மக்களும் அங்கே வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு மலையை விட்டால் வேறெதுவும் தெரியாது. கீழே இறங்கி வருவதெல்லாம் அந்த காலத்தில் சாத்தியம் இல்லாத காரியம். வாழ்வோ, சாவோ… அந்த மலை மேல் தான்.காட்டில் விளைந்திருக்கும் பழங்களைப் பறித்துத் தின்றார்கள். காட்டு விலங்குகளை பிடித்து அடித்து மாமிசம் உண்டார்கள்.

ஆனாலும்… அம்மலை மக்களுக்கு தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயம் போகவில்லை.“என்னடா இது… கொடிய மிருகங்கள் எல்லாம் கொட்டம் அடிக்கின்றனவே. உலகத்தின் உயரத்தில் இருந்தும் நமக்கு எப்போதும் பய வாழ்வுதானா?…’’

மலைவாசிகளின் குழந்தைகளை மிருகங்கள் எப்போது கடித்துக் குதறும் என்பது தெரியாது. திடீர் திடீரென நடக்கும். அடர்ந்த காடுகளின் இருட்டே அவர்களுக்கு பயமாக இருந்தது.

பயம்தான் கடவுளை கண்டுபிடிக்க மனிதனுக்கு கிடைத்த முதல் சாவி என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

அந்த வாழ்க்கை பயத்தால் தான்… அந்த மலைவாசிகள் தங்களுக்கென ஒரு தெய்வத்தை வைத்துக்கொள்ள (Security God) விரும்பினார்கள். முதலில் சூரியனை வழிபட்டார்கள், பிறகு விலங்குகளை வணங்கியவர்கள், பின்… idol worship முறையில் தங்கள் தெய்வத்தை அமைத்தனர்.அவர்களின் தெய்வம் எப்படியிருக்கும்? அவர்களை மாதிரியே தான் இருக்கும்.

மலைவாசிகளுக்கு அப்போது கடவுளுக்குத்தான் பஞ்சம். கல்லுக்கா பஞ்சம். தங்கள் மலையிலேயே கல்லெடுத்து… தங்களைப் போன்றே உருவமுள்ள கருப்பான சிலையை அமைத்தார்கள். அதுதான் காளி.

ஆமாம்… காளி என்றால் கறுப்பு. பெண் தெய்வங்களை அதிலும் Rural Gods பற்றி ஏற்கெனவே நாம் பார்த்த போது… ஊருக்கு பாதுகாப்புக்காக பெண் தெய்வத்தை வைத்தார்கள். ஆண் என்றால் அலைந்துகொண்டே இருக்கும் பெண் என்றால் வீட்டை ஒழுங்காக பார்த்துக் கொள்வது போல ஊரையும் ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளும் என்பதற்காக Primitive மக்கள் தங்கள் பகுதி பாதுகாப்புக்காக பெண் தெய்வங்களைப் படைத்தார்கள் என பார்த்தோம்.

அந்த வகையில்… தங்கள் மலையை மக்களை காப்பாற்றிக் கொள்ள… முதன் முதலாக மலைக்காளி உருவத்தை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

வேட்டைக்குச் செல்லும்போது ஆண்கள் வழிபடுவதும்… வேட்டைக்குச் சென்று வந்தபின்னர்… வேட்டையாடிய பொருள்களை காளியின் கால்களில் படையலிட்டு பிறகு எடுத்துச் செல்வதும் அவர்களது பழக்கமானது. இதனால் தானோ என்னவோ… இப்பழக்கத்துக்கு ஏற்றாற்போல அக்கற்சிலையை வடிவமைத்திருந்தனர்.

காளிக்கு இரண்டு கைகள். வலது கையை கீழ்நோக்கிக் காட்டும்படி வைத்து இடது கையை தன்னை நோக்கி தூக்கிக் காட்டுவாள் காளி.`எனக்கு காலடியில் படையல் இட்டால், உன்னை நான் காப்பேன்’ என்பது, மலைவாசிகளின்‘Tribes Tradition Dictionary’ யில் இதற்கு அர்த்தமாக இருக்கலாம்.

இப்படியாக காளிக்கு படையலிட்டு பூசையிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்து மலைமக்கள்… இதே காளியை மையமாக வைத்து கொண்டாட்டங்கள் நடத்தவும் தவறவில்லை.

காளிக்காக மலையெங்கிலும் உள்ள மலர் பறித்து… சூட்டி தங்களது உற்சாகப் பண்களை இசைத்துக் கொண்டாடவும் செய்தார்கள். இதெல்லாம் அவர்களது பயத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு Entertainment.

இது போலவே பல நூறு வருஷங்களாக மலையில் இந்த காளி வழிபாடு தொடர்ந்து வந்தது. வெளி மனிதர்களால் அந்த மலை தீண்டப்படாதவரை இந்த காளி வழிபாடு தான் மலைமேல் நடந்த ஒரே வழிபாடு. மலைக்காளியை ஒருபுறம் வையுங்கள்.

இந்த விஞ்ஞான யுகத்திலே… பகவத் சிருஷ்டியையே மாற்றிப் பார்க்க துணிந்து விட்டார்கள். அதாவது ஏதேதோ ஆபரேஷன்கள் செய்து ஸ்த்ரீயை புருஷாளாகவும், புருஷாளை ஸ்த்ரீயாகவும் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்ற முடியுமா?

விஞ்ஞானம் முன்னேறாத அந்த காலத்திலேயே இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்துமுடிந்து விட்டதே… எங்கே?….எங்கே….? — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.


பகுதி – 77

பெண்ணை ஆணாய் மாற்றும் ஆபரேஷன் பற்றி எழுதினேன் இல்லையா?… என்னடா இவர்,ஆன்மீக தொடரில் ஆபரேஷனை பற்றி எழுதுகின்றாரே என்று குழம்பாதீர்கள்.

அதாவது இது ஆன்மீக ஆபரேஷன். மலைமக்களின் பூர்வீக தெய்வமாக மலைக்காளி நிலைபெற்று வந்ததை சொன்னேன். பலநூறு ஆண்டுகளாக… வெளியாட்கள் மலையேறும் வரை காளிதான் அங்கே கடவுள்.

அப்படியென்றால் அந்தக் காளி… திருப்பதியில் அவதரித்த… ஏழுமலையிலே மலைமக்கள் பெற்றெடுத்து வணங்கிய காளி இன்று எங்கே?… இந்த கேள்வியின் பதிலில் தான் ஆன்மீக ஆபரேஷன் ஆரம்பமாகிறது.

பற்பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு…மலையின் மேலே… மலைமக்கள் அல்லாதவர்கள் ஏற ஆரம்பித்தனர். மலைமக்கள் அல்லாதவர்கள் என்றால்..?. பிராமணர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மலையில் ஏறியவர்கள்… அந்தக் காளி சிலையை பார்த்தார்கள்.

காட்டு மலர்களை பறித்தும், வேட்டையாடிய மிருகங்களை படைத்தும் ‘பூசெய்’ செய்து வந்த மலைமக்களைப் பார்த்த பிராமணர்கள்… ‘இப்படியா பூசை செய்வது?

நாங்கள் ஆகமம் தெரிந்தவர்கள். பூசையை எப்படி செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வதால் காளிக்கு சக்தி கிடைக்காது. காளியின் அருளும் நமக்குக் கிடைக்காகது.அதனால் காளியை எங்களிடம் விட்டு விடுங்கள்” என்றார்கள் பிராமணர்கள்.. மலைமக்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது .

எங்கிருந்தோ மேலே ஏறி வந்து… நம் தெய்வத்தை கேட்கிறார்களே என்று. எல்லாரும் ஒன்றாகக் கூடினர். பலநூறு ஆண்டுகளாக நாம் வழிபட்டு வந்த தெய்வத்தை ‘நாங்கள் வழிபடுகிறோம்’ என்று சொல்கிறார்களே?… கொடுப்பதா வேண்டாமா… இதுதான் விவாதம்.கொடுப்போம்…

நம் காளிக்கு சக்தி அதிகம் கிடைக்கட்டும் என்றனர் சிலர். இல்லை… வேண்டாம் நம் காளியை நாமே வழிபடுவோம் என்றனர் சிலர்.உடனே இது நடக்கவில்லை. காலப் போக்கில்… நாளடைவில் அந்த காளிச்சிலை பிராமணர்களின் கைக்கு வந்தது.

இதுநாள் வரை நீங்கள் காளிக்கு பூஜை செய்திருக்கலாம். மலர்களையும், மாமிசங்களையும் இனிமேல் படைக்கக்கூடாது. மலைமக்களின் காளிதேவியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆகமவிதியில் வழிபாடுகளை ஆரம்பித்தனர் பிராமணர்கள். காளி தேவிக்கென மிக சின்னதாக ஒரு கோவிலும் கட்டப்பட்டது.

முற்றிலும் ஆஹம ரீதியிலான வழிபாடுகளை ஆரம்பித்த பிராமணர்கள் காளிதேவியை தங்களுக்குள் அடைத்தார்கள்.ஆகமப்படி பெண் தெய்வங்கள் இருக்கும் கோவிலில் சிம்மத்தை ஸ்தாபித்து வைப்பார்கள். ஆண் தெய்வங்கள் இருக்கும் கோயில்களில் ரிஷபத்தை ஸ்தாபித்து வைப்பார்கள். இதன்படி… காளிக்கு பக்கத்தில் சிம்மத்தை ஸ்தாபித்தார்கள். இப்படியான காளியை தங்கள் வசம் எடுத்துக் கொண்ட பிராமணர்கள்…

‘இனிமேல் நீங்கள் உள்ளே வரக்கூடாது. நாங்கள் பூஜை செய்கிறோம். நீங்கள் வெளியே நின்று வழிபட்டு விட்டு அப்படியே போய்விடுங்கள். இது ஆகம ரீதியிலான காளி, உங்கள் பழைய காளி கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வழிபடுவதற்கு.

நாங்கள் நடத்தும் வழிபாட்டு முறைகளை மீறினால்… காளிக்கு சக்தியற்றுப் போய்விடும். அதனால்… காளிக்கு நீங்கள் இதுவரை நடத்திய உற்சவங்கள், திருவிழாக்கள், படையல்களுக்கான பொருளை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும்பார்த்துக் கொள்கிறோம்.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மலைக்காரர்கள். இந்த ஆகம அதிரடியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னொரு மாற்றமும் கொஞ்ச காலத்தில் நடந்தது.

இதைத் தான் நான் ஆபரேஷன் என்று சொன்னேன். வழிபட வந்த மலைமக்கள்… தங்கள் காளியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். காரணம்?… நேற்று வரை பெண்ணாக இருந்த காளி… இன்று ஆணாக மாறிவிட்டாள். காளியின் கைகளில் நாகங்கள் சுருண்டிருந்தன. பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அதாவது நாகக்காப்பு.என்ன இது?…

“நாங்கள் இந்த தெய்வத்தை ப்ராபகண்டா ஆக்கப் போகிறோம். இது சைவர்களின் தெய்வம்… சிவபெருமான். காளி கிடையாது…

”இப்போதுதான் பிராமணர்கள் தங்கள் அடிமடியை அவிழ்த்துக் கொண்டிருப்பதை மலைமக்கள் உணர்ந்தனர். போராடத் தொடங்கினார்கள். ஆயுதங்களை தூக்கினார்கள். ஆயுதங்களை பிராமணர்களின் அறிவு தோற்கடித்தது.

“இருங்கள். பொறுங்கள். இந்த தெய்வத்தால் உங்களுக்கும் பலன்கிட்ட வேண்டும். எங்களுக்கும் பலன் கிட்ட வேண்டும். உங்களின் பூர்வீக தொழில்களை கூறுங்கள்…

“வேட்டையாடுவது, தேனெடுப்பது, முடிமழிப்பது…” “என்னது?… கடைசியாய் என்ன சொன்னீர்கள்?…” “எங்களில் ஒரு பிரிவினர் அம்பட்டையர்கள். முடி மழிப்பது தான் எங்கள் வேலை…”

“சபாஷ்! இனிமேல் கோயிலுக்கு உள்ளே யார் வந்தாலும்… தரிசனம் செய்ய யார் வந்தாலும்… உங்களிடம் உட்கார்ந்து தலையைக் காட்டி முடிகளை மழித்துக் கொண்டுதான் உள்ளே வரவேண்டும்.

இது இன்று முதல் க்ரமம். அதற்கேற்ற தட்சணையை நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். உள்ளே என்ன தட்சணையோ அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.உங்களுக்கும் பலன் எங்களுக்கும் பலன். உங்களுக்கும் தட்சணை. எங்களுக்கும் தட்சணை உங்களுக்கும் அனுக்ரஹம். எங்களுக்கும் அனுக்ரஹம். ”.

மலை மக்களான அம்பட்டையர்கள் காளியை வழிபடும் உரிமையை இழந்து வெளியே அமர்ந்து மொட்டையடிக்க ஆரம்பித்தார்கள். பிராமணர்கள் உள்ளே சென்று மலை மக்களுக்கு மொட்டையடித்தார்கள். இந்த நிலையில்தான்…– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்


பகுதி – 78

இந் நிலையில்தான்…எந்த நிலையில் தான்…. திருப்பதி மலைக்காளியை பரமசிவனாகவும் சுப்ரமண்யனாகவும் சைவர்கள் மாற்றி விட்ட நிலையில் தான் இந்தத் தகவல் வைணவர்களுக்குக் கிடைக்கிறது. கொதித்தெழுந்தனர்.

வைணவத்திலகம் எம்பெருமானார் என்ற உயர்ந்த பட்டப்பெயர் கொண்ட சான்றோர் ராமானுஜர் தலைமையில் கொதித் தெழுந்தனர். மலைமீது அடுத்ததாக வைணவப்படை ஏறியது.

ஸ்ரீராமானுஜர் காலம் 11-ஆம் நூற்றாண்டு அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. தன்னுடைய மாமா திருமலைநம்பியிடம் ராமாயணம் கேட்பதற்காக திருப்பதிக்குப் போனார் ஸ்ரீராமானுஜர். அங்கே கீழே ராமாயணம் கற்றுக்கொண்டிருந்த போது தான்… மேலே மலையில் சிவபெருமானை வழிபடுகிற தகவல் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். தன்னுடன் பல வைணவர்களை அழைத்துக்கொண்டு மலையேறினார். அங்கேயோ… கோயில் கட்டி அதற்குள் இந்த காளியை சிவனாக்கி சைவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இந்த வைணவ-சைவ போரில் ஸ்ரீராமானுஜர் ஈடுபட்டதைப் பற்றி குருபரம்பரை என்றால் குரு என்றால் ஆச்சார்யர்கள் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அதாவது… வைணவ சமய சம்பிரதாய ஆச்சாரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை தொகுத்தெடுத்து தரும் புஸ்தகம் தான் குருபரம்பரை. இந்த புஸ்கத்திலே தான் திருப்பதி மலை மேலே நடந்த அந்த சம்பவம் விளக்கப்படுகிறது.

ராமானுஜர் தன் தலைமையில் வைணவர்களை கூட்டிக் கொண்டு மலை உச்சிக்குச் சென்றதும் அங்குள்ள சைவர்கள் கோபத்தின் உச்சிக்குப் போனார்கள்.

‘இங்கே எங்கே வந்தீர்கள்’ இது எங்கள் கோயில், எங்கள் தெய்வம், மரியாதையாக இறங்கிப் போங்கள்’ சைவர்கள் குரல் எழுப்பினர்.

ராமானுஜரும், அவரது அடியார் குழாமும் அசையவில்லை. இது பகவான் நாராயணன் எழுந்தருளியிருக்கும் கோயில். இங்கே இத்தனை காலமாக, நீங்கள் இருந்தது போதும். இனி மேலாவது இடத்தைக் காலி பண்ணுங்கள்…

வைணவர்கள் வாதம் செய்தனர்.“முடியவே முடியாது பாருங்கள் அவர் கைகளில் பாம்புகள் சுருண்டிருக்கின்றன. அதனால் இவர் சிவன்தான்.” தாங்கள்கொஞ்ச காலத்துக்கு முன்பு மாட்டிய நாகக்காப்புகளை ஆதாரமாக எடுத்து வைத்தனர்.

இரண்டு தரப்பிலும் வாதப்பிரதிவாதங்கள் வெடித்த நிலையில் எங்கிருந்தோ ஒரு மன்னனை அவர் பேர் தொண்டமான் சக்கரவர்த்தியாம். மன்னன் முன்னிலையில் அந்த ‘பகவத் பஞ்சாயத்து’ தொடர்ந்தது. (அந்த காலத்தில் மலைமேலே மன்னன் ஏது? அவன் ஏன் இங்கு வந்தான்? என்ற கேள்விகள் எனக்குள்ளும் எழத்தான் செய்கின்றன.

ராமானுஜர் வாய்திறந்தார். “சரி… நாம் இரண்டு தரப்பினரும்… இப்படி வாதப் பிரதி வாதங்கள் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இம்மலையில் இருப்பது பெருமாள்தான் என நாங்கள் அறுதியிட்டுக் சொல்லுவோம். நீங்களோ இதுசிவகிரி என்கிறீர்கள்.

இப்பிரச்சினையை நாம் பேசித்தீர்க்க முடியாததால்… பகவானே தீர்த்து வைக்கட்டும் நான் யார் பெருமாளா, சிவனா?…என அவனே தன் பதிலைச் சொல்லட்டும்” என்றார் ராமானுஜர்.

எம்பெருமானாரே… அவர் எப்படிச் சொல்லுவார்? எனக் கேட்டார் ராமானுஜரின் சிஷ்யர் ஒருத்தர். கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு. இத்தனை விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அம்மலைக்கே உரிய மலைமக்கள், இந்த பஞ்சாயத்தைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா எனத் தெரியாமல் விழித்தனர்.

சரி மறுபடியும் குரு பரம்பரைக்குச் செல்வோம். பகவானே எப்படி பதில் சொல்வார் என்ற கேள்விக்கு ராமானுஜர் பதில் சொன்னார். “பெருமாளின் முக்கியமான ஆயுதங்கள்…. சங்கு, சக்கரம், சிவனின் முக்கிய ஆயுதங்கள் மான், மழு, இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். சாதகமான சூழ்நிலை வந்தால் எடுத்துப் பொருத்தி விடலாம். என்ற நம்பிக்கையில்… இரண்டு தரப்பினரும் தத்தமது பகவான்களின் ஆயுதங்களைக் கொண்டு வந்தனர்.

“இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் சன்னதியில் விக்ரஹத்துக்கு கீழே வைப்போம். ராத்திரி சன்னதியை இழுத்துப்பூட்டிவிடுவோம். எல்லோரும் போய்விட்டு சூர்யோதய சமயத்திலே வருவோம். சன்னதியை திறந்து பார்ப்போம். விக்ரகம் சங்கு சக்கரத்தை சூடிக் கொண்டிருந்தால் அவர் பெருமாள். மான், மழுவை தரித்துக் கொண்டிருந்தால் சிவன். இந்த முடிவுக்கு கட்டுப்படுகிறீர்களா?” ….கேட்டார் ராமானுஜர்.

கூடிப் பேசினார்கள். ‘எல்லாம் பகவத் சங்கல்பம். சரி… இதுதான் சரி…’ எல்லோரும் சம்மதித்தனர்.

சங்கு சக்கரத்தையும், மான், மழுவையும் அந்த சன்னதிக்குள் கொண்டுபோய் வைத்தார்கள். ராத்திரி நேரம். கும்மிருட்டு உள்ளே யாராவது ஒளிந்திருக்கிறார்களா? ராத்திரி இருட்டோடு இருட்டாக உள்ளே இருந்து, தங்களுக்கு சாதகமான ஆயுதத்தை எடுத்து மாட்டிவிடுவார்களோ என்ற சந்தேகத்தில் நன்றாய் சன்னதியை ஆராய்ந்து விட்டு வெளியேவந்தார்கள்.

சன்னதியை இழுத்துப் பூட்டினர்.உள்ளே விக்ரஹத்தைத் தவிர யாரும் இல்லை. இனி எல்லாம் அவன் தீர்ப்பு… கூட்டம் கலைந்தது. ராத்திரிப் பொழுது எதிர்பார்ப்போடு கரைய… சூர்யோதயம் நேர்ந்தது. வானம், பூமி வெளிச்சமாயின.
பகவான் யார்? அவன் தீர்ப்பு என்ன? ஆவலோடு கதவைத் திறந்தார்கள்… உள்ளே? — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 79

ராமானுஜரின் யோசனைப்படி… பெருமாள், சிவன் ஆகிய இருவரது இஷ்ட ஆயுதங்களையும் சந்நிதிக்குள் வைத்துப் பூட்டுகிறார்கள். மறுநாள் சூரியன் பிரவேசம் ஆவதற்கு முன்பே வாசலில் எல்லாரும் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அவர்களது நெஞ்சங்களில் ‘ஆண்டவன் தீர்ப்பு’ என்னவோ என்பதைஅறியும் ஆவல்.

சூரியன் பிரவேசித்த பிறகு… பூட்டு திறக்கப்பட்டது. கதவு விலக்கப்பட்டது. உள்ளே…தனது தோள்பட்டைகளில் சங்கு சக்கரம் தாங்கி ஜம்மென நின்றிருந்தது விக்ரஹம்.

காரணம், பெருமாளுக்கே உரிய நான்கு கைகள் இங்கே இல்லை. இரண்டு கைகள் தான். சக்கரம் சூடிக்கொண்ட சந்நிதியைப் பார்த்ததும் வைஷ்ணவர்கள் முகமெல்லாம் பூத்துப் போனது. சைவர்கள் முகமெல்லாம் செத்துப்போனது. இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

சங்கு சக்கரத்தை சூடிக் கொண்டதோடு நிற்கவில்லை பெருமாள். நேற்று ராத்திரி அங்கே வைக்கப்பட்டிருந்தன அல்லவா?… சிவனது மான், மழு மற்றும் சூலம் போன்ற ஆயுதங்கள். அந்த சிவ ஆயுதங்களெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தூள் தூளாகக்கிடந்தன.

பகவானின் சந்நிதியில் ஒரு பக்கா ரவுடி புகுந்தது போல… சிவனது ஆயுதங்கள் தூள் தூளாக சிதறடிக்கப் பட்டிருந்தன. இதைக் கண்டதும் வைஷ்ணவர்களுக்கு மேலும் கொண்டாட்டமானது. சைவர்கள் திரும்பிவிட்டனர். இந்த காரணத்தினாலேயே… ஸ்ரீராமானுஜருக்கு ‘அப்பனுக்கு சங்காழி அளித்தவர்’ என்ற பட்டப் பெயர் உண்டானது.

அப்பன் என்றால் திருப்பதி பெருமாள் என்று பொருள். அப்பனுக்கே அதாவது திருப்பதி பெருமாளுக்கே சங்கு, ஆழி அதாவது சக்கரம் வழங்கியவர் என்று அர்த்தம். இத்தனையும் குரு பரம்பரையில் குறிப்பிட்டுள்ளவை தான். இதுபோல… மற்ற சமயத்தவரிடமிருந்து வைணவத்தை போரிட்டு காப்பாற்றியவர் என்பதாக ராமானுஜர் மீதுராமானுஜ நூற்றந்தாதி… என்றொரு அந்தாதியே பாடியிருக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

அதில் ஒரு பாடல் கேளீர்….‘தர்க்க சமணமும் சாக்கிய பேய்களும்-தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதமும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீ நிலத்தே பொற்கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே..

.’‘அதாவது… வாதம் பண்ணும் சமணர்களும், புத்தமதம் என்னும் பேய்களும்… தாழ்சடையோனாகிய சிவபெருமானின் வழியை பின்பற்றும் சைவர்களும், கடும் சூனியவாதம் பேசுபவர்களும்… எல்லாமே பொய் என குறும்பு பேசும் அத்வைதிகளும்… செத்து ஒழிந்தனர். எப்போது?… எங்கள் ராமானுஜர் பிறந்த பிறகு…’என்கிறது இந்த அந்தாதி.

திருப்பதி மலையிலிருந்து திடீரென இறக்குவது போலிருக்கிறதே என எண்ணாதீர்கள். மேலே இன்னும் கொஞ்சம் செய்திகள் பாக்கியிருக்கிறது.

மலைமேல் உள்ள பகவான் தன் இஷ்டமான சங்கு, சக்கரத்தை சூடிக் கொண்டார் சரி… பிறகு எதற்கு சிவனுடைய ஆயுதங்களை அப்படி துவம்சம் பண்ணி சிறு சிறு துண்டுகளாக செய்யவேண்டும்?…

சங்கு, சக்கரத்தைச் சூடிக் கொண்டாலே… பெருமாள் என்பது அனைவர்க்கும் புரிந்து விடும். பிறகு எதற்கு… பகவான் நாராயணன் சிவபெருமானின்ஆயுதங்களை உடைக்க வேண்டும்.?… இப்படி உடைப்பதா தெய்வத்துக்கு அழகு?

…இந்தக் கேள்வியை கேட்கும் போதுதான் ‘செவி வழிச் செய்தி’ என்ற வகையில்… குருபரம்பரையை அடிப்படையாக வைத்து ஒரு செய்தி பரவியிருக்கிறது.

அதாவது முதல்நாள் ராத்திரி… இருதரப்பு ஆயுதங்களையும் உள்ளே வைத்துப் பூட்டி விட்டார்கள். உள்ளே மனுஷாள் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டுதான் எல்லாரும் சென்றார்கள். இதன்பிறகு… ராத்திரியில் ராமானுஜர் மறுபடியும் கோயிலுக்கு வந்தார். எப்படி?… ஒரு பாம்பு வடிவம் எடுத்தாராம். பாம்பா?..
.
ஆமாம். ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சம் என்று அவருக்கு ரொம்ப காலம் முன்பு வாழ்ந்த நம்மாழ்வாருக்கு பெருமாள் பிரசன்னமாகி கூறியதாக அய்திக குறிப்பு உண்டு….

அதன்படியே… நம்மாழ்வார் தனக்குப் பின் வரப்போகும் ராமானுஜரைப் பற்றி… ‘கலியும் கெடும் காண்மின்’ என பாடி வைத்திருக்கிறார். இந்த வகைக்கு பவிஷ்யதாசார்யர் என்று பெயர். அதாவது தனக்குப் பின் வரும் ஆசார்யரைப் பற்றி அறிந்து போற்றுதல். இப்படியாக ‘ஆதிசேஷனின் அம்சமாக ராமானுஜர் அவதரிப்பார்’ என்று பெருமாளே…நம்மாழ்வாருக்கு சொன்னதாக அய்தீகம்.

அப்படிப்பட்ட… ஆதிசேஷனின் அம்சமாகிய ராமானுஜர்… அன்று ராத்திரி மறுபடியும் கோயிலுக்கு வந்தார். சந்நிதி பூட்டிக் கிடக்கிறது. உள்ளே இருதரப்பு ஆயுதங்களும் இருக்கின்றன. காலையில் சங்கு, சக்கரம், சூடிக் கொண்டு பெருமாளாகத்தான் அவர் காட்சியளிக்க வேண்டும் என முடிவு கட்டிய ராமானுஜர்… கோயிலை சுற்றிச் சுற்றி வருகிறார்.

உள்ளே போக ஒரே வழி… கோமுகைதான். அப்படியென்றால்?… உள்ளே உள்ள விக்ரஹத்துக்கு திருமஞ்சன நீராட்டு வைபவம் நடத்தும் போது அந்த நீர்மம்… வழிந்து வெளியே ஓடி வருமே… அந்த துவாரத்துக்கு பெயர்தான் கோமுகை. அது ஒன்றை தவிர சன்னதிக்குள் செல்ல வேறு வழியில்லை.

டக்கென… ஆதிசேஷனின் அம்சமான ஒரு பாம்பாக வடிவெடுத்த ராமானுஜர் அந்த துவாரம் வழியாக சன்னதிக்குள் சென்று விட்டார். கடகடவென சங்கையும், சக்கரத்தையும் எடுத்து விக்ரஹத்தின் தோள் பட்டையில் சொருகுகிறார். காரியம் முடிந்தது. மறுபடியும் பாம்பாகி வெளியே வந்து…ராத்திரியில் மறைந்து விட்டார்.

பிறகு… காலை எல்லாரோடும் வந்து திறந்து பார்க்கும் போது சங்கும் சக்கரம் சூடியபடி நிற்க… சிவ ஆயுதங்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் அந்த செவிவழிச் செய்தி…அப்படியென்றால்?… — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

பகுதி – 80

குரு பரம்பரையை மையமாக வைத்து எழுந்த அந்த செவி வழிச் செய்தியைக் கேட்டீர்கள் அல்லவா? செவி வழிச் செய்தி என்றால், மறுக்கலாம், மறுக்காமலும் இருக்கலாம். தனியே மொட்டையாய் இந்தச் செய்தி முளைத்திருந்தால் இதை மறுதலித்து விடலாம். ஆனால், குரு பரம்பரையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை ஒட்டியது என்பதால் ரொம்பவும் புறக்கணித்துவிட முடியவில்லை.

இன்னொரு பக்கம்… ராமானுஜர், ஆதிசேஷன் வடிவம் கொண்டு கோமுகம் வழியாக உள்ளே சென்ற வைபவமும் ஒரிஜினல் குரு பரம்பரையில் இருக்கிறது. அதை விட்டு வைத்தால்… ராமானுஜர் நிரூபணம் செய்தது கேள்விக்குறி ஆகிவிடும் என்று… அச்சம்பவத்தை செவி வழிச் செய்தியாக மாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கருத்து கனமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலைமையிலே… திருப்பதி மலையைப் பற்றிப் பேச நீர் யார்? உமக்கு என்ன பாத்யம் இருக்கிறது? என என்னிடம் சிலர் நேரடியாகவே வந்து கேள்வி கேட்கிறார்கள்.

இதற்குப் பதிலாகவும் திருப்பதி மலையைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யத்தையும் சொல்கிறேன்.

ராமானுஜரின் மாமா திருமலை நம்பி என்று சொன்னேன் அல்லவா? அவர் மலை மேலே இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்தாராம்.

அந்த மலையிலே செய்யக்கூடிய பெரிய கைங்கர்யம் பெருமாளுக்கு நித்யப்படி தீர்த்தம் கொண்டு வருவது தான். ஏனென்றால்… மலைமீது சிலச் சில குன்றுகளுக்கு இடைப்பட்ட ஆழப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அதை தேடிப்பிடித்து குடத்தில் எடுத்துக்கொண்டு வரவேண்டும். ரொம்ப கஷ்டமான காரியம். இதுபோல திருமலை நம்பி மலையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்று பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணி வந்தார்.

அன்றைக்கு என பார்த்து… சுற்று வட்டாரத்தில் எங்கேயும் தண்ணீர் இல்லை. ஆஹா… பகவானுக்கு எப்படியாவது கைங்கர்யம் செய்யவேண்டுமே என யோசித்த திருமலை நம்பி எங்கெங்கும் அலைந்தார். தண்ணீரே கிடைக்கவில்லை. ரொம்ப ரொம்ப அலைந்து கஷ்டப்பட்டு ஒரு குடம் தண்ணீரை மொண்டு விட்டார். (திருமலை நம்பி பட்ட கஷ்டத்தை உரைப்பதற்காக ஆகாசகங்கை போய் தண்ணீர் கொண்டு வந்தார் என்றும் சொல்வார்கள்.)

ரொம்ப சந்தோஷப்பட்டபடியே அந்தக் குட தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார். அப்போது… ஒரு குன்றின் அந்தப் பக்கத்திலிருந்து… `தாத்தா’ என ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தார் திருமலை நம்பிகள். தாகத்தால் தவிக்கும் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

`எனக்கு மிகமிக தாகமாக இருக்கிறது. வாய்க்குள் எச்சில்கூட வற்றிவிட்டது. கொஞ்சம் தீர்த்தம் தந்தீர்கள் என்றால் உங்களுக்கும் தன்யனாவேன். (நன்றிக்குரியவன் ஆவேன்) என கெஞ்சினார். அவரது கண்கள், கைகள் இரண்டும் திருமலை நம்பிகள் தண்ணீர் கொடுப்பார் என எதிர்பார்த்திருந்தன.

திருமலை நம்பிகள் திரும்பிப் பார்த்தார். இந்தக் காலத்தில் கிராமப் பகுதிகளில் எங்கெங்கோ அலைந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்து வருவதுபோலவும், நகரப் பகுதிகளில் லாரி வந்து நிற்கும் போது அடித்துப் பிடித்து ஒரு குடம் தண்ணீர் பிடித்தவன், எப்படிப் பார்ப்பானோ கிட்டத்தட்ட அதேபோல திரும்பிப் பார்த்தார்.

`மன்னிக்கணும் அய்யா…. இது பெருமாள் கைங்கர்யத்துக்கு எடுத்துக்கொண்டு போறேன். நானே ரொம்ப கஷ்டப்பட்டு பிடிச்சேன். உங்களுக்குக் கொடுக்க முடியாது.’“என்னப்பா ஒரு மனுஷன் தவியா தவிக்கிறேன். எனக்குக் கொடுக்காம… பெருமாள், பெருமாள்னு சொல்றியே? இது உனக்கே நியாயமா? எனக்குத் தண்ணீர் தந்தால் ஒரு உயிரை காப்பாற்றின புண்ணியம் கிடைக்கும். அந்தக் கல்லுக்கு ஊற்றி என்ன பண்ணப் போறே?’’ என்றார் அந்த தாகவாதி. திருமலை நம்பியோ `முடியவே முடியாது’ என சொல்லிவிட்டு நடந்தார்.

மீண்டும் தாத்தா… என குரல். இப்போது கொஞ்சம் வேகமாக ஒலித்தது… திரும்பிப் பார்த்தால் பெருமாள்தான் அந்த தாகவாதியாக வந்து தண்ணீர் கேட்டு சோதித்து இப்படி காட்சி தந்திருக்கிறார். இதையேன் நான் இப்போது சொல்கிறேன்? `தாத’ என்றால் சமஸ்கிருதத்தில் அப்பா என ஒரு அர்த்தம் உண்டு.

பெருமாளை பிரம்மனுக்கு அப்பா என்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவான பெருமாளே திருமலை நம்பியை `தாத…’ அதாவது அப்பா என அழைத்ததால்… திருமலை நம்பி அடியார்க்கு தாத்தா ஆனார். அவரது வம்சத்தினர் தாதாச்சாரியார்கள் ஆயினர்.

அதாவது…`பிதாமகஸ்ய அபி பிதாமஹாய பிராசேத்து ஆதேஸ பலப்ரதாய ஸ்ரீபாஷ்யகாரஉத்தம தேசிகாய ஸ்ரீஸைல பூர்ணாய நமோ நமஸ்தே…’- பிரம்மனுக்கு அப்பாவாகிய பெருமாளே திருமலை நம்பியை அப்பா என அழைத்ததால் அவரை நாம் போற்றுவோம் என்கிறது இந்த ஸ்லோகம்.

அதாவது திருமலை நம்பியின் வழிவழி வந்தவர்கள் `தாத்தாச்சாரி’ ஆகினார்கள். அடியேனும் அப்படி வந்தவன்தான் என என் குடும்பத்தினர் சொல்லியுள்ளார்கள்.

அதனால்… நானும் திருப்பதியைப் பற்றி பேச, எழுத பாத்யம் உள்ளவன்தான். இதற்காக மட்டும் அந்தக் கதையை நான் சொல்லவில்லை.

`மனிதனுக்கு உதவு. தெய்வத்தைப் பிறகு பார்’ என தெய்வமே திருமலை நம்பிகளிடம் சொன்னது என்ற நீதியை உணர்த்தவே இதை நானிங்கு குறிப்பிட்டேன். அடுத்து… திருப்பதி மலையைப் பற்றி நாம் பார்க்கையிலே முக்கியமானவர் ஹத்தியராம் பாபாஜி. யார் இவர்? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.


பகுதி – 81

திருப்பதி மலையின் ‘கல்லின் கடவுள்’ அதாவது மண்ணின் மைந்தன் என்று சொல்கிறோமே… அது போல இம்மலைக்கேயுரிய தெய்வம் காளி என்பதையும்… அவள் எவ்வெவ்வாறு மாற்றப்பட்டாள் என்பதையும் இதுகாறும் பார்த்தோம்.

சென்ற அத்யாயத்தின் முடிவில் ஹத்தியராம் பாபாஜி என்பவரை குறிப்பிட்டு அவர் முக்கியமானவர் என்றும் சொல்லியிருந்தேன். இவர் யார்?… திருப்பதியில் இவர் என்ன செய்தார்?… பேரைக் கேட்ட உடனே உங்களுக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என யூகிக்க தோன்றும்.

ஹத்தியராம் ஒரு வடக்கத்தியர், வட இந்தியாவிலிருந்து அமைசியைத் தேடி அலைந்து… பரதேசியாய் சுற்றிச் சுற்றி திருப்பதிக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது இங்கே வேங்கடாஜலபதி கோயிலில் வழிபாடுகள் இயல்பாக அமைதியாக நடந்து கொண்டிருந்தன. பாபாஜி வேங்கடாஜலபதி மீது பக்தி செலுத்தினார்.

சன்னிதிக்கு பக்கத்திலேயே இருப்பார். கோயில் காரியங்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். கொஞ்ச நாளில்… இந்த ஆர்வத்தினாலேயே பாபாஜி… திருப்பதி கோயிலின் நிருவாகியாகவே மாறினார். சரி… இவர் என்ன அப்படி… பெரிதாக செய்துவிட்டார் என்கிறீர்களா?…

மலை மீது ஏறி… தெய்வத்தைப் பார்க்க வருகிறவர்கள் மொட்டையடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று உங்களுக்கு விளக்கினேன். ஞாபகம் இருக்கிறதா?…

மலைமக்களில் பூர்வீக குடிகளில் ஒரு பிரிவினரான அம்பட்டையர்களுடன்… பிராமணர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி… ‘உனக்கும் தட்சணை வேண்டும். எனக்கும் தட்சணை வேண்டும்…’ என்று பேசிய பேரத்தின் படி… கோயிலுக்கு வருபவர்களுக்கு அம்பட்டையர்கள் மொட்டையடித்து வருமானம் பார்த்தார்கள்.

அந்த மொட்டையடிக்கும் பழக்கத்தை தனது காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் பாபாஜி… கோயிலை ப்ராபகண்டா அதாவது பிரபல்யமாக்க வேண்டுமென்றால், இதுபோல ஏதாவது செய்யவேண்டும்… என நினைத்து இப்படிச் செய்தார்.

இந்த காலகட்டங்களில் தான் திருப்பதிக்கு ஜனங்கள் கொத்துக் கொத்தாக வரத் தொடங்கினர். இப்போது… புரட்டாசி மாசம்… திருப்பதிமலையே ஆடிப்போகும் அளவுக்கு பெருங்கூட்டம் கூடுகிறது. இந்த அளவு கூட்டம் அன்று இல்லையென்றாலும்… அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு… அப்போதைய சூழலுக்கு தக்கவாறு கூட்டம் வரத் தொடங்கியது
.
இப்படிப்பட்ட நிலையில்தான்… சில பிராமணர்கள் பாபாஜியிடம் சென்றனர். ‘விக்ரஹத்தின் கைகளில் பாம்பு இருக்கிறது. அதை எடுத்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல… அந்த பின்னலையும்… நீக்கி விட்டால்…’ இதற்கு… ‘பழையபடி தான் இருக்கும். எதையும் மாற்ற முடியாது’… என மறுத்துவிட்டாராம் பாபா. அதென்ன பின்னல்?…

இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை. இதை உங்களிடம் சொல்லக்கூடாது. கூடவே கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும்… கொஞ்சம் நெருடலுடனேயே சொல்கிறேன்.

பல வருடங்களுக்கு முன்பு…இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகள் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே… எப்போதும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் மோதல் தேசங்கள். இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் யுத்தக் காற்றையே சுவாஸித்துக் கொண்டிருந்தனர். போர்ப்புழுதி படிந்த அந்த நித்யகண்ட பூமியில் உள்ளதுதான் ஜெருசேலம்.

திருப்பதி பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் ஏதுக்கடா… ஜெருசேலம் போனார் என நீங்கள் யோசிக்கலாம். அந்த ஜெருசேலத்தில் ஜனித்த ஒரு ஸ்த்ரீக்கு இந்தியக் கோயில்களைப் பற்றி அறிய ரொம்ப அலாதியான ஆசை. அதுவும் திருப்பதி கோயிலை, பெருமாளை பார்க்கவேண்டும் என்கிற ஆசை. அந்த யூத இனத்தைச் சேர்ந்த யுவதிக்கு நம்மூர் இசையரசி எம்.எஸ். அம்மா அவர்களைத் தெரியும்.

அந்த அறிமுகம் மூலமாக திருப்பதி கோயிலுக்கு வந்தார். தனக்கு அவ்வப்போது வரும், சனாதன சமயம் பற்றி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக வேதம் அறிந்த ஒருவரை தேடினார். அந்த யூத யுவதி.

உடனே… என்னைப் பற்றிய தகவல்களை அவருக்கு யாரோ கொடுக்க… என்னை அணுகினார். சரி என அவருடன் நானும் போனேன், திருப்பதி கோயிலுக்கு. அவர் மிலேச்ச மதத்தை சேர்ந்தவராயிற்றே எப்படி உள்ளே விட்டார்கள்?…

சிற்சில பராக்கிரமங்கள் நிகழ்த்திய பிறகுதான் உள்ளே போன அந்த யூதயுவதி… வேங்கடாஜலபதியை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட…‘கொஞ்சம்’ சிபாரிசுகளுக்குப் பிறகுதான் அதற்கும் அனுமதி கிடைத்தது.

அப்போதுதானப்பா… நானும் பார்த்தேன். திருப்பதி பெருமாளுக்கு அழகான பின்னல். தலையை சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்.

இப்போது சரியா… அவள் மலைக்காளி தான் என்று நான் சொன்னது… நீ என்ன நேராகப் போய் பார்த்தாயா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ரொம்ப ரொம்ப தயக்கத்துக்குப் பிறகு… அரை மனதோடு இந்த முழு உண்மையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்

வேங்கடாஜலபதி பெருமாளை இப்போதும் எக்கச்சக்கமான பக்தர்கள் அதீத நம்பிக்கையோடு… வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து ‘திருப்பதிக்கு போய் வந்தால் வாழ்வில் திருப்பம் நேருமடா’ என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது.

ஆனாலும்… திருப்பதியில் என்ன நடக்கிறது?…பணம் படைத்த முக்கியஸ்தர்கள் என்றால்… அவர்களை சற்றே கிட்டத்தில் நின்று பெருமாளை தரிசிக்க வைக்கிறார்கள். மற்றவர்களுக்கு 50 ரூபாய், 100 ரூபாய் என… பெருமாளைப் பார்க்க கட்டணம்.

அதுவும் பணம் இல்லாதவர்கள் என்றால்… 5 மணிநேரம், 8 மணிநேரம், ஏன் 24 மணிநேரம், 2 நாட்கள் என நின்று பார்க்க வேண்டிய கட்டாயம்… அதுவும்… பெருமாளுக்கு 15 அடி, 20 அடி முன்பே பக்தர்களை தடுத்து ‘நிறுத்தி’ `அப்படியே போய்க் கொண்டே இரு…’ என்கிறார்கள். இப்படி வர்த்தகக் கடவுளாக மாறிவிட்ட வேங்கடாஜலபதியின் முந்தைய நிலைமையைதான் நான் உங்களுக்குச் சொன்னேன்.

அதாவது… மலையின் மைந்தர்கள், முதலில் காளியை வழிபட்டவர்கள் இன்று வெளியே உட்கார்ந்து மொட்டையடிக்கிறார்களே… இதை பெரிய பிஸினஸ்ஸாகவும் ஆக்கி விட்டார்களே… அந்த ஆதங்கத்தில்தான்… திருப்பதி பற்றிய இத்தனை திருப்பங்களையும் சொன்னேன். அடுத்து…
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பகுதி – 82 – 1. என்ன பார்த்தோம்…? திருப்பதியில் நான் பார்த்ததைப் பார்த்தோம். வெங்கடாஜலபதி விக்ரகம் குறித்த சர்ச்சைகளைப் பார்த்தோம். இதற்கு மேலும் சில ஆதாரங்களைக் கூட நாம் சேகரிக்க முடியும்.

பொதுவாகவே திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கையில சங்கு சக்கரமும் இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாகவும் இருக்கும்.

ஆனால்… திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். அந்த இரண்டு கைகளிலும் சங்கு சக்கரம் இல்லை. சங்கு சக்கரம் தோள்பட்டையில்தான் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த கை கணக்கும் சர்ச்சைக்கு கை கொடுக்கிறது.

அடுத்ததாக முக்கியமான இன்னொரு ஆதாரம்… திருப்பதி பெருமாளின் பக்கத்தில் பிராட்டியைப் பார்த்ததுண்டோ? இருக்க மாட்டாரே? ஏன் இல்லை?

மலையை விட்டு கீழே இறங்கி கொஞ்ச தூரம் பயணித்த பின் திருச்சானூர் என்னும் இடத்தில் தான் பத்மாவதித் தாயாரை காட்டுகிறார்கள். ஏன் பக்கத்தில் இல்லை?

பெண்ணுக்குப் பக்கத்தில் ஜோடியாக எப்படிப் பெண்ணை வைக்க முடியும்.

ஆமாம்… ஏற்கெனவே மேலே இருக்கும் விக்ரகமே மலைமக்களின் தாயாராக இருந்ததுதானே?  அதனால் தான் மேலே… வெங்கடாஜலபதியானவருக்கு ஜோடியில்லை.

பின் கீழே திருச்சானூரில் பிராட்டி இருக்கிறார் என்ற கருத்துரு பரப்பப்பட்டது. இவைதான் இந்தச் சர்ச்சைக்கு ஆதாரங்கள்.நமக்கு… இப்போது வெங்கடாஜலபதி ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை.

இருந்தாலும்… இன்றைக்கு உள்ளூர் குளிர்பானங்களான மாப்பிள்ளை விநாயகர், கோலிசோடா போன்றவற்றை வெளிநாட்டு பானங்கள் நசுக்கி நம் தண்ணீரையே பயன்படுத்தி சம்பாதிப்பது போல….Local People ஆன மலைமக்களின் காளியை மலையேறியவர்கள் மாற்றிவிட்டார்களே. அந்த உரிமைப் பிரச்சினைக்காகத்தான் இப்படிச் சொன்னேன்.

அதனால்… திருப்பதி பக்தர்கள் என்னை தப்பாக நினைத்துக் கொண்டுவிடாதீர்கள். பக்தி ஒன்றுதான்.‘சரி… அடுத்து…?’– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 74 – 75. தமிழர்கள் விரதம் இருக்கக்கூடாது. சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் (தமிழர்கள்) விரதம் இருக்கக்கூடாது. விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன.

About editor 3048 Articles
Writer and Journalist living in Canada since 1987. Tamil activist.

Be the first to comment

Leave a Reply